விதிபோட்ட தாயம்
மதிப்புரை
விதிபோட்ட தாயம்
ந. ரஞ்சித் குமார்
நீர்வழிப் படூஉம்
(நாவல்)
தேவிபாரதி
நற்றிணை பதிப்பகம்,
பிளாட் எண் 45, சாய்கவின்ஸ் குமரன் அப்பார்ட்மென்ட்,
கிருஷ்ணாநகர் பிரதான சாலை, நூம்பல், சென்னை 67
பக்.200; ரூ.250
சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று எழுத்துலகின் பல பரிமாணங்களிலும் பயணித்துக் கொண்டிருப்பவர் தேவிபாரதி. ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து இவரது கைவண்ணத்தில் வந்துள்ளது ‘நீர்வழிப் படூஉம்’ நாவல்.
விதியின் கொடுங்கயிறு இறுக இறுகக் கண்முன்னாலேயே நொடித்து உதிர்ந்துவிட்ட ஒரு தலைமுறையின் கதைகளைக் கைவிடப்பட்ட நிலத்தில் ஓய்வின்றி அலைந்துகொண்டிருக்கும் குரல்களின் மறுகூறல் வழியாக ஆவணப்படுத்தியிருக்கிறது ‘நீர்வழிப் படூஉம்.’
காருமாமாவின் மரணத்தில் தொடங்கிப் பல வருடங்களுக்கு முன்பு அவரது மகன், மகள் இருவரையும் கூட்டிக்கொண்டு செட்டியோடு ஓடிப்போன ராசம்மா அத்தை எட்டு நாட்களுக்குப் பிறகு தாலியறுப்புச் சடங்குக்கு உடையாம்பாளையம் வருவதோடு நிறைவுபெறுகிறது நாவல்.
உடையாம்பாளையத்தின் குடிநாவிதச் சமூகத்தின் குடிமுறையை ஏற்றிருப்பவர்கள் காருமாமாவும் முத்தையன்வலசுப் பெரியப்பாவும். பெண்கள் பண்ணையக்காரச்சிகளின் குற்றேவல்களைத் தங்களுக்கான காரியங்களாகப் பகிர்ந்து ஏற்றுச்செய்கிறார்கள். சொந்த சுகதுக்கங்களைப் பொருட்படுத்தாமல் குடிநாவிதச் சமூகத்திற்கென்றே விதிக்கப்பட்டுள்ள குற்றேவல்களை முகம் சுழிக்காமல் செய்கிறார்கள். எதிர்ப்படும் அவமானங்களைப் பழகிப்போன திடமனத்துடன் சகித்துக் கொள்கிறார்கள். வாழ்வை அதன் போக்கோடு ஏற்றுக் கடந்துசெல்வதை வாசகராக நெருக்கத்துடன் அமர்ந்து காது கொடுத்துக் கேட்கும்போது நெருஞ்சி முள்ளை விழுங்கியது போன்ற வலி உண்டாகிறது. எந்த நிலையிலும் வாழ்வின் மீது புகார்களற்ற அம்மனிதர்களின் மீது உள்ளூரப் பெருமதிப்பும் ஏற்படுகிறது.
பெருமாண்பு வாய்ந்த குணாம்சங்களைக் கொண்ட கதாபாத்திரமாக அறிமுகமாகும் செலம்பா பெரியம்மா; பெரியப்பா இறந்த பிறகு கையறுநிலையில் நின்று தவிக்க நேரும்போது அவளுக்கு ஆதரவாக வரும் சுந்தராடிவலசுப் பெரியம்மாவோடு உடன்பிறவாச் சகோதரிபோலப் பழகியும், ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே ஏற்பட்டுவிடும் பிணக்கைத் தொடர்ந்து இனி எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று கோவிலில் வைத்துச் சத்தியம் செய்து பிரிந்துபோகிறார்கள். சுந்தராடிவலசுப் பெரியம்மா உடல் நோவுற்று இறக்கநேரிடும்வரை நேரில் சென்று பார்க்காமல் வைராக்கியத்துடன் செலம்பா பெரியம்மா இருப்பதைக் காணும்போது பொதுவான கண்ணோட்டத்தில் பெரியம்மா மீதான உயர் மதிப்பு கொஞ்சம் சரியத் தொடங்குகிறது. அப்போதும் படைப்பின் தன்னியல்பான முரண்களுக்கும் நெளிவு சுழிவுகளுக்கும் வலிந்து கட்டுப்படுத்தாத சுதந்திரத்தைத் தேவிபாரதி அளித்திருப்பதை உணர முடிகிறது.
ரத்தப் பாசம் கண்ணை மறைக்கும்போது சரி, தவற்றை ஆராயாமல், ஒன்றுவிட்ட சகோதர உறவுகளைப் பகைத்துக்கொள்ள நேர்வதும் அதுவே பகையாக வளர்வதும் பந்தங்களில் தவிர்க்க முடியாத விதி. அதை எதிர்கொண்டு செல்கையில் பின்வரும் ஏதேனும் இடர்ப்பாட்டில் அவர்களது உறவுக்கண்ணியைத் துண்டித்த அதே சூழ்நிலை மாற்றுருவம் கொண்டு ஒன்றிணைய வைக்கிறது. கதையில் வரும் முத்தையன் வலசுப் பெரியப்பா, சுந்தராடிவலசுப் பெரியம்மா, ராசம்மா அத்தை, மெட்ராஸ் சின்னம்மா, அம்மா, செலம்பா பெரியம்மா யாவரும் இதற்குள் அடக்கம்.
அதேசமயம் சூழ்நிலைகள் வாழ்வைப் புரட்டிப்போட்டாலும் வாழ்வின்மீது ஆழமான நம்பிக்கைகொண்ட மனிதர்கள் தன்னளவில் முழுநிறைவுடனும் தன்னைச் சார்ந்தவர்களிடம் பரிவும் கனிவுடனுமே இருந்துவருகிறார்கள். அதற்குக் காருமாமா ஓர் அடையாளம். அவரது சொந்தத் துயர் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு வலி நிறைந்தது. சிலசமயம் கட்டுமீறித் தன்னையே வதைத்துக்கொள்ளச் செய்யும் அளவுக்கு உக்கிரமானது. அதேசமயம் தன்னுடைய அந்த நிலைக்குக் காரணமானவர் உட்பட யார்மீதும் கோபமோ வெறுப்போ அறவே கிடையாது. இத்தகைய முரணான மனநிலைகளை அசங்காமல் நுட்பமாகக் கையாள்வதில் தேவிபாரதி மிகுந்த தேர்ச்சிபெற்றிருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் மனநிலைச் சித்திரிப்பு நுணுக்கங்களில் இந்த அம்சத்தைக் காண முடியும்.
கதைசொல்லியான ராசுவின் அம்மா முத்து தன்னளவில் நிறைவுபெற்ற கதாபாத்திரம். கதை முழுவதிலும் மரணம் நிகழ்ந்த வீட்டிற்குள் இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. கதை கேட்டுக்கொண்டிருக்கும் போதே ஒருபக்கம் சாவுச்சடங்குகள் நடந்தேற அவற்றின் நெடி நாசியைத் துளைத்தவாறே இருக்கின்றன. இழவு வீடு என்றபோதும் சிறுசிறு சந்தர்ப்பங்களில் தோன்றிமறையும் மென்சிரிப்புகளும் ஆசுவாசங்களும் லிங்கநாவிதனிடமிருந்து பயின்றுகொண்ட ஒப்பாரிப் பாடலைப் பாடும் முத்துவின் குரலில் தொனிக்கும் மந்தஹாசத்தில் மரணத் துக்கத்திலிருந்து விடுபட்டு ஊரே இசையின் மயக்கத்தில் கட்டுண்டு நிற்கும் புனைவுப் பகுதிகளும் யதார்த்தத்தின் அழகியல் தருணங்கள்.
‘நட்ராஜ் மகராஜ்’, ‘நிழலின் தனிமை’ நாவல்களின் மொழிநடையில் இருந்து ‘நீர்வழிப் படூஉம்’ இரண்டு பிரத்யேகமான அம்சங்களில் வேறுபட்டது. முதலாவது, முதல் இரண்டு நாவல்களில் உரையாடல்களை விட உரைநடையாகவும் வர்ணனையாகவும் கதையின் பெரும்பகுதி சொல்லப்படும். ‘நீர்வழிப் படூஉம்’ நாவலின் பெரும்பகுதி உரையாடல் வழியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிலும் கதையின் களமான தாராபுரம், ஈரோடு, உடையாம்பாளையத்து வட்டார மொழி வாசிப்பின் அலைவரிசையில் பொருந்திவருவதற்கு தாமதமானது. அறுபது பக்கங்களைக் கடந்தபிறகு என் வழக்கமான பேச்சுமொழியில் கொங்குத் தமிழ் தற்காலிகமாகவேனும் ஆங்காங்கே ஊடுருவியதை யதேச்சையாகக் கண்டுகொண்டபோது படைப்பின் மொழியையும் வீரியத்தையும் உணர முடிந்தது.
தேவிபாரதியின் உரைநடை வசீகரமானது; ஆற்றொழுக்கானது. வாக்கிய அமைப்பும் நீளநீளமாக அமைவது. ஒருவாக்கியத்தில் சம்பவத்தின் தொடக்கமும் மையமும் அடுத்த நிகழ்வுக்கான இணைப்பும் ஒருங்கிணைந்திருக்கும். கடந்த காலமும் நிகழ்காலமும் நாணயத்தின் இரண்டுபக்கங்களைப்போல ஒவ்வொரு வரியிலும் கைகோத்து நடந்துவரும். யதார்த்தமும் புனைவும் கலந்ததாக அல்லாமல் நடப்பு யதார்த்தமும் கடந்தகால நினைவுகளும் ஒருசேரக் கலந்து புனைவில் தனித்துவமான அனுபவத்தைத் தரக்கூடியது இவரது கதைசொல் பாணி.
தேவிபாரதியின் கதையில் வாசகர் சந்திக்கநேரும் இன்னொரு மிக முக்கியமான அம்சம், நேராக இடப்பட்ட புள்ளிகளை முன்னோக்கிக் கோடிழுத்து இணைத்துச் செல்வது போல் இவரது கதையின் காலவரிசை நேர்கோடாகச் செல்வதில்லை. அதிலும் ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நிழலின் தனிமை’யை விடவும் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலில் சம்பவங்களின் கால வரிசை திருகலான அமைப்பைக் கொண்டிருக்கிறது. வாய்மொழிக் கதைசொல் முறையைக் கையாண்டிருப்பதால் இந்த உத்தியே சிறந்ததாகப் பட்டிருக்கக் கூடும். அப்படியிருந்தும் வாசிப்பனுபவத்தை உறுத்தாத சீரொழுங்குடன் நேர்த்தியாகச் சம்பவங்கள் பின்னப்பட்டுள்ளன. நாவல் வாசிப்பில் இருக்கும்போது சிதறிய துண்டுகளாக மனத்தில் வைக்கப்பட்டுள்ள புள்ளிகள் நாவல் நிறைவுபெற்றதும் அழகான கோலமாக உருமாறியிருப்பதைப் போன்ற முழுநிறைவைத் தருகிறது.
நாவல் முழுவதும் பின்னணியில் தொடர்ந்து இருந்துவந்த அதிர்வுணர்வு நம்மையறியாமலேயே விலகிச்சென்று இலகுவாகிட்டது போல் கதையின் இறுதியில் உறவுகள் அனைவரும் பழைய பகையுணர்வுகளை மறந்து திளைத்திருக்கையில், சுபம் போட இருக்கும் கணத்திற்குச் சற்று முன்னால் தாயக்கரம் ஆடுகிறார்கள். அந்தப் பகுதியில் விதி மீண்டும் தன் குரூர முகத்தைக் காட்ட ஓர் எதிர்பாரா நிகழ்வு நடந்தேறுகிறது. விளையாட்டு விபரீதமாக முடிகிறது. அந்தச் சூழ்நிலையிலும் அதன் பாதிப்பு இரண்டு மனங்களால் மட்டுமே உணரப்படுவது நம்மை நிலைகுலைய வைக்கிறது.
எந்தக் காலத்திலும் சமகாலத்தன்மையோடு தொனிக்கும் படைப்புகளே கிளாசிக் என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதேபோல் இன்னும் நாற்பதாண்டுகள் கடந்தாலும் நாவல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் வீச்சு சற்றும் குலையாமல் இருக்கும்.
மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com