மதிப்புமிக்கது இவ்வாழ்வு
அனுபவம்
மதிப்புமிக்கது இவ்வாழ்வு
போகன் சங்கர்
ஓவியம்: றஷ்மி
பெருந்தொற்று ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதித்திருக்கிறது. பலர் நீண்ட காலம் கட்டாய இற்செறிப்புக்கு ஆளானபொழுது என்னைப் போன்ற மருத்துவப் பணியாளர்கள் இடைவிடாத பணிச்சுமைக்கு ஆளானார்கள். எனது தங்கையைப் போன்ற தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்கள் பணிகளை இழந்து அடிப்படைத் தேவைகளுக்கே பாடுபடும் நிலை. மருத்துவப் பணியாளர்களுக்குள்ளேயே வேறுவேறு பணிகளைச் செய்துகொண்டிருந்தவர்கள் அனை வரும் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் ஒற்றை முனை நோக்கிக் குவிக்கப்பட்டார்கள். நானும் அவ்விதம் மாற்றிச் செலுத்தப்பட்டேன். இந்த ஆறு மாதகாலப் போரில் ஒரே ஒரு நாள் மட்டும் எனது பெரியம்மா மரணம் காரணமாக விடுப்பு எடுத்துக்கொண்டேன். இரவுப்பணி, பகல்பணி என்று மாற்றிமாற்றித் தரப்பட்டதில் உடல் நிலை மிகக் குழம்பி, சில நேரங்களில் என் மனச் சமநிலையை இழந்தேன். ஒருமுறை தற்கொலைக்கு மிக அருகில் இருந்தேன். சாவுக்கு அருகாமையில் நான் இருக்கிறேன் என்று மூன்று முறைகள் எண்ணினேன். சாவு எப்போது வந்தாலும் அது இனி அந்நியமாக இருக்கப் போவதில்லை. ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.
இவை எனக்கு மட்டுமான துயரங்கள் அல்ல. என்னைவிடக் கூடுதல் பணிச்சுமையுடன் பலர் இந்தப் போர்க்களத்தில் நிற்கிறார்கள். போர் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். ஆனால் போர் என்றவுடன் அது மிகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்ற எண்ணம் வந்துவிடுகிறது. போர்களும் அவற்றின் தொடக்கங்களும் முடிவுகளும் பல தற்செயல்களால் ஆனவை. டால்ஸ்டாய் ‘போரும் சமாதானமும்’ நாவலில் சொல்வதுபோல போர்க் களத்தில் நிற்கிறவர்களுக்குப் பல நேரங்களில் அப்போது எதிரே நிற்கும் மரணத்தைத் தவிர வேறு எதுவும் தெரிவதில்லை. படையில் இடது பக்கம் நிற்கிறவர்களுக்கு வலது பக்கம் நிற்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிவதில்லை. அங்கிருப்பவர்களுக்கு இந்தப் பக்கம் நிற்கிறவர்கள் இருக்கிறார்களா என்றுகூடத் தெரிவதில்லை. களத்தில் ஏதோ ஒருமுனையில் நிற்பவர் தாங்கள் ஜெயித்துக்கொண்டிருப்பதாக நம்புகிறார். முடிவு வேறுவிதமாக இருக்கும்போது அதிர்ச்சி அடைகிறார். சில நேரங்களில் எல்லாமே அபத்தம் என்ற நிலைப்பாட்டுக்கு ஒருவர் வந்துவிடுகிறார். ‘போரும் அமைதியும்’ நாவலில் ஆண்ட்ரூ கோமான் அடிபட்டுக் கிடக்கும்போது அடைந்த நிலையைப்போல. பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பெரும்பாலான அரசுகளின் போராட்டங்கள் ஆரம்பத்தில் இப்படி ஒழுங்கு படுத்தமுடியாத ஒன்றாக இருந்ததாகவே தோன்றியது. இப்போது ஒழுங்கு வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. சரித்திரத்தில் முந்தைய பெருந் தொற்றுக் காலங்களோடு ஒப்பிடும்போது நாம் இப்போது நன்றாகவே இதை எதிர்கொண்டிருக்கிறோம் என்றே அவற்றைப்பற்றி வாசிக்கும்போது தெரிகிறது.
இந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் பலர் எழுதிக் குவித்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த இந்தக் கட்டாய ஓய்வு அதற்கு உதவியது, அவற்றின் இலக்கியப் பெறுமதி பற்றிப் பிறகுதான் பேச வேண்டும். எனக்கு இது கூடுதல் பணிச்சுமைக் காலமாகிவிட்டது. ஊரடங்கின் ஆரம்பக் காலகட்டத்தில் “இந்த இடைவெளியில் நீ ஒரு நாவல் எழுத வேண்டும்” என்று வண்ணதாசன் செய்தி அனுப்பியிருந்தார். இந்த மனநிலையில் முடியவில்லை.
என்னால் படிக்க முடிந்தது. இரவுப் பணியில் சற்று நேரம் கிடைக்கும்பொதெல்லாம் எதையாவது படிக்க முயன்றேன். ஆரம்பத்தில் அது பெருந்தொற்றைக் குறித்து இலக்கியத்தில் எழுதப்பட்ட பதிவுகளைத் தேடி வாசிப்பதாக இருந்தது. புகழ்பெற்ற ஆல்பர்ட் காம்யூவின் ‘ப்ளேக்’ நாவலிலிருந்து ப்ளேக் காலத்தில் எழுதப்பட்ட ‘டெக்கமரான் கதைகள்’ வரை. இங்கு அதிகம் தெரியாத alex munthel என்ற மருத்துவர் எழுதிய ‘the story of san michele’ என்ற நூலைக்கூடப் படித்தேன். அது போன நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருந்தொற்றுக் காலத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்த ஒரு மருத்துவரின் புனைவு கலந்த தன்வரலாற்று நூல். நான் வாசித்தவற்றுள் சிறந்ததாக இந்த நூலையே குறிப்பிடுவேன். ஒரு பேரழிவின் முன்பு மனித குலம் நிற்கும்போது அது என்னவாக மாறுகிறதென்று இந்த நூல் உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறது.அப்போது மனிதர்களுக்கிடையே எழும் நேரியதும் கோணலானதுமான உறவுகள், பிரிவுகள், மகத்தான கைவிடுதல்கள், எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைக்கும் அன்பு, துரோகம், பயம், விரக்தி, அவநம்பிக்கை, நம்பிக்கை எல்லாவற்றையும் இந்த நூல் பேசுகிறது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நான் இவற்றை மிக அருகிலிருந்து கவனித்தேன். அந்த வகையில் எழுத்தாளர்களுக்கு இது மானுடத்தை அதன் சகல நிறங்களுடனும் நேரிட ஒரு வாய்ப்ப்பாகும் என்றே நினைக்கிறேன்.
எண்ணற்ற விஷயங்கள் மனத்தில் தோன்றுகின்றன. அவற்றைத் தொகுத்துக்கொள்ளும் காலம் இன்னும் வந்துவிட்டதா என்றுதான் தெரியவில்லை. கேரளாவில் கட்டுக்குள்ளிருந்த தொற்று இப்போது மிக அதிகமாயிருக்கிறது. நாம் இன்னும் நிறைய தூரம் போகவேண்டி இருக்கிறது.
போன வாரம் எனது தோழி ஒருவர் அழைத்திருந்தார். அவரது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகள் நீண்ட காலத்துக்குப்பிறகு வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது நடந்துகொண்ட விதம் பற்றிச் சொன்னார். முன்பு அவள் யாரிடமும் பேசமாட்டாள், கண்ணுக்குக் கண் பார்ப்பதைத் தவிர்ப்பாள்; இப்போது அவள் புதிய மனிதர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள் என்றார். இந்த ஊரடங்குக் காலத்தில் புவியின் மாசுபாடு குறைந்து பிகாரிலிருந்து இமயமலை உச்சியைப் பார்க்க முடிகிறது என்று வந்திருந்த செய்தியை அவளுக்கு நினைவுபடுத்தினேன். கொரோனா பெருந்தொற்று ஒருவகையில் நாம் வாழும், வாழ்ந்த இவ்வாழ்வு எவ்வளவு மதிப்புமிக்கது என்று காட்டியிருக்கிறது.
மின்னஞ்சல்: boganath@gmail.com