இடதுசாரிகளின் முன்னுள்ள சவால்
ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அண்ணா ஹஜாரே நடத்திய பன்னிரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இப்போராட்டம் பெரும் வெற்றி என ஊடகங்கள் கொண்டாட, சிலரோ இது எந்த வகையிலும் வெற்றியே அல்ல, ஏனெனில் நாடாளுமன்றம் அண்ணா குழுவின் ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாகக் கூறவில்லை எனக் கூறியுள்ளனர். ஆனால் உண்மை இரண்டிற்கும் நடுவில் இருக்கிறது. அதைப் பிறகு பார்ப்போம். இப்போராட்டத்தின் வெற்றி தோல்வியைப் பற்றிய விவாதங்களைவிட இதன் தன்மை - அதாவது இந்தப் போராட்டம் எத்தகையது, யாருக்கானது, இதன் நன்மை தீமைகள் என்னென்ன, இதை ஆதரிக்கலாமா கூடாதா என்பவை - பற்றிய விவாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏறக்குறைய ஒட்டுமொத்த இந்தியாவே அண்ணா தலைமையிலான இந்தப் போராட்டத்தை ஆதரிக்க அறிவுஜீவிகள் சிலர், குறிப்பாக இடதுசாரி அறிவுஜீவிகள் இதை மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனவும் ஜன் லோக்பால் மசோதா சர்வாதிகாரத் தன்மை கொண்டது எனவும் விமர்சித்துள்ளனர். மேலும் இது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை வெறும் பார்வையாளர்களாகக் கொண்ட போராட்டம் என்றும் விமர்சித்துள்ளனர். இவர்களது விமர்சனம் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிவதைப் போன்றது அல்லது மல்லாந்துபடுத்துக்கொண்டு கூரையை நோக்கி எச்சில் உமிழ்வதைப் போன்றது. ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தை நாம் கொச்சைப்படுத்துகிறோம் என்பதையும் இரட்டை அளவுகோலைப் பயன்படுத்துகிறோம் என்பதையும் இவர்கள் உணரவேயில்லை. அண்ணா குழுவிமீது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் உள்ள எதிர்ப்பை எளிதில் புரிந்துகொள்ளும் நம்மால் முற்போக்கு அறிவுஜீவிகளின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐமுகூ அரசின் தலையாய அறிவுஜீவியான கபில் சிபல் போன்றவர்களின் விமர்சனங்களுக்கும் இவர்களது விமர்சனங்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் உண்டு.
இந்தப் போராட்டத்தைக் குறித்து எதிர்மறையாகப் பலர் எழுதியுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐமுகூ அரசுக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவிகள், குறிப்பாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் சேகர் குப்தா போன்றவர்கள். அவர்கள் வேறுமாதிரியாக எழுதியிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். முற்போக்கு, இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியிலிருந்து எழுந்த எதிர்மறை விமர்சனங்களில் சில, குறிப்பாக ஜன் லோக்பால் மசோதாவின் சில பிரிவுகள் பற்றிய விமர்சனங்கள் முக்கியமானவை. ஏற்கத்தக்கவை. ஆனால் இது மக்கள் போராட்டமே அல்ல என்றும் மக்களாட்சித் தத்துவத்திற்கே எதிரானது என்றும் இவர்களுள் சிலர் வைத்த விமர்சனங்கள் பலரது புருவங்களை உயர்த்தின. குறிப்பாக எழுத்தாளர் அருந்ததி ராய், பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆகிய இருவரது விமர்சனங்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இவர்கள் மிகக் கூர்மையான அறிவாளிகள், இடதுசாரிகள் என்பதுடன் மிக நேர்மையானவர்கள்கூட. நேர்மையான அறிவுஜீவிகள் என்பது இன்று மிகவும் அருகிப்போய்விட்ட இனம். இதன் காரணமாகவே இவர்களது கருத்துகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தன. முதலில் அருந்ததி ராயின் கருத்துகளைப் பார்ப்போம்.
த இந்து நாளிதழில் வெளியான அருந்ததி ராயின் கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது: ‘‘தொலைக்காட்சியில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது உண்மையில் ஒரு புரட்சி என்றால் சமீபத்திய புரட்சிகளிலேயே அதிகமான சங்கடத்தைத் தருவதும் புரிந்துகொள்ள முடியாததுமான புரட்சியாக இது இருக்க வேண்டும். இப்போதைக்கு, ஜன் லோக்பால் மசோதா குறித்த உங்கள் கேள்விகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் பெறக்கூடிய பதில்கள் இவைதாம்: (அ) வந்தே மாதரம், (ஆ) பாரத் மாத கி ஜெய், (இ) அண்ணாவே இந்தியா, இந்தியாவே அண்ணா, (ஈ) ஜெய் ஹிந்த்.’’ இதை caricature என்று சொல்வதுகூடத் தவறு. இது அப்பட்டமான கொச்சைப்படுத்துதலும் காழ்ப்பை உமிழ்கிற செயலுமாகும். புரட்சி என்னும் சொல்லுக்குரிய மிகக் கறாரான பொருளில் இந்தப் போராட்டத்தைப் புரட்சி எனக் கூற முடியாது. ஆனால் 1970களில் இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக நடந்த ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையிலான மக்கள் போராட்டத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் மக்கள் போராட்டம் இதுவே. இதில் கலந்துகொண்ட மக்களில் ஒரு தரப்பினர் எழுப்பிய சில கோஷங்களையே ஜன் லோக்பால் மசோதா குறித்த அனைத்துக் கேள்விகளுக்குமான பதில்களாக ராய் சித்தரித்துள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இவர்கள் மட்டுமே என்பது அவர் புரிதல். ராம்லீலா மைதானத்திற்கு ஒரேயொருமுறை அவர் சென்றிருந்தால் அல்லது சென்றுவந்தவர்களின் கட்டுரைகளைப் படித்திருந்தால் இந்தக் கருத்தைக் கூறியிருக்கமாட்டார். இந்தப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏழை எளிய மக்களும் அதில் கணிசமாகப் பங்கேற்றார்கள் என்பதை மறுக்க முடியாது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள். ராம்லீலா மைதானத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கோஷங்களில் சில முற்போக்காளர்களால் ஏற்க முடியாதவை. ‘அண்ணாவே இந்தியா’ என்னும் கோஷத்தைத் தனி மனிதத் துதியாக ஒருவர் பார்க்க முடியும் என்றாலும் அண்ணா வைத்துள்ள கோரிக்கை அவரது கோரிக்கை மட்டுமல்ல; எங்கள் அனைவருடைய கோரிக்கையும்தான் என்று இந்திய மக்கள் கூறுவதன் வெளிப்பாடாகவும் பார்க்கலாம். மற்ற மூன்று கோஷங்களும் தேசப்பற்றின் அடிப்படையிலானவை. தேசப்பற்றைப் போல் உலக அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விஷயம் ஏதுமில்லை என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. தேசப்பற்று, தேசிய உணர்வு ஆகியவை பெரும்பாலான சமயங்களில் சுரண்டும் வர்க்கங்களுக்குச் சேவை செய்வதற்கான கருவிகளாகவே இருந்திருக்கின்றன (சில சமயங்களில் இடதுசாரிகளும் இந்த உணர்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்). ஆகவே மனிதநேயம் என்ற விழுமியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மனிதனால் இவை ஏற்க முடியாதவை. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்மயப்படுத்தப்படாதவர்கள், தேசப்பற்று என்பது ஏதோ ஓர் உன்னதமான விஷயம் என்பதாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள். இவர்கள் அனைவரையும் ஆர்எஸ்எஸ், பாஜக உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் எனப் புரிந்துகொள்வது பேதமை. ஆர்எஸ்எஸ் இயக்கம் அண்ணாவின் போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்ததுடன், தனது இயக்கத்தினரையும் இதில் நேரடியாகப் பங்கேற்கச் சொன்னது. இந்தக் கோஷங்களை எழுப்பியவர்களில் கணிசமானவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே என்பதை மறந்துவிடக்கூடாது.
இத்தகைய மக்கள் போராட்டங்களில், விலைவாசிக்கெதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, எல்லா விதமான மக்களும் பங்கேற்பார்கள். அவர்களில் மதவாதிகள், ஆணாதிக்கவாதிகள், தேசியவாதிகள், நடுத்தர வர்க்கத்தினர், உழைக்கும் மக்கள் எனச் சகலரும் இருப்பர். எல்லா வகைகளிலும் கருத்து உடன்பாடு கொண்டவர்கள் பங்கேற்கும் போராட்டம் அல்லது புரட்சியில் மட்டும் தான் பங்கேற்போம் என்றால் நாம் எப்போதும் பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டியதுதான். மக்கள் போராட்டம் எதுவானாலும் தனது கருத்துகளை மக்களிடையே கொண்டுசெல்வதும் அவர்களை முற்போக்கான வகையில் அரசியல்மயப்படுத்துவதும் தான் இடதுசாரி அறிவுஜீவியின் அல்லது அரசியல் களப்பணியாளரின் பணியாக இருக்க முடியுமே தவிர, தூயப் புரட்சியில் மட்டுமே பங்கேற்பேன் எனக் கூறி ஒதுங்கி நிற்பது அல்ல. ஊழலைப் போன்று அனைவரையும் பாதிக்கிற பிரச்சினையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பது தவிர்க்க முடியாதது. மக்கள் போராட்டம் எதையும் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதை அந்தப் போராட்டத்தின் நோக்கத்தை, தன்மையைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பதிலோ ஹுரியத் தலைவர் சயீத் அலி ஷா கிலானியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்வதிலோ எந்தச் சங்கடத்தையும் உணராத ராய், அண்ணாவின் பின்னால் அணி திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்கையில் பெரும் சங்கடத்திற்கு ஆளாவது அவரது இரட்டை அளவுகோலையே காட்டுகிறது. காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பவர்களில் எவ்வளவு பேர் ராயின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்ணியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிற கருத்துகளுடன் ஒத்துப்போகிறவர்கள்? கிலானி எத்தகையவர்? அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி, காஷ்மீர் தனிநாடாக இருந்தாலும் சரி பாகிஸ்தானுடன் சேர்ந்தாலும் சரி (பாகிஸ்தானுடன் சேர்வதையே அவர் ஆதரிக்கிறார்) அது இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அரசாகவே இருக்க வேண்டுமெனக் கூறுகிறவர். அரசு அதிகாரம் இல்லாமல் இஸ்லாம் முழுமையடையாது என்று உறுதியாக நம்புகிறவர். தான் விரும்பும் இஸ்லாமிய அரசு எப்படியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் விரிவாக எதையும் பேசியதில்லை. ஆனால் காஷ்மீரத்திற்கான அவரது சுதந்திரப் போராட்டம் மத அடிப்படையிலானது, மக்களைத் திரட்ட அவர் கையாளும் உத்திகள் மத அடிப்படைவாதத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஏறக்குறைய எல்லா வகையிலும் பிற்போக்காளராக இருக்கும் கிலானியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்காத ராய், பல சமயங்களில் தனது தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிறபோது (ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது உண்ணாவிரத மேடையின் பின்னணியில் காணப்பட்ட பாரத மாதா உருவப்படம் ராம்லீலா மைதானத்தில் கைவிடப்பட்டது, மோடியைப் புகழ்ந்து கூறியதைத் திரும்பப் பெற்றது, நோபெல், மகசேசே போன்ற உயரிய பரிசுகள், விருதுகளைப் பெற்றவர்களே லோக்பால் அமைப்பில் இடம்பெற வேண்டுமென்ற கருத்தைக் கைவிட்டது எனப் பல உதாரணங்களைக் கூற முடியும்) உடனே திருத்திக்கொள்கிற ஹஜாரேயை எள்ளி நகையாடுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு ராய் தரும் ஆதரவில், கிலானியுடன் அவர் மேடையைப் பகிர்ந்துகொண்டதில் நான் எந்தத் தவறையும் காணவில்லை. காரணம் காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் இருக்கும் நியாயம் அத்தகையது. இந்திய அரசு காஷ்மீரில் இழைத்துவரும் மனித உரிமை மீறல்கள் அத்தகையவை. அவர்களது நியாயமான போராட்டத்தை ஆதரிக்க அவர்கள் நமது பிற கருத்துகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்பது அவசியமற்றது. ராய் அளிக்கும் ஆதரவு கிலானிக்கானதல்ல, மாறாக அது காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கானது என்பது அரசியல் அரிச்சுவடி மட்டுமே பயின்றவர்களுக்கும் புரிகிற விஷயம். இதே காரணத்தின் அடிப்படையில்தான் பாலஸ்தீனர்களின் சுதந்திரப் போராட்டத்தை அது மதச்சார்பற்ற அமைப்பான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையில் நடந்தாலும் அல்லது இஸ்லாமிய மதவாத அமைப்பான ஹமாஸ் தலைமையில் நடந்தாலும் உலகெங்கும் உள்ள இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் ஆதரிக்கிறார்கள்.
மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதா ஆதரவாளர்களும் இந்திய அரசைத் தூக்கியெறிவது என்னும் நோக்கத்தைக் கொண்டிருப்பதில் ஒன்றுபடுகிறார்கள் என ராய் கூறியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்திய முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிவது மாவோயிஸ்டுகளளின் நோக்கம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. உற்பத்திச் சக்திகளைப் பொதுவுடமையாக்குவதும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் அடிப்படைமாற்றங்களைக் கொண்டு வருவதும் இன்றைய இந்திய அரசுக்குச் சாவுமணியடிப்பதாகும். ஊழலுக்கு எதிராக வலுவான சட்டத்தையும் அமைப்பையும் உருவாக்குவது எப்படி முதலாளித்துவத்திற்குச் சாவுமணியடிப்பதாகும் என்பதை ராய் விளக்க வேண்டும். பின்லாந்து, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் ஏறக்குறைய ஊழலே கிடையாது. ஆனாலும் அவை முதலாளித்துவ நாடுகள் என்பதில் சந்தேகமேயில்லை. அண்ணா குழுவினர் யாருமே தங்களை முதலாளித்துவ எதிர்ப்பாளர்களாகவோ பொதுவுடமை ஆதரவாளர்களாகவோ காட்டிக்கொண்டதில்லை. ஏழை எளிய மக்களை அழுத்திக்கொண்டிருக்கிற இந்திய முதலாளித்துவ அரசு என்னும் நுகத்தடியை அவர்கள் தூக்கியெறியக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாக வர்ணிப்பது அளவுக்கு மீறிய புகழ்ச்சி.
ஊழலைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்துவரும் மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம், பெரும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக ஆதிவாசி மக்கள் நடத்திவரும் போராட்டங்கள், நர்மதா பள்ளத்தாக்கில் இடப்பெயர்விற்கு ஆளாகியவர்கள் பல வருடங்களாக நடத்திவரும் போராட்டம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்துவரும் விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற பிரச்சினைகளை ஏன் அண்ணா குழுவின் போராட்டத்திற்குப் பேராதரவு அளிக்கும் ஊடகங்கள் முதன்மைப்படுத்தவில்லை என்று ராய் எழுப்பும் கேள்வி மிக நியாயமானதுதான். இதற்கு அண்ணா ஹஜாரேவையும் அவருடைய குழுவினரையும் குற்றம் சொல்வது சரியல்ல. அவர்கள் யாரும் இந்தப் பிரச்சினைகள் முக்கியமற்றவை என்றோ இந்த விஷயங்களில் இந்திய அரசின் நிலைப்பாடு நியாயமானது என்றோ கூறவில்லை. சிலர் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சிலர் தலித் பிரச்சினைகளையும் சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சினையையும் சிலர் பெண்ணியத்தையும் சிலர் விலங்கு உரிமைகளையும் கையிலெடுத்துப் போராடுகிறார்கள். மனித உரிமைப் போராளி ஒருவரிடம் சுற்றுச்சூழல் பிரச்சினையில் ஏன் அக்கறைகாட்டவில்லை எனக் கேள்வி கேட்பது அர்த்தமற்றது. இது, இயற்பியல் அறிஞனிடம் ஏன் கணித மேதையாகவில்லை என்று கேட்பதைப் போன்றது. இடப்பெயர்விற்கு ஆளாகும் ஆதிவாசிகளின் பிரச்சினை முதல் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன பிரச்சினைகள் வரை மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து பேசிவரும் ராய் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பற்றி ஒரேயொரு முறை, அதுவும் பலர் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு, எல்லாம் முடிந்து போன ஒரு சந்தர்ப்பத்தில் ஒரேயொரு முறை பேசினார். நீங்கள் ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை செலுத்தவில்லை என்று ராயிடம் கேட்பதில் அர்த்தமில்லை. அறிவுஜீவி ஒருவர் உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் சமூக சேவகர் ஒருவர் சமூகத்தின் எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பேதமை. ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தில் ஆர்வம் காட்டுவது என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கிற ஒருவர் பெண்ணிய விஷயத்தில் பிற்போக்காளராக இருக்கும்பட்சத்தில் அதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை. மேலே சொல்லப்பட்ட போராட்டங்கள் முக்கியமானவை என்பதை ஏற்கிற அண்ணா, இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் அவரைச் சந்திக்க விருப்பதாகவும் கூறினார். தனிமனிதன் மட்டுமல்ல ஓர் இயக்கமோ கட்சியோ எல்லாப் பிரச்சினைகளையும் கையிலெடுத்துப் போராடுவது சாத்தியமல்ல. அதனால்தான் பல்வேறு மக்கள் இயக்கங்கள் தேவைப்படுகின்றன. இந்த இயக்கங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கும் சூழலையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்குவதே இடதுசாரி ஒருவரின் கடமையாக இருக்க முடியுமே தவிர எனது போராட்டத்தைக் கையிலெடுக்கவில்லை என்பதால் உனது போராட்டத்தை ஆதரிக்கமாட்டேன் எனக் கூறுவதல்ல.
மேலே குறிப்பிடப்பட்ட போராட்டங்களை, பிரச்சினைகளை ஏறக்குறைய முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிற ஊடகங்கள், இந்தப் பிரச்சினைகளில் பாராமுகத்துடன் நடந்துகொள்ளுகிற நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தின் இரட்டை வேடம் (hypocrisy) பற்றி ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியிருக்கிறேன். ஊழல் போன்று தங்களைப் பாதிக்கிற விஷயங்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிற இவர்கள் சமூகத்தின் கீழ்த்தட்டில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாகப் பறிக்கப்படும்போது அதில் கிஞ்சித்தும் அக்கறை காட்டுவதில்லை. விவசாயிகளின் கடன் பிரச்சினை, ஆதிவாசிகளின் இடப்பெயர்வு, மதக் கலவரங்கள், காஷ்மீர், வடகிழக்கு மக்களின் உரிமைப் பிரச்சினைகள் ஆகியவை ஊழலைவிட முக்கியமானவை என்பதில் இடதுசாரிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தப் பிரச்சினைகளில் நடுத்தர வர்க்கத்தினரைச் சரியான நிலைப்பாட்டை எடுக்கவைப்பது இடதுசாரிகளின் முன்னுள்ள மாபெரும் சவால். இது சாதிக்கப்படக்கூடியதே. ஊடகங்களைப் பொறுத்தவரை, அதிலும் தொலைக்காட்சி அலைவரிசைகள் முற்றிலுமாகக் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தயவைச் சார்ந்திருப்பவை. அவற்றிடம் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அரசு நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டும் இந்த ஊடகங்கள் கார்ப்பொரேட்டுகளின் ஊழலை மூடிமறைக்கின்றன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியபோது அதில் ஊடகங்கள் காட்டிய உற்சாகத்தையும் கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுவைக் கண்டறிந்து எடுப்பதற்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை அளித்த உரிம ஒப்பந்தத்தில் உள்ள முறைகேடுகளைச் சமீபத்தில் சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியபோது கண்டுகொள்ளாததையும் ஒப்பிட்டால் ஊடகங்களின் ‘நேர்மை’ புரியும். ஊடகங்களை நமக்கு ஆதரவாகத் திருப்ப முடியாது. ஆனால் மக்களைத் திருப்ப முடியும்.
அண்ணா ஹஜாரேவை a freshly-minted saint என்று ராய் கிண்டலடித்திருப்பதும் ஆச்சரியமான விஷயமே. ஏனெனில் 1990களின் இறுதியில் ராய் அணுகுண்டுக்கு எதிரான போராட்டத்திலும் நர்மதா நதிப் பாதுகாப்புப் போராட்டத்திலும் பங்குகொண்டபோது இதே குற்றச்சாட்டு அவருக்கு எதிராக வைக்கப்பட்டது. தான் எழுதிய நாவல் புக்கர் பரிசு பெற்றுவிட்ட ஒரே காரணத்தால் திடீரென ஒரே நாளில் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவதற்கான ‘தகுதியை’ப் பெற்றுவிட்டார் என்று அவர் கிண்டலடிக்கப்பட்டதுடன், இந்தியா பற்றிய மேற்கத்திய நாடுகளின் கருத்துகளைப் பிரதிபலிப்பதால் இவர் பெரிய அறிவுஜீவியாகக் கொண்டாடப்படுவதாக விமர்சிக்கப்பட்டார். அந்த விமர்சனங்கள் போன்றதுதான் அண்ணா குறித்த இவரது இந்தக் கிண்டலும். அண்ணா கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகச் சமூக சேவகராகப் பொதுவாழ்வில் இருப்பவர்.
த இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் கூறியிருக்கும் விமர்சனத்தில் மிக முக்கியமானது மக்களாட்சிக்கும் இறைதூதரால் மீட்கப்படுவதற்கும் (Messianism) உள்ள வித்தியாசம். அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தை இரண்டாம் வகையில் சேர்க்கிறார் பட்நாயக். மக்களாட்சியில் சமூக விவகாரங்களில் முடிவெடுப்பதில் மக்கள் பங்கேற்கிறார்கள் ஆனால் இறைதூதர் ஒருவரால் மீட்கப்படுவதில் நம்பிக்கைகொள்கிற மக்கள் அவரது செயல்களைக் கொண்டாடுகிறவர்களாகவும் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள் எனக் கூறும் பட்நாயக் இந்திய நடுத்தர வர்க்க மக்கள் ராம்லீலா மைதானத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தார்கள் என்கிறார். லோக்பால் மசோதாவிற்கும் ஜன் லோக்பால் மசோதாவிற்குமான வித்தியாசங்களைக்கூட அறியாதவர்களாக இருந்தார்கள் என்பதாகவும் மறைமுகமாகக் கூறுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இரண்டு மசோதாக்களுக்குமான வித்தியாசங்கள் குறித்து அண்ணா குழுவினர் தங்களுக்குக் கிடைத்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பேசிவந்திருக்கிறார்கள். மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக அரசாங்கம் கூறுகிற மசோதா எப்படி ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதற்கான மசோதாவாக இருக்கிறது என்பதையும் அவர்கள் இடைவிடாது பேசிவந்திருக்கிறார்கள். மக்கள் அண்ணாவை இறைதூதராகப் பார்க்கவில்லை, மாறாகத் தங்கள் கோரிக்கையை அரசுத் தரப்பிடம் வைக்கத் தகுதிபெற்ற நபராகப் பார்க்கிறார்கள் என்பதைப் பட்நாயக் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அத்தகைய தகுதி கொண்ட ஒரேயொரு அரசியல்வாதிகூட இருப்பதாக மக்கள் கருதாத அளவிற்கு அரசியல்வாதிகள் இன்று மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர். இது மிக துரதிருஷ்டவசமானது. அரசியல்மீதே மக்கள் நம்பிக்கையிழந்து அரசியலுக்கெதிரான மனநிலையை இன்று அடைந்திருப்பது மிக ஆபத்தானது. தங்களுக்குச் சாதகமாக இருப்பதால் இதை ஊடகங்களும் கார்ப்பொரேட் நிறுவனங்களும் ஊக்குவிக்கின்றன. மக்களின் இந்த மனநிலையை மாற்றி அவர்களை அரசியல்மயப்படுத்துவது இடதுசாரிகளின் முன்னுள்ள சவால்.
பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக மக்களாட்சியை விடுத்து மீட்புவாதத்தை ஏற்றுக்கொள்வது முடியாத காரியம் என்கிறார் பட்நாயக். அண்ணாவை இறைதூதரைப் போல் மக்கள் பார்க்கிறார்கள் என்பதும் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மீட்புவாதமாகவும் சித்தரிப்பதும் முற்றிலும் தவறு. ஆனால் பெரும்பான்மையான மக்கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் என்பதற்காக அதைச் சட்டமாக்குவது ஏற்க முடியாதது என்று பட்நாயக் கூறுவது சரிதான். நமது நாட்டின் சமூக ஒப்பந்தமாகிய அரசியல் சாசனத்தைப் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கேற்ப எழுதியிருந்தால் இந்தியா 19ஆம் நூற்றாண்டைவிட்டே வெளிவந்திருக்க முடியாது. சமூக ஒப்பந்தம் என்பது அச்சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடித் தங்களது உரிமைகள், கடமைகள் குறித்து விவாதித்து இறுதியாகத் தங்களுக்கிடையில் செய்துகொள்வது. நவீன நாட்டின் சமூக ஒப்பந்தம் என்பது உலகளாவிய விழுமியங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தீண்டாமையை ஆதரிக்கிறார்கள் என்பதற்காகத் தீண்டாமையை ஏற்கிற சட்டத்தைக் கொண்டு வர முடியாது. ஏனெனில் தீண்டாமை சட்டமாகிறபோது சமூகத்தின் ஒரு பிரிவினரின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன, மீறப்படுகின்றன. இது ஏற்க முடியாதது, உலகளாவிய மனித விழுமியங்களுக்கு எதிரானது. இதுவே மதச் சார்பின்மை, தன்பாலின வேட்கையாளர்களின் உரிமைகள் போன்ற பல்வேறு விஷயங்களிலும் உண்மை. ஆனால் ஊழலுக்கு எதிரான வலுவான சட்டம் கொண்டு வரப்படுவதால் யாருடைய உரிமை பறிபோகிறது? அல்லது பாதிக்கப்படுகிறது? ஊழலால் தங்களது உரிமைகளும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன்களும் பறிபோவதால் மக்கள் ஊழலுக்கெதிரான வலுவான சட்டத்தைக் கோருகிறார்கள். ஊழல் தங்களது பிறப்புரிமை என்று யாராவது கருதினால் அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க வேண்டும்.
ஜன் லோக்பால் மசோதாவில் சில பிரிவுகள் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் சில பிரிவுகள் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் அண்ணா குழுவினரால் முன்வைக்கப்படும் மசோதா அப்படியே ஏற்கப்பட்டால் அது அரசாங்கத்திற்கு மேலான ஒரு சூப்பர் அரசாங்கமாகிவிடும் என்றும் ஊழலை ஒழிக்க இந்த மசோதா தேவையில்லை, இப்போதிருக்கும் சட்டங்களும் நிறுவனங்களுமே போதுமானவை என்றும் இந்த மசோதாவால் ஊழல் ஒழிந்துவிடாது என்றும் எதிர்காலத்தில் லோக்பால் அமைப்பு ஊழல் மயமாகாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இவற்றில் சில நியாயமானவை, பல தவறானவை. இவற்றைப் பற்றி எழுத இங்கு இடமில்லை. இதற்காகத் தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
அண்ணா குழுவினர் வைத்த கோரிக்கைகள் எதையும் ஏற்பதாக அரசாங்கம் கூறவில்லை. மிக முக்கியமான கோரிக்கைகளான பிரதமரை, நீதித் துறையின் உயர் அமைப்புகளை லோக்பால் சட்டத்தின் கீழ்க் கொண்டு வருவது, சி. பி. ஐயின் ஊழல் கண்காணிப்புப் பிரிவை லோக்பால் கீழ்க் கொண்டுவருவது, லோக் அயுக்தாவை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்குவது, நிர்வாகத்தின் கீழ்நிலைப் பிரிவுகளையும் லோக்பால் கீழ்க் கொண்டு வருவது, குடிமக்கள் சாசனத்தை அதாவது அரசாங்க அலுவலகங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், அவை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் அப்படி நிறைவேற்றப்படாவிட்டால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்பன குறித்து ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் எழுதி ஒட்டப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எதையும் ஏற்பதாக அரசாங்கம் கூறவில்லை. உண்ணா விரதத்தில் இறுதி நாட்களில் வைக்கப்பட்ட கடைசி மூன்று கோரிக்கைகளுடன் (அனைத்து மாநிலங் களிலும் லோக் அயுக்தா, நிர்வாகத்தின் கீழ்நிலைப் பிரிவை லோக்பால் கீழ்க் கொண்டுவருவது, குடிமக்கள் சாசனம்) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொள்கை அளவில் உடன்பாடு காண்பதாகவும் நாடாளுமன்றம் தனது ‘உணர்வை’ வெளிப்படுத்துவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் தங்களது மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று அண்ணா குழுவினர் கோரியது அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் உத்தியே தவிர அது நடக்குமென்று எதிர்பார்க்கிற அளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல. மேலும் அண்ணா குழுவினரைப் பிடிவாதக் காரர்களாகச் சித்தரிப்பதும் உண்மைக்குப் புறம்பானது. அவர்களது மசோதா இதுவரை சுமார் எட்டுமுறை திருத்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. மேலும் நியாயமான திருத்தங்கள் நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்படும் எனில் அதையும் அவர்கள் ஏற்கக்கூடியவர்களே.
இந்த இயக்கத்தின் மிகப் பெரும் வெற்றி என்பது அது மக்களிடையே ஊழலுக்கு எதிராக ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்ச்சிதான். பொதுவான கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் எந்த இயக்கத்திலும் இடது முதல் வலதுவரை எல்லாத் தரப்பினரும் இருப்பார்கள். எந்தத் தரப்பினர் அதில் அதிகம் பங்கேற்கிறார்கள், மக்களிடயே ஊடுருவுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த இயக்கத்தின் பலன்களும் எதிர்காலமும் இருக்கும். தூயப் புரட்சிக்காகக் காத்திருப்பதைவிட இந்தப் போராட்டங்களைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதே இடதுசாரிகள் செய்யக்கூடியதாக இருக்கும். மக்கள் இயக்கங்களை நம்பியிருக்கும் இடதுசாரிகள் அண்ணாவின் இந்த இயக்கத்தை எள்ளி நகையாடுவதும் அதைப் புறக்கணிப்பதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிவதைப் போன்றது.