நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்
கடந்த சுதந்திர தினத்தன்று மதியம் முன்னறிவிப்பு எதுவுமின்றித் திடீரென அண்ணா ஹஜாரே மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றுள்ளார் என்ற அறிவிப்பு வந்ததும் வழக்கமாக நம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சியாகவே அது இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அவரோ காந்தி சமாதியின் முன்பு மணிக்கணக்கில் கண்மூடித் தியானக் கோலத்தில் அமர்ந்தார். அந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டு, அவரைக் காண்பதற்காக வந்த பொது மக்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. அண்ணாவின் தியானத்திற்கு இடையூறு செய்யாதவண்ணம் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சதுக்கத்திற்கு வெளியே அமர்ந்தனர். தனியாக அண்ணாவும் அவரைச் சுற்றிப் பொதுமக்களும் அமர்ந்திருந்த அந்தக் காட்சி எனக்குள் பெரிய நிகழ்வு ஒன்று நடக்கப்போவதை முன்னறிவிப்பதாகத் தோன்றியது. அரசுக்கும் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கும் அந்தக் காட்சி ஏன் எதையும் உணர்த்தவில்லை என்ற கேள்வி மறுநாள் காலை அவசரம் அவசரமாக அவரைக் கைதுசெய்தபோது எழுந்தது. காந்தி சமாதிமுன்பு தியானத்தில் அமர்ந்தபோதே அண்ணா தன் போராட்டத்தில் பாதி வெற்றியைச் சாதித்துவிட்டார் என்றே இன்று கூறத் தோன்றுகிறது. அரசு அவரை அவசரமாகக் கைதுசெய்து அதே அவசரத்தில் விடுவிப்பதாக ஆகஸ்ட் 16ஆம் நாள் மாலை அறிவித்தபோது, சிறையைவிட்டு வெளியேறமாட்டேன் என்று அறிவித்து மீதிப் பாதியைச் சாதித்தார் என்று கூறலாம். இவ்விரண்டு நிகழ்வுகளுமே யாரும் எதிர் பார்த்திராதவை என்பதோடு, சுதந்திரப் போராட்ட நாட்களில் மகாத்மா காந்தி பலமுறை உபயோகித்த Master strokes போன்றவை என்றால் மிகையல்ல. ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலையிலிருந்து ஆகஸ்ட் 16ஆம் நாள் இரவுக்குள் மத்திய அரசு அண்ணாவிடம் படுதோல்வியடைந்தது வெட்டவெளிச்சமாயிற்று. சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் மிகவும் பரிதாபமாகத் தோற்றமளித்தனர். அருண் ஜேத்லி கூறியதுபோலத் தில்லிப் போலீஸ்காரர்களின் சீருடைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டியவர்களானார்கள்.
அன்றுவரை அண்ணா ஹஜாரேவை நான் கோமாளியாகத்தான் கருதியிருந்தேன். கடந்த ஏப்ரலில் அவர் லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டபோதும் என் எண்ணத்தில் மாற்றம் இருக்கவில்லை. லோக்பால் என்னும் அமைப்பு உருவானால் லஞ்ச ஊழல்கள் மறைந்துவிடுமா என்ற கேள்வியோடு மேட்டுக்குடியினரின் ஆதரவுடன் தொலைக்காட்சிகளின் துணையுடன் அவர் வெறும் சலசலப்பை ஏற்படுத்துவதாகவே தோன்றியது. மன்மோகன் சிங் அடிக்கடி கூறியதுபோல லஞ்சத்தை ஒழிக்க மந்திரக்கோல் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. தவிர எந்தப் போராட்ட உத்தியும் இரண்டாம்முறை பயனளிக்காது என்று என்னுடைய சித்தாந்த அறிவு கூறியது. ஆகவே அண்ணாவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சில நாட்களில் பிசுபிசுத்துவிடும் என்றே எண்ணினேன். ஆனால் நடந்து முடிந்துள்ள நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கும்போது வியப்பாகவே இருக்கிறது. கடந்த 50 - 60 ஆண்டுகளில் வேறெந்தப் போராட்டமும் நாடுதழுவிய அளவில் இவ்வளவு உற்சாகத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. லஞ்ச ஒழிப்பு என்ற எளிமையான ஒற்றை கோஷத்தை வைத்துக்கொண்டு 13 நாட்கள் இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டார் அண்ணா என்பதில் சந்தேகமில்லை.
காந்திக் குல்லாய் என்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கட்சி மாநாடுகளில் முதல் நாள் மேடையில் அமரும்போது மட்டும் அணிவது என்றாகிவிட்டது. கடைசியாக எந்தத் தலைவரைக் காந்திக் குல்லாய் அணிந்து பார்த்திருக்கிறேன் என்று நினைவுபடுத்திக்கொள்ள முயன்றால் மொரார்ஜி தேசாய், ஒய்.பி. சவான், நீலம் சஞ்சீவரெட்டி என்ற சிலர் மட்டுமே நினைவுக்கு வருகின்றனர். ஆனால் அண்ணாவின் இந்தப் போராட்டத்தில் காந்திக் குல்லாய் மிகவும் மதிப்புப்பெற்று, கல்லூரி மாணவர்களும் நவீனத் தொழில் துறைகளில் உள்ளவர்களும் அணிந்து மகிழக் கண்டேன். நூற்றுக்கணக்கில் தேசியக் கொடிகள் ஆட்டி மகிழ்ந்த மக்களின் பெருங்கூட்டம் வியப்பாக இருந்தது. பெயருக்குக்கூடக் கட்சிக்கொடி இல்லாமல் மக்கள் திரண்டுவந்து, ஆடிப்பாடி மகிழ்ந்த அரசியல் போராட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும். வயது வித்தியாசமின்றி - ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவர் சிறுமியரிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்வரை - எல்லோரும் பங்குகொண்ட போராட்டம் இது என்பதும் ஓர் அதிசயமே. கூட்டத்தில் சரிபாதிக்கு மேல் பெண்கள். எல்லாவற்றையும்விட வன்முறைச் சம்பவங்கள் இன்றி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் மக்கள் திருவிழாப்போலப் பங்குகொண்டதும் இதுவாகத் தான் இருக்கும். அண்ணாவின் கைதுக்குப் பிறகும் ‘எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுங்கள், நாடாளு மன்றத்தைச் சுற்றிவளையுங்கள்’ என்று அவரே முழங்கிய பின்னரும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்பது அதிசயமின்றி வேறென்ன? சமீபத்தில் லண்டனில் நடந்த வன்முறைச் சம்பவங்களுடன் அண்ணாவின் போராட்டத்தை ஒப்பிடும்போதுதான் இங்கே எவ்வளவு பெரிய அதிசயம் நிகழ்ந்துள்ளது என்பது புரியும்.
அண்ணாவின் மேடைப்பேச்சு மிகவும் வித்தியாசமாக இருந்தது. எளிமையாக, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்வண்ணம் நேரிடையாகப் பேசினார். கூட்டத்தில் படித்தவர்களே அதிகமாக இருந்தும் அவர் பேச்சு மிக எளிமையாகவே இருந்தது. ஒவ்வொரு வாக்கியத்தையும் ‘அரே’ என்று தொடங்கினார். அரசுக்குக் கடுமையான கெடுவைத்தார். ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றாவிட்டால் பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டும் என எச்சரித்தார். ‘லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் பதவியிலிருந்து வெளியேறுங்கள்’ என்றார். ‘எம்.பிக்களின் வீடுகள் முன்பு மறியல் செய்யுங்கள், ஜெயில்களை நிரப்புங்கள்’ என்று கடுமையாகவே பேசினார். ‘எதிர்க்கட்சிகள் ஏன் மௌனம் சாதிக்கின்றன?’ என்று கேட்டார். வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை, எழுதிக் கொடுத்தால்தான் முடியுமென்று பிடிவாதமாக இருந்தார். ‘நான் நன்றாகவே இருக்கிறேன் இன்னும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க என்னால் முடியும்’ என்று கர்ஜித்தார். மொத்தத்தில் விடாப்பிடியராகவும் தன் முடிவிலிருந்து சற்றும் இறங்கி வராதவராகவும் தோன்றினார். பத்து நாட்கள் பட்டினி கிடந்த பிறகும் மக்கள் திரளை நோக்கி அதே உற்சாகத்துடன் அவரால் நின்றுகொண்டு பேச முடிந்தது. சாதாரணமாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தலைவர்கள் மூன்று நான்கு நாட்களுக்குமேல் ஈனஸ்வரத்தில் படுத்தபடியே ஏதோ முனகுவார்கள். அதைப் பக்கத்திலிருந்து கேட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வேலையை அவருடைய சீடர்கள் பார்த்துக்கொள்வார்கள். அண்ணாவோ கடைசிவரை கணீரென்ற குரலில் நின்றபடியே பேசினார். இன்றைய பொதுவாழ்க்கையில் இது பெரும் அதிசயமே.
‘பேயறைந்ததுபோல’ என்ற சொல்லுக்கு விளக்கம் போலத் தோன்றினர் மத்திய அமைச்சர்கள். மன்மோகன்சிங் எப்போதும் அப்படித்தான் தோற்றமளிக்கிறார் என்பது வேறு விஷயம். அண்ணா அறைந்த அறையில் மன்மோகன்சிங் ‘அண்ணா நாமம் வாழ்க’ என்று கூறுமளவுக்குச் சென்றுவிட்டார் என்றால் பாருங்கள். அண்ணாவின் லட்சியங்கள் உன்னதமானவையாக இருக்கலாம். ஆனால் அவரது வழிமுறை தவறானது என்று ஆணித்தரமாகப் பேசிய மன்மோகன்சிங் ஆறே நாட்களில் ‘அண்ணாவுக்கு என் கும்பிடு’ என்று நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டியிருந்தது. துள்ளிக்குதித்த சிதம்பரமும் கபில்சிபலும் முற்றிலும் ஒதுக்கப்பட்டு இருக்குமிடம் தெரியாமல் போனார்கள். அண்ணா கிழித்த கோடுகளைத் தாண்ட முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரது மூன்று நிபந்தனைகளையும் மனமார ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் ராஜகுமாரரெனக் கூறப்படும் ராகுல் காந்தி மிகவும் காலம் தாழ்த்தி, லோக்பால் என்ற அமைப்புக்குத் தேர்தல் கமிஷனைப் போன்ற அந்தஸ்து தரப்பட வேண்டும் என்றார். ஆனால் அவருடைய சலசலப்புக்கு யாரும் அஞ்சியதாகத் தோன்றவில்லை. ஏன் இவ்வளவு காலதாமதமாகக் கருத்து கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு ராகுல் காந்தி சொன்னார்: ‘நான் சிந்தித்துத்தான் கருத்துக் கூற முடியும்’. இவர் சிந்தித்துக் கருத்து சொல்வதற்கே இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டால் செயலாற்றுவதைப் பற்றி மறந்துவிடலாமா எனக் கேட்கத் தோன்றியது.
தொலைக்காட்சிகளால் உருவாக்கப்பட்டு, தொலைக்காட்சிகளால் நடத்தப்பட்டு, தொலைக்காட்சிகளே அடைந்த வெற்றி என்று அண்ணாவின் போராட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. குறுகிய சில நாட்களில் அவரது போராட்டம் இந்த அளவு நாடு தழுவிய போராட்டமாக ஆனதற்குத் தொலைக்காட்சிகளும் நவீனத் தொலைத் தொடர்புச் சாதனங்களுமே முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சாதனம் அரசியலில் மக்களைத் திரட்டவும் போராடவும் உதவியுள்ளது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு சினிமா துணையாக இருந்தது என்பதாலேயே அதை சினிமாவின் இயக்கமாக மட்டுமே பார்ப்பது எவ்வளவு தவறோ அதேபோலத்தான் அண்ணாவைத் தொலைக்காட்சியால் உருவாக்கப்பட்டவராக மட்டும் பார்ப்பதும் தவறு. அண்ணா ஒரு முகமூடிதான்; பிரஷாந்த் பூஷன், கிரண்பேடி, அரவிந்த கேஜ்ரிவால் போன்ற நடுத்தர வர்க்க நாயகர்கள் சாமர்த்தியமாக அண்ணாவின் பெயரை உபயோகித்துப் பெரும் புரட்சியைப் போன்ற பிரமையை உருவாக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. அண்ணா யாருக்கும் முகமூடியல்ல என்பது அவர் செயல்பட்ட தோரணையிலிருந்து தெளிவாகிறது. பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றுவந்த கேஜ்ரிவாலையும் கிரண்பேடியையும் கடைசிக் கட்டத்தில் மாற்றி மேதாபட்கரையும் பூஷனையும் மட்டுமே முன்வைத்ததையும் மகாராஷ்டிரத்திலிருந்து சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு வந்தவர்களிடம் தானே நேரில் பேசியதையும் அண்ணாதான் முடிவுகளை எடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் காட்டலாம். நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்ற முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. அது சரியான கணிப்பு என்றாலும் இந்தியாவில் பெருகிவரும் நடுத்தர வர்க்கம் இன்று பெருநகரங்களிலிருந்து சிறிய ஊர்கள்வரை சுமார் முப்பது கோடியை நெருங்கிவிட்டதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்த முப்பது கோடிப் பேரை ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்துவது முடியாது என்பதை நம் அரசியல் கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஐம்பதாண்டுகளாக அதே கோஷங்களை எழுப்பி மக்களிடம் ஓட்டுக் கேட்டு அரசியல் நடத்தும் நம் கட்சிகள் தங்கள் சுயநலம் கருதியாவது பெருகிவரும் நடுத்தர வர்க்கத்தின் பக்கமும் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் பழக்கதோஷம் அவர்களை விட்டபாடில்லை.
அண்ணாவின் இந்தப் போராட்டம் நம் அரசியல் கட்சிகளின் திவாலாகிப்போன பார்வைகளுக்கும் புரிதல்களுக்கும் பெரிய சவாலாக உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. எந்த அரசியல் கட்சித் தலைவரும் அண்ணாவின் போராட்டம் நடந்த இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. தான் தனிப்பட்ட முறையில் அண்ணாவின் போராட்டத்தில் பங்குகொள்வதாகவே வருண்காந்தி சொல்ல வேண்டியிருந்தது. இடதுசாரிக் கட்சிகளின் ‘அண்ணாவின் கோரிக்கைகளை ஆதரிக்கிறோம்’ என்ற அறிக்கையை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் ஷரத்துகளையும் காப்பாற்றப் புரட்சி, புரட்சியென்று இன்றுவரை அரசியல் நடத்தியவர்கள் பலரும் வரிந்துகட்டிக்கொண்டு நின்றது கொஞ்சம் வேடிக்கையாகக்கூட இருந்தது. வீதியில் இறங்கி அரசியல் சட்டங்களைக் கொண்டுவருவதை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆட்சேபித்தார். தலித் அறிவுஜீவிகள் சிலர் அண்ணாவின் போராட்டம் மனுவாதிகளின் போராட்டம் என்றனர். இன்றைய இளைஞர்கள் பலருக்கு ‘மனுவாதிகள்’ என்பது புரியாமலே போகலாம். அல்லது மனுக்களை அளிப்பதன் மூலம் போராட்டம் நடத்துவது என்றும் அர்த்தப்படலாம். அரசியல் நிர்ணயச் சட்டசபையில் அம்பேத்கர் பேசியதை மேற்கோள்காட்டி அண்ணாவின் அரசியல் அராஜகத்தனமானது என்றார் தலித் அறிவுஜீவிகளில் முக்கியமான ஒருவர்.
அண்ணாவை விமர்சித்தவர்களில் பெரும்பான்மையினர் அவருடைய லட்சியம் சரியானது; ஆனால் அவர் போகும் பாதைதான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர். ஆனால் அறிவுஜீவிகளுக்கெல்லாம் அறிவுஜீவியாகக் கருதப்படும் அருந்ததி ராய் மட்டும் அண்ணாவின் பாதை காந்தியப் பாதையாக இருந்தாலும் அவர் அடைய நினைக்கும் இலக்கு அதிகாரக் குவிப்பிற்கே வழிவகுக்கும் என்றார். அதாவது லோக்பால் என்ற அமைப்பு உருவானால் அது இப்போதுள்ள அதிகார மையங்களுடன் மற்றொரு அதிகார மையமாக மாறும் என்றார். மேலும் அண்ணா மற்ற பல பிரச்சினைகளைப் பற்றி என்ன கருத்துடையவர் என்ற கேள்வியையும் எழுப்பினார். அணுசக்தி பற்றி, மாவோயிஸ்டுகள் குறித்து அல்லது வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை குறித்து அண்ணாவின் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேள்விகள் கேட்டு ‘நான் அண்ணாவாக விரும்பவில்லை’ என்று முடித்தார் அருந்ததி.
அருந்ததி ராய் போன்றவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுத்தான் ஒரு போராட்டத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்பது என்ன தர்க்கம் எனத் தெரியவில்லை. ‘மனித உரிமை மீறல்கள் பற்றி அண்ணா என்ன செய்துள்ளார்?’ என்றும் கேட்டுள்ளார். அண்ணாவின் குழுவில் உள்ள இருவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவே வாதாடி வருவதையும் மேதாபட்கர் போன்றவர் அண்ணாவின் போராட்டத்தை ஆதரிப்பதையும் அவர் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதேன்?
அண்ணாவின் போராட்டம் லஞ்ச ஊழலை மட்டுமே ஒழிக்கும் போராட்டம் என்று பார்ப்பதுகூடத் தவறாக இருக்கும் என்பது என் கருத்து. லஞ்ச ஊழல் என்பது லோக்பால் என்னும் அமைப்பில் தீராது என்றே எடுத்துக்கொண்டாலும், இந்தியா முழுவதும் 13 நாட்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவில் இறங்கி ‘எங்களுக்கு நேர்மையான ஆட்சி வேண்டும்’ என்ற கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததைப் பெரிய நிகழ்வாகவே கருத வேண்டும்.
சி. ரைட் மில்ஸ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க இடதுசாரிச் சிந்தனையாளர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கீலீவீtமீ சிஷீறீறீணீக்ஷீ என்னும் நூலில் நடுத்தர வர்க்கம் குறித்து இப்படி எழுதினார்:
‘இவர்கள் சத்தமின்றி நவீன உலகில் நுழைந்துள்ளனர். இவர்களுக்கு வரலாறு என்று இருக்குமானால் அந்த வரலாறு பெரிய நிகழ்வுகள் ஏதுமற்ற ஒன்றாகும். இவர்களது பொது அக்கறைகள் இவர்களை ஒன்றுபடுத்த உதவமாட்டா. இவர்களின் எதிர்காலம் என்பது இவர்களால் தீர்மானிக்கப்படுவதாக இராது.’
மார்க்ஸின் பார்வையில் நடுத்தர வர்க்கம் என்பதே போலியான, பொய்யான வர்க்கம். வர்க்கப் பிரக்ஞை என்று உருவாவதற்கு வழியில்லாததால் அது மற்ற இருவர்க்கங்களில் ஒன்றுடன் இணைவதே நடக்கும். ஆனால் இன்று, இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் நடுத்தர வர்க்கம்தான் பிரதான வர்க்கமாக உருவெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ராஜீவ் காந்தி தன்னுடைய பேச்சு ஒன்றில் இந்தியாவின் நடுத்தர வர்க்கம் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் தொடங்கிவைத்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெருமளவுக்குப் புதிய நடுத்தர வர்க்கம் ஒன்று பெருகி வளர வழிவகுத்தது. தங்களால் பால்வார்த்து வளர்க்கப்பட்ட இந்தப் புதிய நடுத்தர வர்க்கம் தங்கள் கையைக் கடிக்கவும் செய்யும் என்பதை மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அறியாமல் இருக்க முடியாது. சமுதாயத்தின் அடிமட்டத்திலிருப்பவர்கள்தான் போராடுவார்கள் என்ற பழைய தத்துவம்கூட மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பெரும் அளவு வாழ்க்கை வசதிகளை அனுபவித்து ருசி கண்டவர்கள் ஆட்சியில் மாற்றங்களைக் கோருகிறார்கள். நல்ல வாழ்க்கை வேண்டும் என்பதோடு அதை அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டுள்ள இந்திய நடுத்தர வர்க்கத்தின் முதல் போராட்டம் என்றுகூட அண்ணாவின் போராட்டத்தைப் பார்க்கலாம்.
அரசியல் நிகழ்வுகள் நம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவாறு, நம்மால் விளக்க முடியாத வகையில் நிகழலாம் என்பதற்கு அண்ணாவின் போராட்டம் சிறந்த உதாரணம். ‘எதிர்பாராதவைதாம் நிகழும்’ என்று ஒரு தத்துவப் பார்வையே உருவாகியுள்ள சூழலில் இருக்கிறோம். எதிர்பார்ப்பது நடக்காமல் போவதோடு எதிர்பாராததும்கூட நடக்கலாம் என்பதை நாம் உணர்வது அவசியம். அதை அண்ணா என்னும் அதிசய நிகழ்வு காட்டுகிறது.