நவம்பர் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      இந்தியாவின் தெளிவற்ற மதச்சார்பின்மை
      பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி
      கொலையும் களப்பலிகளும் மறுமலர்ச்சியின் பூபாளம்
      இது ஷி--ஜிங்பிங்கின் காலம்!
      நோபல் பரிசு: அன்னி எர்னோ ஆபாச எழுத்தாளரா?
      சோழர் காலத் தமிழர் பெருமிதமும் ‘கங்காபுரம்’ நாவலும்
    • கதை
      பூனையின் தவம்
      நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள்-?
    • பாரதியியல்
      பாரதிக்கும் வ.உ.சி.க்கும் உதவிய சுதேசமித்திரன் ஆசிரியர்
    • தொடர்
      என்றென்றும் வாசகர்
    • அஞ்சலி; தெ. சுந்தரமகாலிங்கம் (1940-2022)
      நெகிழவைக்கும் மரண சாசனம்
    • சுரா கடிதங்கள்
      சுரா பக்கங்கள் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 3
    • திரை
      அடையாளச் சிக்கல்: ‘இட’மாக மாறும் ‘நிலம்’
    • ஆடுகளம்: பாபர் ஆசம்
      தேசத்தின் மரியாதையைச் சுமக்கும் மட்டை
    • ஊடகம்: சிராங்கூன் டைம்ஸ்
      சிங்கையிலிருந்து உலகை நோக்கி: விரியும் இதழியக்கம்
    • தலையங்கம்
      ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஒழியட்டும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2022 தலையங்கம் ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஒழியட்டும்

ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஒழியட்டும்

தலையங்கம்


ஓவியம்: சுரேந்திரா
நன்றி: தெலங்கானா டுடே

மீண்டும் ஒருமுறை அரசு இயந்திரமும் நீதித்துறையும் மனித உரிமைகள், சுதந்திரமான கருத்து வெளிப்பாடு ஆகியவை தொடர்பான ஆட்சேபத்திற்குரிய நகர்வினை மேற்கொண்டிருக்கின்றன. மாவோயிஸ்டுகளுடன் தொடர்புவைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உட்பட ஐந்து பேரை மும்பை  உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அக்டோபர் 1 4 அன்று விடுதலை செய்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மகாராஷ்டிர அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையைப் பெற்றிருக்கிறது.

சாய்பாபா தொண்ணூறு சதவீதம் உடல் ஊனமுற்றவர். அவர் சக்கர நாற்காலியில்தான் இருக்க வேண்டும். பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என அவருடைய வழக்கறிஞர் பாசந்த் கோரியிருந்தார்.

அக்டோபர் 15 அன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாளாக இருந்தபோதிலும் நீதிபதிகள் எம்.ஆர். ஷா, பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றச் சிறப்பு அமர்வு அரசின் மனுவை அவசர மனுவாகக் கருதி காலை 11 மணிக்கு விசாரித்து சாய்பாபா உள்ளிட்ட ஐவர் விடுதலைக்கு  இடைக்காலத் தடை விதித்து, குற்றவாளிகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சாய்பாபாவின் உடல்நிலையை முன்னிட்டு அவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கான கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.

சாய்பாபாவின் கைது, அவர் விடுதலைக்கு மகாராஷ்டிர அரசு தெரிவித்த எதிர்ப்பு, உச்ச நீதிமன்ற அமர்வு தந்துள்ள தீர்ப்பு ஆகியவை அரசுத் தரப்புக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களின் நிலை என்னவாகும் என்று தெளிவாகக் காட்டுகின்றன. பிணையில் வெளியே விடவில்லை என்றாலும் வீட்டுக்காவல் போன்ற இதர வழிகளின் மூலம் இவர்களைக் கையாள்வதையும் அரசு விரும்புவதில்லை. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தொடர்ந்து வெளியிட்டுவருபவர்களுக்கான எச்சரிக்கையாக அரசு இத்தகைய கடுமையான அணுகுமுறையைக் கைக்கொள்கிறது என்றே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 2014, மே மாதம் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார். நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்புவைத்திருந்தார் என்றும் குறிப்பாக, மாவோயிஸ்ட் தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாகத் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைதுசெய்து விசாரித்தபோது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாக அவர் கூறியிருந்தார்.

உபா எனக் குறிப்பிடப்படும்  unlawful activities (prevention) act (UAPA – சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் சாய்பாபா கைது செய்யப்பட்டார். மார்ச் 2017இல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தாலும் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

சாய்பாபாவுடன் சேர்த்துக் கைதான ஆறுபேரில் நாரோட் என்பவர் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுச் சிறையிலேயே உயிரிழந்தார். இதே உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஸ்டான் சுவாமி (84) என்ற பாதிரியாரும் கடந்த ஆண்டு சிறையிலேயே மரணம் அடைந்தார். விளிம்பு நிலை மக்களுக்கான சேவையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த ஸ்டான் சுவாமியின் உடல்நிலை சிறையில் மோசமடைந்துவந்த நிலையிலும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. பிணையில் வெளிவரவும் அனுமதி அளிக்காத நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதியன்று அவர் உயிர் பிரிந்தது.

ஸ்டான் சுவாமி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ரோனா வில்சனின் கணினியில் சதித்திட்டத்துக்கான கதை திட்டமிட்டுச் சொருகப்பட்டது தடயவியல் பகுப்பாய்வு மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டது. இதை வாஷிங்டன் போஸ்ட் இதழ் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தது. வழக்கம்போல இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் இதைக் கண்டுகொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்ட சுரேந்திர காட்லிங்கின் கணினியில் ஆதாரங்கள் சொருகப்பட்டதையும் வாஷிங்டன் போஸ்ட் இதழின் புலனாய்வுச் செய்தி தெரிவித்தது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் காரணத்தை முன்வைத்து யாரை வேண்டுமானாலும் காலவரையின்றிச் சிறையில் அடைக்க அரசுக்கு உதவக்கூடிய சட்டங்களில் ஒன்றுதான் உபா சட்டம். அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றும் மாவோயிஸ்டுகள் அல்லது மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்றும் குற்றம் சாட்டி உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்வது வழக்கமாகியிருக்கிறது. உரிய முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்குத் தொடுப்பதோ கைதுசெய்வதோ தவறில்லை. ஆனால், உபா போன்ற கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்களின் கீழ் ஒருவரைக் கைதுசெய்யும்போது அவர் தன் தரப்பு நியாயத்தை நிரூபித்து விடுதலை ஆவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைந்துவிடுகிறது. எல்கர் பரிஷத் வழக்கில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் உபாவில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் பெயரால் கடுமையான சட்டம் அதன் சகல கெடுபிடிகளுடன் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் குறுக்கே நிற்கிறது. இதுபோன்ற சட்டங்களின் அடிப்படையில் தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் கண்ணோட்டமும் பெரும்பாலும் அரசின் அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள், அதற்கு ஆதரவாக அது முன்வைக்கும் சான்றாதாரங்கள் ஆகியவை கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஸ்டான் சுவாமி வழக்கில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புலனாய்வுச் செய்தி இதைத்தான் காட்டுகிறது. ஆனால் அரசின் ஆதாரங்களை மறுக்கவோ தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவோ உபா போன்ற சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்குத் தேவையான வாய்ப்புக் கிடைப்பதில்லை. இத்தகைய சட்டங்களின் செயல்முறைகள் எப்போதும் ஒருவழிப் பாதையாகவே இருக்கின்றன. வழக்கு, விசாரணை, முறையீடு, மேல் முறையீடு, பிணை நடைமுறைகள் ஆகியவை இந்தச் சட்டத்தின் கீழ் நடக்கும் வழக்குகளில் பெரும்பாலும் அரசுத் தரப்புக்கே சாதகமாக இருக்கின்றன. எனவே இத்தகைய நடவடிக்கைகளைக் கடுமையான ஒடுக்குமுறை என்று சொல்வதோடு மட்டுமின்றி, கருத்துத் தளத்திலான எதிரிகளுக்கான மிரட்டலாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. “உபா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டம் இதற்காகவே கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கட்டுரையொன்றில் சொல்லியிருப்பது அரசின் அணுகுமுறையைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லிவிடுகிறது.

ஸ்டான் சுவாமி போன்ற வயது முதிர்ந்தவர்களையும் சாய்பாபா போன்ற மிக மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களையும் தொடர்ந்து சிறையில் அடைத்துவைத்திருப்பதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் அச்சுறுத்துகிறது. சிறையில் சாய்பாபாவின் கழிப்பறை, குளியலறைகளையும் கண்காணிக்கும் வகையில் சிறை நிர்வாகம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியது. அதை அகற்றக் கோரிக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சாய்பாபா தொடங்கிய பிறகே சிறை நிர்வாகம் கேமராக்களின் கோணங்களை மாற்றியது. காலவரையின்றிச் சிறையில் அடைப்பதோடு நில்லாமல் சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஒருவரைத் துன்புறுத்தும் நோக்கத்தை அப்பட்டமாகக் காட்டும் செயல் இது.

கருத்துரீதியான எதிரிகளை ஒடுக்குவதில் பாஜக தனித்திறன் பெற்றது என்றாலும் இந்த நோக்கத்திற்காக அதற்கு உதவியாக இருக்கும் உபா போன்ற சட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்டதை மறந்துவிட முடியாது. ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்னும் சொல்லாக்கமே காங்கிரசின் கண்டுபிடிப்புதான் என்பதையும் மறந்துவிட முடியாது. காங்கிரஸ் உருவாக்கிய அடக்குமுறைச் சட்டங்களையும் உத்திகளையும் காங்கிரசைக் காட்டிலும் ‘திறமை’யாகவும் கச்சிதமாகவும் உணர்ச்சிப் பிசுக்கின்றியும் பாஜக பயன்படுத்திவருகிறது. அடிப்படையில் இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு என்னும் பெயரால் குடிமக்களின் கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பறிப்பதிலும் எதிரிகளாகத் தான் கருதுபவர்களைக் கடுமையாக ஒடுக்குவதிலும் ‘சீராக’ச் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் சாய்பாபா போன்றோருக்கான குரல் பாஜக அரசுக்கு எதிரான குரலாக மட்டுமில்லாமல் இதுபோன்ற விவகாரங்களில் இந்திய அரசின், நீதித்துறையின் அணுகுமுறைக்கு எதிரான குரலாகவும் வலுப்பெற வேண்டும். ஆளும் கட்சிகள் மாறினாலும் ஒடுக்குமுறை மாறாதிருப்பதைப் புரிந்துகொண்டு மனித உரிமைக்கான வாதங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நடமாடவே முடியாத சாய்பாபாவுக்குப் பிணை விடுதலை அல்லது வீட்டுக்காவல் போன்ற சிறிய ஆறுதலைத் தருவதற்கான கோரிக்கைகளுக்கான தேவை தற்போது இருக்கிறது. ஆனால், உபா போன்ற சட்டங்களை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்வதற்கான தீவிரமான முயற்சிகள்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். மனித உரிமை, கருத்துரிமை சார்ந்த குரல்கள் வலுவாக எழ வேண்டிய தருணம் இது.

ராகுல் காந்தியின் நெடும் பயணம்

இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய இணைப்புப் பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) கடந்த செப்டம்பர் 7ஆம் நாள் தொடங்கியது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரையான ஏறத்தாழ 3500 மைல் தூரத்தை மூன்று மாதங்களில் கால்நடையாகக் கடந்து காஷ்மீரை அடையவிருக்கும் இந்தப் பயணத்தின் நோக்கம், சிதறுண்டு கிடக்கும் இந்தியாவை ஒன்றுபடுத்துவது. இதுபோன்ற நோக்கத்தைச் சொல்லிப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றன. நாட்டு நலனை முன்னிட்டும் மக்களின் குறைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவும் இவ்வாறு பயணங்கள் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டன; சொல்லப்படுகின்றன.

ஆனால் இவற்றின் இறுதி விளைவு உரத்துச் சொல்லப்பட்ட எந்தப் பயனையும் அளிக்கவில்லை; அளிப்பதில்லை. பயணத்தை நடத்தும் கட்சியின் பலத்தைப் பிரகடனப்படுத்தவும் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பிம்பத்துக்குப் புதுச் சாயம் பூசவுமே அவை பயன்படுகின்றன. தேர்தல் காலங்களில் நடத்தப்படும் சாலைப் பயணங்கள் வாக்குச் சேகரிப்பு நடவடிக்கையாக மட்டுமே முடிகின்றன. இந்தப் பயணங்களில் அந்தந்த அரசியல் கட்சியின் தலைவர்களையும் தொண்டர்களையும் தவிர வேறு எவருக்கும் ஆர்வமில்லை. பெரும்பான்மையான பொதுமக்களுக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு ஈடுபாடு ஏற்படுவதில்லை. தங்கள் பிரச்சினைகளைக் கவனத்துக்குக் கொண்டுவரும் செயலாக இந்தப் பயணங்களை அவர்கள் கருதுவதில்லை; அப்படி கருதுவதற்குப் பயண முகவர்களும் இடம் கொடுப்பதில்லை.

ராகுல் காந்தி தற்போது நடத்தும் பயணம் மக்களை நெருங்கிச் செல்லும் செயல்பாடாகத் தோற்றமளிக்கிறது. இதுவும் பிற அரசியல் கட்சிகள் நடத்தும் பயணங்கள் போன்றதுதான். ராகுல் காந்தியின் வெகுசனப் பிம்பத்தை மெருகேற்றிக் காட்டவும் இந்திய தேசிய காங்கிரசின் சரிந்துகிடக்கும் மக்கள் ஆதரவை மறுபடி திரட்டவுமான அரசியல் உபாயம்தான்  இந்தப் பயணமும். ஆனால் இரண்டு காரணங்கள் ராகுலின் பயணத்தை வேறுபடுத்திக் காண முகாந்திரம் அளிக்கின்றன. தற்காலிக அரசியல் நோக்கங்களை மீறிய பொருத்தப்பாட்டை அவை இந்தப் பயணத்துக்கு அளிக்கின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக ஆட்சி செய்து வரும் எட்டு ஆண்டுகளாக, அறிதுயிலில் மூழ்கியிருந்த காங்கிரஸ், நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சி என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட முன்வந்திருப்பது முதற் காரணம்.

ராகுல் காந்தியேகூட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராகத் தமது கடமைகளைத் தக்க சமயத்தில் நிறைவேற்றியவர் அல்லர். அவரைப் பின்பற்றி மற்ற உறுப்பினர்களும் மெத்தனமாகச் செயல்பட்டனர். நரேந்திர மோடி அரசு மக்கள் விரோதச் சட்டங்கள் சிலவற்றை ஏகமனதாக அமல்படுத்த காங்கிரஸ் கட்சியினரின் பொறுப்பின்மையும் காரணம். கடந்த காலங்களில் கடைப்பிடித்திருந்த செயலின்மையை ராகுலும் காங்கிரசும் உணர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையை  இந்தப் பயணம் சுட்டிக் காட்டுகிறது. நாடாளுமன்றத்துக்கு நிகராகப் பொதுமக்கள் கூட்டத்தை முன்னிறுத்தி மோடி அரசின் அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளையும் மக்கள் விரோதச் செயல்களையும் அம்பலப்படுத்துகிறார். காலமும் அவரும் கனிந்திருப்பதை இது காட்டுகிறது. பாஜக வர்ணிக்கிற ‘பப்பு’ தான் அல்ல என்று நிறுவிக் காட்டுகிறார். அதை மக்களும் புரிந்து ஏற்க முன்வந்திருக்கிறார்கள்.  ராகுலின் பயணத்தில் கட்சித் தொண்டர்கள் அல்லாத எளிய பொதுமக்கள் அவரைச் சந்தித்து உரையாடுவதும் அவர்களைத் தேடிச் சென்று அவர் உரையாடுவதும் இதற்கான சான்றுகள். பொதுவாக அரசியல் தந்திரமாகத்  தென்படும் இத்தகைய உறவாடல்களில் இதுவரை காணவியலாத நெருக்கமும் தங்கள் முறையீட்டுக்குச் செவிசாய்க்க ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கையும் மிளிர்கின்றன.

எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எல்லா வகையிலும் மக்களிடமிருந்து அந்நியமாகி நிற்கும் சூழலில் ராகுலின் மக்கள் சந்திப்பு முக்கியமானது. ஏனெனில் ஜனநாயக அமைப்பில் மனசாட்சியின் குரல் அல்ல, மக்களின் குரலே முதன்மையானது. இதைத் தாமதமாகவேனும், சரியான தருணத்தில் ஒரு தலைவரும் ஓர் இயக்கமும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதுவே இந்திய இணைப்புப் பயணத்தைக் கவனத்துக்குரியதாக்குகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக நடக்கும் பாஜக ஆட்சி இந்தியாவைக் கண்ணுக்குப் புலப்படாத விதமாகப் பிளவுபடுத்தி வருகிறது. அச்சத்தையும் வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கிறது. இந்தச் செயலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது பயணத்தின் குறிக்கோள் என்று ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். இது இன்றைய காலகட்டத்தின் தேவையும்கூட. ஏனெனில் பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் இன்று தமக்குக் கிடைத்திருக்கும் அரசியல் அதிகாரத்தின் வழியாகச் சித்தாந்தப் பரவலை நிகழ்த்தியிருக்கின்றன. அந்தச் சித்தாந்தம் சமத்துவமின்மையையும் சுதந்திரமின்மையையும் மக்களைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. அதனாலேயே ராகுல் காந்தியின் இந்தப் பயணத்தை மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவதற்கானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சீதாராம் யெச்சூரியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் வரவேற்கின்றனர். வலதுசாரி மீட்புவாதத்துக்கும் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைக்கும் இடையிலான போராட்டமாக இது கருதப்படுகிறது. ‘காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடனான போராட்டம்’ என்று ராகுல் காந்தியும் குறிப்பிடுகிறார்.

காலச்சுவடு இதழ் 268இல் வெளியான ‘காங்கிரஸ் கட்சியின் தார்மீகத் தோல்விகள்’ தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:

நான்கு முதன்மையான நிலைகளில் காங்கிரசின் சரிவைச் சுட்டிக் காட்டலாம். ஒன்று, அது காலத்துக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. இரண்டு, ஜனநாயக அடிப்படையிலான தலைமையை உருவாக்கவில்லை. மக்களிடமிருந்து விலகியே நிற்கிறது. மாநிலங்களின் சிக்கலைத் தேசியக் கண்ணோட்டம் என்ற பெயரில் பொத்தாம்பொதுவாகவே புரிந்துகொள்கிறது.

இந்திய தேசியக் காங்கிரசுக்கு வரலாற்று அடிப்படையிலான பங்கு இருக்கிறது. இந்த நாடு பன்முகத்தன்மைகளைக் கொண்டது. எனவே நமக்கான அரசியல் திட்டம் மத, இனச் சார்பற்றதாகவும் சமத்துவத்தை முன்னிருத்துவதாகவும் இருக்க வேண்டும் என்ற பார்வையை அதுவே முன்வைத்தது.இன்றைய காங்கிரஸ் அந்த விழுமியங்களிலிருந்து விலகிச் சென்றிருப்பதையே அதன் தேர்தல் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன. அவை அரசியல் தோல்விகள் மட்டுமல்ல; விடுதலையை நோக்கி மக்களை இட்டுச் சென்ற ஓர் இயக்கத்தின் தார்மீகத் தோல்விகள்.

காலம் வலியுறுத்தும் மாற்றங்களுக்கு காங்கிரஸ் கட்சி உட்படுவதன் அடையாளமாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைக் காணலாம். இன்றைய தேவையைப் புரிந்துகொண்டு அந்தக் கட்சி களமிறங்கியிருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் தலைமைப் பொறுப்புக்கு நியமனம் மூலம் ஆட்களை நிரப்புவதற்குப் பதிலாக ஜனநாயக முறைப்படித் தேர்தலை நடத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குத்  தலித் ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பயணம் ராகுல் காந்திக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறிய அளவிலாவது நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழகத்தை பாஜக ஒருபோதும் கபளீகரம் செய்துவிட முடியாது’  என்ற அவரது கருத்தை, மாநில தேசியத்தை உணர்ந்து சொன்னதாகவே கணக்கிடலாம்.

ராகுல் காந்தியின் நெடும் பயணமும் காங்கிரஸ் கட்சியின் இன்றைய மாற்றமும் 2024 தேர்தலை முன்னிட்டு நிகழ்ந்தவை என்ற கருத்தும் நிலவுகிறது; இருக்கலாம். தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஆரூடம் கூறுவதும் எளிதில்லை. ஆனால் நாட்டின் மிகப் பெரியதும் பாரம்பரியம் மிக்கதுமான கட்சி, இன்றைய  ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதும் மக்களின் பிரச்சினைகளுக்குக் காதுகொடுப்பதும் அரசியல் அமைப்பு வழங்கியுள்ள உரிமைகளுக்காக வாதாட முன்வந்திருப்பதும் கவனத்துக்கு உரியவை. ஜனநாயக அமைப்பில் ஆளுங்கட்சிக்கு உள்ள கடமைகளுக்கு நிகராகவே எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது. அதன் நல்ல அறிகுறியாக ராகுல் காந்தியின் நீண்ட பயணத்தைச் சொல்லலாம்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.