சிங்கையிலிருந்து உலகை நோக்கி: விரியும் இதழியக்கம்
இணைய இதழ்களின் பெருக்கத்தாலும் காணொளிகளின் பிரமிக்கத்தக்க பரவலாலும் அச்சு இதழியலின் பயணங்கள் சுணங்கிவரும் காலம் இது. தங்களுக்குப் பாதிப்பில்லை எனச் சில இதழ்கள் மார்தட்டிக்கொண்டாலும் விற்பனையின் வீழ்ச்சியிலும் உள்ளடக்கத்தின் பலவீனத்திலும் அச்சு இதழ்களின் அதிர்ச்சிகரமான பின்னடைவின் அடையாளங்களைக் காணலாம். இந்நிலையில் அச்சிதழின் மீது பேரார்வமும் ஈடுபாடும் கொண்டு, விற்பனையையும் வருமானத்தையும் முன்னிலைப்படுத்தாத இதழ்கள் உள்ளடக்கத்தில் தேவையான கவனம் செலுத்துவதையும் அச்சிதழ்களின் தனித்தன்மையைக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. அத்தகைய இதழ்களில் ஒன்றாகச் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் சிராங்கூன் டைம்ஸ் இதழைக் குறிப்பிடலாம்.
சிங்கைத் தமிழரின் சிந்தனை எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்த இதழில் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே பங்களிக்கிறார்கள். சிங்கப்பூர்த் தமிழ் ஆக்கங்கள் அந்நாட்டிற்கு வெளியில் இருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்கெனவே அறிமுகமானவைதான் என்றாலும் பெரும்பாலும் புனைவுகள், கவிதை ஆகியவையே சிங்கப்பூருக்கு வெளியில் அதிகம் சென்றிருக்கின்றன. சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களின் அ-புனைவு ஆக்கங்களைப் பிற தமிழர்கள் அதிகம் அறிய மாட்டார்கள். ஷா நவாஸை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் இதழ் அதற்கான வாய்ப்பைத் தருகிறது.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் சார்பாக வெளியாகும் இந்த சிராங்கூன் டைம்ஸ் இதழில் முதலில் நம் கவனத்தைக் கவர்வது அதன் மொழி. இதழின் பெயரைத் தவிர்த்து வேறு எங்கும் ஆங்கிலக் கலப்பைப் பார்க்க முடியாது. எவ்வளவு புதிய துறை சார்ந்த சொல்லாக இருந்தாலும், எவ்வளவு சிக்கலான சொல்லாக இருந்தாலும் அதைத் தமிழில் தருவதற்கான முனைப்பைக் காண முடிகிறது. தமிழகத்துத் தமிழ் இதழ்கள் வாசகருக்குப் புரியாது என்ற கற்பனையான காரணத்தை முன்னிட்டு அல்லது எளிமை என்னும் பொக்கையான சாக்கைச் சொல்லிப் பல ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுகின்றன. பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகள் மொழியாக்கத்துக்குச் சவால்விடக்கூடிய கலைச் சொற்களை மட்டுமல்லாமல் டவுன்லோடு, ஷூட்டிங் போன்ற சொற்களுக்குக்கூடப் புழக்கத்தில் உள்ள இயல்பான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாத அணுகுமுறையைக் கொண்டவை. சிராங்கூன் டைம்ஸ் இவ்விஷயத்தில் செறிவான மொழியுணர்வுடன் செயல்படுகிறது. டிஜிட்டல் என்பதை மின்னிலக்கம் என்றும் ‘க்யூ ஆர் கோடு’-ஐ ஸ்கேன் செய்தல் என்பதை ‘விரைவுக் குறியீட்டை வருடி’ என்றும் தமிழ்ப்படுத்துகிறது. இந்த இதழில் தொடர்ந்து எழுதிவரும் மஹேஷ் ‘விரல்நுனி வங்கிகள்’ என்னும் கட்டுரையில் பல்வேறு கலைச்சொற்களுக்கான இயல்பான தமிழாக்கங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். கலவையான துணுக்குச் செய்திகளைத் தரும் தமிழகத் தமிழ் இதழ்கள் அப்பகுதிக்குத் தமிழில் பெயர்வைப்பது அரிது. சிராங்கூன் டைம்ஸ் இதழில் இப்பகுதி ‘உதிரிப் பூக்கள்’ என்னும் தலைப்பில் இடம்பெற்றிருப்பதைப் பெரும்போக்குத் தமிழ் இதழ்கள் கவனிக்க வேண்டும்.
சமகால எழுத்தில் ஊடுருவியிருக்கும் பல கிருமிகளை அண்டவிடாமல் சிராங்கூன் டைம்ஸ் கவனமாகச் செயல்படுகிறது. குறிப்பாகச் சமகாலத் தமிழில் தேவையற்று மிகுதியாகப் புழங்கும் ‘மற்றும்’ என்னும் சொல்லை மிக அரிதாகவே இந்த இதழில் காண முடிகிறது.
சிங்கப்பூரில் இருப்பவர்களின் ஆக்கங்களே பெருமளவில் இடம்பெற்றிருக்கும் சிராங்கூன் டைம்ஸில் கட்டுரைகள், பத்திகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் மொழி சீராகச் செம்மையாக்கம் செய்யப்பட்டுள்ளது. கட்டுரைகளில் மொழிக் குழப்பமோ தவறான மொழிப் பயன்பாடுகளோ இல்லை. இணைய வெளி தரும் எல்லையற்ற சாத்தியங்களால் ஊடகங்கள் பெருகி, அதற்கு இணையாகப் பிழைகளும் மலினமான எழுத்துக்களும் மலிந்துவரும் இன்றைய சூழலில் இது பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இதழ் முழுவதும் பங்களிப்பாளர்களின் தனித்தன்மைக்கு ஊறு நேராதவண்ணம் மொழிச் சீர்மையைப் பேணியிருக்கிறது ஆசிரியர் குழு. தெளிவான பார்வை கொண்ட ஆசிரியர் குழுவின் செயல்பாடு பாலில் கலந்த சர்க்கரைபோலக் கரைந்து சுவையூட்டுகிறது. டி. ராஜரத்தினத்தின் வடிவமைப்பு ஆங்கிலச் செய்தி இதழ்களின் சாயலைக் கொண்டு இதழுக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருகிறது.
விரிவான நேர்காணல் வருவது மைய நீரோட்டத் தமிழ் இதழ்களின் ஒவ்வாமைகளில் ஒன்று. சிராங்கூன் டைம்ஸ் இதிலும் தனி முத்திரையைப் பதிக்கிறது. இணையத் தமிழுக்கு மகத்தான பங்களித்திருக்கும் முத்து நெடுமாறன், வானொலி ஊடக ஆளுமை மு. கார்மேகம், ராணுவ வரலாற்றாசிரியர் நெடுமாறன் நமச்சிவாயம், சிங்கப்பூர்க் கலைக்களஞ்சிய உருவாக்கக் குழுவில் இடம்பெற்ற அருண் மகிழ்நன் போன்ற பல்வேறு துறை ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள் அந்த ஆளுமைகளைப் பற்றி மட்டுமின்றி அந்தந்தத் துறைகளைப் பற்றியும் அரிய செய்திகளைச் சொல்கின்றன. ஒவ்வோர் இதழிலும் இத்தகைய நேர்காணல் இடம்பெறுகிறது.
சிங்கப்பூர்த் தமிழ் ஆளுமைகள், சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கை ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தும் இந்த இதழ், தமிழ் மொழி, நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றையும் உரிய முறையில் கவனப்படுத்து கிறது. கலை வெளிச் செயல்பாடுகள் குறித்த பார்வைகள், நூல் மதிப்புரைகள் ஆகியவற்றுடன் சிறுகதை, கவிதை ஆகியவையும் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறுகின்றன. கலாபூர்வமான முயற்சி என்ற அளவில் ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை மொழியாக்கங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் (2022, அக்டோபர் இதழ்). ராபர்ட் ஃப்ராஸ்டின் The Road Not Taken என்னும் கவிதையைச் சந்தக் கவிதையாக முரளி கிருஷ்ணாவும் தளைகளற்ற வசன கவிதையாக ஜமால் சேக், மஹேஷ் குமார் ஆகியோரும் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மொழியாக்கங்களும் தனித்தனிச் சுவைகளுடன் தத்தமது இருப்பை நிலைநிறுத்திக்கொள்கின்றன.
“சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாகவும் குரலாகவும்” இருக்க விழையும் சிராங்கூன் டைம்ஸ் தன் இலக்கிற்கேற்ற பாதையை வகுத்துக்கொண்டு பயணிக்கிறது. 82 இதழ்களைக் கண்டுள்ள இந்தப் பயணத்தில் சிங்கப்பூர் என்னும் எல்லையைத் தாண்டுவதற்கான அடையாளங்களையும் காண முடிகிறது. பாதைகளும் இலக்குகளும் விரிவடைந்துகொண்டேபோவது ஆரோக்கியமான பயணத்தின் அறிகுறி.
சிராங்கூன் டைம்ஸ், சிங்கப்பூர்: தனி இதழ் $3, ஆண்டுச் சந்தா $30; தமிழ்நாடு: தனி இதழ் ரூ.100, ஆண்டுச் சந்தா ரூ.1000. வெளியீடு: ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, கவிக்கோ மன்றம், 6, இரண்டாவது பிரதான சாலை, சி.ஐ.டி. காலனி, சென்னை 600004. தொடர்புக்கு: editor@serangoontimes.com. இணையம்: www.serangoontimes.com
மின்னஞ்சல்: aravindanmail@gmail.com