நெகிழவைக்கும் மரண சாசனம்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த நம்முடைய வாசகர் தெ. சுந்தரமகாலிங்கம், தனது 82ஆவது வயதில் முதுமை காரணமாக மரணமடைந்தார். 2014ஆம் ஆண்டில் அவர் கைப்பட எழுதிவைத்த மரண சாசனம்தான் அவரது மரணத்தைப் பேசுபொருளாக்கியிருக்கிறது.
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளிலும் கம்யூனிச சித்தாந்தத்திலும் பற்றுக்கொண்ட இவர், தனது மரணத்துக்குப்பின்னர் தனது உடல் அடக்கம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்தார். தனது மரணம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே தனது கண்களைத் தானமாகக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும், தனது உடல் மதுரை மருத்துவக் கல்லூரியின் மெய்யியல் கழகத்தின் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் சாசனத்தில் குறிப்பிட்டிருந்தார். தனது உடலைத் தானம் செய்வதற்கு முன்னர் வீட்டில் வைத்திருக்கும் நேரத்தில், வழக்கமான மத, சாதி ரீதியிலான சடங்குகள் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
‘என் உடலை விட்டு உயிர் நீங்கியதும் உடலின் மீது எவ்வித சாதி, மத அடையாளக் குறிகளையும் இடக் கூடாது. நிறை மரக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எவ்விதச் சடங்குகளையும் செய்யக் கூடாது. சவம் துர்நாற்றம் விடுவதைத் தடுக்கச் சாம்பிராணி, பத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டிலிருந்து சவத்தைக் கொண்டுசெல்லும் முன் என் குடும்ப ஆண்களும் பெண்களும் வீட்டின் முன்புள்ள குழாயில் குளிக்கலாம். அவர்களுக்கு எவ்வித மதச்சடங்கும் செய்யக் கூடாது. நீர்மாலை எடுக்கக் கூடாது. சவத்தைக் கொண்டுசெல்லும்போது மேள, தாளம், ஆட்டம், பாட்டம் கூடாது. மகன்களோ பேரன்மார்களோ மொட்டைபோடக் கூடாது. வாய்ப்பிருந்தால் எனது சவ வண்டியில் தந்தை பெரியாரின் உரையை ஒலிக்கச் செய்யலாம்’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
அவரது விருப்பப்படியே எவ்வித இறுதிச் சடங்கும் செய்யாமல் அவரது கண்களையும் உடலையும் அவரது மகன்கள் தானமாக வழங்கினார்கள். உடலை அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்வதற்கு முன்பாக, அவர் சார்ந்திருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில், த.மு.எ.க.ச. அமைப்பின் தலைவரான எழுத்தாளர் ச. தமிழ்செல்வன், அமைப்பின் நிர்வாகிகள், அவரது முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அவருடனான தங்கள் நினைவுகளை நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டனர். மதுரை மருத்துவக் கல்லூரிப் புலத் தலைவரிடம் தெ. சுந்தரமகாலிங்கத்தின் உடலை ஒப்படைக்கும் நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துகொண்டு இறுதியஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் தெ. சுந்தரமகாலிங்கம்; தீவிர இலக்கிய ஆர்வம் கொண்ட வாசகர்; விமர்சகர்; எழுத்தாளர்; காலச்சுவடு இதழில் வெளிவரும் கட்டுரைகளை வாசித்து அக்கட்டுரைகளைப் பாராட்டியோ குறைகூறியோ அழுத்தமான கடிதங்களை எழுதுவது அவரது வழக்கம்.
காலச்சுவடு, 2018, அக்டோபர் மாத கல்விச் சிறப்பிதழில் அவர், தனது ஆசிரியப் பணியில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை ‘கற்பனையல்ல, கதையல்ல’ என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தோம். அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தெ. சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர், சட்டரீதியாகப் போராடித் தங்களுக்கான நீதியைப் பெற்றிருக்கிறார்கள். இதுதொடர்பான விரிவான கட்டுரையோடு தகுந்த ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியிருந்தார். அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களின் எதிர்காலத்துக்காக ஒரு நிர்வாகத்தை எதிர்த்துப் போராடிய உண்மைச் சம்பவத்தின் உணர்வுப்பூர்வமான பதிவு அது.
இவர், ‘குருஜி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், காலத்தை வாசித்தல்’, துரோகம் வெட்கம் அறியாது’ ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, ‘ஆண்டுகள் பல கடந்தாலும்’, என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தினமணி, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் உயிரெழுத்து, அம்ருதா உள்ளிட்ட மாத இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். பள்ளி ஆண்டு விழாக்களில் இவரே எழுதி, இயக்கித் தமிழ், ஆங்கில நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார். நல்லதோர் ஆசிரியருக்கு உதாரணமாக விளங்கிய இவர், தனது மரணத்துக்குப் பின் தனது உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக அளித்திருப்பது வழிகாட்டும் தன்மை படைத்தது.
தகவல்கள் அளித்த சுந்தரமகாலிங்கத்தின் மகன் கௌதமனுக்கு நன்றி.