இக்கட்டுரை கணினியில் ஏற்றப்படும் இன்று உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ஆம் நாள் (12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார வாசிகளிடம் சமாதானம் பேசப் போவார். உசிலம்பட்டிச் சாலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி நடந்தபடி இருக்கும். உறவின்முறையினர் உணவுப் பொருள்களும் பணமும் கொண்டு போய்க் கொடுத்தபடி இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, வாங்கிக்கொண்டு சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி அவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பார்கள். கைவசம் 10 லட்சம் ரூபாயும் 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் இருப்பதை மறைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் வண்ணப் புகைப்படம் ஒன்று நாளைய பத்திரிகையில் வெளிவரும்.
ஆனால், தலித் மக்களோ சூழ்ந்துள்ள பதற்றம் காரணமாக ஊரை விட்டு வெளியேற முடியாமல் தோழர்களையும் கட்சி அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு தங்களுக்கான நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய போராட்டக்களத்தில் கடைசி வரிசையில் நிற்கிற ஒருவனாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கான வாய்ப்போ மனநிலையோ ஏற்படுவதில்லை. ஆனால் ஊடகங்கள் மலையடிவார வாசிகளுக்காக வடிக்கின்ற கண்ணீரும் அரங்கேற்றுகிற வஞ்சகமும் பொறுக்க முடியாமல் எப்படியாவது இதை உடனடியாக எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதுகிறேன்.
உத்தப்புரம், அங்குள்ள தலித்துகள்மீது நடத்தப்பட்ட வன்முறை, அதற்கெதிரான போராட்டம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதிலிருந்து அவர்கள் பெற்ற படிப்பினை. இன்று புது நம்பிக்கையோடு மீண்டும் எழுச்சிபெற்று அவர்கள் நடத்தும் போராட்டம் என அனைத்தையும் பற்றிய சிறு குறிப்பே இக்கட்டுரை.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராம ஊராட்சி உத்தப்புரம். இங்கு வாழும் சமூகத்தினுடைய குடும்பங்களின் எண்ணிக்கை: கொடிக்கால் பிள்ளைமார் - 450, பள்ளர் - 650, கவுண்டர் - 150, பறையர் - 25, மூப்பர் - 75, அருந்ததியர் -30, பிரமலைக் கள்ளர் - 5, நாயக்கர் - 30, ஆசாரி -3, வண்ணார் - 20, மருத்துவர் - 6, செட்டியார் - 5, சைவப் பிள்ளைமார் - 1. பிரதான அரசியல் கட்சிகள் அதிமுக, திமுக, புதிய தமிழகம், பாரதீய ஜனதாக் கட்சி.
இக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அதன் பொருட்டு நிகழும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அந்த வாய்ப்பைச் சாதிக் கலவரமாக மாற்றும் ஆதிக்கச் சாதிகள் எனப் பல்லாண்டுகளாகப் பிரச்சினைகள் தொடர்ந்தபடி இருக்கின்றன. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் தலித் மக்கள்மீது நடந்த தாக்குதல்களும் அவற்றைத் தொடர்ந்து நடந்த மோதல்கள் பற்றிய விவரங்களும் என் கைவசம் இல்லை. மக்களின் நினைவுப் பகுதியிலிருந்து மட்டுமே அதன் தன்மையை உணர முடிகிறது. ஆனால், 1989இல் நடந்ததைப் பற்றி விரிவாக எழுத முடியும்.
1
உத்தப்புரம் தலித் மக்கள் கும்பிடும் சாமி கருப்பசாமி. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கும்பிடும் சாமி முத்தாலம்மன். தலித்துகள் தங்களது சாமியான கருப்பசாமியைக் கும்பிடும் முன் தங்களின் முன்னோர்கள் நட்டுவைத்த அரசமரத்தைக் கும்பிட்டு மூன்று முறை சுற்றி வருவது வழக்கம். அந்த அரசமரம் பிள்ளை மார்களின் கோவிலான முத்தாலம்மன் கோவிலுக்கு நேர் எதிரே சில பத்தடி தூரத்தில் உள்ளது. தலித் மக்கள் தங்களின் கோவிலுக்கு முன்னால் வந்து சாமி கும்பிட்டு, சாமியாடி கொட்டுக் கொட்டிச் செல்வதைப் பொறுக்க முடியாமல், இந்த அரசமரத்திற்கு நீங்கள் வரக் கூடாது, வந்தால் அடி உதைதான் கிடைக்கும் எனப் பிள்ளைமார்கள் களத்தில் இறங்கினர்.
தலித் மக்கள் தங்களின் வழி வழி வந்த உரிமைக்காகப் போராடினர். போராட்டத்தின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமானது. இறுதியில் 1989ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது மோதலாக உருமாறியது. இந்த மோதலின் காரணமாகக் காவல் துறையால் 131 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான் மையானவர்கள் தலித்துகளே. ஆனால் மோதலுக்குப் பின் பிரச்சினைகளில் தலையிட்டு நியாயம் வழங்கவேண்டிய அரசு நிர்வாகம் சாதியை ஆடையாகவும் ஆன்மாவாகவும் கொண்டு செயல்பட்டதால், தலித்துகளின் உரிமைக்கான இந்தச் சிறு எதிர்ப்பைப் பொறுக்க முடியாமல் சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்த ஆதிக்கச் சாதிகளெல்லாம் தோள் தட்டிக்கொண்டு களத்திலே இறங்கின. தலித்துகளில் முக்கியமானவர்கள் எல்லாம் கைதான பின்னணியில் அதிகாரிகளும் ஆதிக்கச் சாதியின ரும் சேர்ந்து தயாரித்த ஒப்பந்தம்தான் இன்றைக்கு "மகத்தான சாசன"மாக சாதி இந்துக்களாலும் சில அதிகாரிகளாலும் கொண்டாடப்படும் 1989ஆம் ஆண்டு ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்த ஷரத்துகள் சொல்லும் உண்மைகள்:
1. பரம்பரை பரம்பரையாகத் தலித்துகள் சாமிகும் பிட்டு வந்த அரசமரத்தடியில் அவர்கள் பிரவேசிக்க எந்தப் பாத்தியதையும் இல்லையென அறிவித்தது. அதாவது எங்களது சாமிக்கு முன் நீயோ உனது சாமியோ வரவோ நிற்கவோ கூடாது என்ற சாதித் திமிர் சட்டமானது.
2. தலித்துகளின் கோவிலான கருப்பசாமி கோவிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து அரசமரத்தை உள்ளடக்கி, தலித்துகள் பிரவேசிக்க முடியாதவண்ணம் சுவர் எழுப்பப்பட்டது. அதுவரை தலித்துகள் தங்கள் குலதெய்வத்தை வணங்கச் சென்றுகொண்டிருந்த பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.
3. பிள்ளைமார் தரப்பில் யாராவது இறந்தால் சுடு காட்டிற்குச் செல்ல வேறு பாதை இருந்தும் தலித்துகள் வசிக்கும் பகுதி வழியாக வந்து அந்தப் பாதையின் உரிமையை நிலைநாட்டி, நீ சாமி கும்பிடத் தோரணங்கள் கட்டியிருந்தாலும், எங்கள் சவம் வரும்பொழுது அதை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் எங்களது சவம் தீட்டாகிவிடும் என்று ஆதிக்கச் சாதியினரின் சவத்தின் புனிதம் நிலைநாட்டப்பட்டது.
ஏறக்குறைய கிராமத்தின் பொதுப் பயன்பாட்டில் தலித்துகளுக்கு இருந்த அனைத்துப் பொது உரிமைகளையும் நிராகரித்து எழுதப்பட்ட ஒப்பந்தமானது, முழுக்க முழுக்க ஆதிக்கச் சாதிகளின் கட்டப் பஞ்சாயத்து மூலமே உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தலித்துகள் சார்பில் கையெழுத்திட்ட 5 பேரில் மூவர் இறந்துவிட்டனர். ஒருவர் மிகவும் வயோதிக நிலையில் உள்ளார். மீதமிருக்கும் ஒருவர்தான் இப்பொழுது தலித் மக்களின் ஊர்ப் பெரியவராக இருக்கிற கே. பொன்னையா. இவரிடம் ஒப்பந்தம் பற்றிக் கேட்டபொழுது "எங்கள் ஐந்து பேரையும் தூக்கிக்கொண்டுபோய் சினிமா தியேட்டர்ல வெச்சு, கையெழுத்துப் போடாவிட்டால் இங்கிருந்து உயிரோடு போக முடியாது என மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள். சுத்துப்பட்டுக் கிராமப் பெரியவர்கள் எல்லாம் கூடியிருந்த சபையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என்றார்.
இந்த ஒப்பந்தத்தில் பஞ்சாயத்தார்கள் என்று 23 பேர் கையப்பமிட்டுள்ளனர். அதில் 22 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒரே ஒருவர் மட்டும்தான் தலித் (எண்:15 இளையசாமி த/பெ சமையன், மல்லப்புரம்). இவர் காங்கிரஸ் கட்சியின் அந்தப் பகுதியின் எஸ்.சி. எஸ்.டி பிரிவின் தலைவர். அவர்களுடனேயே எப்போதும் அனுசரணையாக இருப்பவர். எனவே, அவர் அந்தக் கூட்டத்திற்குள் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தப் பஞ்சாயத்தார்களிடம் இதைத் தவிர தலித்துகளுக்கு வேறென்ன தீர்ப்பு கிடைத்திருக்கும்? தங்களது சாதி ஆதிக்கத்தையே தீர்ப்பென எழுதி தலித்துகளிடம் அவர்கள் கையெழுத்தைப் பெற்றனர்.
தீர்ப்புரையின் கடைசியில், இந்த ஒப்பந்தத்தின் நகல்களை இரு தரப்பினரும் வைத்துக்கொள்வதென்றும், மூலப் பத்திரம் போலீசிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் எழுதப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதை உருவாக்கியதில் காவல் துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் பங்கு என்ன என்று விசாரித்தபொழுது உண்மையான முடிச்சு அவிழ்ந்தது. மாவட்டத்தின் உயர் அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் இந்த ஒப்பந்த ஷரத்துகள் உருவாக்கப்பட்டதாகவும் அதன் பின்னர்தான் தியேட்டரில் நாட்டுக்கூட்டம் போட்டு தலித்துகளிடம் கையப்பம் பெறப்பட்டதாகவும் இந்த முழு நடவடிக்கையிலும் ஈடுபட்டு இன்று பணி ஓய்வில் இருக்கிற அரசு ஊழியர் ஒருவர் தனது சங்க உணர்வின் மிச்சமிருக்கும் கடமைகளில் ஒன்றெனக் கருதி இப்பொழுது சொல்லித் தொலைத்தார்.
தலித்துகளின் பயன்பாட்டு உரிமைகள் அனைத்தையும் மறுத்து உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் தலித்துகள் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவரை அரச மரத்தை ஒட்டிப் பேருந்து நிறுத்தம் இருந்தது. அது அங்கேயே இருக்குமானால் பேருந்தை விட்டு இறங்கும் தலித்துகள் அரசமரப் பகுதிக்கு வர நேரிடும். இது ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்பதால் அரசமரத்துப் பேருந்து நிறுத்தம் ஒரு பர்லாங் தூரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டது. இந்நிலையில் 2.8.89ஆம் ஆண்டு ஓட்டுநர் ஒருவர் பழைய இடத்தில் பேருந்தை நிறுத்தியதும் உள்ளே இருந்த தலித் ஒருவர் இறங்கி நடக்க, அரசமரத் தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைமார்கள் அந்த தலித்தின் மீது கல் வீசித் தாக்குதலைத் தொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மோதல் உருவானது. இத்தோடு இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று சுத்துப்பட்டுக் கிராமத்தின் ஆதிக்கச் சக்திகள் எல்லாம் உத்தப்புரம் தலித்துகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். பெரும் மோதலில் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். காவல் துறை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மூன்று தலித் பெண்கள் படுகாயமடைந்தனர். பெரும் அழிவும் தீ வைப்பும் நடந்தன. தங்களது உரிமையை மறுத்துப் போடப்பட்ட ஒப்பந்தம், அதை மீற முயன்றால் பெரும் பொருட்சேதம் என தலித்துகள் துயரத்தின் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் தலித்துகளின் அரசமர வழிபாட்டு உரிமையையும் கோவிலுக்குச் செல்லும் பாதையையும் மறித்துச் சுவர் எழுப்பியவர்கள் இப்பொழுது தலித்துகள் நடந்து செல்லும் மூன்று பொதுப் பாதைகளை அடைத்து சுமார் 300 மீட்டருக்குப் பெரும் தடுப்புச் சுவரை எழுப்பினர். எங்கள் பகுதியில் உன் காலடிகூடப் படக் கூடாது என தலித்துகளைத் துண்டாக்கினர். அவர்களின் கருத்தை அப்படியே ஏற்ற அரசு, பொதுத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து பிரித்துத் தலித்துகளுக்குத் தனித் தண்ணீர்த் தொட்டி அமைத்தது. ஊர்ப் பொதுப் பள்ளிக்கூடத்திலிருந்து தலித் மாணவர்களுக்கென்று தனியாகப் பிரித்து ஒரு தலித் பள்ளிக்கூடத்தை அமைத்தது. பால்வாடியைத் தனியாக்கியது. ரேசன் கடையைப் பிரித்தது. இவற்றை எல்லாம் ஏற்க முடியாது என்று சொல்லவோ, புகார் செய்யவோ தலித்துகளுக்கு நாதியில்லை. ஏனென்றால், பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பிள்ளைமார் ஒருவரின் வீட்டிலே இருந்தது. அந்தத் தெருவில் தலித்துகள் அதுவரை நடந்ததே இல்லை.
இந்தப் பெரும் கலவரம், அதனால் ஏற்பட்ட இழப்புகள், இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அரசு அப்பட்டமாக எடுத்த சாதி இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, இவையனைத்தும் தலித்துகளை மீடேற முடியா நிலைக்குத் தள்ளின. வழிபாட்டு உரிமையை 89ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பெயரைச் சொல்லி உருவாக்கப்பட்ட சுவர் அடைத்து நின்றது. பொதுப் பாதையை நான்கு தலித்துகளைப் பலியெடுத்த வெற்றியின் பெயரால் ஆதிக்கச் சாதிகளால் கட்டியெழுப்பப்பட்ட நெடுஞ்சுவர் மறைத்து நின்றது. தலித்துகளின் குழந்தைகள் மட்டுமே படிக்கப் பள்ளி உருவாக்கப்பட்டுவிட்டது. பிற சாதிக்காரனுக்குப் பக்கத்தில் உட்காராமல், அவனைத் தொடாமல், அவனோடு பேசாமல், அவனோடு உணவையோ, உணர்வையோ பகிர்ந்துகொள்ளாமலே உத்தப்புரம் தலித் குழந்தைகள் கடந்த 19 ஆண்டுகளாகச் சாதீயத்தின் அருவருப்பு மிக்க துண்டாடலைப் பள்ளிக் கூடத்தின் அறைகளுக்குள்ளேயே அனுபவித்து வெளியேறுகின்றனர்.
2
மதுரை மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 பிப்ரவரி 9ஆம் தேதியன்று 47 மையங்களில் கள ஆய்வு நடத்தியது. எந்தெந்த வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிப்ரவரி 22ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஆய்வின் விவரங்கள் வெளியிடப்பட்டன. மார்ச் 25ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
சுவர் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக வெளியுலகின் பார்வைக்குத் தெரியாமல் இருந்த உத்தப்புரம் "தீண்டாமைச் சுவர்" இந்தக் கள ஆய்வில்தான் தெரியவந்தது. அதன்பின் ஓரிரு ஊடகங்கள் அதன்மீது கவனம் கொள்ளத் தொடங்கின. ஏப்ரல் 17ஆம் தேதி அந்தச் சுவரின் மீது மின்சார வேலி அமைக்கப்பட்டதாக இந்து நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. அன்றே மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என். நன் மாறன் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். உடனே மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அந்த மின்வேலி ஒரு பர்லாங் தூரத்திற்கு அப்புறப் படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.
அது ஏதோ, வயரிங் சம்பந்தப்பட்ட பிரச்சினைபோல அரசு சட்டமன்றத்தில் பதில் சொன்னது. அந்த மின்வேலி அமைக்கப்பட்டது உண்மையா? அப்படியென்றால் யாரால், ஏன் அமைக்கப்பட்டது? அப்படியரு தடுப்புச் சுவர் எதனால் இருக்கிறது? அதை ஏன் தாண்ட வேண்டுமென்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர்? தாண்டவே விடக் கூடாது என்று ஒரு பகுதியினர் ஏன் துடிக்கின்றனர்? - என்பதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேலியைத்தூக்கி வெளியில் போடு என்பதோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது.
ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கின. மறுநாள் ஏப்ரல் 19 அன்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து உடனடியாகச் சுவர் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், பலனேதும் இல்லை. ஏப்ரல் 29ஆம் தேதி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாயிரம் பேர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உடனடியாகச் சுவரை இடி, அல்லது நாங்கள் இடிப்போம் என்று முழங்கியது. அதுவும் மாவட்ட நிர்வாகத்தின் காதிலே விழவில்லை. பின்னர் தீண்டாமைச் சுவரைப் பார்த்துக்காறி உமிழ மே 7ஆம் தேதி கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் வருகிறார் என ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
வேறு வழியேயில்லாமல் மே 2ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதாவது பிரச்சினை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு 67 நாள்களுக்குப் பிறகுதான் அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சு வார்த்தை மே 2, 4 ஆகிய இரு தேதிகளில் மட்டுமே நடந்தது. அதுவும் கோட்டாட்சியர்தான் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அதில் பங்கேற்கவில்லை.
இறுதியாக பிரகாஷ் காரத் வருவதற்கு முன் "ஏதாவது செய்" என்ற மேலிட உத்தரவிற்குப் பணிந்து மே 5ஆம் தேதி உத்தப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் எழுந்தருளினார். கையில் பல வகையான வரைபடங்களை வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தார். ஊர் இரண்டாக இருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதைச் சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டுமென்று நடுவீதியில் நின்று தீவிரமாக யோசித்தார். பல போஸ்களில் அவரது புகைப்படங்கள் மறுநாள் பத்திரிகைகளில் வெளியாயின. இறுதியில் மே 6 அன்று காலை சுமார் 7.45 மணியளவில், 19 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பஞ்சாயத்தார்களால் முடிவுசெய்யப்பட்டு, சாதிவெறியர்களால் சட்டத்திற்கு எதிராகக் கட்டப்பட்ட 600 மீட்டர் சுவரில் 4 மீட்டர் அகலம் கொண்ட ஒரு இடத்தைத் தேர்வுசெய்து (அவர்கள் தேர்வு செய்த இடத்தில் சுவரின் உயரம் 3 அடி மட்டும்தான். மீதி உயரம் சில ஆண்டுகளுக்கு முன் தானாகவே இடிந்துவிட்டது.)
சுமார் 1600 போலீசார் பாதுகாத்து நிற்க அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தின் சின்னஞ்சிறு சுவரின் 16 உடைகற்களைப் பெயர்த்து எடுத்தது அரசு. ஒரு கல்லுக்கு 100 போலீசார் வீதம் 1600 போலீசாரும் சாலையெங்கும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சுவரின் ஒருபுறம் பிள்ளைமார்களின் பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் சாலை, சுவரின் மறுபுறம் தலித்துகள் குடியிருக்கும் பகுதி - இரண்டையும் இணைத்து 50 மீட்டர் நீளத்திற்குச் செம்மண் கொட்டிச் சாலை அமைக்கப்பட்டது.
மறுநாள் பிரகாஷ் காரத் வந்தது உத்தப்புரத்து தீண்டாமைக் கொடுமையையும் அதற்கெதிரான போராட்டத்தையும் உலகறியச் செய்தது. இந்தச் சின்னஞ்சிறிய சுவர் உடைப்புக்கு எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எனப் பேசியவர்கள், அடுத்தடுத்த நாள்களில் நிகழ்ந்ததைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். எடுக்கப்பட்ட 16 கற்களின் வலிமை அதன் பின்புதான் உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது.
302 ரேஷன் கார்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு "எங்களுக்குப் பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை . . . பாதுகாப்பில்லை . . ." என்று கத்திக்கொண்டே ஊரைவிட்டு வெளியேறி தாழையூத்து மலையடிவாரத்திற்கு ஓடின 200 குடும்பங்கள். வடக்குத் தெரு மொத்தமும் காலியானது. அவர்களின் கதறல் ஒரே நாளில் எட்டுத்திக்கும் கேட்டது. 19 ஆண்டுகளாகத் தொண்டை கிழிய, நரம்பு விடைக்கக் கத்தியும் யார் காதுக்கும் கேட்காமலிருக்க இது அடக்கப்பட்ட சாதியின் குரலல்ல. இது ஆதிக்கச் சாதியின் குரல். அதற்கேயுரிய வலிமையோடு அது எதிரொலித்தது.
எட்டுத் திக்கும் ஆதரவு பெருகி வந்தது. ஆட்சியர் அலுவலகம் கிடுகிடுத்தது. காரை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டார் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்குத் தேசிய நெடுஞ்சாலையில், அங்கிருந்து உத்தப்புரத்திற்கு வழி நெடுக நிறுத்தப்பட்ட போலீசின் நடுவே, மாவட்ட மற்றும் ஊரக நெடுஞ் சாலையில், அங்கிருந்து மெட்டல் சாலைகூட இல்லாத மோசமான குண்டும் குழியுமான பகுதியில் ஒரு கிலோ மீட்டர், பின் அங்கிருந்து கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையென நடந்தே ஒன்றரை கிலோமீட்டர் எனப் பயணித்து 6 மணி நேரத்திற்குள் வியர்த்து விறுவிறுக்க மலையடிவாரம் வந்து நின்றார்.
யார் வந்தாலும் அவர்கள் கத்துவதை நிறுத்தவில்லை. 16 உடைகற்களை எடுத்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்மைதான் என்ன? என்று கேட்க முதுகெலும்புள்ள யாரும் அங்கு செல்லாததால் அவர்கள் கத்திக்கொண்டேயிருந்தனர்.
ஊடகப் புலிகள் கேமிராக்களைத் தூக்கிக்கொண்டு ஓடியபடியே இருந்தன. மூன்று குழந்தைக்கு அம்மை விளையாண்டுவிட்டது. இரண்டு குழந்தைக்கு வயிற்றுப் போக்கானது. பொதுச் சுகாதாரம் கெட்டுப்போய்க்கிடக்கிறது என்று ஆளாளுக்கு நீலிக்கண்ணீர் வடித்தனர். ஊரின் மொத்தச் சாக்கடை தலித்துகளின் வீடுகளுக்கு நடுவேதான் போய்க்கொண்டிருக்கிறது. அந்தச் சாக்கடைக்கு மூடிபோடு என்று கோரிக்கை வைத்துப் போராடும் தலித்துகளைப் பற்றி 7ஆம் தேதிக்குப் பின் ஒரு பத்திரிகைகூடப் படத்தையோ செய்தியையோ (தீக்கதிர் தவிர) வெளியிடவில்லை. ஆனால் மலையடி வாரவாசிகளின் ஒரு நூறு புகைப்படங்கள் தமிழ் ஊடகங்களில் பிரசுரமாகிக்கொண்டேயிருக்கின்றன. ஊடகங்களின் சாதி மற்றும் சனநாயகப் பற்றுக்கு இதைவிட வேறொரு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.
19 ஆண்டுகளுக்குப் பின் 16 கற்களை எடுத்ததால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறது. "எங்களுக்குப் பாதுகாப்பில்லை . . . பாதுகாப்பில்லை . . ." என்று கத்தியவர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளைத் திட்டமிட்டுச் செய்தார்கள்.
மே 7 அன்று காரத் வந்து சென்றபின் மே 8ஆம் தேதி பக்கத்துக் கிராமமான கோடாங்கி நாயக்கன்பட்டியிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை விஷமிகள் அவமரியாதை செய்தனர். அதிகாலையிலேயே செய்தி பரவத் தொடங்கிப் பதற்றம் உருவானது. உசிலம்பட்டிப் பகுதியெங்கும் பேருந்துகள் ஓடவில்லை. கடையடைப்பு, கல்வீச்சு, மறியல் எனச் சொல்லிவைத்த சூத்திரத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் அரங்கேற்றி முடித்தனர். பிள்ளைமார்களுக்கு எதிராக தலித்துகள், தேவர்களுக்கு எதிராக தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் என்றுகாட்ட ஒரே நேரத்தில் எல்லாக் காய்களும் நகர்த்தப்பட்டன. உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவான போராட்டமும் தேவர் சிலை அவமதிப்புக்கு எதிரான போராட்டமும் தினமும் ஒவ்வொரு பக்கமாக மாறி மாறி சங்கிலித் தொடர்போல் நடத்தப்பட்டன.
பசும்பொன் தேவரின் சிலை அவமதிக்கப்பட்ட கோடாங்கி நாயக்கன்பட்டியில் வசிக்கும் தலித்குடும்பத்தின் எண்ணிக்கை-1, தேவர் குடும்பத்தின் எண்ணிக்கை-200. இந்த ஒரு புள்ளிவிவரம் போதும் உண்மையை விளக்க.
அன்றிரவு தேவர் சிலைக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மீது என்ன நடவடிக்கை? காலையில் விஷயம் தெரிந்ததும் வெறிபிடித்தது போல் பஸ்ஸை உடை, மறியல் செய் என்று போலீசார் கத்த வேண்டிய காரணமென்ன? சிலையை மோப்பம் பிடிக்க போலீசின் மோப்ப நாய் வருகிறது எனத் தெரிந்தவுடன் அவசர அவசரமாகச் சிலையைக் கழுவிய இரண்டு பேரின் பெயரைச் சொல்லியும் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேன்? அவர்கள் ஒரு கட்சியின் தலைவர்கள் என்பதாலா? எதிரிக்குச் சாதகமாகிவிடக் கூடாது என்று சொல்பவர்களின் பதிலை நாம் மௌனமாகக் கேட்கிறோம். இதில் யார் எதிரிகள் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.
சாதக பாதகக் கணக்குகளைப் போட்டபடி சில அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. மலையடிவாரவாசிகளுக்குத் தேவையான பொருளும் ஆதரவும் வந்து குவிந்தபடி இருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் வளைந்து, குழைந்து, பணிந்து என்ன வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து மிகக் கடினமான வனவாசத்தை விட்டிறங்கி நீங்கள் கட்டிய வீட்டில் நீங்களே வந்து குடியேறி எங்கள் ஆட்சிக்குப் பெருமை சேருங்கள் எனத் தவமாய்த் தவமிருக்கிறது. அவர்கள் மலையின் மீதிருந்து பேச ஆரம்பித்தார்கள். ஜனநாயகம், சமத்துவம், சட்டம் அனைத்தையும் புதைத்த புதைகுழியின் மீது நின்று அரசும் அவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மே 6ஆம் தேதி திறக்கப்பட்ட பாதையின் வழியே தலித்துகள் நடக்கலாம். ஆனால் 'பிணங்களைத் தூக்கிவரக்கூடா'தென்று நடந்தே தங்கள் இருப்பிடத்திற்குப் பேச்சுவார்த்தைக்கு வந்த கலெக்டரிடம் முதல்நாள் கோரிக்கை வைத்தவர்கள், மூன்றாம் நாள் 'திறக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்துவது சம்பந்தமாகச் சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்களைக் கேட்டு எடுக்கிற முடிவைத் தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்கவேண்டும்' என்ற அளவிற்குப் போயுள்ளனர். தலித்துகளின் வழிபாட்டு உரிமையை மறுத்துக் கட்டப்பட்ட சுவரை அகற்றாமல் அது உள்ளிட்ட தங்களது கோவில் பகுதி முழுவதுக்கும்பட்டா வேண்டுமெனக் கோரிக்கை வைக்கின்றனர். இவையனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக எவ்விதப் பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் எழுதிக்கொடுக்கிறது. "சட்டத்தின் ஆட்சி" என்று சொல்வதைவிட அயோக்கியத்தனமான வார்த்தை வேறெதுவும் இருக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது.
3
உத்தப்புரம் தலித்துகளுக்கு எதிரான அனைத்துக் கொடுமைகளும் மீண்டும் மீண்டும் அரங்கேறியபடியே இருப்பதற்குப் பிரதான குற்றவாளியாகப் பொறுப்பேற்க வேண்டியது மாநில அரசே.
அ. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய அரசு, அதற்கு நேர் எதிராகக் கட்டப் பஞ்சாயத்து மூலம் 1989 இல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தைச் சட்ட விரோதம் என்று பார்க்கவில்லை, அந்த ஒப்பந்தத்தை உருவாக்கக் காரணமாக இருந்தது. ஒப்பந்தத்தின் மூலப் பத்திரத்தைக் காவல் நிலையத்தில் வைத்து 19 ஆண்டுகளாக அதுவே பாது காத்துவந்துள்ளது.
இப்பொழுதுகூட அது சட்ட விரோதமான ஒப்பந்தம் என்று சொல்வதற்கு அரசு தயாராக இல்லை. பேச்சுவார்த்தையின்போது "உங்க அப்பங்கெ போட்ட கையெழுத்துக்கு நீங்கதான் பொறுப்பு" என்று வெளிப்படையாக அரசு அதிகாரிகள் பேசியதைப் பார்க்க முடிந்தது. ஊர் மந்தையில் சாதித் திமிரோடு உட்கார்ந்து பேசுகிறவனுக்கும் இவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் கூடுதலாக அதிகாரி என்ற திமிரும் சேர்ந்திருப்பது மட்டும்தான்.
ஆ. 1989ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்குப் பின் பிள்ளைமார் நெடுஞ்சுவர் எழுப்பி தலித்துகளைத் துண்டாக்கி, தாழ்த்தப்பட்டவர்களின் பாதச்சுவடுகூடப்படாத புனித பூமியாகத் தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டார்கள். அதன் பின் அரசும் புனிதத்திற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்க ஆரம்பித்தது. தண்ணீர் தொட்டி, ரேஷன் கடை, பால்வாடி என அனைத்தையும் பிரித்தது. இறுதியில் பள்ளிக்கூடத்தையும் பிரித்தது. உத்தப்புரம் அரசுப்பள்ளி 1, அரசுப்பள்ளி 2 என்றானது.
'உத்தப்புரம் அரசு நடுநிலைப்பள்ளி 1' இல் இந்த ஆண்டு 250 மாணவர்கள் படிக்கின்றனர். 1989க்குப் பின் இந்த ஆண்டுவரை ஒரு தலித் மாணவன்கூட இந்தப் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. சுமார் 19 ஆண்டுகளாக தலித் மாணவர்களோடு சேர்ந்து உட்காராத, பேசாத, பழகாத, நாமெல்லாம் பேசிப் பழக எந்தத் தகுதியுமற்ற இழி பிறவிகள் இந்தச் சுவருக்கு அப்பால் இருக்கிறார்கள் என்ற அருவருக்கத்தக்க மனப்பதிவைத்தான் இந்தப் பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்களுக்குத் தனிப்பந்தி வைப்பதை ஏற்க முடியாது எனப் போராடி அதன் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த தந்தை பெரியாரின் வாரிசுகள் அதற்குப் பின் முக்கால் நூற்றாண்டு கழித்துத் தங்களது ஆட்சியில் அரசாங்கச் செலவில் பள்ளிக்கூடம் கட்டி, ஆசிரியருக்குச் சம்பளம் கொடுத்து தலித் மாணவர்களுக்குத் தனிப்பந்தியல்ல, தனிப்பள்ளிக்கூடத்தையே நடத்திவருகின்றனர்.
இ. அன்றிலிருந்து இன்றுவரை உத்தப்புரம் தலித்துகள்மீது பிள்ளைமார் சமூகத்தினர் நடத்திவரும் தாக்குதல்களும் உள ரீதியான வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சில:
1) பஞ்சாயத்துத் தலைவர் பதவி கடந்த பத்தாண்டுகள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை பொதுப் பிரிவானது. அப்படி மாறிய பின்பும் தலித்துகளைக் கும்பிட்டு ஓட்டுக் கேட்க வேண்டுமென்பதற்காகப் பிள்ளைமார் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை.
2) கடந்த காலத்தில் பிள்ளைமார்களின் ஆதரவோடு வெற்றிபெற்ற தலித் பஞ்சாயத்துத் தலைவர் பஞ்சாயத்து நாற்காலியில் உட்கார்ந்து பேசியதில்லை.
3) கடந்த 15 ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடும் தலித்துகள் யாரும் இதுவரை பிள்ளைமார் தெருவில் நுழைந்து ஓட்டுக் கேட்க அனுமதிக்கப்பட்டதில்லை. ஊர் முக்கிலிருந்து கும்பிட்டு ஓட்டுக் கேட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.
4) இப்போது வார்டு உறுப்பினராக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்கு வரும்போது டீயோ காபியோ குடிப்பதில்லை.
5) இப்போது பஞ்சாயத்து கிளார்க்காக இருக்கிற தலித், வரி வாங்கக்கூட அவர்கள் வீட்டுப் பக்கம் போக முடியவில்லை. ஆனால், கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் கலெக்டரைவிட அதிகாரத்துடன் இருப்பதாக எல்லோரும் சொல்கின்றனர்.
6) இவ்வளவு ஏன், இப்பொழுது மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுப் புகைப்படங்கள் எடுக்கும் வேலை முடிந்துள்ளது. அதில் ஒருவர்கூடப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அங்கு இருப்பவர்கள் கூலி வேலைசெய்யத் தேவையே இல்லாத அளவு பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் இல்லை. பாதிப் பேருக்கு மேல் கூலி வேலையைவிட்டால் வேறு வழியில்லை. அப்படியிருந்தும் பெயரை யாரும் கொடுக்கவில்லை. காரணம் தலித் வெட்டிப்போடும் மண்ணைத் தான் சுமப்பதா? தான் வெட்டியெடுக்கும் மண்ணை தலித் தொடுவதா? அவனும் நானும் சேர்ந்து வேலை பார்ப்பதா என்ற தீண்டாமையின் உச்ச வெளிப்பாடு தான் இந்தப் புள்ளிவிவரம்.
4
உத்தப்புரம் பிரச்சினையைச் சட்டமன்றத்தில் தோழர் நன்மாறன் எழுப்பியபொழுது படுவேகமாகப் பதில் சொன்ன சேடப்பட்டி தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் துரைராஜ், அம்மாவின் கட்டளைக்கிணங்க அன்றே களமிறங்கினார். பிள்ளைமார்களின் பிரச்சினையைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்த பிரச்சினையாக மாற்றிய சூத்திரதாரியாக அவர் செயல்பட்டார். அவர் எதிர்பார்த்ததுபோல தலித்துகளுக்கு எதிரான கூட்டு வெகு சீக்கிரமே கைகூடியது.
பேரையூரில் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையேற்று நடத்திய போராட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் அணிவகுத்து நின்றனர். சாதிக்கு முன்னால் திமுகவாவது, அதிமுகவாவது எல்லாவற்றையும் கழற்றி எறி என்று நாலுதிக்கும் எறிந்தனர். கோபாலபுரத்திலும் போயஸ் தோட்டத்திலும் கழன்ற துணிகள் போய் விழுந்தன. அவர்களுக்கும் இது ஒன்றும் புதிதல்ல.
அதிமுகவுக்கு அடுத்தபடியாக இந்துப் போர்வை போர்த்தி நடித்துக்கொண்டிருந்த பாரதீய ஜனதா தாழையூத்து மலையடிவாரத்தில் தலித்துகளுக்கு எதிரான கோரப்பற்களோடு இரத்த வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறது. "சாதி இருக்கிறது என்பதைவிட ராணுவம் வருகிறது என்பது அவமானமல்ல" என்று சட்டமன்றத்தில் திமுக தலைவர் கம்பீரமாக அறிவித்த இரண்டாம் நாள் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. சாதி இருக்கிறது என்ற மகத்தான உண்மை வானத்துக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றது. அதன் மெய்க்கீர்த்தியை வணங்கி, அதன் ரூப வடிவமான மலையடிவாரவாசிகளைச் சமாதானப்படுத்தி அழைத்து வரத் தனது பிள்ளைமார் அணியை அனுப்பிவைத்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
மதுரை மேயரின் கணவர் கோபிநாதன் தலைமையில் பெரும்படை காடு நோக்கிப் புறப்பட்டது. "நம்ம சாதிக் காரங்களா..." என்று அலறியபடி அவர்கள் காட்டுக்குள் ஓடினர். சாதிப் பெருமைகளையும் கலைஞரின் பிள்ளைமார் கரிசனங்களையும் பற்றி மணிக்கணக்கில் எடுத்துக் கூறினர். அவர்களோ மசிவதாக இல்லை. ஆனாலும் அணி அணியாக அடலேறுகள் போய்க்கொண்டேயிருக்கின்றனர்.
இத்தனை ஆண்டுக்காலம் எத்தனை வடிவங்களில் தீண்டாமை உண்டோ அத்தனை வடிவங்களிலும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிற உத்தப்புரத்தில் உண்மையில் தீண்டாமை இருக்கிறதா என்று ஆய்வுசெய்ய உண்மையறியும் குழுவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியிருக்கிறதாம். இந்த உண்மையை அறிய இன்னும் எத்தனை காலம் எடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை. நேற்றைய தினம் (11.5.2008) மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசவந்த தோழர் தா. பாண்டியன் உண்மையைக் கண்டறிய உத்தப்புரத்திற்கு ஒரு எட்டு போய் வந்திருக்கலாம் அல்லது அவரது சொந்த ஊரான வெள்ளமலைப்பட்டியில் குடியிருக்கும் ஒரு தலித்திடமோ அல்லது ஒரு பிரமலைக்கள்ள ரிடமோ தொலைபேசியில் இரண்டு நிமிடம் பேசியிருக்கலாம். அவருக்குத் தேவையான உண்மை கிடைத்திருக்கும். சரி எப்படியோ அவர்கள் உண்மையைக் கண்டறிந்து வரட்டும். இடதுசாரி ஒற்றுமைக்காக நாம் காத்திருப்போம்.
இப்படியாக சோகக் காட்சியும் காமெடிக் காட்சியும் மாறி மாறி வந்துபோகக் கடைசியில் தலித் கட்சிகளின் தலைவர்கள் கிளை மாக்ஸ் காட்சிக்காக வந்து நின்றார்கள். தோழர் நன்மாறன் உத்தப்புரம் பிரச்சினையைச் சட்டமன்றத்தில் கிளப்பியபொழுது விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை "அரசியல் லாபத்திற்காக ஒரு கட்சி இந்தப் பிரச்சினையை எடுக்கிறது" என்றார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறியிருப்பது போல, "பொருளாதார லாபத்திற்காக என்றால் அவர் ஆதரித்திருப்பாரோ என்னவோ".
அடுத்த ஒரு வாரத்தில் பிரச்சினை பெரிதாகி பிரகாஷ்காரத் வருவதுவரை நீண்டு சென்றவுடன் மே 6ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உத்தப்புரம் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காரத் வருவதற்கு முதல் நாள் சுவர் இடிக்கப்பட்டவுடன் மே 7ஆம் தேதி மாலை மற்றும் 8,9 ஆகிய மூன்று தேதிகளிலும் பேரையூர், எழுமலை இரு நகரங்களிலும் கதவடைப்பு, மறியல், காவல் நிலைய முற்றுகை என தினமும் நடந்துவந்தது. மறுநாள் 10ஆம் தேதி பேரையூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "சமூக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இப்பகுதிக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்" (மறுநாள் மே 11 பேரையூரில் முழு அடைப்பைத்தான் முன்கூட்டியே பேசினாரோ என்னவோ?) என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்து, நானோ எனது கட்சியோ ஒருபோதும் சாதிக் கலவரத்தைத் தூண்டியதில்லை எனச் சொல்லி, சுமார் ஒரு மணிநேரம் விளக்கவுரையாற்றினார். ஆனால் உத்தப்புரம் பிரச்சினையைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. அதுவெல்லாம் சாதிக் கலவரத்தைத் தூண்டுபவர்களின் செயல் என்று ஆதிக்கச் சாதிகள் சொல்லும் அதே வார்த்தையை அவரும் சொல்லிவிட்டுச் சென்றார்.
கூட்டத்திற்கு ஒருவரை அனுப்பி செல்போனை ஆன் செய்ய வைத்து, உத்தப்புரத்திலிருந்து அவரது முழுப் பேச்சையும் கேட்டுக்கொண்டேயிருந்த இளைஞர்கள் அவர் பேசி முடித்ததும் சொன்ன வார்த்தையை எழுத முடியாவிட்டாலும் அவரால் எளிதில் யூகிக்க முடியும் . . .
"தென் தமிழகத்தில் சாதீய மோதல்களை உருவாக்கவும் அதில் தாழ்த்தப்பட்ட மக்களை பலிகடா ஆக்கவும் தொடர்ந்து சாதியச் சகதிக்குள் சிக்கவைக்கவும் அதன் மூலம் நிரந்தரமாக அவர்களைத் தனிமைப்படுத்தவும் சில சுயநல அரசியல் சக்திகள் செய்யும் சதியாகும்" என்று உத்தப்புரம் பிரச்சினையைப் பற்றிக் கோபத்தோடு அறிக்கை விட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி. பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது இயக்கத்தின் மதுரை மாவட்டத்தளமாக விளங்கிய உத்தப்புரத்தில் அவரது கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுவிட்டதால் கோபப்பட்டு, இப்படி அறிக்கை விட்டுள்ளார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கொடியைப் பிடுங்கியது உத்தப்புரம் தலித்துகள் அல்ல, அவர்தான் என்பதை அவரால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நமக்குத் தெரியவில்லை.
இறுதியாக உத்தப்புரம் தலித்துகள் 89ஆம் ஆண்டு உரிமைக்காகக் குரல்கொடுத்தபோது பிள்ளைமார்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்திலே இறங்கியது கோடாங்கி நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, மானூத்து, ராஜக்காபட்டி ஆகிய கிராமங்கள். இப்போதும் அதே ஐந்து கிராமங்கள் களத்திலே இறங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் மறியலும் போராட்டமும் நடத்துகின்றன. இந்தக் கிராமங்களில் தேவர்கள், பிள்ளைமார்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுக வினரோ திமுகவினரோ காங்கிரஸ்காரரோ யாருமில்லை.
ஆனால் இந்த ஐந்து கிராமங்களிலும் தலித்துகளுக்கு ஆதரவாக, தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டதன் நியாயத்தை விளக்கி, வருகிற தாக்குதல்களைச் சந்தித்துக் கம்பீரமாகப் பறந்துகொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி. சிகப்புத் துண்டைத்தோளில் போட்டபடி ஊர்ச் சாவடி ஐந்திலும் ஒருவன் உட்கார்ந்து மொத்த ஊருக்கும் எதிராகப் பொழுதெல்லாம் பேசி, தவித்து, தொண்டை அடைத்தபடி இருக்கிறான். அவனுக்குப் பின்னால், "அம்பேத்கர் பிறந்த தின விழா" என்ற பேனர் எதுவும் கட்டப்படவில்லை. அது அவனுக்குப் பொருட்டுமல்ல. இது 89 அல்ல என்று உலகுக்குச் சொல்லும் ஒரே சாட்சி அவன்தான். அந்த சாட்சி போதும், உத்தப்புரத்து தலித்துகளின் ஆதார நம்பிக்கை விண்முட்ட எழ. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வர்க்க உரமேறிய போராட்டத்தை முன்னிலும் வேகமாக நடத்த.
5
கட்டுரையை முடிக்கும் முன் இரண்டு விஷயங்களைச் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.
1. 1964 கலவரத்தில் தலித்துகளுக்குப் பெரும் சேதமும் உயிர்ப் பலியும் ஏற்பட்டன. ஆனால், அவர்கள் தளர்ந்துவிடவில்லை. மீண்டு எழுந்தார்கள். மீண்டும் 1989இல் பெரும் சேதமும் நான்கு உயிர்ப் பலிகளும் ஏற்பட்டன. ஆனால் அவர்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயன்றார்கள். இப்போது 2008இல் புதிய பரிணாமத்தோடு களத்திலே இறங்கி நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதீய அவமானத்தைத் துடைத்தெறியக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்தவண்ணம் போராடிக்கொண்டேயிருக்கும் உத்தப்புரத்து மக்களின் ஆணிவேர் எதுவென்று கேட்டால் அடுத்தவனை அண்டிப் பிழைக்க அவசியமில்லாத அவர்களது வாழ்நிலை. அங்கே இருக்கும் தலித்துகள் பெரும்பான்மையோருக்குச் சொந்த நிலம் இருக்கிறது. அவற்றை மையப்படுத்தி வாழ வழி இருக்கிறது. அதன்மேல் நின்று சுயமரியாதைக்கான போராட்டத்தை அவர்கள் விடாமல் நடத்திவருகின்றனர்.
அதே உத்தப்புரம் பஞ்சாயத்தின் துணைக் கிராமமான பொட்டல்பட்டியில் உள்ள தலித்துகள் இன்றுவரை வாய் திறக்க முடியவில்லை. கைக்கு எட்டும் தூரத்தில் தனது சகோதரர்கள் நடத்திக்கொண்டிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக முணுமுணுக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால், மறுநாள் காலை ஆதிக்கச் சக்திகளின் நிலத்தில்தான் அவர்கள் வேலைக்குப் போயாக வேண்டும். வயிறும் வாழ்வும் குடும்பமும் அவர்களை நம்பித்தான். நிலம் வாழ்வுக்கும் வயிற்றுக்கும் அடிப்படை. சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் அடிப்படை. தலித் விடுதலைக்கான மூல முழக்கம் நிலம்... நிலம்... நிலம்...
2. மே 6ஆம் தேதி காலை 7.45 மணியளவில் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு தலித் பகுதியில் பாதை உருவாக்க முயன்றபோது நடுவில் பெரும் கிணறு ஒன்று இருந்தது. இந்தக் கிணற்றை மூடினால்தான் பாதை போட முடியும். அது தனியார் பட்டா நிலத்தில் உள்ள கிணறு. எனவே, என்ன செய்வது என்று அதிகாரிகள் யோசித்துக்கொண்டிருந்தபோது, தோழர்கள் கே. பொன்னையா, கே. முத்து இருளன் இருவரும் அந்த இடத்தில், இந்தக் கணத்திலே "பொதுப் பாதைக்காக எங்கள் கிணற்றை அரசுக்கு ஒப்படைக்கிறோம்" என்று மாவட்டக் கோட்டாட்சியருக்கு எழுதிக்கொடுத்தனர். அதன்பின் தான் கிணற்றை நிரப்பிப் பாதை போடப்பட்டது.
ஆனால் பாதை அமைக்கப்பட்டவுடன் அவமானம் தாளாமல் பிள்ளைமார்கள் ஊரையே காலிசெய்து மலையடிவாரத்திற்கு ஓடிவிட்டனர். தங்களின் உரிமைக்காக எதையும் இழக்கத் துணிகிற தலித்துகள் ஒருபக்கம். எதை இழந்தாலும் சாதியை இழக்க மாட்டோம் என்று கொக்கரிக்கிற சாதீயர்கள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடையில் இருக்கிறது 'உத்தப்புரம்', 'தமிழகம்', 'இந்தியா'.
n
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் சு. வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். 'கலாச்சாரத்தின் அரசியல்', 'ஆட்சித்தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை' முதலிய நூல்களை எழுதியிருக்கிறார்.
கீற்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட இக்கட்டுரை சு. வெங்கடேசனின் ஒப்புதலுடன் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.