கனம்
ரத்தம். தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் நிஜமான ரத்தம். படுக்கை விரிப்பின் வெள¤ர்நீல வண்ணம் செக்கச்செவேலென்று மாறியிருக்கிறது. டேவிட் உற்றுப்பார்த்தான். லிஸா ரத்தத்தின் கண்போல் படுக்கையில் சுருண்டிருக்கிறாள். அவள் நெஞ்சிலிருந்து ஊற்றுக்கண் போல் ரத்தம் பொங்குகிறது. டேவிட்டுக்குத் தலைவலி நெற்றிப்பொட்டில் மின்னல் வரிகளாய்ப் பெருகுகிறது. ரத்தத்திற்கு வாசனை உண்டா. மூச்சுக் காற்றைச் சிறைப்படுத்தி நாசியை வலுவாகத் தாக்குகிறது ஒரு வாசனை. காலடியில் நிலம் நகரக் கண்ணை மூடி உட்கார்ந்தால் சற்று ஆறுதல் கிடைக்கும்போலிருக்கிறது. கண்ணுக்குள் புதைமணலாய்க் குழையும் இருளில் ஒரு குரல் அப்போது முளைக்கும் செடிபோல மெல்ல உயருகிறது. மனதுக்கு இதமாக இருக்கும் அந்த அழைப்பு ஏதோவொரு விதத்தில் நெருக்கடியையும் ஏற்படுத்த, டேவிட் உடலை ஒடுக்கிப் படுக்கையின் ஓரத்தில் தன்னைச் சுருக்கிக்கொள்ளுகிறான்.
டேவிட்!
டேவிட்! என்ன . . . ஏன் இங்கே படுத்திருக்கிறாய்.. உடம்புக்கு என்ன...?
டேவிட்டின் கன்னத்தில் குளுமையான ஸ்பரிசம். படுக்கையறை ஜன்னல் திரை வடித்து உள்ளனுப்பிய மெல்லிய வெளிச்சம் லிஸாவின் முகத்