காமத்துப் பால் - ஒரு தமிழ் நாவல்
காலத்தின் கானல் - 6
19.10.98 திங்கள் மாலை 4 மணி
தீபாவளி தினம்
இன்று தீபாவளி தினம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்தானே? கொல்லப்பட்டானா? மாலை மணி நாலு. பக்கத்து வீட்டு முற்றத்திலிருந்து வெடிச் சத்தம் கேட்கிறது. குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாமல் வெடிச் சத்தம் மட்டும் கேட்பது ஒரு அலுப்பூட்டும் அனுபவம். அதோடு குழந்தைகளின் ஆரவாரமும் கேட்கவில்லை. மௌனமாக வெடித்துக் கொண்டிருப்பது குழந்தைகளுக்கு ஏற்ற பழக்கமில்லை என்று கவலை ஏற்படுகிறது. இறுக்கமாக இருக்கும் உலகத்தை அது மேலும் இறுக்கமாக்கும்.
இன்று வெயில் சற்றுக் கடுமைதான். காலையில் 9.30 மணிவாக்கில் எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்திற்குப் போனபோதே வெயிலின் அன்றைய சுபாவம் வெளிப்பட்டது. பதினைந்து நாட்கள் கடுமையாக மழை பெய்தபின் இரண்டு மூன்று நாட்களாகத்தான் வெயிலடிக்கத் தொடங்கியிருக்கிறது. உஷ