சுகிர்தராணி : கவிதை மொழியும் உடல் அரசியலும்
நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அளவற்றவை. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அறிந்தது போன்ற நிலையிலும், ஒவ்வொரு தடவையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டியுள்ளது. வாழ்வின் வினோதங்களையும் புதிர்களையும் அவிழ்த்து, எளிய விடைகளைக் கவித்துவமாகச் சொல்லிவிடத் துடிக்கும் கவிஞன், மின்னல் கீற்றெனத் தெறிக்கும் சொற்களைத் தேடி அலைய நேரிடுகிறது. நேற்றைய மொழியின் பழமை யும் சொற்பொருளின் இருண்மையும் வழக்கிழந்த கற்பனைகளும் கவிஞனின் இருப்பினைக் கேள்விக்குட்படுத்துகின்றன. வாழ்க்கையை எளிமையாக மதிப்பிடும் மனம் காலத்தினால் மிகவும் பின்தங்கியது. எனவேதான் நவீன கவிஞனின் பாய்ச்சல், இதுவரையிலான மதிப்பீடுகளின் போலித்தனங்களை மறுதலிக்கிறது. இத்தகு சூழலில் பெண் மொழியின் உக்கிரமான குரலினைக் கவிதையாக்கத்திற்குத் தளமாகக்கொண்ட பெண் கவிஞர்கள், நவீன கவிதையில் பெரும் வீச்சினை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதுவரையிலும் மரபு என்ற பின்புலத்தில் தமிழ் அடையாளத்தை நிறுவிட முயலும் பொதுப் புத்தியைச் சவாலுக்கு அழைக்கின்றன நவீனப் பெண் கவிதைகள். இத்தகைய போக்கினால் சுகிர்தராணியின் கவிதை