தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட 1989ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் எழுமலைக்கு அருகில் உள்ள உத்தப்புரம் என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பையும் சாதி இந்துக்கள் வசிக்கும் குடியிருப்பையும் பிரிக்கும் நீண்ட மதில் சுவர் எழுப்பப்பட்டது. கட்புலனாகும் இந்த மதில் சுவரை எழுப்பியதன் மூலம் 'காண மறுத்தல்' என்கிற அவர்களின் பிரிவினைக் கொள்கையைக் காண்பித்திருக்கிறார்கள் சாதி இந்துக்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அவமானம் இங்கு பேசுபொருளாகியிருக்கிறது.
உத்தப்புரத்தில் காவல் துறை ஆவணங்களின்படி பிள்ளைமாருக்கும் தலித்துகளுக்குமான மோதல் 1947 முதலே இருந்துவருவதாகத் தெரிகிறது. 1989இல் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்குச் சொந்தமான கருப்பசாமி கோவில் சாமியாடி, சாதி இந்துக்கள் குடியிருப்பைத் தாண்டிச் சென்று தங்களுக்குப் பாத்தியப்பட்ட அரசமரத்தை வணங்கித் திரும்பினார். பிள்ளைமார் வகுப்பினரின் முத்தாலம்மன் கோவில், அரச மரத்திற்குப் பக்கத்திலேயே இருந்தது. இதன் தூய்மை கெட்டுவிட்டதாகக் கூறிப்பெரும் மோதல் எழுந்தது. சாமியாடி தாக்கப்பட்டார். இக்கலவரத்தின் தொடர்ச்சியாக நாகமுத்து என்கிற தலித் கொலைசெய்யப்பட்டார். அக்கொலைக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் அடையாளம் காட்டிய யாரையும் காவல் துறை கைதுசெய்யவில்லை. பெரும் கலவரமாகிய இதில் நான்கு பேர் வெட்டப்பட்டனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித்துகள் இறந்தனர். காவல் துறையால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் தலித்துகளே.
இதன் பிறகே, அரசுத் தரப்பு முன்னிலையில் இரண்டு வகுப்பினரின் 'ஒப்புதலோடு' சுமார் 15 அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் 600 அடி நீளமும் கொண்ட தடுப்புச் சுவர் 1990ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. கிராமத்தின் பொதுப் பயன்பாட்டிலிருந்து தலித்துகளின் உரிமைகளை முற்றிலுமாக இல்லாமல் செய்த இவ்வொப் பந்தத்தில் மிரட்டிக் கையெழுத்து வாங்கப்பட்டது. கலவரத்தில் பெற்ற கசப்பான அனுபவத்தினால் பாதிக்கப்பட்ட தலித் சமூகப் பெரியவர்களிடமிருந்து பெறப்பட்ட இவ்வொப்புதலின் நம்பகத்தன்மையைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல. இத்தடுப்புச் சுவர் எழுப்பப் பட்டதற்குப் பின்னணி இருப்பது போலவே இதற்கு எதிரான போராட்டத்திற்கும் பின்னணி உண்டு. 1989 கலவரம், அதனைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட தடுப்புச் சுவர் ஆகியவற்றைக் கண்டித்து அன்றைக்கு மதுரையிலிருந்து செயல்பட்டுவந்த தலித் ஞானசேகரன் தலைமையிலான தலித் விடுதலை இயக்கம் (ஞிலிவி) போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. சிறு குழுவாகச் சென்று இப்பிரச்சினையை ஆராய்ந்திருந்த அவ்வியக்கத்தினர் மதுரையில் பேரணியாகச் சென்று திறந்த மடல்வடிவில் விண்ணப்பத்தினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்தனர். இச்சமகாலத்தில் உருவான போடி கலவரத்தினால் இப்பிரச்சினை மீதான கவனம் குறைந்துபோனது. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும் கண்டனச் சுவரொட்டி அடித்திருந்தது. சுவர் எழுப்பப்பட்ட இந்த 19 ஆண்டுக் காலத்தில் சாதி அடிப்படையில் அங்கு நிகழ்ந்துவந்த மாற்றங்கள் மோசமானவை. தலித் மக்களுக்கென்று தனித் தண்ணீர்த் தொட்டி, தனிப்பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டன. பொதுப் புழக்கத்திலிருந்த இவற்றைத் தனித்துப் பிரித்தது அரசு நிர்வாகம். அதேபோலக் கிராமத்திற்கான ரேசன் கடையும் புறக் காவல் நிலையமும் சாதி இந்துக்களின் வீதியிலேயே அமைந்தன. தலித்துகளுக்கான அரச மரத்தின் மீதான பாரம்பரிய உரிமையை மறுத்து ஒப்பந்தம் போட்டவர்கள், தொடர்ந்து பேருந்து நிழற்குடை அமைக்கவும் சாதி இந்துக்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடையை மூடும் சிமென்ட் பலகை அமைக்கவும் தடைசெய்து வருகின்றனர்.
எழுப்பப்பட்டிருந்த சுவர்மீது 2008 ஏப்ரல் மாதத்தில் நடந்த திருவிழாவின்போது, மின்சார வேலியையும் சாதி இந்துக்கள் அமைத்திருந்தனர். மாடும் சில கோழிகளும் அகப்பட்டு இறக்கக் காரணமான மின்வேலியால் இன்று இப்பிரச்சினை வெளிப்பட்டது. 1989 தொடங்கி 19 ஆண்டுகள் என்னும் காலக்கணக்கில் தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. சொந்த நிலங்களைக் கொண்டுள்ள அவர்கள் பொருளாதாரத் தற்சார்புள்ளவர்களாக மாறியுள்ளனர். சாதி இந்துக்களைச் சார்ந்து வாழ்வதற்கான எந்தத் தடயமும் இன்று அவர்களிடம் இல்லை. இம்மாற்றத்திற்கு இம்மக்களே முழுப்பொறுப்பாளி ஆவர். அதனால்தான் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்ட பின்னாலும் சாதி இந்துக்கள்தான் பதற்றமடைந்துள்ளனரே அன்றி தலித் மக்கள் அல்ல.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் உத்தப்புரம் சுவர்ப் பிரச்சினையைக் கண்டறிந்திருந்தது. ஏப்ரல் 17ஆம் நாள் இந்து நாளேட்டில் வெளியான இப்பிரச்சினையை அந்நாளிலேயே அக்கட்சி தமிழகச் சட்டமன்றத்தில் எழுப்பியது. மின்சார வேலி நீக்கப்படும் என்று மட்டுமே அரசு பதில் அளித்தது. 2008 மார்ச் மாதம் மனித உரிமை ஆணையம் இச்சுவர் தொடர்பாகத் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதன்மீது ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த கம்யூனிஸ்ட் கட்சி மே 7ஆந்தேதி கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வருவதாக அறிவித்தது. இதன் பிறகே இப்பிரச்சினைமீது அழுத்தம் கூடியது. காரத்தின் வருகைக்கு ஒருநாள் முன்னதாகவே 600 மீட்டர் சுவரில் 15 அடியை மட்டும் தமிழக அரசு இடித்தது. இந்த 15 மீட்டரும் பாதைக்காக மட்டுமே இடிக்கப்பட்டது. சுவரின் எஞ்சிய பகுதி பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்ற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்பதைப் போலவே தமிழக அரசும் பிற பகுதிகளை இடிக்காமல் விட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தச் சுவரின் பகுதி பிள்ளைமார் வகுப்பினரின் வீட்டுக்குப் பின்புறமாக எழுப்பப்பட்டுள்ளது. இதைத்தான் அவர்கள் சொந்த இடத்தில் இருப்பதாக வாதிடுகின்றனர். சாதியை இந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் 'சொந்த நம்பிக்கை' என்றே நியாயப்படுத்தி வருகின்றனர். இந்நம்பிக்கைக்கு எதிரான போராட்டம்தான் இங்கு சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடக்கமாகும்.
ஆனால், சாதி இந்துக்கள் தரப்பை எளிதில் பகைத்துக் கொள்ள விரும்பாத கட்சிகளும் அரசும் சாதி இந்துக்களுக்கே ஆதரவாய் நடந்துகொள்கின்றன.
சுவரின் சிறுபகுதி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிள்ளைமார் வகுப்பினர், ரேசன் கார்டுகளைத் திருப்பி அளிக்கும் போராட்டத்தில் தொடங்கி 'மலையோர வாசம்' வரையிலும் சென்றுவிட்டனர். எட்டு நாள் மலைவாசத்திற்குப் பிறகே, அவர்கள் ஊர் திரும்பி உள்ளனர். முக்குலத்தோர் போன்று பெரும்பான்மையாக இல்லாத சிறுபான்மைப் பிள்ளைமார் வகுப்பினர் 'சாதித் தூய்மையை'ச் சுவர் எழுப்பிக் காப்பாற்றிக் கொண்டனர். தலித் மக்களின் தற்சார்பு, பிள்ளைமார்களின் எண்ணிக்கைச் சிறுபான்மை, எழுப்பப்பட்ட சுவரின் சட்ட விரோதத் தன்மை போன்ற காரணங்களால் நேரடியான மோதல் தற்போது எழவில்லை. பிள்ளைமார் இவ்வூரைப் பொறுத்தவரையில் பெரும் பான்மையினர் என்றாலும், ஒட்டுமொத்தத் தமிழகத்தில் சிறுபான்மையினர்தான். ஆதிக்கத்திற்கான போட்டியில் பிற ஆதிக்க வகுப்பினரோடுதான் முரண்பட முடியும் என்று சில அரசியல் சூத்திரங்கள் சொல்கின்றன. ஆனால், சாதியால் தாம் உயர்ந்தவன் என்ற மனப்பான்மை இயல்பாகவே தலித்துகளுக்கு எதிராக ஆதிக்கச் சாதிகளை ஒருங்கிணைக்கின்றது. இது போன்ற சூழல்களில் பெரும்பான்மை, சிறுபான்மை போன்ற எண்ணிக்கை அரசியல் பின் தள்ளப்பட்டுவிடுகிறது. அதனால்தான் சாதி அடிப்படையில் அமையும் பெரும்பான்மை சிறு பான்மை எப்போதும் மாறாததாக இந்தியாவில் இருக்கிறது என்றார் அம்பேத்கர். 1989ஆம் ஆண்டுக் கலவரத்தின் போதே உத்தப்புரத்தைச் சுற்றியுள்ள ஐந்து கிராமத்து ஆதிக்கச் சாதியினர் பிள்ளைமார்களுக்கு ஆதரவு அளித்தனர். இப்போதும் அந்நிலையே தொடர்கிறது. அதோடு தேவர், நாயக்கர் உள்ளிட்ட சாதிச் சங்கங்களும் பிள்ளைமார்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. அச்சாதிச் சங்கங்களின் சார்பாக ஆதரவுச் சுவ ரொட்டிகளும் ஒட்டப்பட்டன. உண்மையில் பிள்ளைமார்களின் எட்டு நாள் மலையடிவாரப் போராட்டமும் கோரிக்கைகளும் சட்டவிரோதமானவை. மலையடி வாரத்தை ஒட்டிய தலித்துகளின் தோட்டத்தில்தான் இவர்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்த 5 தலித் குடும்பத்தினர் விரட்டப்பட்ட னர். தோட்டத்திலிருந்த காய், கனிகள் இவர்களுக்கு உணவாகின. காலை ஆறு மணிக்கு டிராக்டரில் வந்து இறங்கும் இவர்கள், மாலை ஆறு மணி வரை போராட்டம் நடத்திவிட்டு இரவு ஊருக்குள் சென்றுவிடுவர். சாதி இந்துக்களின் சோகத்தைச் சொன்ன ஊடகங்கள் இந்த உண்மையை வழக்கம்போல் சொல்லாமல் மறைத்து விட்டன. உத்தப்புரத்தில் உள்ள வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத்தின் மூலம், இப்போராட்டத்திற்காகக் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டிருந்தது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவக் குழுவும் இலவச மருத்துவம் செய்தது. சாதி இந்துக்களின் ஒருங்கிணைப்பையும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையையும் பயன்படுத்திக் கொள்ள அதிமுகவும் நாங்கள் உங்களுக்கு விரோதமான வர்கள் அல்ல என்று திமுகவும் பிள்ளைமார்களைச் சந்தித்துப் பேசின. இதைக் குறித்து வெளிப்படையான அறிக்கை எதனையும் வெளியிடாமல் மௌனம் காத்தன எதிர்க்கட்சிகள். சாதி இந்துக்களிடம் இப்போராட்டத்தின் சட்டவிரோதத் தன்மையைச் சுட்டிக்காட்டும் நேர்மையை யாரும் பெற்றிருக்கவில்லை. எங்களின் பிரச்சினையைப் பெரிதுபடுத்திய கம்யூனிஸ்டுகள், பெரும்பான்மை தேவர் சாதியினரை இவ்வாறு எதிர்ப்பார்களா எனும் வாதத்தினை அரசியல் அடிப்படையில் அல்லாமல் சாதி நோக்கத்திலேயே பிள்ளைமார்கள் எழுப்பி வருகின்றனர். சாதியைக் கடைபிடிப்பதில் போட்டி போடும் இச்சாதியினருக்கு இக்கேள்வியை எழுப்பும் தார்மீக உரிமை ஏதுமில்லை.
உத்தப்புரம் பிரச்சினையின் மீது போராட்ட மதிப்பு, ஊடகப் பார்வை கிடைக்கக் காரணமானவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தாம். பிரச்சினை ஏற்பட்ட பிறகே தலையிடும் குணம் உள்ள சூழலில் இப்பிரச்சினை இக்கட்சியால்தான் கண்டறியப்பட்டது. சாதி குறித்து தலித்துகளும் தலித் கட்சிகளும்தான் கவலைப்பட வேண்டும் என்பதல்ல. தலித் மக்களின் பிரச்சினையாகவே அதைக் கருதுபவர்கள் மீது கடும் விமர்சனத்தை அம்பேத்கர் முன்வைத்துள்ளார். தலித் அல்லாதவர்களும் கவலைப்பட வேண்டிய விஷயம் அது. அதனைக் கம்யூனிஸ்ட் இயக்கம் உணர்ந்திருப்பதை இங்கு சொல்ல வேண்டும். அதே வேளையில் தீண்டத் தக்க இந்துக்களை மாற்றுவதற்குச் செய்ய வேண்டிய பணிகளும் ஏராளமாய் உள்ளன. 1990களில் எழுந்த தலித் எழுச்சி சாதி மற்றும் தலித் மக்கள் குறித்த அணுகு முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்றுதான், அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ள தலித் மக்கள் மீதான கவனம். தலித் எழுச்சியின் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்களைக் குறித்துத் தனியே எழுத வேண்டும். வர்க்க அடையாளத்திற்குள் உள்ளடக்கிப் பேசப்பட்ட தலித் பிரச்சினைகளைச் சாதிப் பிரச்சினையாகக் கருதிக் கூடுதல் கவனம் செலுத்திப் பேசும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தற்கால நடவடிக்கைகளை இந்த வகையில் நிறுவி நாம் பேச முடியும். சாதிப் பிரச்சினைகளில் போதுமான பார்வை செலுத்தவில்லை என்ற இடதுசாரிகள் மீதான தலித் அரசியலின் விமர்சனத்தைச் சரிசெய்துவிடும் விதமாகவே அவர்களின் வேகமும் கவனமும் கூடியிருக்கின்றன. அதனால்தான் இன்றைக்குப் பாப்பாப்பட்டி தொடங்கி உத்தப்புரம் வரையிலான பிரச்சினைகளைத் தனியரு கட்சியாகவே எதிர்கொண்டு, அதன் மீதான 'வெற்றிகளை'த் தங்களுக்குரியதாக மட்டுமே சொல்ல விரும்புகின்றனர். தாம் முன்னெடுக்கும் பிரச்சினைகளில் தலித் இயக்கங்கள் நுழைந்துவிடக் கூடாது என்ற கவனமும் அவர்களிடம் மிகுதியாகி உள்ளது. இப்பிரச்சினைகள் மீது கடந்த காலங்களில் போராடிய தலித் இயக்கங்களோடு ஐக்கியத்தை மட்டுமல்ல அவற்றின் போராட்டத்தையும் அவை சொல்ல விரும்புவதில்லை. சான்றாகப் பாப்பாப்பட்டி பிரச்சினையில் அதுவரை போராடிவந்த தலித் அமைப்புகளைவிடக் கடைசி இரண்டு ஆண்டுகளில் கவனம் செலுத்திய தங்களின் பங்களிப்புகளைப் பெரிதுபடுத்தும் அவர்களின் நடவடிக்கைகளைச் சொல்லலாம்.
இத்தகைய பின்னணியில்தான் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை உருவாக்கியிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். கம்யூனிஸ்ட்களின் இம்மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை; அங்கீகரிக்கப்பட வேண்டியவை. ஆனால், இம்மாற்றத்திற்குப் பின்னால் தலித் எழுச்சியின் கருத்தியலும் அமைப்புகளும் உள்ளன என்பவை குறிப்பிடத்தக்கவை. இச் சூழலில் தலித் இயக்கங்களின் சுணக்கத்தையும் பிரச்சினைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவையும் சொல்லாமல் இருக்க முடியாது. தினசரிப் பிரச்சினைகளையே பின்தொடரும் அவை நெடுங்காலம் நிலவிவரும் பாகுபாடுகளைக் கண்டறிந்து போராட முடியாத பலவீனத்தையும் உணராமல் இருக்கின்றன.
மொத்தத்தில் உத்தப்புரத்திலுள்ள தடுப்புச் சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அதற்கான போராட்டமும் மிச்சமுள்ளது. 1989 தொடங்கி இந்த 19ஆண்டுக் காலத்தில் சாதியின் பெயரால் பராமரிக்கப்பட்டுவரும் தடுப்புச் சுவர் உள்ளிட்ட பாகுபாடுகள் அரசு இயந்திரங்களின் கண்காணிப்பிலேயே காப்பாற்றப்பட்டுவருகின்றன. இப்பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டமும் புகார்களும் கிராம நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம்வரை அளிக்கப்பட்ட போதும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் முழுக்க முழுக்கச் சரிசெய்யப்பட வேண்டியவர்களாகச் சாதி இந்துக்களே இருக்கின்றனர். சாதி நோய் மீதான மருத்துவமே மிக அவசியமானது. ஏனெனில், எழுப்பப்பட்டுள்ள கண்ணுக்குத் தெரியும் சுவரைக் காட்டிலும் சாதி இந்துக்களின் மனநிலையில் எழுப்பப்பட்டுள்ள சாதிச் சுவரை இடிப்பதுதான் அதிகச் சவாலானது.