சென்னகரம்பட்டி : அதிகாரத்தின் ஓலம்
ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமே சொந்தமல்ல என்று கடந்த காலங்களில் திருமாவளவன் மேடைகளில் பேசியதைக் கேட்டதுண்டு. கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி மதுரை மேலூர் வட்டம், சென்னகரம்பட்டியின் தெருவொன்றிலிருந்து எழுந்த அழுகையும் கேவல்களும் அவ்வூர்ச் சேரியை எட்டியபோது அது நிரூபணமானது. 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி இரவு 10.30 மணிக்கு ஓடும் பேருந்திலிருந்த தலித் சமூகத்தைச் சார்ந்த அம்மாசி, வேலுவை வெட்டிக் கொலைசெய்தனர் ஆதிக்கச் சாதியினர். சென்னகரம்பட்டியிலிருந்த அம்மச்சி அய்யனார் மண்டு என்ற கோயிலின் பொதுச் சொத்தில் தலித்துகள் ஏலம் கேட்டனர் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கள்ளர் சாதியினர் செய்த கொலைகள் இவை. இக்கொலைகளில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு கரூர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 பேருக்கு ஒரே நேரத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இவ்வழக்கிலிருந்து விடுபடுவதற்காக ஆதிக்கச் சாதியினர் செய்த பல்வேறு தொடர்முயற்சிகளையும் தாண்டி வழங்கப்பட்டுள்ள இத்தண்டனை, அவர்களுக்கு அதிர்ச்சியையும் இழப்பையும் ஒருசேரத் தந்துவிட்டதால்தான் இந்த அழுகையும் ஓலமும்.
நீண்ட நாள் சிறைவாசத்தால் தண்டிக்கப்பட்டவர்களின் மனநிலையும் அவர்களின் குடும்பமும் என்னவாகும் என்பதை யோசிக்க முடிந்தாலும் சாதியை வைத்து அதிகாரத்தை மட்டுமே நிறுவிவந்தவர்களுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இது போன்ற தண்டனைகளாலேயே சாதி என்னும் அம்சம் அழிந்துவிடப்போவதில்லை. தலித் மக்களின் நெடிய இழப்புகளுக்கு முன் இவையெல்லாம் பொருட்டே கிடையாது. இத்தீர்ப்பிற்காக அடுத்தடுத்து மேல்முறையீடு என்றெல்லாம் ஆதிக்க வகுப்பினர் செல்வார்களேயானால் இத்தண்டனையின் ஆயுள் குறித்து உறுதியாக எதையும் கூற முடியாது. எனினும் சட்டம் வழங்கியுள்ள இத்தண்டனை குறித்து ஆதிக்கச் சாதியினர் மத்தியில் அச்சமும் தொடர் அலைச்சலினால் சலிப்பும் ஏற்படுமானால், அவையே இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ள விளைவுகளாகக் கொள்ளலாம்.
26 பேருக்கு அளிக்கப்பட்ட இத்தண்டனை, சட்டத்தின் பலத்தினால் மட்டுமே சாத்தியப்படவில்லை. பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தின் விதிமுறைகள் இருப்பதாலேயே அவை செயல்படுத்தப்பட்டுவிடுவதில்லை. அதனைச் சாத்தியமாக்கவும் இங்கே போராட வேண்டும் என்பதையே சென்னைகரம்பட்டி தலித் மக்களின் இத்தீர்ப்புக்கான போராட்டங்கள் சொல்லுகின்றன. சாதி, பணம், அரசியல், வன்முறை போன்ற பல்வேறு பலங்களோடு இயங்கிய கொலையாளிகளுக்கு எதிராக அவை போன்ற ஆதரவு எவையுமற்ற தலித் மக்கள் இத்தீர்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது அவர்கள் மேற்கொண்ட சட்டரீதியான போராட்டங்களின் வலிமையைக் காட்டுகிறது.
தீண்டப்படாதோர்மீதான, சாதிக் கொடுமைகளுக்குத் தென்னிந்தியச் சான்றாக அம்பேத்கரால் குறிப்பிடப்பட்ட பகுதி மேலூர். பிற பகுதிகளைக் காட்டிலும் இறுக்கமான சாதியமைப்பு இங்கு நிலவுகிறது. இங்குள்ள சென்னகரம்பட்டிக் கிராமத்தின் அம்மச்சி அம்மன் கோயில் நிலம் பெரியாறு பாசனப் பகுதியாகும். கோயில் சொத்தான இந்நிலத்தின் அளவு 9 ஏக்கர், 24 சென்ட். பொதுச்சொத்தான இதைப் பல வருடங்களாய் ரகசிய ஏலம் மூலம் சாதி இந்துக்கள் மட்டுமே குறைந்த விலையில் குத்தகை எடுத்துவந்தனர். 1987ஆம் ஆண்டுதான் முதன்முதலாக அதில் ஏலம் கேட்டனர் இவ்வூர் தலித் மக்கள். இதனால் ஏலத்தை அறிவிக்காமலேயே விளைச்சலில் ஈடுபட்டனர் சாதி இந்துக்கள். இம்முறைகேட்டிற்கு எதிராக தலித் தரப்பினர் அன்றைக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவிடம் மனு அளித்தனர்.
அதன் பிறகு 30.07.1991இல்தான் பொது ஏலத்தை அறிவித்தது இந்து சமய அறநிலையத் துறை. தலித்துகளோடு சமமாக ஏலம் கேட்பதைத் தவிர்க்க விரும்பிய கள்ளர்கள், ஏலத்திற்குரிய பணம் கொண்டுவரவில்லையெனக் கூறி ஏலத்தில் பங்கெடுக்க மறுத்தனர். ஆனால் தலித்துகளோடு பிறரும் சேர்ந்து 7,490 ரூபாய்க்கு ஏலத்தை எடுத்தனர். இந்த ஏலத்தைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரிக் கள்ளர்கள் மதுரைத் துணை ஆணையருக்குத் தந்தி கொடுத்தனர். கள்ளர் சாதியைச் சேர்ந்த அந்த ஆணையரும் ஏலத்தை ரத்துசெய்யப் பரிந்துரைத்து சென்னை இந்து அறநிலைய ஆணையருக்கு அனுப்பினார். பிறகு இந்து அறநிலையத் துறை ஆணையரைச் சந்திக்க தலித்துகளும் சென்னை சென்றனர். 19.09.1991இல் ஏலத்திற்கான தண்டோரா அறிவித்த நாளுக்கும் ஏலம் எடுக்கும் நாளுக்கும் இருக்க வேண்டிய நாள் இடைவெளி பின்பற்றாததைக் காட்டி ஏலம் ரத்துசெய்யப்பட்டதாகவும் அதற்குக் காரணமான அதிகாரி பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தலித் சமூகத்தைச் சார்ந்தவராவார். ஏலம் தடைசெய்யப்பட்டாலும் அதில் சிறு விதிவிலக்குத் தரப்பட்டது. ஏலம் நிறுத்தப்பட்டாலும் ஏழைகளான ஆதி திராவிடர்களின் ஏல உரிமை மட்டும் அனுமதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. தலித்துகளுக்குக் கிடைத்த இவ்வாய்ப்புக்காக இவ்வூரின் 200 தலித் குடும்பங்களும் கூட்டாகப் பங்களித்தன.
ஏலத்தை எக்காரணத்திற்காக நிறுத்தக் கோரினார்களோ அது நிறைவேறாததால் வெவ்வேறு இடங்களில் ஏலத்தை முழுமையாக நிறுத்தக்கோரும் வழக்குகளைத் தொடுத்தனர் கள்ளர்கள். சின்ன அம்பலம் அழகர் கருப்பண்ணன், அம்பலம் சுப்பையா ஆகியோர் கோயில் நிலத்தில் உழக் கூடாதென வட்டார நீதிமன்றத்திலும் இடைக்காலத் தடைகோரி மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். பிறகு கிருஷ்ணன் என்ற வீரணன் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார். இந்த எல்லா வழக்குகளிலுமே தலித் தரப்பு ஆஜரானது. அவர்களின் எளிய வாழ்நிலைக்கு இதுவே பெரும் அலைச்சலாக அமைந்தது. இதோடு நில்லாத கள்ளர்கள், ஏல நிலத்திலிருந்த விளைச்சலையும் அழித்ததோடு தலித்துகளைப் புறக்கணிக்க வேண்டுமெனச் சாதிக் கட்டுப்பாட்டையும் ஊரில் கொணர்ந்தனர். இந்நிலையில் 22.11.1991இல் ஏலம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான பிரச்சினை களும் இங்கெழுந்தன. குழப்பம் நீடித்ததால் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. அமைதிக் குழுவும் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, தலித்துகளைக் குறிவைத்துத் தாக்குவதில் இறங்கினர் கள்ளர்கள்.
முதலில் 11.11.1991இல் மேலூரில் கணக்காளராகப் பணியாற்றிய சென்னகரம் பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற தலித் இளைஞரை அடித்து வெளியேற்றினர். 13.11.1991இல் மேலூர் பேருந்து நிலையத்திலேயே சுரேஷ் என்பவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்ய முயன்றனர். இத்தாக்குதல்களைத் தொடர்ந்து மற்றொரு அமைதிக் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் கள்ளர்கள் 03.07.1992இல் வெளியூர் வேலைக்குச் சென்று திரும்பிய அழகி, ராஜேந்திரன், தொம்பா (எ) சேவி, பொன்னோடையன், நல்லமணி போன்றோரைச் சென்னகரம்பட்டியிலேயே வைத்து வெட்டினர். இதற்காக அளிக்கப்பட்ட புகாரினால் கள்ளர்கள்மீது பிரிவு 107 கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டது. இதற்குப் பிறகு 05.07.1992இல் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்திற்குச் சாதி இந்துக்கள் யாரும் செல்லவில்லை. தலித்துகள் மட்டுமே சென்று திரும்பினர். அமைதிக் குழுக் கூட்டத்திற்குச் சென்று திரும்பியபோது இரவு 10.30 மணிக்கு அக்கிரகாரம் என்றழைக்கப்படும் சுந்தரராஜபுரத்தில் அவர்களின் பேருந்து மறிக்கப்பட்டு ராமர் என்பவரின் தலைமையிலான கும்பல் அம்மாசி, வேலு ஆகிய இருவரை வெட்டிக்கொன்றது. பாகுபாட்டினை அங்கீகரிக்க மறுத்த தலித்துகளின் தொடர் முயற்சி பெரும் இழப்பில் முடிந்தது.
இக்கொலைகளுக்குப் பிறகு கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர தலித் மக்கள் நடத்திய சட்டரீதியான போராட்டங்கள் தனியானவை. இக்கொலைகளுக்காக 26 பேர் மீது புகார் தரப்பட்டது. இப்புகார் குறித்த எவ்விதப் பதற்றமும் சாதி இந்துக்களிடம் நிலவவில்லை. இதிலிருந்து விடுபட்டுவிட முடியும் என்ற சாதி தைரியத்தில் அவர்கள் நடமாடினர். இதற்குப் பிறகு 1997இல் மேலவளவில் ஆறுபேர் வெட்டிக்கொல்லப்பட்ட நிகழ்வுகளிலும் சென்னகரம்பட்டிக் கொலையாளிகளுக்குப் பங்கிருந்தது என்றால், இவர்களின் சாதி வெறியையும் குற்றத்திலிருந்து விடுபட்டுவிட முடியும் என்கிற 'துணிச்ச'லையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது (சென்னகரம்பட்டிக் குற்றவாளிகள் 26 பேரில் மூவர் மேலவளவு வழக்கிலும் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது). சென்னகரம்பட்டிக் குற்றவாளிகளில் சிவனாண்டியும் ஆண்டிச்சாமியும் எட்டு நாள்களிலேயே முன்ஜாமீன் பெற்றனர். வேறு சிலரும் ஜாமீனில் வெளிவந்தனர். வழக்கும் நிலுவையில் நிறுத்தப்பட்டது.
இக்காலச் சூழலில் மதுரை வட்டாரத்தில் பரவலாகிவந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் இப்பிரச்சினையில் ஈடுபட்டமையால் இதன்மீதான கவனம் அரசியல் தளத்தில் வலுப்பட்டது. கதிர் அறுக்கும் போராட்டம், ஆர்.டி. ஓ. விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிய போராட்டம், கொலையாளிகளைக் கைதுசெய்யக் கோரும் பேரணி, பொதுக்கூட்டம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் என்று தொடர்ச்சியாக அவ்வியக்கம் நடவடிக்கைகளில் இறங்கியது. இதற்குப் பிறகு இவ்வழக்கிற்கான பொறுப்பை ஏற்றார் வழக்கறிஞர் ரத்தினம். சென்னகரம்பட்டிக் கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்ட இந்நாள்வரையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தவர் இவர்தான். இதே போல மேலவளவு வழக்கிலும் இவர்தான் பங்கு வகித்தார். மேலவளவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 41 பேரில் ஒருவர் இறந்துபோனார். 40 பேரில் 23 பேரை விடுதலைசெய்துவிட்டு, 17 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தது சேலம் நீதிமன்றம். இத்தண்டனை பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் விடுவிக்கப்பட்ட 23 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர் ரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர்கள்.
சென்னகரம்பட்டி வழக்கில் அவ்வூர் தலித் மக்களின் துணையோடு நீண்ட தொடர் போராட்டம் நடத்தப்பட்டுவந்தது. இது போன்ற வழக்குகளில் கொலைகாரர்களுக்குத் தண்டனை கிடைத்தாலும் அது எஸ். சி / எஸ். டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (1989) கொணரப்பட்டுத் தண்டனை அளிக்கப்படுவதில்லை. மேலவளவு, சென்னகரம்பட்டி போன்ற இடங்களில் ஏன் கொலைசெய்தார்கள் என்பது வெளிப்படை. இந்தியாவில் அரசு இயந்திரத்தாலேயே பயன்படுத்தப்படாத சட்டம் இதுவாகத்தானிருக்கும். வழக்குப் பதிவுசெய்யப்படும் இடமான காவல் நிலையத்திலும் இச்சட்டத்தின்படி பதிவுசெய்யப்படுவதில்லை. இச்சட்டத்தின்கீழ் இதுவரையிலும் மிகவும் குறைவான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அதிலும் குறைவாகவே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் இது போன்ற கொலை வழக்குகள் இச்சட்டத்தின் கீழ் கொணரப்படுவது அரிதாகவே உள்ளது. இந்நிலையில் ஆதிக்கச் சாதி அமைப்புகள் முதல் வெகுஜன ஊடகங்கள்வரை இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கருத்தினை உற்பத்திசெய்து பரப்புகின்றன. உண்மையில் இங்கு எழ வேண்டிய கோரிக்கையே இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள் என்பதுதான். இச்சட்டம்தான் இம்மக்களுக்குக் கிடைத்த சக்தி வாய்ந்த ஆயுதம். அதைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வுதான் இம்மக்களுக்கு வேண்டியிருக்கிறது.
சென்னகரம்பட்டி வழக்கு, கணிசமான அளவிற்கு முன்னேறிச்செல்ல இச்சட்டமே பயன்பட்டது. சென்னகரம்பட்டி வழக்கை இச்சட்டத்தின்கீழ் கொணர வேண்டுமென ரத்தினம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். சாதகமான தீர்ப்பு வந்த பிறகு, வழக்கை விரைவுபடுத்தக் கோரி மேல்முறையீடு செய்ததால், மூன்று மாதத்திற்குள்ளேயே வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இருப்பினும் ஆறு மாதத்திற்குமேல் ஆனது. சென்னகரம்பட்டிப் பெருமாள் என்பவர் வழக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென முறையிட்ட பிறகு, வழக்கு கரூருக்குச் சென்றது. பிறகு, வழக்கறிஞரும் மாற்றப்பட்டு 31.08.2007இல் இன்றைக்கு இத்தண்டனையைப் பெற்றுத்தந்த வழக்கறிஞர் பவானி பா. மோகன் பொறுப்பேற்றார். இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் இந்த வழக்கின் தீர்ப்பு இச்சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. ஆனால் இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இதைக் கொணர வேண்டுமென மேல்முறையீடு செய்யவுள்ளனர். 26 பேருக்குக் கிடைத்த தண்டனையால் உருவாகியுள்ள விளைவுகளை அதிகரிக்க இம்முறையீடு பயன்படும்.