காத்திருத்தல்
மூன்றாவது இரவில் பனிபெய்ய ஆரம்பித்துவிட்டது கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்த பிறகும் ஓடுகளின் சன்னமான இடைவெளி வழியாகப் பனி இறங்கி சிமெண்ட் பால் ஊற்றப்பட்டு மொழுகிய தரையைச் சில்லிடவைத்திருந்தது. அங்கே கூடிக்கிடந்தவர்களின் கண்களில் ஒருவித ஆர்வமும் பின் அர்த்தபூர்வமான சலிப்பும் மாறி மாறி வெளிப்பட்டபடியிருந்தன. ராயப்பனின் சாவு மணிக்கணக்கில், அல்ல நொடிகளில் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. எந்த மனிதனுக்கும் நேரக்கூடாத ஆனால் சொத்துக்கொண்ட பலருக்கும் ஏற்பட்டுவிடுகிற, பிறர் தன் மரணத்துக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் அவலமிக்க நிலையில் அவரிருந்தார். முன்பு அவரும் அவர் மனைவியும் கூடிக் கழித்த அறையில் வெற்றுடலில் அலட்சியமாகச் சுற்றிவிடப்பட்டிருந்த பழைய வேட்டியோடு கிடந்தார். மர வேர்கள்போல அவரது கைகளில் நரம்புகள் படர்ந்துகிடந்தன. குளிரில் மார்போடு ஒட்டிக்கிடக்கும் நரையோடிய ரோமங்கள் அவரது வயோதிகத்தைக் காட்டின. தவளையின் கண்கள்போல விரியத் திறந்திறந்த அவரது கண்கள் அர்த்தமற்று வெறித்தபடியிருந்தன. அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர் இந்த வீட்டை வாங்கினார். தன் உடல் தொய்வடையத் தொடங்கியதையும