வட்டாரப் படைப்புகளும் ஒற்றைநோக்கும்
'தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இந்திய நாவல்களிலும் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமியச் சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்துப் பிராந்திய நாவல் என்கிற துறையை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் அவர்தான் என்று சொல்லலாம்' என்று க. நா. சுப்ரமண்யம் எழுதியுள்ளார். அதாவது தமிழில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே வட்டார நாவல் என்னும் துறை ஆர். சண்முகசுந்தரத்தின் 'நாகம்மாள்' வழியாகத்தான் தோன்றியது என்பது க.நா.சு. கருத்து. ஆனால் வட்டாரவியல் என்பது ஒரு கோட்பாடாகத் தமிழில் உருவாகவில்லை. கல்விப்புலம் சார்ந்தவர்கள் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெறுவதற்காக எழுதிய ஆய்வேடுகள், கட்டுரைகளில் வட்டாரவியல் என்பதை ஒரு வசதிக்காகப் பயன்படுத்தியுள்ளனர். வட்டாரப் பின்புலம், வட்டார மொழி, வட்டாரப் பிரச்சினை முதலியவற்றைக் கொண்டவை வட்டார இல