தோழர் எஸ். என். நாகராஜனின் மார்க்சியம்
மார்க்சியத்தைக் கீழை - மேலை மார்க்சியம் என்று நாகராஜன் பிரிவுபடுத்திப் பேசிவருவது உண்மையில் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க உதவுமா என்னும் கேள்வி எழுகிறது. சமுதாயக் கோட்பாடுகள் பல உண்டு என்றாலும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் சமூகத்தை அணுகிப் புரிந்துகொள்ள முயலும்போது பல விசயங்கள் தெளிவுபடுகின்றன. சமுதாயம் என்பது ஒரு அமைப்பு. மனிதன் அந்த அமைப்பின் வழியாகத்தான் வாழ்கிறான். இந்தச் சமுதாய அமைப்பில் பொருளாதார அமைப்பு, அரசியல் அமைப்பு, கலாச்சார அமைப்பு எனப் பல உள்ளன. இவை ஒன்றுக்கொன்று தொடர்பும் பாதிப்பும் கொண்டு செயல்படுகின்றன. பொருளாதார அமைப்பை அடிக்கட்டுமானம் என்றும் அரசியல், கலாச்சாரம், கருத்தியல் ஆகியவற்றாலான அமைப்பை மேல்கட்டுமானம் என்றும் கார்ல் மார்க்ஸ் பார்க்கிறார். பொருள் உற்பத்தி நடவடிக்கையே மனிதனின் பிரதானச் செயல்பாடு. அதை அவர் அடிக்கட்டுமானச் செயல் என்கிறார். மேல்கட்டுமானம், அடிக்கட்டுமானம் இரண்டிற்குமிடையே உள்ள உறவு இயங்கியல் தன்மை கொண்டது என்றும் உணர்த்துகிறார். மனிதன் தன்னை உழைப்பின் வழியே கட்டமைத்துக் கொண்டு வருகிறான். அதுவே வரலாறு என்றும் மார்க்ஸ் கூறுகிறார்.<