புனிதப்படுத்தப்படும் ஜனரஞ்சகப் புனைவுகள்
அண்மைக் காலத்து இலக்கிய நிகழ்வொன்று பதிப்புலகத்தில் புயலை எழுப்பியுள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ்க் கேளிக்கைக் கதைகளின் (ஜனரஞ்சகக் கதைகள்) தொகுப்பு உடனடியாக அதிக விற்பனையுள்ள புத்தகமாகியிருக்கிறது. சென்னையிலுள்ள புதிய தனியார் பதிப்பகமான பிளாஃப்ட் இதை வெளியிட்டுள்ளது. 'பிளாஃப்ட் ஆந்தாலஜி ஆஃப் தமிழ் பல்ப் ஃபிக்ஷன்' (Blaft Anthology of Tamil Pulp Fiction) தொகுதியில் தமிழில் பிரபலமான பத்து ஜனரஞ்சக எழுத்தாளர்களின் கிரைம், காதல், அறிவியல் புனைவு, துப்பறியும் கதைகள் ஆகிய பிரிவுகளுக்கு உட்படும் பதினேழு கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை முதல்முறையாக ஆங்கிலத்தில் ப்ரீதம் சக்ரவர்த்தியால் சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பதிப்புத் துறைக்குப் புதுவரவான பிளாஃப்ட், ராகேஷ் கன்னா, காவேரி லால்சந்த், ராஷ்மி ரூத் தேவதாசன் ஆகியோரின் கருத்தில் பிறந்தது. அவர்களுடைய முதல் புத்தகம் மூன்றே மாதங்களில் விற்றுத்தீர்ந்து மறுபதிப்புக் காணவிருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப்பால் 'அந்த மாதத்துப் புத்தக'மாகவும் கடந்த மாதம் தேர்வுபெற்றிருந்தது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் அவர்களது வழக்கமான புக் கிளப் கூட்டத்துக்குப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் அந்த நூலின் மொழி பெயர்ப்பாளர் ஆகியோருடன் சென்றமுறை நானும் அழைக்கப்பட்டிருந்தேன். ஜனரஞ்சகப் புனைவுகள் என்ற வகைமையில் உள்ளீடாகவுள்ள சில முரண்பாடுகளை நான் அங்கே எடுத்துக் காட்டினேன்.
அந்தக் கதைகளின் மூல ஆசிரியர்கள் சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன் இருவரின் புனைபெயர் இது. இருவரும் இணைந்து 550க்கும் மேற்பட்ட குறுநாவல்களையும் 400 சிறுகதைகளையும் 50 நாவல்களையும் எழுதியிருக்கிறார்கள்), ராஜேஷ்குமார் (1250க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000 சிறுகதைகள்), வித்யா சுப்ரமணியம் (அரசு ஊழியர்), இந்திரா சௌந்தர்ராஜன் (500க்கும் மேற்பட்ட சிறுகதைகள்), ரமணிசந்திரன் (125க்கும் மேற்பட்ட நாவல்கள்), பட்டுக்கோட்டை பிரபாகர் (ஒரு நாளில் பன்னிரண்டு மணிநேரத்தை எழுத்துக்காகச் செலவிடுப வராக அண்டை வீட்டாரால் அறியப்பட்டிருப்பவர்), புஷ்பா தங்கதுரை (ஸ்ரீவேணுகோபாலனின் புனைபெயர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் ஜனரஞ்சகப் புனைவுகளை எழுதுபவர்), அமரர் தமிழ்வாணன் (பிரசித்திபெற்ற ஜனரஞ்சக இதழான 'கல்கண்டு' நிறுவனர்), யாருக்கும் அறிமுகமற்ற பிரஜானந்த் வி.கே. (எந்தப் பதிப்பாளரும் அவரைச் சந்தித்ததில்லை), ரெசாகி (ஜனரஞ்சகப் புனை கதைகளை எழுதும் ஆர். எம். குமரவேலின் புனைபெயர், அவரே வெற்றிகரமான பதிப்பாளரும்கூட).
தமிழில் வெளியாகும் ஜனரஞ்சக இதழ்களான 'ஆனந்த விகடன்', 'குமுதம்', 'குங்குமம்', 'கலைமகள்', 'தினமணி கதிர்' போன்றவற்றின் புனைகதைப் பரப்பை இந்த எழுத்தாளர்கள் நிரப்புகிறார்கள். ஜெயராஜைப் (பெண்ணுருவங்களைக் காமம் கிளர்த்தும் விதமாக வரைவதன் மூலம் உள்ளூர்ப் பெண்ணியவாதிகளின் எதிரியாக இருப்பவர்) போன்ற ஓவியர்களின் கிளுகிளுக்கவைக்கும் கவர்ச்சிப் படங்களின் துணையுடன் தெரு முனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மையங்களிலுள்ள புத்தகக் கடைகளில் இந்தப் பத்திரிகைகள் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. பெருந்திரளுக்காக உற்பத்திசெய்யப்படும் ஒற்றை வாசிப்புக்குரியவை இந்த இலக்கியங்கள். கடந்த நூறு ஆண்டுகளாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்திய நகர்மயமாக்கத்துடன் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியவை.
உண்மையில் 1933ஆம் ஆண்டிலேயே 'சுதந்திரச் சங்கு' என்ற வார இதழ் ஜனரஞ்சக நாவல்களின் தேவை பொருள்களைப் பற்றியும் வரைமுறைகளைப் பற்றியும் 'வியாபார நாவல் எழுத்தின் ரகசியம்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. 'தலைப்பில் பெண் பெயர் இருக்க வேண்டும்' என்றும் 'கிளுகிளுப்பூட்டத் தெரிந்தால் மட்டுமே உங்களால் காசு பண்ண முடியும்' என்றும் உபதேசங்களை முன்வைத்திருந்தது. இத்தகைய நாவல்கள் அல்லது கதைகளுக்கு அரைமனதான வரவேற்பு மட்டும் கிடைப்பதற்கும் மூடிய அறைகளுக்குள்ளேயோ கழிப்பறைகளுக்குளேயோ மறைவாக வாசிக்கப்படுவதற்குமான காரணங்களில் இவையுமுண்டு. எல்லாவற்றையும் கண்காணிக்கும் 'மரியாதை'யின் கண்களுக்கு எட்டாமல் புத்தக அலமாரிகளின் பின்புறங்களிலோ தலையணைகளுக்கடியிலோ இவை ரகசியமாக மறைத்துவைக்கப்பட்டன. இந்த வகைப் புனைகதைகள் இவ்வளவு ஜனரஞ்சகமானவையாகக் காரணமும் இவையன்றி வேறல்ல.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பதிற்றாண்டுகளில் ஏற்பட்ட அச்சுக்கலை வளர்ச்சியும் வாசக சமூகத்தின் வளர்ச்சியும் பதிப்பாளர்கள் உருவாக வழியமைத்தன. மறுசுழற்சி செய்யப்பட்ட சாணித் தாளில் அச்சியற்றிய புத்தகங்கள் ஐம்பது பைசா விலையில் வெளியாயின. எண்பதுகளில் அறிமுகமான கணினி அச்சாக்கம் வாசிப்பை மேலும் பரவலாக்கியது; ஜனநாயகப்படுத்தியது. பாலகுமாரன், தேவிபாலா, அனுராதா ரமணன் போன்ற எழுத்தாளர்கள் உருவாகிப் பிரபலமடைந்தார்கள். வாசகர் பரப்பும் விரிவடைந்தது. 'தரமானது' என்றும் 'கீழானது' என்றும் அழைக்கப்படும் இலக்கிய வகைமைகளின் போராட்டத்துக்கும் அது தொடக்கமிட்டது. இந்தத் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் ப்ரீதம் சக்ரவர்த்தி "பெரும் வாசகப் பின்னணி இருந்தும் கல்விப்புல நூலகங்களில் இடம் கிடைக்காமற்போன இந்த எழுத்துக்களுக்கு 'இலக்கிய அந்தஸ்தை'ப் பெற்றுத்தரும் முயற்சி இது" என்று உரிமை பாராட்டுகிறார். உண்மையில் இந்த வகைமை ஒரே மாதியான நசிவு இலக்கியத்தைப் பெருமளவுக்கு உற்பத்திசெய்து பெருந்திரளின் ரசனையை உருவாக்குவதைப் பற்றிய கேள்வியை நோக்கியே நம்மைத் திருப்பிவிடும் என்று எண்ணுகிறேன்.
இவற்றுக்கு 'உயர்' இலக்கியப் பதவி வழங்கும் முயற்சி முற்றிலும் எதிரான விளைவுகளையே உருவாக்கும். சமூகவியலில் 'எதிர் மறுப்பு' என்று அழைக்கப்படும் அம்சத்தில்தான் ஜனரஞ்சக இலக்கியத்தின் அடிப்படை உள்ளது. 'உயர்' இலக்கியம் நுழையத் தயங்கும் சந்துபொந்துகளில்கூட ஜனரஞ்சக இலக்கியம் சுலபமாக நுழைந்துவிடுகிறது. கலாச்சாரம் என்பது மேற்பரப்பில் மட்டும் தென்படும் கலப்படமற்ற கூறல்ல; அது எதிர்மறுப்பின் ஆழத்திலுள்ளது; மறைந்திருப்பது. வன்முறை ஒரு கலாச்சாரம்தான். அதுபோலவே விபச்சாரமும். ஜனரஞ்சக இலக்கியம் ஒருபுறம் அத்துமீறலுக்கும் சாகசத்துக்கும் இன்னொரு புறம் வைதிக மனப்பாங்குக்கும் பாதுகாப்புக்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் செயல்படுகிறது. ஜனரஞ்சக இலக்கியத்தின் உற்பத்தியிலும் நுகர்விலும் ஏராளமான போலிப் பிரகடனங்கள் அரங்கேறுகின்றன. ஒரு பக்கம் அன்றாட எளிய நிகழ்வுகளின் - தொலைக்காட்சித் தொடர்கள் முதல் ஜோதிடம் வரை - இடத்தை அவை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இன்னொரு பக்கம் வெளியை பெண்ணியப்படுத்துவதற்கும் பொது இடங்களில் பெண்ணை 'இடத்துக்குப் பொருத்தமற்றவளாக'க் காணும் மனப்பாங்குக்கும் இடையிலுள்ள மோதல் இது போன்ற கதைகளில் பெண்ணெதிர்ப்பு சார்ந்தும் ஆண்மைய உள்ளடக்கத்தைச் சார்ந்தும் வெளியாகின்றன.
இதன் விளைவாக, இந்தக் கதைகளனைத்தும் சாகசம் நிரம்பியவையாக, சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவையாகத் தோற்றமளித்துக்கொண்டே உண்மையில் அதற்கு நேரெதிரான நிலையைச் சென்றடைகின்றன. இருக்கும் நிலையை ஆதரிக்கின்றன. பாதுகாப்புத் தேடிக் கொள்கின்றன. உதாரணமாக, பெரும்பான்மையான க்ரைம் கதைகள் நடைமுறையிலிருக்கும் போலீஸ் செயல்பாடுகளை ஆதரிப்பவை; உயர் சாதி ஒழுக்க நெறிகளை ஆதரிப்பவை. 'ஜனரஞ்சகக் கலாச்சாரம்', 'ஜனரஞ்சகப் புனைவு' இரண்டும் நிறுவனங்களின் நோக்கத்துக்கே சேவைசெய்கின்றன.
ஓர் அர்த்தத்தில் 'ஜனரஞ்சக இலக்கியம்' சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாய்மொழி இலக்கியம் காலிசெய்த இடத்தில்தான் நுழைந்திருக்கிறது. அதிவேக வாசிப்பை விரும்பும் நமக்கு வாய்மொழி இலக்கியத்தின் பதிலியாக வாய்க்கிறது இந்த வகைமை. எனினும் வாய்மொழி இலக்கியத்தின் மாற்றுருவாக்க விழுமியம் எதுவும் இதற்கில்லை. இது வாய்மொழி இலக்கியத்தின் நோய்க்கூறான மறுவருகை. அதற்குள்ளே அக, புற வெளிகளுக்கிடையில் நிகழும் சொல்லாடலின் அழுத்தம் நுண் சிக்கலாகவே உருவாகிறது. நடைமுறையிலிருக்கும் சமூக நெறிகளை அது வலுப்படுத்துகிறது என்ற நிலையிலும் ஒரு சவாலான சாகசத்தின் மாயையை ஜனரஞ்சக இலக்கியம் நமக்கு அளிக்கிறது என்பதனாலும் நாம் அதன்பால் ஈர்க்கப்படுகிறோம்.
நன்றி: மலையாளம் வாரிக, 22.08.2008