செயலின் தீவிரம் சுமக்கும் மொழியின் எளிமை
காந்தியச் சிந்தனைகளில் பற்றுக்கொண்டு கிராமக் களப்பணிகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கிய இந்திரா, தன் கிராமத்தில் ஆதிக்கச் சக்திகளால் தலித் மக்களுக்குக் குடிதண்ணீர் மறுக்கப்பட, அதை நிவர்த்திக்கும் சமூகக் கடமை இருப்பதை உணர்கிறார். அரசியல் அதிகாரம் மூலம் இப்பிரச்சினையைக் களைய முனைந்து, பல இடர்களுக்கும் தொடர் தோல்விகளுக்கும் பிறகு அதில் வெற்றிபெறுகிறார். இந்தப் போராட்டத்தின் சாரத்தைத் தன் பார்வையில் பங்கேற்பாளராகவும் முன்னெடுத்துச்சென்றவர் என்ற முறையிலும் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புற வர்ணனையில் ஆரம்பிக்கின்றது முதல் அத்தியாயம். கவுன்சிலர் பதவிக்குத் தேர்தல், போட்டியிடல், வெற்றிக்காகத் திட்டமிடல், ஊர்ப் பிரச்சினைகளை அறிதல், மக்களிடம் நெருங்குதல், வெற்றிபெறுதல், முதல் கவுன்சிலர்கள் கூட்டம