அமர்நாத்: அரசியலாக்கப்படும் யாத்திரை
இந்திய அரசு காஷ்மீர் மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால் தன் மேலாதிக்கத்தை நிறுவமுடியும் என்னும் குருட்டு நம்பிக்கை இன்னொருபுறம். லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் திரும்புகிற பக்கமெல்லாம் ஏகே47 துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பள்ளத்தாக்கு முழுவதும். இவர்கள் யாரையும் கைதுசெய்யலாம், சுட்டுக் கொல்லலாம், மாயமாக மறையச் செய்யலாம். யாரும் கேள்வி கேட்கவோ நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவோ முடியாத வரம்பற்ற அதிகாரம் இந்த ராணுவத்தினருக்கு. அதன் விளைவுதான் லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதும் காணாமல் போயிருப்பதும். சிறையில் இருப்பவர்கள் அதிகமில்லை. இப்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் - நகரங்களிலும் ஊர்களிலும் - விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் மரியாதை மிக்க தளம் என அழைக்கப்படும் martyr's groundகள் உள்ளன. காஷ்மீர் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியவர்களும் இங்கு புதைக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். இவர்கள் விடுதலை வேட்கை சற்றும் தணியவில்லை. நீறுபூத்த நெருப்பாக இருப்பதை எரிந்து அணைந்துவிட்ட கரித்துண்டு என இந்திய அரசு தப்புக் கணக்குப் போட்டது. ஆயுதமேந்திய போராளிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது; இனி எல்லாம் ஓய்ந்துவிடும் என்றது அரசு.
இந்தச் சூழலில்தான் கடந்த மே மாதம் 26ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் அரசு அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கென 100 ஏக்கர் நிலம் ஒதுக்கிய ஆணை வெளியாயிற்று. ஜூன் தொடக்க முதலே அதை எதிர்த்துப் போராட்டம் எழுந்தது. சில நாள்களிலேயே போராட்டம் காஷ்மீர் முழுவதும் தீவிரமடைந்தது. இந்தியப் பெரும் பத்திரிகைகள் அனைத்தும் 'காஷ்மீரில் எழுந்துள்ள தீயை அணை' என்று உரக்கக் குரல் கொடுத்தன. 1990களின் தொடக்கத்தில் இருந்த வேகமும் உறுதியும் இப்போதைய போராட்டத்தில் இருந்ததைக் கவனித்த அரசுக்குப் பெரும் அதிர்ச்சி. போராட்டம் வன்முறையற்றும் பொதுமக்களின் பெரும் பங்கேற்போடும் இருந்தது. பள்ளத்தாக்கு முழுவதும் 'விடுதலை விடுதலை' என்னும் கோஷம்தான். இவற்றை விவரித்த பத்திரிகைகள் அரசை எச்சரித்து, உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உணர்த்தின. அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கிய ஆணையை ஜூலை முதல் நாள் மாநிலத்தின் புதிய ஆளுநர் ரத்துசெய்தார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் பிரச்சினை தீரவில்லை. அதன் பிறகுதான் உண்மையில் அது தீவிரமடைந்தது எனலாம்.
ஆணை ரத்துசெய்யப்பட்ட மறுநாளே ஜம்மு பகுதியிலும் போராட்டங்கள் தொடங்கின. ஆணை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்தும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வன்முறைப் போராட்டங்கள் தீவிரமாக எழுந்தன. இவற்றை ஆர்எஸ்எஸ§ம் பிஜேபி, விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற அதன் இணை அமைப்புகளும் முன்னின்று நடத்தின. முஸ்லிம்களும் குஜ்ஜார்களும் தாக்கப்பட்டனர். ஜூலை மூன்றாம் தேதி நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் என்னும் பெயரில் பல இடங்களில் வன்முறையில் இறங்கினார்கள். அமர்நாத் யாத்திரிகர்களுக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என்பதைவிட நிலம் ஒதுக்கப்படுவதையே இந்த அமைப்புகள் அதிகம் வலியுறுத்தின. இதில்தான் ஆர்எஸ்எஸ், பிஜேபி ஆகியவற்றின் நீண்ட காலத் திட்டம் அடங்கியுள்ளது என்பதாகக் காஷ்மீர் முஸ்லிம்களும் ஆர்எஸ்எஸின் செயல்பாடுகளைக் கவனிப்பவர்களும் கருதுகின்றனர். அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அமர்நாத் யாத்திரையின் வரலாற்றை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்நாத்தில் உள்ள சிவன் குகைக் கோவிலுக்குப் பக்தர்கள் சென்று வருகிறார்கள். அனந்த்நாக்கிலிருந்து அங்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்றில் ஒரு நாள் மட்டும் நடந்துசென்றால் போதும். மற்றொரு வழியில் மூன்று நாள்கள் நடந்துசெல்ல வேண்டும். எனவே பயணிகள் ஐந்து இடங்களில் தங்கிச் செல்வார்கள். அனந்த்நாக்கிலிருந்து பகல்காம்வரை பஸ், ட்ரக்குகளில் சென்று பின்னர் அங்கிருந்து நடப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்துதரும். வழியில் உள்ள முஸ்லிம்களும் உதவுவார்கள். தொடக்கத்தில் சில நூறு பேர் கலந்துகொண்ட இப்பயணம் பிறகு சில ஆயிரம் பேர் கொண்டதாகப் பெருகியது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் லட்சத்திற்கும் அதிகமானோர் அமர்நாத்துக்கு வந்துசெல்லத் தொடங்கினார்கள். சமீப காலங்களில் பக்தியோ சுற்றுலா ஆர்வமோ பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவில்லை எனலாம். இந்த ஆண்டு மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்கென 38 ஆயிரம் ராணுவத்தினர் அமர்த்தப்பட்டனர். இந்தப் 'பக்தி'ப் பயணம் நான்கு வாரங்கள் மட்டுமே நடக்கும். 1996இல் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 250க்கும் அதிகமான பயணிகள் விபத்தில் சிக்கி இறந்தனர். தப்பிப் பிழைத்தவர்களுக்கு அனந்த்நாக் தொடங்கி வழியில் உள்ள முஸ்லிம்கள்தான் உணவு, தங்கும் வசதி, மருந்து போன்றவற்றை ஏற்பாடுசெய்து உதவினார்கள். பல பத்திரிகைகள் இதைப் பதிவுசெய்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமர்நாத் யாத்திரையில் கலந்துகொண்டு அதன் தன்மையையும் நோக்கத்தையும் முற்றாக மாற்றிவிட்டார்கள்.
காஷ்மீர் விடுதலைக்கான போராட்டம் தீவிர மடைந்ததும் ஆயுதமேந்தியதாகவும் மாறியது 1990களிலிருந்துதான். கடந்த 15 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ§ம் அதைச் சார்ந்த அமைப்புகளும் வட இந்தியாவிலுள்ள ஆதரவாளர்களைத் திரட்டி, அமர்நாத் யாத்திரைக்கென்று அனுப்பத் தொடங்கின. அப்பயணத்தின்போது இவர்கள் நடந்துகொள்ளும் விதம் இவர்களுக்குப் பக்தியோ சுற்றுலா நோக்கமோ இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும். அடாவடித்தனமும் வழியில் உள்ள முஸ்லிம்களிடம் வம்பும் செய்வார்கள். இவர்கள் பயணம் செய்யும் வண்டிகளில் தேசியக் கொடியைக் கட்டிக்கொண்டு 'பாரத் மாதா கி ஜே' என்று வானை நோக்கிக் கையை உயர்த்திக் கத்திக்கொண்டு செல்வார்கள். இந்திய ராணுவமும் இப்படிச் செய்யும். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இது நடக்கும். பொதுவாகவே, ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அறைகூவல் (முழக்கம்) இருக்கும். திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' எனவும் பழனிக்குச் செல்வோர் 'அரோகரா, அரோகரா' என்றும் சபரிமலை பக்தர்கள் 'சாமியே சரணம் ஐயப்பா' எனவும் முழங்குவார்கள். அவையே அவர்களது பக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கும். சிவனை 'ஹர ஹர மகாதேவா' என்று அழைப்பதுதான் வழக்கம். ஆனால் அமர்நாத் யாத்திரையில் சிவன்மீதான பக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு 'பாரத் மாதா கி ஜே' என்னும் கோஷத்தால் அது அரசியலாக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்புகள் அமர்நாத் பயணத்தைத் தம்முடைய இனவாத அரசியலுக்குப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டன. அதாவது 'காஷ்மீர் எங்களுடையது. எங்கள் மண். உங்களால் எங்களைத் தடுக்க முடியாது' என்னும் தொனியில்தான் இவர்களின் செயல்கள் இருக்கும். உண்மை அறியும் குழுக்கள் பல இவர்கள் நடந்துகொள்ளும்விதம் பற்றிய விவரங்களைக் கூறியுள்ளன. இவ்வமைப்பினரின் செயல்பாடுகளையும் யாத்திரையையும் தடை செய்யக் கோரிக்கை எழுந்தது. ஆயுதமேந்திய போராளிகள் மூன்றுமுறை இந்தப் பயணிகளை நோக்கிச் சுட்டார்கள். 2000ஆம் ஆண்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். 2001இல் ஐந்து பேரும் 2002இல் எட்டுப் பேரும் இறந்தனர். அதன் பிறகு அப்படிப்பட்ட சம்பவம் நடக்கவில்லை.
இந்தப் பின்னணியில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பள்ளத்தாக்கில் நடந்த போராட்டங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அமர்நாத் சென்று வரும் பயணிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதைக் காஷ்மீர் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். காஷ்மீர் மக்களின் நிலத்தை அபரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை இது; கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களைக் குடியமர்த்தும் திட்டத்தின் முதல்படி என்னும் ஐயமும் அச்சமும்தான் இவர்களை வரலாறு காணாத அளவிற்குப் போராடவைத்தது. அமர்நாத் யாத்திரிகர்களுக்கு வசதி செய்துதர வேண்டும் என்பதைவிட, நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையையே பிஜேபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முன்னிலைப்படுத்தின. (உண்மையில் வனப்பகுதி நிலத்தை ஒதுக்கிய ஆணை இந்திய உச்ச நீதிமன்றத்தின் 27.04.2007 தீர்ப்புக்கு மாறாக உள்ளதால் செல்லாது என்பது சட்ட நிபுணர்களின் கருத்து.) பக்தர்கள் என்னும் போர்வையில் லட்சக்கணக்கானவர்களை அனுப்பி அங்குள்ள முஸ்லிம்களுடன் மோதலை ஏற்படுத்தி அதனால் இந்துக்கள் தாக்கப்பட்டு நாட்டில் முஸ்லிம்கள்மீது வெறுப்பை ஏற்படுத்துவதே இன விரோத மனப்பான்மை உடைய இந்த அமைப்புகளின் நோக்கம். இவ்வமைப்பு களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு அமர்நாத்திலிருந்து திரும்புகையில் ஜம்முவில் நடக்கும் போராட்டத்தில் ஒருநாள் கலந்துகொண்டுவிட்டு மறுநாள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர் என்பதும் கவனிக்கப் பட்டது. ஆர்எஸ்எஸ்காரரான முன்னாள் ஆளுநர் எஸ்கே சின்ஹா அமர்நாத் யாத்திரையை 8 வார காலம் நீட்டிக்க வேண்டும் என வற்புறுத்தினார். வரும் ஆண்டுகளில் யாத்திரிகர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாகலாம். அது மேலும் அதிகரிக்கலாம். பக்தி வேஷம் போட்டுக்கொண்டு அரசியல் நோக்கை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் மேற்படி அமைப்பினரின் திட்டம்.
ஜம்முவில் ஜூலை மாதம் போராட்டம் தீவிரமடைந்தது. சிறுபான்மையினர்மீது வன்முறை ஏவப்பட்டது. அதில் நிறைவடையாத ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி அமைப்புகள் ஆகஸ்ட் நான்காம் தேதி காஷ்மீருக்குச் செல்லும் பாதையை அடைத்தன. சரக்குப் போக்குவரத்துக்கான வழியை அடைத்ததால், அமைதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்டம் வெடித்தது. கட்சிகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டதால், ஹ§ரியத் தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச்சென்றனர். காஷ்மீரிலிருந்து ஆப்பிளும் கைவினைப் பொருள்களும் வெளியே செல்ல முடியவில்லை. ஜம்மு பகுதியிலுள்ள சாம்பா, கட்வா போன்ற இடங்களில் லாரிகள் கொளுத்தப்பட்டன; ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர். எனவே காஷ்மீருக்கு வர வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் வந்துசேரவில்லை.
இந்நிலையில்தான் ஆப்பிள் வியாபாரிகள் சங்கம் ஆகஸ்ட் 11 அன்று முஸாபராபாத்* செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. காஷ்மீரின் பல பகுதிகளிலிருந்து லட்சத்திற்கும் அதிகமானோர் திரள ஆரம்பித்தனர். வன்முறையின்றிக் கால்நடையாகப் பாராமுல்லாவை நோக்கி நடந்த மக்களின் மீது ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பல இடங்களில் துப்பாக்கிச் சூடு. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் சுட்டதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34.
நிலைமை மோசமாவதையும் அறப் போராட்டத்தையும் ஒடுக்க அரசு ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் கண்ட மனித உரிமை அமைப்புகள் நிலைமையை நேரில் ஆராய முடிவெடுத்தன. அதன்படி, டெல்லியைச் சேர்ந்த றிஹிஞிஸி அமைப்பிலிருந்து ஹரிஷ் தவான், பேரா. ஷர்மிளா, பரம்ஜித் சிங் ஆகியோரும் ஆந்திராவின் APCLC இன் (வழக்கறிஞர்) ரகுநாத், பெங்களூரில் இயங்கும் People's Democratic Forumஐச் சேர்ந்த பேராசிரியர்கள் பாபைய்யா, ஜி. கே. ராமசாமி ஆகியோரும் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஸ்ரீநகரை அடைந்தோம். அன்றே ஸ்ரீநகரிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விவரங்களைச் சேகரித்தோம். ஆகஸ்ட் 23ஆம் நாள், சனிக்கிழமை, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு முழுவதும் கடையடைப்பு. எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை. அச்சூழலில் Jammu and Kashmir Coalition of Civil Society அமைப்பின் உதவியுடன் நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழுவினர் சொபோரா, பந்திபோரா, பாராமுல்லா பகுதிகளுக்கும் மற்றொரு குழுவினர் ஸ்ரீநகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சென்று துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களையும் மோசமாகக் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து விவரங்கள் சேகரித்தோம். ராணுவம் குடிமக்களை எவ்வாறு அச்சுறுத்தும் என்பதைச் சனிக்கிழமை நாங்கள் அனுபவித்தோம். நாங்கள் தங்கியிருந்த ஸ்ரீநகரின் மையப் பகுதியான லால் சௌக்கிலுள்ள ஹோட்டலில் அன்று காலை எட்டு மணியளவில் ஏகே47 துப்பாக்கி
களுடன் அறைக்குள் நுழைந்து எங்களிடம் விசாரணை. பெட்டிகளைச் சோதனையிட்டனர்; அடையாள அட்டைகளைப் பார்த்தனர்; எங்கள் முகவரிகளையும் அமைப்பின் பெயர்களையும் குறித்துக்கொண்டனர். அது ஒரு சிறிய அச்சுறுத்தல்தான். ஆனால் பெரும் அச்சத்தைத் தந்த சம்பவம் பின்னர் நடந்தது. சொபோராவிலிருந்து பந்திபோராவுக்குச் செல்லும் காட்டுவழியில் திடீரென்று ராணுவத்தினர் 10 பேர் துப்பாக்கி ஏந்திச் சுடுவதற்குத் தயாரான நிலையில் விசாரித்தார்கள். அந்த அனுபவத்தைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஞாயிறு காலை ஆறு மணிக்கு எழுந்து கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டல் மாடியிலிருந்து இறங்கி ரோட்டிற்கு வந்தோம். ராணுவத்தினர் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. ஏன் அப்படி என எண்ணுவதற்குள், ராணுவத்தினர் இரண்டு பேர் எங்களை அங்கிருந்து திரும்பிப் போகுமாறு சத்தமிட்டனர். 'இன்று காலை நான்கு மணி முதலே காஷ்மீர்ப் பகுதி முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. யாரும் வெளியில் வரக் கூடாது' எனக் கூறி எங்களைத் திருப்பி அனுப்பினார்கள். அன்று நாங்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்த காஷ்மீர் பண்டிட்கள் சங்கத் தலைவர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்கள், Chamber of Commerce தலைவர்கள் என யாரையும் சந்திக்க முடியவில்லை. உள்ளூர்த் தொலைக்காட்சிச் சானல்கள் உண்மை நிலைமையை ஒளிபரப்புகின்றன என்பதால் அவற்றையும் தடுத்துவிட்டிருந்தனர். எந்த நிமிடமும் செல்போன்களும் ஜாம் செய்யப்படலாம் என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் எச்சரித்தனர். இவை யாவும் கடந்த காலத்தில் நடந்தவைதானாம். வெளி உலகோடு மனிதன் கொண்டுள்ளதொடர்பு துண்டிக்கப்படும்போது அது எத்தகைய தாக்கத்தைத் தரும் என்பதை எங்களால் அனுபவிக்க முடிந்தது. ஆத்திரமும் இயலாமையும் எங்களை வாட்டின. வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திப் பல லட்சக் கணக்கான மக்களை வீட்டுச் சிறையில் வைத்துப் பூட்டிவிடும் அரசின் அத்துமீறல்களை எந்தத் தர்மத்தின் கீழ் நியாயப்படுத்துவது? தினமும் உழைத்தால்தான் உணவு என்னும் நிலையில் உள்ளவர்களின் கதி என்ன? இந்த மக்கள் செய்த குற்றம்தான் என்ன? காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களைப் பற்றி ஜனநாயகம் பேசும் எந்தக் கட்சியும் - சிபிஐ, சிபிஎம் உட்பட - பேசுவதில்லையே. ஏன்? ஏதோ ஒரு புள்ளியில் இனவாத பிஜேபியும் சமத்துவம் பேசும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் ஒத்துப்போகின்றன என்பதுதான் உண்மை.
நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமும் நாங்கள் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் கீழ்வரும் உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. விடுதலையே காஷ்மீர் மக்களின் அடிப்படையான கோரிக்கை. இதனை ஆகஸ்ட் 22ஆம் தேதி இத்கா மைதானத்தில் கூடிய மக்கள் வெள்ளம் காட்டியது. ஏறத்தாழ 10 லட்சம் பேர் கூடினார்கள். அப்படியான மக்கள் வெள்ளத்தை 1969இல் அண்ணாதுரையின் இறுதி ஊர்வலத்தில்தான் கண்டேன். பெண்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். சிலர் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷம் போட்டனர். ஆனால் காஷ்மீர் மக்களின் வேட்கை சுயநிர்ணய உரிமைதான். கிலானி போன்றவர்கள் ஒதுங்கியுள்ளது போல் தோன்றினாலும் மக்கள் வேண்டுவது சுதந்திரமான காஷ்மீரைத்தான்.
2. ஊரடங்கு உத்தரவு என்பதை அரசு அமைதியான, ஜனநாயகப் போராட்டத்தை நசுக்கப் பயன் படுத்துகிறது.
ஹ§ரியத் தலைவர்கள் ஆகஸ்ட் 22, 23, மற்றும் 24 ஆகிய மூன்று நாள்களிலும் கடையடைப்புக்கு வேண்டுகோள் விடுத்தனர். 22ஆம் தேதி கூடிய அந்தப் பெரிய மக்கள் கூட்டம் எவ்வித வன்முறையிலோ ராணுவத்துடன் மோதலிலோ ஈடுபடவில்லை. 23ஆம் தேதியும் வன்முறைச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஹ§ரியத் தலைவர்கள் 25ஆம் தேதி 'லால் சௌக் செல்லுங்கள்' என்று குரல் கொடுத்தனர். அது வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று எண்ணிய ராணுவம் ஆகஸ்ட் 24ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதை எதிர்த்த இருவரை ஸ்ரீநகரின் டால் கேட் பகுதியில் ராணுவம் சுட்டுக்கொன்றது. நிலைமையைத் தெரிந்துகொள்ள வந்த பத்திரிகைக்காரர்கள் இருந்த வண்டியை ராணுவத்தினர் தாக்கியதில் பலர் காயமுற்றனர். பிலால் என்பவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று. பள்ளத்தாக்கு முழுவதும் 7 பேர் கொல்லப்பட்டனர்; 275 பேர் காயமுற்றனர். காஷ்மீர் மக்கள் அமைதியாகவும் போராடக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம்.
ஆகஸ்ட் 11 முதல் 14 வரை நடந்த துப்பாக்கிச் சூடுகள் வன்முறையின்றிப் போராடிய மக்கள்மீது நடத்தப்பட்டன. காஷ்மீரிலிருந்து ஜம்மு பகுதிக்குச் சரக்குப் போக்குவரத்தை ஆர்எஸ்எஸ், பிஜேபியினர் தடுத்துப் பொருளாதார அடைப்பை ஏற்படுத்தியதால், சொபோரா ஆப்பிள் வியாபாரிகள் சங்கத்தின் தலைமையில் முஸாபராபாத்திற்குச் செல்லலாம் என்னும் போராட்டம் நடந்தது. காஷ்மீரிலிருந்து தினமும் 100 லாரிகளில் பழங்கள் அனுப்பப்படும். ஆனால் இப்போது 15-20 வண்டிகள் மட்டுமே செல்ல முடிகிறது. காஷ்மீர் பகுதிக்கு மருந்து, எரிவாயு, உணவுப் பொருள்களின் வரத்து பாதிக்கப்பட்டுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் நாள் காலை முதலே காஷ்மீரின் பல இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகப் புறப்பட்டனர். ஆனால் ராணுவமும் சிஆர்பிஎஃப்பும் துப்பாக்கிச் சூடு நடத்தி 8 பேரைக் கொன்றன. 12ஆம் தேதி 16 பேரும் 13ஆம் தேதி இருவரும் 14ஆம் தேதி ஒருவரும் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்களைக் கலைந்துசெல்ல எச்சரிக்காமல் கொல்லும் நோக்கத்துடனே ராணுவம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது.
3. பல இடங்களில் இறுதி ஊர்வலங்களை எல்லைப் பாதுகாப்புப் படை தாக்கியது. பாகி மஹதாப் என்னும் இடத்தில் இறுதி ஊர்வலத்தின் மீது சுட்டதில் ஒருவர் பலியானார்.
4. காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய மறுத்துள்ளனர்.
5. எல்லைக் காவல் படை ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் மருத்துவமனை (ஷிவிபிஷி) மீது தாக்குதல் நடத்தியது.
6. காயமுற்றவர்களை எடுத்துச்சென்ற வண்டிகளையும் பல இடங்களில் ராணுவத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தாக்கியுள்ளனர்.
7. காஷ்மீர்ப் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது நம்மில் பலருக்கும் பண்டிட்கள்மீதான அக்கறை வெளிப்படும். Kashmiri Pandits' Sangarsh Samithi தலைவர்களிடம் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர்கள் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கவில்லை. மேலும் காஷ்மீரைவிட்டு வெளியேறியவர்களை அவர்கள் உண்மையான காஷ்மீரிகளாகவே கருதவில்லை. தங்களுடைய கோவில்களைப் பராமரிக்க நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அவர்களை அறிவுறுத்தியது. வழக்கு தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் உள்ளது.
ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பே அரசின் நடவடிக்கை சரியல்ல என்றால் அதை எதிர்க்கும் வகையில் போராடுவதுதான். அது குடிமக்களின் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை ராணுவத்தைக் கொண்டு மறுப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காஷ்மீர் மக்களும் இந்நாட்டு மக்கள் என்பதை ராணுவம் உணர வேண்டும். ராணுவத்தை இனவாதத்திற்கு உட்படுத்துவது ஜனநாயகத்தை அழித்துவிடும்.
காஷ்மீர் மக்களின் மன உறுதியை ஆலூசா காட் கிராமத்திலுள்ள 80 வயது முதியவரின் செயல் நமக்கு உணர்த்துகிறது. இக்கிராமம் சொபோரா தாலுக்காவில் உள்ளது. ஸிஸி15 ராணுவ முகாம் இப்பகுதியில் உள்ளது. இப்பகுதி மக்களை ராணுவம் படுகேவலமாக நடத்தும். இம்முதியவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும். நான்கு மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக ஆயுத மேந்திய போராட்டத்திற்கு அனுப்பிவைத்தார். நால்வரும் பலியானார்கள். மகளுக்குத் திருமணம் செய்துவைத்தார். பிறகு தன் மருமகனைத் தத்தெடுத்துக்கொண்டார். மருகனையும் போராட அனுப்பிவைத்தார். அந்த மருமகனும் இறந்துவிட்டார். தன் மகளையும் பேரக் குழந்தைகளையும் முதியவர் விவசாயம் செய்து காப்பாற்றிவருகிறார். இன்னொரு மகனோ மகளோ இல்லையே என்னும் ஆதங்கம் இம்முதியவருக்கு.
தந்தையையும் கணவனையும் போரில் பறிகொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறநானூற்றுக் காட்சி நினைவுக்குவருகிறது. பள்ளிக்குச் சென்றிருந்த பால் மணம் மாறாத தன் பாலகனை அழைத்துவந்தாள். சீவி முடித்து, சிங்காரித்து ரத்தக்கறை படிந்த வேலைக் கொடுத்து, 'மகனே! அப்பாவும் தாத்தாவும் போருக்குச் சென்றார்கள். மடிந்தார்கள். ஆனால் மானம் காத்தார்கள். இது உன் தாய்த் திருநாடு. இதன் மானம் காக்க ஓடு நிற்காதே' என்று போருக்கு அனுப்பிவைத்தாளாம்.
இந்த வரிகள் பிரதிபலிக்கும் உணர்வுக்குச் சொந்தக்காரர்கள் காஷ்மீர் மண்ணில் உள்ளார்கள்; ஈழ மண்ணிலும்கூட.
n
குறிப்பு
*முஸாபராபாத்: 1947இல் காஷ்மீர்மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவம் அதை முறியடித்தது. ஆனால் ஆறு மாவட்டங்களைப் பாகிஸ்தான் தன்வசம் வைத்துக்கொண்டது. அவை அடங்கிய பகுதியைத்தான் Pakistan Occupied Kashmir (POK) என்பார்கள், பாகிஸ்தான் இதை Azad Kashmir என்று அழைக்கும். இதன் தலைநகரம்தான் முஸாபராபாத்.
அட்டையில் இடம்பெற்றுள்ள படம், கட்டுரையில் இடம்பெற்றுள்ள படங்கள் www.greaterkashmir.com இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.