பறையன் என்னும் சொல் மீதுள்ள பகை
கடந்த செப்டம்பர் 1, 2008 தேதியிட்டு வெளியான 'அவுட்லுக்' இதழில் காஷ்மீரில் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையைக் குறிக்கும் கட்டுரைக்கு A Pariah's Profession (பறையர் தொழில்) என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் ஷபா நக்வி. இச்சொல் இந்தியாவின் தென்கோடியில் வாழும் தீண்டப்படாத சாதியைக் குறிக்கக்கூடிய ஒன்றென இந்தியாவின் முன்னணி ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007 பிப்ரவரி ஐந்தாம் தேதி அவுட்லுக்கில் புகைபிடிப்பவர்கள் குறித்து வெளியான அட்டைப்படக் கட்டுரையில் Pariah's என்னும் சொல்லைக் கையாண்டிருந்தனர். தமிழகத்திலிருந்து தலித் அறிவுஜீவிகள், இயக்கங்கள், அக்கறையுடைய ஊடகங்கள் தெரிவித்த எதிர்ப்பினை ஒட்டி இருவாரங்கள் கழித்து இரண்டு மறுப்புக் கடிதங்களை வெளியிட்டிருந்தது. இதோடு சென்னையில் தன் கிளையைத் தொடங்கியுள்ள 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் தலைப்பாகவும் வாக்கியத்தில் இடம்பெறும் சொல்லாகவும் இதனைப் பலமுறை கையாண்டுவிட்டது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியாவின் நடுப்பக்கக் கட்டுரைத் தலைப்பிலும் (Nuclear Pariah No More) செப்டம்பர் 14ஆம்தேதி பக்கம் 13இல் வெளியாகியுள்ள From Pariah To Pasha a film journalist என்னும் தலைப்பிலும் பத்தாம் பக்கம் வெளியான செய்திக்கட்டுரை ஒன்றிலும் இப்பெயரைக் கையாண்டுள்ளது. இப்போது NDTV மீதும் இதே புகார் எழுந்துள்ளது. முன்பொருமுறை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை 'இண்டர்நேஷனல் பறையன்' என்று கூறிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிமீது இப்பெயரைப் பயன்படுத்தியதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு அகில இந்தியப் பிரச்சினையாக மாறியது. அப்போதே இச்சொல்லின் பொருள் குறித்த கவனம் ஏற்பட்டிருக்கிறது. SC / ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (1989) இச்சொல்லைப் பயன்படுத்துவது குற்றமாகும். இட ஒதுக்கீடு போன்றவற்றிற்கு எதிரான கொள்கையையுடைய வட இந்திய ஊடகங்கள் இச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை இயல்பானதாகப் பார்க்க இயலவில்லை. இந்நிலைமையை மாற்றப் பெரிய அளவிலான எதிர்ப்பு இருந்தாலொழிய வழியேதும் பிறக்காது. ஆனால் இதைக் குறித்துத் தமிழகத்தில் அரசியல்ரீதியான எதிர்வினைகள் மட்டுமல்ல அறிவுஜீவிகளின் எதிர்வினைகளும் இல்லையென்பதுதான் சூழலின் தேக்கத்தைக் காட்டுகிறது.
பறையன் (Pariahs) என்னும் சொல் தமிழகத்தின் பூர்வகுடியினரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதோடு, இந்திய அளவில் தீண்டப்படாத சாதியினரைக் குறிக்கும் பொதுச்சொல்லாகவும் சர்வதேச அளவில் விலக்கப்பட்டவர்களையும் ஏதாவதொரு வகையில் இழிவானவர்களைக் குறிக்கும் எதிர்மறைச் சொல்லாகவும் கையாளப்படுகிறது. விரிவான பொருளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் இச்சொல் தமிழிலிருந்து சென்றதாகும். தமிழில் புரிந்துகொள்ளப்படும் பொருளிலேயே எல்லா இடங்களிலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்பது உண்மையேயாயினும், பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் மோசமான பொருளைத் தரும் விதத்திலேயே கையாளப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். தமிழகத்தில் பறையன் என்னும் சொல்லின் பொருள் என்ன? சாதியா இனமா கருத்தா என்று தேடிப் பார்த்தால் இவை எல்லாவற்றோடும் தொடர்புடைய சொல்லாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தான் இப்பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினையை உள்ளடக்கிய சமூகப் பண்பாட்டுப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பிய மொழிகளுக்குள் நுழைந்து ஆங்கிலத்தில் அகராதிச் சொல்லாக மாறிவிட்டது இச்சொல். அதனால் சாதியடிப்படையைக் குறிக்கும் சொல் என்பதையறியாமலேயே உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய மொழிகளுக்குள் இச்சொல் சென்ற மூலத்தினைச் சரியாகக் கண்டுணர முடியவில்லை. போர்த்துக்கீசிய அல்லது பிரெஞ்சு மொழிவழியாக ஆங்கிலத்திற்குச் சென்றிருக்க வேண்டும் எனத் தோன்று கிறது. கி.பி 1613இல்தான் ஆங்கிலத்தில் இச்சொல் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்டது என்று கூறுகிறார் ரவிக்குமார் ('தலித்' பிப்ரவரி 2007). மேலும் பிரெஞ்சுப் புரட்சியின் 'பயங்கர'ங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்தியாவுக்கு ஓடிவந்து 1729 முதல் 1823 வரை தென்னிந்தியாவில் கிறித்துவ மதப் பிரச்சாரம் செய்த கிறித்துவப் பாதிரியாரான ஜே. ஏ. துபுவா (1770-1838) பறையர்களைக் குறித்த இழிவான சித்திரத்தோடு பறையன் என்னும் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதாக ராஜ்கௌதமன் கூறுகிறார். ('தலித்திய விமர்சனக் கட்டுரைகள்', பிப்ரவரி 2005, காலச்சுவடு) இதைக் குறித்து மேலும் அறிய ஐரோப்பியர்களின் பயணக் கட்டுரைகளையும் மிஷினரிகளின் குறிப்புகளையும் ஆவணக்காப்பகத்தின் ஆதாரங்களையும் ஆழமாகத் தேட வேண்டியிருந்தது. கி.பி 1498இல் இந்தியாவின் தென் பகுதியில் வந்திறங்கிய ஐரோப்பியர்களில் போர்த்துக்கீசியர்களின் அரசியல், சமய, பண்பாட்டு நடவடிக்கைகள் அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகள் இங்கிருந்தன. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் மொழியோடு, சாதிய அடுக்குகளின் சமூகப் பாத்திரத்தையும் கற்றுக்கொண்ட நொபிலி என்னும் மதபோதகர் அதன் அடிப்படையிலேயே மறைப்பணியினைச் செயல்படுத்தினார். சமூகத்தை மேலிருந்து கீழாக நோக்கும் அணுகுமுறை ஐரோப்பியர்களால் வரிந்துகொள்ளப்பட்டதும் இக்காலத்தில்தான். பறையன் என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளுக்குள் சென்றதை இப்பின்னணியில் வைத்துத் தேடவும் வாய்ப்பிருக்கிறது. இச்சூழலைப் பூரணமாக விவரிக்க முடியவில்லை என்றாலும் இக்காலத்திற்குப் பிறகே மேற்கத்திய அறிவுலகச் சட்டகமும் இலக்கியப் பிரதிகளும் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஐரீஷ் போராளிகளை இழிவுக்குள்ளாக்க இங்கிலாந்து இச்சொல்லைப் பெருமளவில் பயன்படுத்தியிருக்கிறது. அவை எல்லாவற்றையும் கடந்து இச்சொல்லின் வேர்ப்பாகுபாட்டைக் கற்பிக்கும் சாதியமைப்பையும் பாகுபடுத்தப்பட்ட சமூகம் குறித்த இழிவையும் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்பொழுது அதன் அர்த்தம் மறு உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வுடைய யாரும் இதனை மறுப்பதை ஏற்றுக்கொள்வர்.
ஐரோப்பிய மொழியில் இச்சொல் கொண்டுசெல்லப்பட்டமை தற்செயலானதாக இருக்க வாய்ப்பில்லை. பாகுபாட்டைக் கற்பித்து நிலவச் செய்வதால் பலன்பெறும் பிரிவினரே இச்சொல்லின் பரவலாக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இச்சொல்லை மிகவும் இழிவான பொருளில் இங்கு ஆதிக்க இந்து சாதியினர் பரப்பிவந்தனர் என்பதை அறிந்தால் மட்டுமே இத்தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும். இதன் பின்னணி குறித்துத் தேடுவது சாதி, தீண்டாமை குறித்த வேறுவகையான புரிதல்களை நமக்குத் தரக்கூடும். இதற்கான தேடலில் பயன்படும் ஒரே ஆதாரமாகக் கிடைப்பது அயோத்திதாசரின் எழுத்துகள்தாம். பறையன் என்னும் சொல்மீது இந்துக்கள் வெளிப்படுத்திய வெறுப்பு, இழிவான பொருளில் அச்சொல்லைப் பரப்பிய முறை குறித்து மிக விரிவாகவே அவர் எழுதியிருக்கிறார். பறை என்பது பெயர்ச்சொல் அல்ல. மாறாகப் புத்த தன்மத்தைப் பறைசாற்றும்-சாதிபேதமுள்ளோரின் உண்மைத் தோற்றத்தைப் பறைந்து சொல்லும் வினைச் சொல்லாகவும் பிறந்தது என்பது அவருடைய முதல் கருத்து.
பிராமணர், பறையர் ஆகிய சாதிகளுக்கிடையேயான முரண்களை ஏடுகளின் மூலமாகவும் வழக்காறுகள் மூலமாகவும் கண்டுகொண்ட அவர், அதற்கான காரணங்களையும் முரண்பாடு செயல்படும் வேறுதளங்களையும் தேடினார். சாதிபேதத்தின் அடிப்படையிலேயே இம்முரண்பாடு செயல்படுவதாகக் கருதிய அயோத்திதாசர், இம்முரண்பாட்டில் சாதிபேதத்தை ஏற்க மறுத்து, சாதியமைப்பிற்கு வெளியே நின்றவர்கள் தீண்டப்படாதார் ஆனார் என்று விளக்கினார். சாதியமைப்பு தோன்றுவதற்கு முன்னர் "இன்றைய இழிவுகளை”ச் சுமக்காதவர்களாய் இவர்கள் இருந்தனர் என்றும் சாதியமைப்பின் காலம் சில நூறாண்டுகளுக்கு உட்பட்டதே என்றும் சொன்னார். இதற்குப் பின்னரே தீண்டப்படாதார்மீது இழிவான சாதிப்பெயர்களையும் இழிதொழில்களையும் சுமத்தி அவையே நிலையானவை என்னும் கருத்துகளை ஓயாமல் பரப்பினர் என்றார். இந்தப் பரவலாக்கம் குறித்து அயோத்திதாசர் நுட்பமான பதிவுகளைத் தந்திருக்கிறார். முரண்பாடுடைய இவ்விரண்டு சாதிகளை எதிரெதிராக நிறுத்தி, பறையர் வகுப்பினரை இழிவாகவும் பிராமண வகுப்பினரை உயர்வாகவும் கற்பித்துக் கதைகளும் பாடல்களும் புனையப்பட்டுள்ளதை அவர் கண்டித்ததோடு அவற்றை மறுத்தும் எழுதினார். பாரதியாரின் கவிதைகளும் 'சுதேசமித்திர'னின் பதிவுகளும்கூட அவரால் இக்காரணத்திற்காகக் கண்டிக்கப்பட்டன. பறையன் என்னும் பெயர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப்படுவதினால் அச்சாதி குறித்த இழிவு, நிலைத்த உண்மையாகிவிடுகிறது என்னும் எச்சரிக்கை அவரிடமிருந்தததை இதனால் அறிய முடிகிறது. பாப்பார மயினா ஜ் பறை மயினா, பாப்பார காகம் ஜ் பறை காகம் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைத்தவர்கள் நாயைக் குறிக்கும்போது, பறை நாய் என்னும் சொல்லை மட்டும் உருவாக்கிவிட்டு இழிவாக இருக்குமெனக் கருதிப் பாப்பார நாய் என்னும் சொல்லை உருவாக்கவில்லை என்பதையும் சுட்டிச் சென்றுள்ளார்.
தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும் மற்ற அடித்தட்டுச் சாதிகளைவிடப் பறையர் எனப்படும் சாதியைக்கொண்டே அதிகமும் நிறுவப்பட்டுள்ளதை இச்சொல்லின் புழக்கமும் பரவலாக்கமும் காட்டுகின்றன. இவ்விரண்டு சாதியினரைக் கொண்டு அயோத்திதாசர் கூறிய விளக்கங்கள் பிற சான்றுகளாலும் நிறுவப்பட்டுள்ளன. பறையர்கள் குருமார்களாக இருக்கும் சிறுதெய்வக் கோயில்கள் பலவற்றை இன்றும் காண முடியும். அண்மைக்காலம்வரை திருவாரூர் கோவிலில் யானையேறும் பெரும்பறையன் என்னும் பெயரில் இச்சாதியாருக்கு இருந்துவந்த உரிமை பலருக்கும் தெரிந்ததுதான். பறையர்கள் குருமார்களாக இருந்தனர். அதுவே பிறகு, பிராமணர்களிடம் பெயர்ந்தது என்று ஜார்ஜ் எல். ஹார்ட் போன்றவர்களும் சொல்கிறார்கள். குருமார்களாக இருந்த பறையர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காகவே பிற்காலத்தில் குருமார்களான பிராமணர்களை இளமை பொருந்திய பார்ப்பு எனும் சொல்லின் அடியாகப் பார்ப்பான், பார்ப்பனர் என அழைத்தனர் என்கிறார் தொ. பரமசிவன். மேலும் தென்மாவட்டங்களில் பனம் பழத்தின் ஒரு முனையினைப் பார்ப்பான் முனை என்றும் மற்றொரு முனையைப் பறையன் முனை என்றும் கேலிசெய்து நகையாடும் வழக்கம் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ('பண்பாட்டு அசைவுகள்', காலச்சுவடு, பக். 180, 181) பனம் பழத்தின் முனைகளுள் சுவையற்ற பகுதியையே பறையன் முனை என்று அழைப்பதிலிருந்து அயோத்திதாசர் கூறும் இழிவு கருதும் அர்த்தம் தொக்கியிருப்பதை அறியலாம். "பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச் சாதியானான்” என்னும் பழமொழியும் தமிழகத்தில் பரவலாக வழக்கிலுள்ளது. பறையர் சாதி குறித்த இன்றைய இழிவாழ்வு என்றென்றைக்குமானதாக இருந்ததில்லை என்பதை இன்றைய கல்வெட்டுச் சான்றுகளும் ஆய்வாளர்களும் மெய்ப்பித்திருக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொண்டால்தான் அதன் பரவலாக்கத்திற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியும். மேலும் பறையர் சாதியாரை அடிப்படையாகக் கொண்டு சாதியமைப்பை ஆராயும் அயோத்திதாசரின் அணுகுமுறையைக்கூட இதன் பின்னணியில் புரிந்துகொள்ளலாம்.
இந்து வேதங்களையே இந்தியத் தத்துவங்களென நம்பி எழுதிய கர்னல் போலியர், ராபார்ட் சேம்பர், ஜெனரல் மார்ட்டீன், வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக் போன்ற ஐரோப்பிய அறிஞர்களை விமர்சித்து எழுதிய அயோத்திதாசர் இந்து உயர்சாதிப் பிராமணர்கள் கொடுத்த பொய்யான தகவல்களே இதற்குக் காரணம் என்றார். ஐரோப்பியர்களிடம் நெருக்கம் காட்டி வாழும் இப்பிராமணர்களால்தான் சாதி சார்ந்த பொய்களும் பரப்பப்படும் என்று அவர் கூறினார். இதற்கான சான்றுகளெனச் சிலவற்றை அவர் எடுத்துவைத்தார். அதாவது "சீவசெந்துகளின் மூலமாகவும் புராணங்களின் மூலமாகவும் கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச்செய்தது மட்டுமின்றி, ரெவரண்ட் ஜெ.பி ராட்லர் என்னும் துரை, அகராதி எழுதிய காலத்தில் அவருக்கு உதவியவர்கள் 13 வகையான பறையர்களின் பெயர்களோடு, இன்னுஞ் சில நூதனப் பெயர்களை வகுத்துப் புத்தகத்தில் பதியவைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தார்கள். ஆனால் பார்ப்பார்களில் இன்னின்ன பார்ப்பார்கள் என்று குறிப்பிடவில்லை” என்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் Tamil Lexicionஐ எழுதப் பயன்படுத்தப்பட்ட அகராதிகளில் ஒன்றான Rottler's Dictionary (1840) யையே அவர் இங்குக் குறிப்பிடுகிறார். பறையர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் சாதிய அநீதி குறித்துப் பிராமணர்கள் மூலம் ஐரோப்பியர்கள் அறிந்திருந்தார்கள் எனக் கூறும் அவர், 1853இல் ய. ஆரிங்டன் என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் சொல்லித் தந்த பிராமண ஆசிரியர்கள் பறையர்கள்மீது வஞ்சம் கொண்டு கூறியதையும் சான்றாக நிறுவுகிறார். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இங்கு ஐரோப்பிய ஆய்வாளர்களையும் மதபோதகர்களையும் அதிகாரிகளையும் இந்து உயர் சாதியினரின் இந்நடைமுறை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதன் விளைவாகவே அவர்களிடம் சாதி என்னும் கருத்தாக்கத்தைக் கொண்டு இந்தியச் சமூகத்தை மதிப்பிடும் ஓரியண்டலிசப் பார்வை உருவாகியிருக்கிறது. சான்றாக: அபே துபேய். இதையே தம் வார்த்தைகளில் விவரிக்கும் அயோத்திதாசர் "பின்புவந்து தோன்றிய துரை மக்கள் யாவரும் பெரிய சாதிகள் என்போர் வார்த்தைகளையே பெரிதென்றெண்ணிக் கொண்டு தாழ்ந்த சாதி என்றழைக்கப்பட்டார்களைத் தாழ்ந்தவர்கள் என்றே எண்ணிக்கொண்டும் தலையெடுக்கவிடாமலும் ஏழைகளை ஈடேற்றாமலும் விட்டு விட்டார்கள்” என்றார். அயோத்திதாசரால் பறையர் என்னும் சொல் பல்வேறு தளங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பரப்பப்படுவது குறித்து எழுதப்பட்டிருந்தாலும் ஆங்கில அகராதிச் சொல்லாக மாறியதைக் குறித்து நேரடியாகத் தகவலேதும் இல்லை. ஆனால் இச்சொல் பரப்பப்பட்டதற்கான அரசியலை அவரிடமிருந்து பெற முடிகிறது. சில நூறாண்டுகளுக்கு முன்பே இச்சொல் சார்ந்த அரசியல் தொடங்கிவிட்டது என்று அவர் கூறுவதைவைத்துப் பார்க்கும்பொழுது காலப்பொருத்தம் கிட்டுகிறது.
பறையன் என்னும் பெயரைச் சொல்லி எழுதுவது சட்டப்படி குற்றமாகும். சென்னையிலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் இப்போக்கு தொடர்வது நல்லதல்ல. ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் தமிழன் என்பதற்கான வரையறையாக Tamil Lexicion. Vol III 'பறையனொழிந்த தமிழ்ச்சாதியான்' என்றுதான் விளக்கம் அளித்தது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சாதாரண மக்களாலும் வசைச் சொல்லாக இது கையாளப்படுகிறது. இச்சொல் மட்டுமல்ல, சாதியை அடிப்படையாகக் கொண்ட எல்லாச் சொற்களும் அடையாளங்களும் இல்லாதொழிய வேண்டும். ஊடகங்களில் கையாளப்படும் பல்வேறு சொற்பிரயோகங்களும் கருத்துகளும் பழமையான சமூகத்தின் மரபுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. இப்போக்கு நீடிப்பது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆதிக்கத்திற்கு வலுசேர்க்கக் கூடியவையாக ஊடகங்களே இருக்கின்றன. கறுப்பின மக்களை நீக்ரோ என்று அழைத்துவந்த அமெரிக்கா கறுப்பினத்தவர்களின் கோரிக்கையை ஏற்று, "ஆப்ரோ அமெரிக்கர்கள்” என்றே அழைக்கிறது. இம்மாற்றத்திற்குக் கறுப்பின மக்களின் போராட்டமே அடிப்படைக் காரணமென்றாலும் அதனை ஏற்கும் மனநிலையை அமெரிக்க அரசும் ஊடகங்களும் பெற்றிருந்தன என்பது முக்கியமானதாகும். மதச் சார்பின்மை, சனநாயகம் குறித்து ஓயாமல் முழங்கும் நம் சூழலில் இந்தச் சுரணை ஏனில்லை?