செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம்
நான் மட்டும் ஒரு கவிஞனாக இருந்தால், ஐந்து விரல்களின் அற்புதத்தைப் பற்றிக் கவிதை பாடுவேன்... கைகளின் வழி அறிவுக்குக் கல்வி புகட்ட வேண்டும். தங்கள் கைகளைப் பயிற்றுவிக்காதவர்களின் ... வாழ்வில் இசையில்லை. அவர்களது அனைத்துத் திறமைகளும் வளர்க்கப்படுவதில்லை. வெறும் புத்தக அறிவு குழந்தைக்கு ஆர்வமிக்கதாக இல்லை. வெறும் வார்த்தைகளால் மூளை களைப்படைந்து விடுகிறது; குழந்தையின் கவனம் சிதறத்தொடங்குகிறது ...
- மகாத்மா காந்தி, 1939
குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி, செயல்வழியிலேயே (activity based) நடைபெற வேண்டுமென்பது பல காலமாகக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பெரும்பாலான நாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படைக் கோட்பாடாகும். மான்டிஸோரி முறை போன்ற புகழ்பெற்ற போதனா முறைகள் இந்தக் கோட்பாட்டையே வலியுறுத்துகின்றன. மகாத்மா காந்தி இதற்கும் ஒரு படி மேலே போய், குழந்தைகள் செயல்வழி மட்டுமின்றி, உழைப்புவழிக் கற்க வேண்டுமென்றார். ஆனால் இந்திய அனுபவத்தில், தொலைநோக்குப் பார்வையுடைய சில கல்வியாளர்களின் கனவில் பிறந்த சிறிய மாற்றுப் பள்ளிகளிலேயே செயல்வழிக் கற்றல் வெற்றி