கொல்லும் அதிகாரம்
மரண தண்டனைக்கு எதிரான இந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பியுசிஎல் அமைப்பினருக்கும் இங்கே வந்திருப் பவர்களுக்கும் வணக்கம். இந்தியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவது பற்றிச் சிறப்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள விக்ரம் ஜிட் பத்ராவுக்கும் சுரேஷ், நாகசைலா ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதுபோல 1998ஆம் ஆண்டு பியுசிஎல் சார்பில் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தைப் பாண்டிச்சேரியில் இருந்து நாங்கள் முன்னெடுத்தோம். அப்போது நான் பாண்டிச்சேரி பியுசிஎல்லின் தலைவராக இருந்தேன். அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் இருபத்தாறு பேருக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்தச் சமயத்தில் இலக்கிய மாநாடு ஒன்றில் கட்டுரை வாசிப்பதற்காக ஹைதராபாத் சென்ற நான், அங்கே திரு. பாலகோபால் அவர்களைச் சந்தித்துத் தேசிய அளவில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். ஆந்திராவில் சிலுக்கலூரிபேட் என்ற இடத்தில் பேருந்து ஒன்றை எரித்துப் பலபேர் ம