இசை நினைவுகள்
சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது? மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் 'கிளாக் டவர்' என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஏற்கெனவே மங்கலாக எரியும் தெரு விளக்குகளுக்குப் பாவாடை போன்றதைப் பொருத்தி வெளிச்சமே தெரியாது செய்துவிட்டார்கள். காரணம், ஜப்பான் எந்த நேரமும் எந்த இடத்திலும் குண்டு வீசக்கூடும்.
மார்க்கெட் தெருவில் முதல் ஐம்பது அடிகளுக்கு இருபக்கமும் கடைகள். அதன் பிறகு வீடுகள்தான். கடிகாரத் தூண் அருகே ஒரு ஹால் இருந்தது. அது மஹபூப் காலேஜைச் சேர்ந்தது. அங்கே எப்போதாவது உரை நிகழ்த்தப்படும்.
ஜம்ஷட் ஹால், மார்க்கெட் தெருவில் வீடுகளுக்கு நடுவே இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு நீலவண்ணம் அடித்திருப்பார்கள். கீழே என்ன இருந்தது என்று தெரியாது.