காலச்சுவடு: 30 - 300
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையும், நாகர்கோவில் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து 2026 ஜூலை 22 அன்று சிறப்புக் கருத்தரங்கை நடத்தின. பிஷப் ஹீபர் கல்லூரியின் அறுபதாம் ஆண்டு, காலச்சுவடு பதிப்பகத்தின் முப்பதாம் ஆண்டு, காலச்சுவடு இதழின் முந்நூறாவது இதழ் நிறைவு ஆகியவை முன்னிட்டு நடைபெற்ற இக்கருத்தரங்கு தமிழ் அறிவுலகில் காலச்சுவடு உருவாக்கிய தடத்தை மீளாய்வு செய்யும் அரங்காக அமைந்தது. கல்வி, தலித்தியம், பாரதியியல், புலம்பெயர் இலக்கியம், சிறுபான்மையினர் இலக்கியம் ஆகிய துறைகளில் காலச்சுவடு ஆற்றிய பங்களிப்பை மையமாகக் கொண்டு அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
கருத்தரங்கிற்குக் கல்லூரி முதல்வர் ஜா. பிரின்சி மெர்லின் தலைமை வகித்தார். இணையவழிக் கற்றல் விரிவடைந்துள்ள சூழலிலும், வாசிப்பும் நேரடி அறிவுசார் உரையாடல்களும் தவிர்க்க முடியாதவை என்பதை வலியுறுத்திய அவர், தகவல் சேகரிப்பைக் கடந்து, சிந்தனையை வளர்க்கும் செயல்முறையாக கல்வி இருக்க வேண்டும் என்றார்.
வரவேற்புரையாற்றிய தமிழ்த்துறைத் தலைவர் பா. இராஜ்குமார், கடந்த முப்பது ஆண்டுகளில் காலச்சுவடு பதிப்பகமும் இதழும் விமர்சன மனப்பான்மையை வளர்த்தல், புதிய ஆய்வுகளை ஊக்குவித்தல், அறிவுலகிற்கும் பதிப்புலகிற்கும் இடையே உரையாடலை உருவாக்குதல் ஆகிய தளங்களில் தொடர்ந்து செயல்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
தொடக்கவுரையாற்றிய பதிப்பாளர் ம. கேசவன், காலச்சுவடின் வரலாற்றுப் பயணத்தைச் சுருக்கமாக நினைவுபடுத்தினார்.
அறிமுகவுரையாற்றிய ர. மனோஜ்குமார், சுந்தர ராமசாமியின் ‘சவால்’ கவிதையை வாசித்துக் காட்டினார். படைப்பிலக்கியம் வெறும் அழகியல் அனுபவமல்ல; வாழ்க்கை நெருக்கடிகளைக் கடந்து செல்லும் மனவலிமையையும் உருவாக்கும் என்பதைக் குறிப்பிட்டு, தனக்குப் பல தருணங்களில் அக்கவிதை மீட்சியை அளித்துள்ளதாகப் பகிர்ந்துகொண்டார்.
முதல் அமர்வில், ‘உயர்கல்வியும் காலச்சுவடும்’ என்ற தலைப்பில் பெருமாள்முருகன் உரையாற்றினார். காலச்சுவடு கடந்த மூன்று தசாப்தங்களில் கல்வி குறித்துப் பதிவுசெய்த விவாதங்களை மீளப்பார்க்கும் முயற்சியாக அது அமைந்தது. பள்ளிக் கல்வியின் தேர்ச்சி விகிதம், தரம் போன்றவை பொதுவெளியில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன; ஆனால் உயர்கல்வியின் கட்டமைப்புச் சிக்கல்கள் அதே அளவில் கவனிக்கப்படுவதில்லை என்ற குறிப்பிலிருந்து தனது உரையைத் தொடங்கினார். பொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, கல்வியின் உலகமயமாக்கல் ஆகிய கேள்விகளைத் தொடர்ந்து விவாதத்திற்கு உட்படுத்தியதன் மூலம், கல்வியை நிர்வாகத் துறையின் பிரச்சினையாக அல்லாமல் சமூக நீதி, மொழி, சமத்துவத்தோடு தொடர்புடைய பொதுக் கேள்வியாகக் காலச்சுவடு மாற்றியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். ராமானுஜத்தின் ‘கல்வி உலகமயமாக்கலின் பேராபத்து’ கட்டுரை, வசந்திதேவி – சுந்தர ராமசாமி உரையாடல், ‘சக்தி பிறக்கும் கல்வி’, ‘முந்தி இருப்பச் செயல்’ போன்ற நூல்கள் இந்த விவாதத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். ‘மயிர்தான் பிரச்சினையா?’, ‘காதல் சரி என்றால் சாதி தப்பு’, ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’, ‘எங்கள் ஐயா’ உள்ளிட்ட தன் நூல்களும் கல்வி நிறுவனங்களை விமர்சனப் பார்வையில் அணுகும் முயற்சிகளாகக் காலச்சுவடு வழியாக வெளிவந்துள்ளன. கல்விப்புலம் சார்ந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட காலச்சுவடு எப்போதும் தயாராகவே இருக்கிறது என்றார்.
இரண்டாம் அமர்வில் ‘தலித்தியத்திற்குக் காலச்சுவடின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஸ்டாலின் ராஜாங்கம், தலித் அரசியல், தலித் இலக்கிய வளர்ச்சியில் காலச்சுவடு வகித்த இடத்தை வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கினார். ஆசிரியர் குழுவில் தலித் பிரதிநிதித்துவம், தலையங்கங்களில் சாதி ஒடுக்குமுறை குறித்த விவாதங்கள், தலித் சிறப்பிதழ்கள், தலித் எழுத்தாளர் படைப்புகள், சமூக அரசியல் விமர்சனங்கள், அஞ்சலிக் கட்டுரைகள் ஆகியவற்றின் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவங்களைத் தமிழ் அறிவுலகின் மைய விவாதமாக மாற்றிய பதிப்பகமாகக் காலச்சுவடு செயல்பட்டிருப்பதை விமர்சனப் பாங்கோடு எடுத்துக்காட்டினார். தலித்தியம் ஒரு இலக்கியப் பிரிவாக மட்டுமல்ல; சமூக மாற்றத்தின் மொழியாக உருவாகியதில் காலச்சுவடு ஆற்றிய பங்களிப்பை அவரது உரை வலியுறுத்தியது.
அதே அமர்வில் ‘பாரதியியலுக்குக் காலச்சுவடின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஜெ. சுடர்விழி, மகாகவி பாரதியைப் பற்றிய ஆய்வுகளில் காலச்சுவடு உருவாக்கிய புதிய அணுகுமுறைகளைப் பேசினார். பாரதியின் படைப்புகள், புதிய ஆய்வுகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டதன் மூலம் பாரதியியல் ஆய்வுக்கு விரிவான அறிவுத் தளத்தை அது உருவாக்கியிருப்பதாக அவர் மதிப்பிட்டார்.
பிற்பகல் அமர்வில் ‘காலச்சுவடும் நானும்’ என்ற தலைப்பில் பழ. அதியமான், காலச்சுவடுடனான தனது நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். மாற்றுக் கருத்துகளைப் பதிவுசெய்வதிலும், கருத்து வேறுபாடுகளை உரையாடலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதிலும் காலச்சுவடு கடைப்பிடித்த திறந்த அறிவுப் பண்பாட்டை நினைவுபடுத்தினார். தமிழ் இனி 2000 நிகழ்வு அரங்கினுள் மாற்றுக் கருத்தாளர்களின் துண்டறிக்கைகளை விநியோகிக்க அனுமதித்த நிகழ்வையும், வைக்கம் போராட்டம் நூலை விலையடக்கப் பதிப்பாக வெளியிட்ட முயற்சியையும் எடுத்துக்காட்டி, கருத்துச் சுதந்திரத்தையும் சமூகப்பொறுப்பையும் இணைத்த பதிப்பக மரபை காலச்சுவடு உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
‘புலம்பெயர் இலக்கியக் கவனமும் காலச்சுவடும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தெ. வெற்றிச்செல்வன், தன் முனைவர் பட்ட ஆய்விற்கு முதன்மை ஆதாரங்களைக் கொடுத்துதவிய சுந்தர ராமசாமிக்கு நன்றி நவிலும் வாய்ப்பாக இந்நிகழ்வைக் கருதுகிறேன் என்றார். உலகத் தமிழர்களின் அனுபவங்களைத் தமிழ்ச் சிந்தனையின் ஒரு பகுதியாக மாற்றியதில் காலச்சுவடு ஆற்றிய பங்களிப்பை விளக்கினார். காலச்சுவடு புலம்பெயர் இலக்கியத்தை வெறும் இடம்பெயர்வுப் பதிவாக அல்லாமல், அடையாளம், நினைவு, மொழி, பண்பாட்டு மாற்றம், அரசியல் ஆகிய பரிமாணங்களுடன் அணுகியிருப்பதை எடுத்துரைத்தார். உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை வெளியிட்டதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியதுடன், புதிய ஆய்வுக் களங்களையும் காலச்சுவடு திறந்துவைத்துள்ளது என்றார்.
‘காலச்சுவடில் சிறுபான்மையினர் குரல்’ என்ற தலைப்பில் நிறைவு உரையாற்றிய ரமீஸ் பிலாலி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினரின் அனுபவங்கள் காலச்சுவடில் எங்ஙனம் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன என்பதை விளக்கினார். ஜனநாயகச் சமூகத்தின் அடிப்படை நிபந்தனை பன்முகக் குரல்களின் இருப்பும் அவற்றுக்கான உரையாடல் வெளியும் என்பதால், சிறுபான்மையினரின் வாழ்க்கை, உரிமைகள், அரசியல், பண்பாட்டு அனுபவங்களை விவாதத்திற்குக் கொண்டுவந்த இதழாக காலச்சுவடு திகழ்கிறது என்றார். தமிழ் அறிவுலகில் கருத்துப் பன்மையையும் ஜனநாயக உரையாடலையும் உறுதிப்படுத்திய இதழ் காலச்சுவடு என்று அவர் மதிப்பிட்டார்.
உரைகளைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி – பதில் அமர்வில், திருச்சியின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்ட பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் பங்கேற்பு, காலச்சுவடு உருவாக்கியுள்ள வாசிப்பு – விவாத மரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்தியது. பங்கேற்பாளர்களுக்குக் கல்லூரி சார்பாக சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டன. காலச்சுவடு அறக்கட்டளை சார்பில், 2021 ஆகஸ்டு மாத காலச்சுவடு இதழும் அரவிந்தன் எழுதிய ‘உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்’ நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சா. சாம் கிதியோன் நன்றியுரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் க. பாலின் பிரித்தா ஜெபசெல்வி நிகழ்ச்சியைச் செவ்வனே தொகுத்து வழங்கினார். போட்டோ காலங்கள் நண்பர்கள் நிகழ்வை ஆவணப்படுத்தினர்
இந்நிகழ்வு கடந்த முப்பதாண்டுகளில் தமிழ் அறிவுலகில் உருவான சிந்தனை மாற்றங்களை மீளாய்வு செய்யும் அறிவார்ந்த அரங்காக அமைந்தது. .
க. திருமூர்த்தி: முனைவர்பட்ட ஆய்வாளர், திருச்சி.
மின்னஞ்சல்: thirumoorthisuthi@gmail.com
