அழகிரிசாமியும் மாதொருபாகனும்
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 21.07.2026 அன்று மதியம் ‘மூவி கிளப்’பும் அலர் வெளியீடும் இணைந்து ‘ஆவணப்படம் திரையிடல், நூல் அறிமுக நிகழ்வுகளை நடத்தின. விரிவாக்கப்புல முதன்மையர் ஆனந்த கிதியோன் தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து ‘கொலக்கால் திரிகை’ என்ற கு. அழகிரிசாமி ஆவணப்படத் திரையிடலும் ‘கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்’ நூல் அறிமுக நிகழ்வும் நடைபெற்றன.
கரிசல் வட்டாரத்தில் கோவில்பட்டிக்கு அருகே அமைந்த ‘இடைச்செவல்’ கிராமத்தில் பிறந்தவர் கு. அழகிரிசாமி. அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் படைப்பாளுமையையும் வெளிப்படுத்தும் விதமாக ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மனைவி சீதாலட்சுமி, உறவினர்கள், கி. ராஜநாராயணன், தி.க. சிவசங்கரன், வெளி ரங்கராஜன், சா. கந்தசாமி, அசோகமித்திரன், வண்ணநிலவன், ம.ரா, போ. குருசாமி, ஆ. மாதவன், பிரபஞ்சன், தமிழச்சி தங்கபாண்டியன், நீல. பத்மநாபன், ஜெயமோகன், கோணங்கி ஆகியோரது நெகிழ்ச்சியான அனுபவப் பகிர்வுகளின்வழி அழகிரிசாமியின் வாழ்க்கைச் சித்திரங்கள் உருப்பெற்றிருந்தன. இடைச்செவல் கிராமமும் அவரது வீடும் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றுவதற்குப் பின்னணி இசை துணைபுரிந்தது.
படத்தில் கி.ரா.வின் விவரிப்புகள் சிலாகிக்கும்படி இருந்தன. வண்டிச் சக்கரத்திலிருந்து விழுந்து இடது கையை வீணாக்கிக்கொண்டது, அதனால் படிப்பு, எழுத்துகளில் கவனத்தைத் திருப்பிக்கொண்டது, சங்கீத ரசனை, எழுத்துப் பணிகள், இதழ்ப் பணிகள், ஊர்சுற்றல்கள், இலக்கிய அரட்டைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
ஆரம்பத்தில் கவிஞராகவே எழுத்துலகில் பிரவேசித்துள்ளார். தெலுங்குக் கீர்த்தனைகளை உடனுக்குடன் தமிழ்ப்படுத்திப் பாடுவதில் கெட்டிக்காரராக இருந்தார். அதேபோல், அவர் கண்கள் ஆங்கிலச் சொற்களைக் காணும்போதே வாய் தமிழாக மொழிந்துவிடும். டி.கே.சி.யுடனான நட்பு அவருக்கு உற்சாகம் தந்தது என்றார்.
கு. அழகிரிசாமியின் வாழ்க்கை சற்று வித்தியாசமான அனுபவங்கள் உடையது. அவரது வலக்கையின் வன்மைக்கு இடக்கை வழிவிட்டது என்றே சொல்ல வேண்டும். “அங்கயீனம் இல்லாமலிருந்திருந்தால் எழுத்துத்துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை” என்று அவரது முரட்டுத்தனத்தை கி.ரா. குறிப்பிடுகிறார். வறுமை, குடும்பச்சூழல் முதலிய பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எழுந்த அவரது எழுத்துகள் வாசகர்களுக்குப் படிப்பினைகளைத் தருவது போலவே, வாழ்ந்த வாழ்க்கையும் பல படிப்பினைகளைத் தருகின்றது. இன்னும் வாழ்ந்திருந்தால் நிறைய எழுதியிருப்பார் என்றும் பலர் தெரிவித்துள்ளனர். ஒன்றரை மணிநேரப் படம் முடிந்ததும் இயக்குநரும் அழகிரிசாமியின் மகனுமான அ. சாரங்கராஜன் தம் உரையைக் கலந்துரையாடல்போல அமைத்துக்கொண்டார். இந்த ஆவணபடம் 2011 முதல் 2022 வரை சிறிதுசிறிதாகப் படமாக்கப்பட்டு 2023இல் வெளியிடப்பட்டது என்று தனது அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்ததாக ‘கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்’ (2026) நூல் குறித்து அதன் பதிப்பாசிரியர் பழ. அதியமான் அறிமுக உரை ஆற்றினார். நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாட்குறிப்புகள் நூலாக வெளியாவது இதுவே முதல்முறை. 1951 - 1970 காலகட்டத்தில் எழுத்தபட்ட நாட்குறிப்புகளின் தொகுப்பு சுமார் 1400 பக்க அளவில் வெளிவந்துள்ளது.
அதியமான், கு. அழகிரிசாமியின் சிறுகதைகள், கட்டுரைகளைத் தொடர்ந்து, இப்போது நாட்குறிப்புகளைப் பதிப்பித்துள்ளார். அந்த ஆழமான பரிச்சயம் அவரது உரையில் வெளிப்பட்டது. ஒரு எழுத்தாளரை முழுமையாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அரிய செயலை அதியமான் செம்மையாகச் செய்துள்ளார்.
மரபிலக்கியமும் நவீன இலக்கியமும் நன்கு தெரிந்த சிலரில் கு. அழகிரிசாமி முக்கியமானவர்; கம்பர் மீதும் கம்பராமாயணத்தின் மீதும் அளவுகடந்த பக்தி வைத்திருந்தார். யுத்தகாண்டம் தவிர, மற்றைய பகுதிகளைத் தானே சிறப்பாகப் பதிப்பித்துள்ளார் மாக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய் முதலான உலக எழுத்தாளர்களின் படைப்புகளை அழகிரிசாமி தேடிப்பிடித்து வாசித்தார். அவரது மொழிபெயர்ப்புகளும் ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ நூலில் உள்ள கட்டுரைகளும் அவரது பரந்த வாசிப்பின் விளைவுகள் என்று அதியமான் குறிப்பிட்டார்.
அழகிரிசாமியின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நாட்குறிப்புகளில் இலக்கியத்தன்மையோடு வெளிப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். ‘காதல் காலம்’ என்ற பகுதியில் அவர் காதல் திருமணம் செய்துகொள்ளும்போது ஏற்பட்ட சாதிப் பிரச்சினைகளை மிக அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார். மனைவி சீதாலட்சுமியின் நாட்குறிப்புகளும் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டிருப்பது குறித்தும் அதியமான் விவரித்தார். இந்நிகழ்வின் மூலம் கு. அழகிரிசாமியின் ஆளுமைச் சித்திரம் சிறப்பாக வெளிப்பட்டது. ‘மூவி கிளப்’ ஒருங்கிணைப்பாளர் நவசக்திவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பெருமாள்முருகன், பா. மதிவாணன், க. காசிமாரியப்பன், அலர் வெளியீடு கேசவன், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டனர்.
21.07.2026 அன்று மாலை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நூலகத்தில் திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் சார்பாக, ‘மாதொருபாகன் நூல் அறிமுகமும் நூலாசிரியர் சந்திப்பும்’ நிகழ்வு நடைபெற்றது. நூலகர் ஜெ. ஞானப்பிரசாத் வரவேற்புரை வழங்கினார். ஆங்கிலத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வி க. ராகவி, ‘மாதொருபாக’னின் ஆங்கில மொழிபெயர்ப்பான ONE PART WOMAN பற்றி உரையாற்றினார். காலனியம், கிராமப்புறச் சூழலியல், நாட்டுப்புறப் பண்பாடு, திருவிழாக்கள், உலகளாவிய பண்பாட்டு ஒற்றுமைகள் குறித்து ஆங்கிலத்தில் விளக்கக்காட்சிகளுடன் உரையாற்றினார். இந்நாவல் குறித்துச் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட கருத்துகள் குறித்தும் விவாதித்தார்.
நிறப்பிரிகைக் குழு தலைவர் கிராமியன் ‘மாதொருபாகன்’ நூல் திறனாய்வுரை வழங்கினார். நாவலின் காலகட்டத்தில் இருந்த ஆணாதிக்கக் கூறுகளை அடிப்படையாக வைத்து தன் ஆய்வுரையை நிகழ்த்தினார். அவரது உரை பெண்ணியம், பெரியாரியம் முதலிய பார்வைகளின்வழி நாவலை அணுகியதாக இருந்தது. ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஷீயா பிரின்சஸ் பேசும்போது, ‘மாதொருபாகன்’ சாயலில் இருக்கும் பிற இந்திய மொழிப் படைப்புகளைச் சுட்டிக்காட்டினார்.
‘மாதொருபாகன்’ நாவலில் இருந்த கலைத்தன்மை, குறியீடுகள் குறித்து பழ. அதியமான், பா. மதிவாணன், க. காசிமாரியப்பன், சாம் கிதியோன், இரா.இராஜா எனப் பலர் விவரித்துப் பேசினார்கள். ‘கள்’ பற்றியும், அது அன்றைய மக்களிடம் எப்படியெல்லாம் நுகரப்பட்டது என்ற பகுதிகளைக் குறிப்பிட்டுப் பேசினர். அதேபோல், மாதொருபாகன் தொன்மத்தைக் கொண்டு ஆண்-பெண் துய்ப்பு குறித்தும் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். வாசகர் வட்டத்திற்கு வந்திருந்த பேராசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.
நிறைவாக, நூலாசிரியர் பெருமாள்முருகன் வாசகர்களின் புதுமையான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார். ‘மாதொருபாகன்’ பிரச்சினை நடந்த காலகட்டத்தில், தமக்குத் துணைநின்ற காலச்சுவடு பதிப்பகம், எழுத்தாளர் சங்கம், நண்பர்கள், வாசகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். அதன்பின், இந்நாவல் குறித்துவந்த ஆய்வுகளைக் குறிப்பிட்டார். நிறைவாக, சாம் கிதியோன் நன்றி தெரிவித்தார்.
மா. ஸ்ரீபிரசன்னா: முனைவர்பட்ட ஆய்வாளர், திருச்சி.
மின்னஞ்சல்: sriprasanna364@gmail.com
•••
‘அறிஞர் போற்றுதும்’ விருதுகள்

எஸ்.ஆர்.வி. பள்ளிகள் வழங்கும் 2026ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர்கள் கி. விட்டல்ராவுக்கும் பாவண்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய விருதுகள் கவிஞர் க. மோகனரங்கன், மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமார், கவிஞர் இளம்பிறை ஆகியோருக்கும் சமூகநோக்கு விருது மருத்துவர் சு. அனுரத்னாவுக்கும் வழங்கப்பட உள்ளன. படைப்பூக்கத் தமிழ் விருது கவிஞர் இசை, எழுத்தாளர் அசதா, கவிஞர் பொன்முகலி ஆகியோருக்கும், சிறார் தமிழ் விருது எழுத்தாளர் சாலை செல்வத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெறும் படைப்பாளிகள் அனைவருக்கும் காலச்சுவடின் வாழ்த்துக்கள்!
