பெண்களுக்கு மறுக்கப்படும் ஹமார்ஷியா

சிதைந்த பிம்பம்
(நாடகம்)
கிரீஷ் கார்னாட்
தமிழில்: பாவண்ணன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1
பக். 64
ரூ.. 60
“ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக உருவாக்கப்படுகிறார்” என்கிறார் சிமோன் த பொவா. ஆண் மயப் பார்வையில் கட்டமைக்கப்படும் பெண் கதாபாத்திரங்களில் எங்கோ எப்படியோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக்கொண்டு தெரியும். முடிவுகளை நோக்கி நகர்த்தும் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் உண்மையில் பெண்கள் அப்படிச் சித்தரிக்கப்படுவதைத்தான் விரும்புகிறார்களா என்று கேட்டால், இல்லை.
ஆண்களைப் போலவே பெண்களும் இயல்பாகவே தீமைக்கு ஆட்படுவதை விரும்புகிறார்கள். எவ்வித நன்னெறி விழுமியங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக ‘நான் இப்படித் தான்’ என்று வாழ்வதுதான் பெண்களின் தேர்வும்கூட.
ஹமார்ஷியா என்ற சொல் இலக்கியவாதிகளுக்கு மிகவும் பரிச்சயமான சொல்தான். காவிய நாயகனின் வீழ்ச்சிக்குக் காரணமான குணம் ஒன்று அவனிடம் இருக்கும். அதுதான் ஹமார்ஷியா (Tragic Flaw). தர்மத்தால் வீழ்ந்தான் தர்மன், தற்பெருமையால் வீழ்ந்தான் லியர் மன்னன், பேராசையால் வீழ்ந்தான் மேக்பத், பொறாமையால் வீழ்ந்தான் ஒதெல்லோ, இருமைத் தடுமாற்றத்தால் வீழ்ந்தான் ஹேம்லட். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், வீழ்ந்தாலும் இவர்கள் கதாநாயகர்கள்தான். காவியங்கள் அவர்களைக் கொண்டாடத்தான் செய்தன. நாமும். எவ்வளவு பெரிய சுதந்திரம் அது. தீயவனாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் காவியங்கள் கொண்டாடும் தலைவனாகவும் இருக்கலாம். பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தச் சுதந்திரம் வெகு சில இலக்கியப் படைப்புகளில் மட்டுமே காணக் கிடைக்கும் அரிய விஷயம். கதாநாயகியின் ஹமார்ஷியா பற்றி இலக்கியங்கள் பெரிதாகப் பொருட் படுத்தாத நிலையே நெடுங்காலம் இருந்துவந்தது.
பெண்களை எழுதுவது எளிது. பெண் உளவியலை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. அதைத் திறம்பட தன் நாடகங்களில் செயல்படுத்திக் காட்டியவர் கார்னாட். ‘உடைந்த பிம்பம்’ (ஒடகலு பிம்பா) நாடகத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களின் உரையாடல் அதற்குச் சான்று. உடல்நலமில்லாத தங்கையின் எழுத்துத் திறமையை எவ்விதக் குற்றவுணர்வுமின்றித் தன் திறமையாக வெளிக்காட்டிக்கொள்ளும் கதாநாயகி, அதை நியாயப்படுத்த அவள் பட்டியலிடும் காரணங்கள், அவளுடன் உரையாடும் உருவம் (அவள் தங்கை) எழுப்பும் கேள்விகள், அவளுடைய நிறைவேறாத வேட்கை, பழியுணர்வு என்று நாடகம் முழுவதும் பெண் உளவியல் துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. நாடகம் அதன் உச்சத்தை நோக்கி நகர்கையில் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக்கொள்வது கிட்டத்தட்ட ஓர் அறிவார்ந்த உளவியல் கலந்தாய்வைப் போலக் கட்டமைத்திருப்பார் கார்னாட். பொதுவாக இத்தகைய உரையாடல்கள், இரண்டு ஆண்களுக்கிடையே நடக்கும் அல்லது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும். (ஆண் சொல்லும் இடத்திலும் பெண் கேட்கும் இடத்திலும் இருப்பாள்.) ஆனால் இந்த நாடகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுமே பெண் குரல்கள். இருவரும் இருத்தலியல் சிக்கல் பற்றிப் பேசுகிறார்கள், பிராய்டியன் ஆழ்மனம் பற்றிப் பேசுகிறார்கள், நார்ஸிஸம் பற்றிப் பேசுகிறார்கள், ரொமாண்டிக் இலக்கியம், ரஷ்ய இலக்கியம், விலகல் அடையாளக் கோளாறு பற்றிப் பேசுகிறார்கள், ழாக் தெரிதாவின் கட்டமைப்பு நீக்கக் கோட்பாட்டைப் பற்றிப் பேசுகிறார்கள்.
உடலுழைப்புத் தேவைப்படும் இடங்களில் பெண்கள் அதிகளவில் இருப்பதும், அறிவியக்கச் செயல்பாடுகளிலும் முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் ஆண்கள் அதிகளவிலும் சலுகை அடிப்படையில் ஒன்றிரண்டு பெண்களும் இருப்பதைப் பார்த்துப் பழகிப்போன நமக்கு இந்த நாடகத்தின் மொத்தக் குரலுமே பெண்களுடையதாக இருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. நாடகத்தின் ஆண் கதாபாத்திரம் நிஜத்திற்கு மிக நெருக்கமாகப் படைக்கப்பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவன் எப்போதும் இருக்கிறான், இருப்பான்; அவனாகவே; எவ்வித மாற்றத்திற்கும் இடங்கொடாமல். இதில் ஆறுதலான விஷயம், இந்த நாடகத்தில் பெண்களும் அப்படியே இருக்கிறார்கள், பிம்பங்கள் உடைந்த பின்பும் முகத்திரைகள் கிழிந்த பின்பும் தங்கள் தீமைகளோடு, எவ்வித உள நெருக்கடிக்கும் ஆளாகாமல் அப்படியே இருக்கிறார்கள்.
