புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா

பெருமாள்முருகன், சுகுமாரன், சு. தியடோர் பாஸ்கரன்
பெங்களூரு புக் பிரம்மா இலக்கியத் திருவிழா கடந்த மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களில் செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரிய வளாகத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் எனத் தென்னிந்திய மொழிகளில் எழுதும் மூத்தப் படைப்பாளிகளில் தொடங்கி இளம் படைப்பாளிகள் வரை பலரும் கலந்துகொள்ளும் பெரும் நிகழ்வாக அமைந்தது. இதில் மொத்தம் ஒன்பது அரங்குகளில் பல்வேறு அமர்வுகள், நூல் வெளியீடுகள், மூத்த படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்கள், கவிதையரங்குகள் என்று தேர்ந்த திட்டமிடலோடு நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.
முதல் நாள் காலை பத்து மணிக்கு முதன்மை அரங்கில் புக் பிரம்மா இயக்குநர் சதீஷ் சப்பரிகே அனைவரையும் வரவேற்றார். பின்பு நடைபெற்ற முதல் அமர்வில் ‘மொழியியல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் ஓ.எல். நாகபூஷண சுவாமி, எம்.எஸ். ஆஷாதேவி, என்.எஸ். மாதவன், கேசவ் குகா ஆகியோர் பங்கேற்றனர். இதில் நமது தாய்மொழியில் ஆங்கிலத்தின் தாக்கம் குறித்து விவாதித்தனர். அடுத்து ‘முகாமுகி’ அரங்கில் கவிஞர் சுகுமாரனிடம் வாசகர்களின் கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. அதில் அவருடைய கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் சார்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ‘நாட்டார் கதைகளும் சமூக வரலாறும்’ என்ற அமர்வில் இரா. காமராசு, அ. கலையரசி, என். ராமச்சந்திரன், என். வடிவேலன் ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் “மன்னர்களின் காலவரிசைகள் மட்டுமே வரலாறாகக் கொள்ள முடியாது; சமூகத்தின் ஆழ்மனப் பிரதிபலிப்புகளான வாய்மொழிக் கதைகள் வழியே இடைவெளிகளை நிரப்பும்போதே அது பூரணத்துவம் பெறுகிறது” என்று இரா. காமராசு தன் பார்வையை வெளிப்படுத்தினார்.
அடுத்த அரங்கில் ‘நவீனக் கவிதை: மாறிவரும் அழகியல்’ அமர்வை க. மோகனரங்கன் ஒருங்கிணைத்தார். இதில் கண்டராதித்தன் இளம் கவிஞர்களைப் பற்றியும், சம்யுக்தா மாயா கவிதையின் மாற்றங்கள் பற்றியும், பூவிதழ் உமேஷ் கவிதைகளில் செய்யப்படும் வடிவப் பரிசோதனைகள் குறித்தும் பேசினார்கள். அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு அரங்குகளில் அமர்வுகள் நடைபெற்றன. ஒன்றில் யுவன் சந்திரசேகர் வாசகர்களோடு உரையாடும் அமர்வும், மற்றொன்றில் ‘என்னைக் கவர்ந்த புத்தகங்களின் வாசிப்பனுபவம்’ என்ற தலைப்பில் பழனி கிருஷ்ணசாமி, ரமேஷ் கல்யாண், சவிதா, தி. சிவக்குமார் உரையாற்றினார்கள். ‘பொயட்ரீ’ அரங்கில் கவிஞர் ரத்னா வெங்கட் கவிதை குறித்து உரையாடினார்.
பிற்பகல் இரண்டு மணிக்கு சு. இராசாராம் தொகுத்து, காலச்சுவடு வெளியிட்ட ‘பதிப்புப் பரிமாணங்கள்’ நூல் வெளியீடு நடைபெற்றது. இந்நூலை எழுத்தாளர் பெருமாள்முருகன் வெளியிட்டு நூல் குறித்து விரிவாகப் பேசினார். எழுத்தாளர் அ. முனவர்கான் நூலைப் பெற்றுக்கொண்டு, காலச்சுவடில் வெளியான பதிப்பு சார்ந்த கட்டுரைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார்.
அடுத்து நடைபெற்ற ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பு (‘Repo Inko Roje’) வெளியீட்டு நிகழ்வில் காலச்சுவடு கண்ணன், சுகுமாரன், தெலுங்கு எழுத்தாளர் பண்டி நாராயணசுவாமி ஆகியோர் கலந்துகொண்டனர். பண்டி நாராயணசுவாமியின் உற்சாகமான பேச்சிலும், நாவலின் சிறப்புகளை அவர் விவரித்த விதத்திலும் இந்த நாவல் தெலுங்கு வாசகர்களிடையே மிகக் கவனம் பெறும் என அறிய முடிந்தது.
பிற்பகல் நான்கு மணிக்குப் பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியீடு நடைபெற்றது. இதில் வாசகர் கேள்வி நேரத்தில் சுஜாதா செல்வராஜ், “பூனாச்சி என்பது ஆடு தானா அல்லது பெண்ணைக் குறிக்கிறதா,” என்று கேட்டார். அதற்குப் பெருமாள்முருகன், “இக்கேள்வியை நான் பல இடங்களிலும் எதிர்கொள்கிறேன்; அது ஆடா அல்லது பெண்ணா என்பது வாசிப்பவர்களின் புரிதலுக்கே விட்டுவிடப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். பூனாச்சி ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடப் பல பதிப்பகங்கள் போட்டியிட்டதாகவும் கண்ணன் அதன் உரிமையை ஏலத்தில் விட்டதாகவும் கூறினார்.
இரண்டாம் நாள் காலை அமர்வுகள் ‘மண்டபா’ அரங்கில் உஸ்தாத் ரஃபீக் கான், உஸ்தாத் ஷஃபீக் கான் ஆகியோரின் சித்தார் ஜுகல்பந்தி இசையோடு தொடங்கின. காலை பதினோரு மணிக்கு அதே முதன்மை அரங்கில் பென்யாமின், பெருமாள்முருகன், இமையம் ஆகியோர் பங்கேற்ற ‘புனைவெழுத்துக் கலை’ அமர்வு நடைபெற்றது. அதே நேரத்தில் மற்றொரு அரங்கில் ‘எனது நாவல்கள்: கனவு நனவான கதை’ என்ற தலைப்பில் எம். கோபாலகிருஷ்ணன், என். ஸ்ரீராம், மு. குலசேகரன், அரிசங்கர் முதலான எழுத்தாளர்கள் தங்கள் நாவல் உருவான விதத்தை விவரித்தனர்.
என். ஸ்ரீராம் தன் ‘இரவோடி’ நாவல் குடுகுடுப்பைக் காரர்களின் வாழ்க்கைமுறை, அவர்களுடைய வரலாற்றுத் தொன்மங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பின்னணியில் உருவான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். மு. குலசேகரன் ‘தங்க நகைப் பாதை’ நாவல் குறித்துப் பேசும்போது, தன்னுடைய தந்தைக்குச் சிறுநிலம் இருந்ததாகவும், அதை அவர் எவ்வாறு நேசித்தார் என்றும், சாலை விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்ட வலிகளையும் ஒரு மூதாட்டியின் பார்வையில் எழுதியிருப்பதாகக் கூறினார். நாவலின் மையம் இதுதான் என்றாலும் பல துணைக் கதாபாத்திரங்கள் மூலம் சாலை விரிவாக்கம் எத்தனை விதமான நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது என்று எழுதியிருப்பதாகவும் சொன்னார். அடுத்து எம். கோபாலகிருஷ்ணன், தன் ‘வேங்கை வனம்’ நாவல் உருவான விதத்தைக் குறிப்பிட்டார். ராஜஸ்தானில் புகழ்பெற்ற ரந்தம்பூர் சரணாலயத்தில் ‘மச்சிலி’ என்ற புலியைப் பற்றித் தான் அறிந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு முதலில் சிறுகதையாக எழுதத் தொடங்கிப் பின்னர் நாவலாக மாறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
எழுத்தாளர் அரிசங்கர் தன் ‘பாரிஸ்’ நாவல் ‘இரட்டைக் குடியுரிமை உள்ள பெண்’, நெருங்கிய நண்பன் போதைப்பொருள் பழக்கத்தால் அடைந்த மரணம் ஆகிய பின்னணியில் எழுதப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், பாண்டிச்சேரி என்பது பாண்டிச்சேரி நகரம் மட்டுமல்லாமல் மாஹே, ஏனம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும், மாஹே கேரளக் கலாச்சாரத்தையும் ஏனம் ஆந்திரக் கலாச்சாரத்தையும் கொண்டிருப்பதால், இவற்றை மையமாக வைத்து ஒரு முப்பகுதி நாவல் (Trilogy) எழுதத் திட்டமிட்டதாகவும் குறிப்பிட்டார். அதன்படி ‘பாரி’ஸுக்கு அடுத்து ‘மாகே கஃபே’ நாவல் வெளிவந்திருப்பதாகவும், மூன்றாவது நாவல் விரைவில் வரவிருப்பதாகவும் கூறினார்.
அடுத்த அமர்வில் தமிழில் பயண இலக்கியம் என்ற தலைப்பில் கடற்கரய், கந்தசுப்ரமணியம், சிவபிரசாத், இராயகிரி சங்கர், தங்கமணி ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் ஜெயமோகனின் ‘அருகர்களின் பாதை’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ ஆகிய இரண்டு பயண நூல்கள் குறித்து சிவபிரசாத் பேசினார். ராயகிரி சங்கர் ராம்தம் தங்கத்தின் நூல் பற்றியும் தங்கமணி கி.சி. திலீபன் நூல் குறித்தும் பேசினர். அடுத்துப் பேசிய கடற்கரய், தமிழில் வெளிவந்துள்ள பயண இலக்கியங்களின் வரலாற்றைப் பேசி, 1887ஆம் ஆண்டு வெளியான கபிஸ்தலம் துரைசாமி மூப்பனார் (ஜி.கே. வாசனின் தாத்தா) எழுதிய ‘கங்கா யாத்ரா ப்ராவகம்’ என்ற முக்கியமான நூலுக்கு இன்னும் மறுபதிப்பு வரவில்லை என்றார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் கந்தசுப்ரமணியம், கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ‘கலிங்கப் பயணம்’ நூல் குறித்துப் பேசினார். கலிங்கத்துப் பரணியின் வரலாற்றுச் செய்திகளையும், இன்றைய ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியனார் கோவில் உள்ளிட்ட வரலாற்று இடங்களையும் மகுடேஸ்வரன் விவரித்த விதத்தைக் குறிப்பிட்டார். அதே வேளையில், “இந்நூல் முழுவதும் தனியாகப் பயணம் செய்தது போன்ற தொனியிலேயே எழுதப்பட்டு, இறுதியில் நண்பர்களோடு சென்றதாக முடிவது வாசகர்களுக்குச் சிறிய ஏமாற்றத்தைத் தருகிறது” என்ற விமர்சனத்தையும் நேர்மையாகப் பதிவுசெய்தார்.

கவிதை அரங்கில் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கயல் மாணவர்களுடன் நவீனக் கவிதைகள் குறித்து உரையாடினார். ‘அனாவரணா’ அரங்கில் ஜெயமோகனின் ‘பத்து லட்சம் காலடிகள்’ (‘Ten Million Foot steps’) என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ஐஸ்வர்யா ஜெயமோகனுடன் நூல் குறித்துச் சுவாரசியமாக உரையாடினார். அந்த உரையாடலின்போது, “இந்தத் தொகுப்பின் கதைகளில் வரும் ஓய்வுபெற்ற சி.ஐ.டி. அதிகாரி ‘ஔசேப்பச்சன்’ கதாபாத்திரம் யாரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு உருவாக்கப்பட்டது,” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயமோகன், “என் நண்பரும் பிரபல மலையாள எழுத்தாளருமான பால் சக்கரியா தான் அந்தக் கதாபாத்திரத்திற்கான இன்ஸ்பிரேஷன்” என்று கூறினார். தான் அவரைப் பற்றி எழுதியது போலவே, பால் சக்கரியாவும் தன் வாழ்க்கையை மையப்படுத்தி இரண்டு சிறுகதைகள் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ‘பொயட்ரீ’ அரங்கில் கவிஞரும் எழுத்தாளருமான யுவன் சந்திரசேகரின் கவிதை சார்ந்த உரையாடல் நடைபெற்றது.
‘மொழிபெயர்ப்பு அனுபவங்கள்’ என்ற அமர்வில் மொழிபெயர்ப்பாளர்கள் கயல், சு.ஆ. வெங்கட சுப்பராய நாயகர், சித்தார்த்தன் சுந்தரம், அக்களூர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். இதில் “மூலப் படைப்பிலிருந்து பிறழாமல் இரு தரப்பையும் திருப்தி செய்வது மொழி பெயர்ப்பாளரின் மாபெரும் சவால்” என்று சு.ஆ. வெங்கட சுப்பராய நாயகர் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது.
பிற்பகல் மூன்று மணிக்கு ‘முகாமுகி’ அரங்கில் பெருமாள்முருகனின் உரையாடல் நிகழ்வு நடை பெற்றது. இதில் அவரிடம் மொழிபெயர்ப்பு சார்ந்த பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தி பெரும் வியப்பளித்தது; இதுவரை அவருடைய இருபத்தோரு நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இரவு ஏழு மணிக்கு கன்னடத் திரைப்படம் ‘டைகர்ஸ் பாண்ட்’ (Tiger’s Pond) திரையிடப்பட்டது. இதைப் பிரபல கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி தயாரிக்க, நடேஷ் ஹெக்டே இயக்கியுள்ளார்.
புக் பிரம்மா இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, ‘மண்டபா’ அரங்கில் அனிருத் ஐத்தல் குழுவினரின் மனதை வருடும் இந்துஸ்தானி இசையோடு தொடங்கியது. கச்சேரி முடிந்ததும் அதே அரங்கில் காலை பத்து மணிக்கு பால் சக்கரியா, இந்திரா சந்திரசேகர், கண்ணன், கனிஷ்கா குப்தா, ஸ்வேதா எர்ரம் ஆகியோர் பங்கேற்று இந்திய இலக்கியங்களின் உலகளாவிய மொழிபெயர்ப்புச் சாத்தியக்கூறுகள் குறித்து உரையாடினர். தொடர்ந்து டி.எம். கிருஷ்ணா பங்கேற்ற ‘வீ தி பீப்பிள் ஆப் இந்தியா’ நூல் குறித்த அமர்வும், மல்லிகா பிரசாத்தின் நாடக உலக அனுபவங்கள் குறித்த கலந்துரையாடலும் இருந்தன.
பிற்பகல் ஒரு மணிக்கு ‘மதனா’ அரங்கில் பி. திருச்செந்தாழை, சுஜாதா செல்வராஜ், சுஷீல் குமார், எம். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற ‘புதிய தமிழ்ச் சிறுகதைகளின் போக்குகள்’ அமர்வு நடைபெற்றது. நவீன தமிழ்ச் சிறுகதைகளில் வெளிப்படும் புதிய களங்கள், மொழியாட்சி, பொருண்மைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. திருச்செந்தாழை பேசும்போது, “முழுக்க ஆண்களால் நிர்வகிக்கப்படுகின்ற வணிகச் சூழலில் ஒரு பெண் வரும்போது ஏற்படும் அதிர்ச்சியும் குழப்பமும் அதிகாரமும் எனக்குப் புதிதாக இருந்தது; அந்த அனுபவத்தையே கதையாக எழுதினேன்” என்று குறிப்பிட்டார். சுஜாதா செல்வராஜ், “பெண்களால் மட்டுமே எழுத முடியும் என்ற விஷயங்கள் பல இருக்கின்றன; அதை இப்போது எழுதவரும் பெண்கள் நுட்பமாக எழுதுகிறார்கள்” என்று பல பெண் எழுத்தாளர்களின் கதைகளைச் சுட்டிக்காட்டினார். சுஷீல் குமார் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டார வழக்குகளைப் பற்றியும், இப்போது எழுதும் எழுத்தாளர்களில் யார் யார் எந்தெந்த வட்டார மொழிகளில் கதை எழுதுகிறார்கள் என்பது குறித்தும் விவரித்தார்.
அதே நேரத்தில் ‘அனாவரணா’ அரங்கில் காலச்சுவடு வெளியீடாகப் பெருமாள்முருகன், தங்கமணி, பழனி கிருஷ்ணசுவாமி பங்கேற்ற ‘சோரகவி மரபு’ குறித்த உரையாடலும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தியடோர் பாஸ்கரனின் ‘இது நம் சினிமா’ நூல் குறித்த அறிமுக அமர்வில் சுகுமாரன், பெருமாள்முருகன் ஆகியோரின் உரையாடல்களும் இடம்பெற்றன. அடுத்து ஜெயமோகனின் ‘தி டாட்டர் ஆப் குமரி’ நூல் வெளியீடு நடைபெற்றது. இதில் ஜெயமோகனோடு மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா ராமச்சந்திரன் நாவல் எழுதப்பட்ட விதம் குறித்து உரையாடினார்.
‘அக்ஷரா’ அரங்கில் ‘நூல்கள் வழியாகத் தமிழக நகரங்களின் வரலாற்றுத் தடங்கள்’ என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் சேலத்தைப் பற்றி குமாரநந்தனும், திருநெல்வேலி குறித்து ஜா. ராஜகோபாலனும், தேனியைப் பற்றி விஜயானந்தலக்ஷ்மியும், தஞ்சாவூர் குறித்து மணிமாறனும் பேசினார்கள். இந்த அமர்வை ராஜகோபாலன் கேள்வி-பதில் அமர்வாக மாற்றிக்கொண்டது பொருத்தமாக இருந்தது. பேச்சாளர்கள் தங்கள் நகரங்களின் வரலாற்றுப் பின்னணிகளையும் அவை நூல்களில் பதிவாகியுள்ள முறையையும் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ‘அயல்மொழிக் கவிதைகள்’ அமர்வை அனுராதா ஆனந்த் ஒருங்கிணைக்க, முனைவர் கான், ஆனந்த்குமார், இரா. கவியரசு ஆகியோர் விவாதித்தனர்.
மாலையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘ஆளாண்டாப்பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி பயர் பேர்ட்’ நாவலுக்குப் புக் பிரம்மா விருது வழங்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு மேல் கர்நாடகத்தின் தொன்மை வாய்ந்த கலையான ‘யட்சகானம்’ நிகழ்வு நடைபெற்றது.
தென்னிந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்பாளிகள் ஒரே தளத்தில் கைகோத்து, தத்தம் படைப்புலகம் குறித்து விரிவாகப் பேசிய, இந்த இலக்கியத் திருவிழா மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது. பல மொழி இலக்கியங்களை உரையாடச் செய்யும் இத்தகைய பிரம்மாண்டமான முன்னெடுப்பை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய புக் பிரம்மா அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
மின்னஞ்சல்: sivaprasath29@gmail.com
