அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026) பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு

பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு

அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
ஷாலினி பிரியதர்ஷினி

‘உண்மை உங்களை விடுவிக்கும். ஆனால், அதற்குமுன் பலவிதங்களில் நோகடிக்கும்.’

                                                                                                                       - க்ளோரியா ஸ்டெய்னம்

சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் காலங்காலமாக நடந்துகொண்டு தானிருக்கின்றன. அந்த மாற்றங்களைச் சாத்தியப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது ஒருபுறமிருக்க வெகு சிலர் மட்டும் அந்த மாற்றமாகவே வாழ்ந்துகாட்டுவார்கள். க்ளோரியா அப்படிப்பட்டவர். (க்ளோரியா ஸ்டெய்னம் என்ற ஆளுமையை அறிமுகப்படுத்தியதற்காக என் பள்ளி நூலகருக்கு, இன்றுவரையும் மனத்தில் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.)

“நீங்கள் (ஆணோ பெண்ணோ) பெண்ணியவாதியாக இல்லையென்றால், இந்த உலகத்தை ஒற்றைக் கண்ணால் மட்டுமே பார்க்கிறீர்கள் என்று பொருள். இரண்டு கண்களால் பார்க்கும்போது மட்டுமே உலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்” என்ற க்ளோரியாவின் வார்த்தைகளை யாரால் மறுக்க முடியும்? யாரால் மறக்க முடியும்?

1960களில் தொடங்கி 1980கள் வரை தொடர்ந்த இரண்டாம் அலை பெண்ணி யத்தின் முன்னோடிகளில் ஒருவர் க்ளோரியா ஸ்டெய்னம். பணியிடங்களில் பெண்களுக்குச் சம ஊதியம், பாலினச் சமத்துவம், குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் சமத்துவம், மகப்பேறு உரிமைகளான கருத்தடை உரிமை, குழந்தைப் பெற்றுக்கொள்ளும் உரிமை, பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்களை நிறுத்துதல் ஆகியவை இவ்வலையின் முக்கியமான அம்சங்களாக இருந்தன. மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமையும் தைரியமும் க்ளோரியாவிடம் இயல்பாகவே இருந்தன. இதழியல் துறையில் ஈடுபாடு கொண்டு நியூயார்க்கில் கால்பதித்த அவர், சில நாட்களிலேயே தன் வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டார். இதழியலாளராகவும் சமூகப் புரட்சியாளராகவும் பெண்ணிய ஒருங்கிணைப்பாளராகவும் (தன்னை அவர் அப்படித்தான் அடையாளப்படுத்திக் கொண்டார்.) அவர் முன்னெடுத்த ஒவ்வொரு விஷயமும் எந்தவொரு சாதாரண மனிதரும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் விஷயமல்ல.

கல்லூரிப் படிப்பின் பகுதியாகச் சில ஆண்டுகள் இந்தியா வந்திருந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் பெண்ணியக் கோட்பாடுகளின்பால் ஈர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணங்களாயின. இந்தியாவில் பெண்ணியம் ஒரு தலைமையின் கீழ் மட்டும் இயங்கவில்லை. வலிமையான போராட்டங்களை முன்னெடுத்த கூட்டுச் செயல்பாடாகவே இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் ஈடுபாடு அவரை மிகவும் கவர்ந்ததாகவும் தன் சொந்த நாட்டில்கூடப் பெண்கள் இவ்வளவு துணிச்சலுடன் வீதியில் இறங்கிப் போராடியதில்லை என்றும் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். பொது இடங்களில் பெண்கள் கூடிப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உந்துதல் இந்தியப் பெண்களின் போராட்டங்களிருந்தே பிறந்தது. இரண்டு வருடங்கள் இந்தியாவில் இருந்துவிட்டு நியூயார்க் திரும்பிய ஸ்டெய்னமிற்குத் தனது பெண்ணிய லட்சியத்தைக் குறித்த தெளிவு வந்திருந்தது.

எல்லாத் துறைகளிலும் நிலவும் பாலினப் பாகுபாடு அன்றைய பத்திரிகைத் துறையிலும் நிலவியது. பெண் எடிட்டர்களுக்கென்று சில துறைகளே ஒதுக்கப்பட்டன. பேஷன், ஒப்பனை, சமையற்கலை போன்ற மென்மையான விஷயங்களே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் க்ளோரியா ஸ்டெய்னமின் செயல் பத்திரிகைத் துறையின் பார்வையை மட்டுமல்ல மொத்த உலகத்தின் பார்வையையும் அவர் பக்கம் திருப்பியது. 1963இல், 28 வயதே ஆன க்ளோரியா, ப்ளேபாய் பத்திரிகை நடத்திய நியூயார்க் ப்ளேபாய் கிளப்பிற்குள் அண்டர் கவர் ஏஜெண்டாக ரகசியப்பணி ஒன்றை மேற்கொண்டார். பதினொரு நாட்கள் அவரும் அவ்வுணவகத்தில் ‘பன்னி’ (Bunny)யாக வேலை செய்தார். விருந்தினர்களுக்கு உணவும் மதுபானங்களும் பரிமாறும் பெண் ஊழியர்களுக்கு ‘பன்னி’ என்று பெயர். அவர்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்களையும், விருந்தினர்களை மகிழ்விக்கும் பொருட்டு அவர்களுடைய ஆடை வடிவமைப்பில் வெளிப்பட்ட மிதமிஞ்சிய கவர்ச்சியையும், நீண்ட நேரம் ஹைஹீல்ஸ் அணிந்து நிற்க வேண்டிய பணிச்சூழலையும் அம்பலப்படுத்தி ஸ்டெய்னம் எழுதிய ‘A Bunny’s Tale’ என்ற கட்டுரை ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘ப்ளேபாய்’ நிறுவனம் அவர் வைத்த குற்றச்சாட்டுகளை எவ்வளவோ மறுக்க முயன்று இறுதியில் தோற்றது. அந்தத் துணிச்சலுக்காக க்ளோரியா எவ்வளவு பாராட்டுகளைப் பெற்றாரோ அதே அளவு கடும் விமர்சனங்களுக்கும் ஆளானார். இருப்பினும், அந்த அனுபவம் அவரிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரணப் பெண்கள், பெரிய அதிகார அமைப்புகளால் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்ததால்தான் பெண்ணியத்தின் முதன்மையான குரலாக அவரால் மாற முடிந்தது.

1971இல் நியூயார்க் பத்திரிகையின் இணைப்பிதழாக வெளியான Ms. என்ற பத்திரிகையை தனது நெருங்கிய தோழியும் பெண்ணிய ஒருங்கிணைப்பாளருமான டாரதி பிட்மேன் ஹியூஸ், பேட்ரிஷியா கார்பின் ஆகியோருடன் இணைந்து தொடங்கினார். வெளியான சில நாட்களில் மூன்று லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அடுத்த சில வாரங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்தது. அடுத்த வருடமே தனிப் பத்திரிகையாக Ms. வரத் தொடங்கியது.

1950களில் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே கருக்கலைப்பை அனுமதித்தது அமெரிக்கச் சட்டம். வேறு காரணங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண் குற்றவாளி என்றும் வரையறுத்தது. 22ஆவது வயதில் தான் செய்துகொண்ட கருக்கலைப்பைப் பற்றி வெளிப்படையாக ஒரு தேவாலயக் கூட்டத்தில் பேசினார் க்ளோரியா. “முதன்முதலாக நான் பெண்ணியவாதியாக உணர்ந்தது அப்போதுதான்” என்று நியூயார்க் பத்திரிகையில் குறிப்பிட்டவர், “ஆண்களுக்குக் கருத்தரிக்கும் உடற்கூறு இருந்திருந்தால், கருக்கலைப்பு புனிதச் சடங்காகி இருக்கும்” என்று தன்னிடம் யாரோ சொன்னதையும் அப்போது நினைவுகூர்ந்தார். பெண்ணின் அந்தரங்கம் என்று ஒதுக்கப்படுபவற்றின் பின்னால் இருக்கும் அரசியல் அதிகாரத்தை வெளிச்சமிட்டுக் காட்டினார். Ms. பத்திரிகையின் முதல் இதழில் ‘நாங்கள் கருக்கலைப்புச் செய்திருக்கிறோம்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், ஸ்டெய்னம், பில்லி ஜீன் கிங், சூஸன் சொன்டாக், அனைஸ் நின், நோரா எஃப்ரான் போன்ற பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

பெண்ணியம் பெண் உரிமைகளையும் பெண் விடுதலையையும் பெண்கள் மட்டுமே பேசும் கருத்தியல் அல்ல, பெண்ணியம் பெண்ணைச் சமமான மனிதராகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் கருத்தியல். சமூகப் படிநிலையில் ஆண் முதன்மையானவன் என்ற கட்டமைப்பைத் தகர்த்து ஆண், பெண் இருவருமே சமமானவர்கள் என்ற கருத்தியலின் மீது கட்டமைக்கப்படுவதே பெண்ணியம் என்று க்ளோரியா நம்பினார். பெண் ஆணைச் சார்ந்தே வாழ்வது ஆண்களுக்கும் பெருஞ்சுமைதானே. ஆண்களும் பெண்ணைச் சார்ந்து வாழ்பவர்கள்தான் என்ற புரிதலும் முக்கியமானது. சார்ந்து வாழும் சௌகரியம் ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வார் க்ளோரியா.

அரசியல் வேறுபாடுகள் தனிநபர் காழ்ப்புணர்வாகவும் வெறுப்பாகவும் எளிதில் மாறிவிடக்கூடிய ஓர் இயக்கத்தில், க்ளோரியா எதிர்ப்புகளையும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றைத் திறம்படக் கையாளும் பக்குவத்தோடு இருந்தார். தன் கருத்தியலோடு இசையாத இளம் பெண்ணியவாதிகளின் செயல்பாடுகளையும் வரவேற்று அவர்களுடன் சேர்ந்து இயங்கினார்.

அடிப்படையில் பெண்ணியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் க்ளோரியா பன்முக ஆளுமையாக இருந்தார். இதழியலாளராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் அரசியல் ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். “எழுதும்போது மட்டும்தான் வேறு ஏதாவது செய்திருக்கலாமோ என்ற எண்ணத்திற்கு ஆட்படாமல் இருக்கிறேன்” என்ற க்ளோரியாவின் வார்த்தைகளை முன்பு எப்போதோ என் நாட்குறிப்பில் எழுதி வைத்ததாக நினைவு. ‘As if Women Matter’, ‘The Truth Will Set You Free; But First It Will Piss You Off!’, ‘Outrageous Acts and Everyday Rebellions’ஆகியவை சுயமரியாதையையும் பெண் விடுதலையையும் மையப்படுத்தி க்ளோரியா எழுதிய முக்கியமான புத்தகங்கள். ‘An Unexpected Life’ என்ற தலைப்பில் அவருடைய நினைவுக்குறிப்பு நூல் வெளியாகவிருக்கிறது.

க்ளோரியா ஸ்டெய்னம் தன்னை மட்டுமே பெண்ணியத் தலைவராக முன்னிறுத்திக்கொள்ளவில்லை. பெண்கள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதோடு அதற்கான முன்னெடுப்புகளும் செய்தார். தாய்மை, குடும்பத்தைப் பேணுதல், வீட்டு வேலை ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளாகவும் சுதந்திரம், ஆதிக்கம், அரசியல் பொருளாதார அதிகாரம் போன்றவை ஆண்களுக்கு உரியவையாகவும் இருப்பது ஏன் என்ற முக்கியமான கேள்வியை க்ளோரியா எழுப்பினார்.

தனது 66வது வயதில் திருமணம் செய்துகொண்ட க்ளோரியா, மூன்று முறை காதல் வயப்பட்டதையும் ஒளிவுமறைவின்றி கூறினார். தான் விரும்பியபடி தன் வாழ்வை வடிவமைத்துக்கொள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதுதான் க்ளோரியாவின் வாழ்விலிருந்து நாம் பெறும் செய்தி. “ஆண்களுக்காகச் சமைக்காமலும் உணவு சமைக்க முடியும்” என்ற க்ளோரியாவின் கூற்று மிகப் பிரபலமானது. அமெரிக்காவின் உயரிய விருது (பிரெசிடெண்ட்ஸ் அவார்ட்) அவருக்கு வழங்கப்பட்டபோது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இக்கூற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

பொன்னிற ஃப்ரேம் கொண்ட ஏவியேட்டர் கண்ணாடி வழியாக உலகைப் பார்த்த க்ளோரியா ஸ்டெய்னமிற்கு ஆணாதிக்கத்தின் வேர்களை அசைத்துப்பார்ப்பதற்குச் சத்தமான கோஷங்கள் தேவைப்படவில்லை. நிதானமான குரலுடன் அமைதியான புரட்சியை அரங்கேற்றும் தலைமைப் பண்பு அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது. புரட்சி தீவிரமும் வன்முறையும் கலந்தது என்ற பார்வையை மாற்றி, புரட்சி மனிதர்களிடையே நிகழும் ஆற்றல் பகிர்வு என்றும் ஒருவர் கையை மற்றொருவர் ஆதுரமாகப் பற்றிக்கொண்டு முன்னேறுவதுதான் புரட்சி என்றும் முன்பின் தெரியாதவர்களுடன் இணையும் சகோதரத்துவமே புரட்சி என்றும் நிரூபித்துக் காட்டியவர் க்ளோரியா ஸ்டெய்னம். உண்மையின் வலிமைகொண்டு கட்டமைக்கப்படுவதே புரட்சி, வெற்றுக் கூச்சல்களால் அல்ல என்று வாழ்ந்து காட்டியவர். அவரை நினைவுகூர்வது ஒரு பெண்ணியத் தலைவரை நினைவுகூர்வது மட்டுமல்ல. அவரைப் போலவே வரலாற்றின் பக்கங்களில் தன் பெயரை எழுதுவதற்காகப் புறப்பட்டுள்ள பல பெண்களின் வாழ்க்கைப் பயணங்களை அங்கீகரிப்பதாகும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.