கடிதங்கள்
காலச்சுவடு செப்டம்பர் 2026 இதழில் ‘தவெக அரசின் 100 நாள்கள்’ தலையங்கம் நேர்மையாகவும் நடுநிலையோடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூற்றவும் இல்லை, தூக்கிப் பிடிக்கவும் இல்லை. தனது செயல்பாடுகளைப் பொறுத்து அக்கட்சி நீடித்திருக்கும்.
ஜி. ஜவஹரின் ‘வன்கெட்டு’ கடலோரக் கிறிஸ்தவக் கிராமத்தைப் பற்றிய மிகச் சிறப்பான கதை. கிறிஸ்தவ மதத்தினரின் நுணுக்கமான சாதி மேலாதிக்க நடைமுறைகள் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கிறிஸ்தவக் கிராமங்களில் சாமி சிலைகளைச் சப்பரத்தில் வைப்பதுமுதல் கல்லறை உரிமைகள் வரை பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை விரட்டுவதற்குச் சாட்டையோடு மீட்பர் இன்னும் வரவில்லை. கதையில் நிறைய பரதவர் வழக்குச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழக்குச் சொல்லுக்கும் பொருளை அடைப்புக்குறிக்குள் அல்லது அதே பக்கத்தின் கீழ் அடிப்பகுதியில் கொடுத்திருந்தால் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் நன்றாக இருந்திருக்கும். பக்கம் 37இல் ‘செடிக்குத்தம்’ பொருள் குறிக்கப்படவில்லை.
வி. சகாயராஜா
திண்டுக்கல்
***
‘தவெகவின் நூறு நாள்கள்’ தலையங்கம் படித்தேன்.
ஆட்சியாளர்கள் மக்களின் சேவகர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் பரந்த மனப்பான்மையுடன் நாட்டு மக்களின் தேவை அறிந்து செயல்படுவது நல்லது. சுற்றுச்சூழல் சார்ந்து இயற்கை வளங்கள் பாதிக்கப்படாமல் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் கவனம் செலுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கடந்த காலங்களில் கட்டமைக்கப்பட்டவற்றை இன்னும் மேம்படுத்திப் புதிய திட்டங்களை ஏற்படுத்தலாம். ஆளும்கட்சி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சியை மக்களின் நலன் உள்ளிட்டவற்றை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் புதிய அரசு காப்பாற்றுமா என்பதை வருகின்ற காலகட்டங்களில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வைத்து மக்கள் முடிவு செய்வார்கள்.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
***
இடஒதுக்கீடு என்பதற்கு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்பதே சரியான சொல்லாக இருக்கும். பெரும்பாலும் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகே அதன் முழுமையான சாதகபாதகங்களை அறிந்துகொள்ள முடியும். அவ்வகையில் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அனுபவ அறிவின் வழி எடுத்துரைத்துத் தீர்வையும் தந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மக்களின் பொருளாதார நிலையை அரசாங்கங்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
அதன்படி தரவரிசைப் பட்டியலையும் வெளியிடலாம். அரசாங்கங்கள் இதனை நடைமுறைப்படுத்தினால் உண்மையான பிரதிநிதித்துவமற்றவர்கள் முழுவதும் பயன்பெறுவார்கள். அரசாங்கத்தின் காதுகளுக்கு இவ்விசயம் எட்டுமா, அப்படி எட்டினாலும் இதற்குச் செவிசாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அஞ்சலிக் கட்டுரைகளின் வழி பல்வேறு ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை காலச்சுவடு ஒவ்வொரு இதழும் வழங்குகிறது. அவ்வகையில் ‘வைகறை’ என்ற மனிதரைத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் போகிற போக்கில் ‘தமிழ் படித்து வீணாகிப் போனார்’ என்று எழுதியது ஏனென்று தெரியவில்லை. வந்தே மாதரம் பாடலை முன்னிலைப்படுத்துவதற்குப் பின்னாலுள்ள அரசியலைத் தெளிவாக எடுத்துரைத்த மலையாளக் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்ட காலச்சுவடுக்கு நன்றிகள்.
சி. சு. ஜெகன்நாதன்
பெங்களூரு
***
இளைஞர்களைக் கரப்பான் பூச்சி என்று தலைமை நீதிபதி வர்ணித்ததற்கு அமெரிக்கா வாழ் அபிஜித் தீப்கே கொதித்தது ஏன்? இவரால் மட்டும் மாபெரும் கூட்டத்தை அமெரிக்காவிலிருந்தே திடீரெனத் திரட்ட முடிந்தது எப்படி? இது இளைஞர்களின் எழுச்சி என்றால் புஸ்வானம்போலப் பொசுக்கென உடனே அடங்கியது ஏன்?
தலைமை நீதிபதியின் கருத்து தவறென்றால் வழக்குத் தொடுத்து வருத்தம் தெரிவிக்கக் கோருவதே அறிவுடைமை. அதை விடுத்துக் கரப்பான் பூச்சிகள் சம்பந்தமே இல்லாமல் மோடி எதிர்ப்பு, நீட் ஆதரவு, இஸ்லாமிய - பாகிஸ்தானிய ஆதரவுக் கோஷங்கள் என்று தடம் மாறியது ஏன்? தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டும்தான் இவர்கள் நோக்கமா? விவசாயிகள் போராட்டத்தையே சமாளித்த மோடி அரசு கரப்பான் பூச்சிகளுக்குப் பயந்ததாக நம்புவது பகடியாகும்.
க. திருநாவுக்கரசு கட்டுரையை முடிக்கும்போது, கஜக அடுத்து என்ன வடிவம் எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார்; கஜக மாறுவேஷம் போடலாமே தவிர, வளராது.
அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை
***
ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, எந்தத் திசைநோக்கிச் செல்கிறது என்றும், அரசின் நேர் / எதிர்ச் செயல்பாடுகள் பற்றியும் சரியாகவே தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானோரை ‘புனிதராக்கும்’ செயல் எந்த எல்லைவரை போகும் என்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள்.‘தேஜ்பால் வழக்கிற்குப் பிறகு: ஒரு பெண்ணியவாதியின் திறந்த மடல்’ ஆணாதிக்கச் சிந்தனாவாதிகளின் முகமூடியைக் கிழித்துள்ளது. “பாலியல் குற்றவாளி என்று அழையுங்கள்” என முடித்திருந்தது சரியான சவுக்கடி. கரப்பான் பூச்சிகள் கட்டுரை பொந்திலிருந்த அக்னிகுஞ்சாக வெளிப்பட்டது. “மெகலோமேனியாக்” மிகவும் சரியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, சபாஷ்! ‘முஸ்லிம்களும் இடஒதுக்கீடும்: ஒரு வரலாற்றுப் பார்வை’, பல்வேறு தகவல்களை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. சாதீயம் தீயினும் கொடியது. கிறிஸ்துவ சமயத்தில் அந்தத் தீ எப்படி ஊடுருவி உள்ளது என்பதை ‘வன்கெட்டு’ சிறுகதை புரிய வைக்கிறது. பாரதியின் சிறப்புகளை வாசகர்களுக்குத் தொடர்ந்து அளிக்கும் ய. மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.
சீனி. மணி
பூந்தோட்டம்
***
காலச்சுவடு செப்டம்பர் இதழில் கே.ஆர். அதியமான் எழுதிய ‘கிரீமிலேயர் ஏன் தேவை?’ என்ற கட்டுரையில் ‘சட்டநாதன் கமிஷன்’ ‘சதானந்தன் கமிஷன்’ எனத் தவறாக அச்சாகியிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.
