வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்

புகைப்படம்: நிலா ஸ்டூடியோ
நவீனத் திராவிட மொழி ஆய்வில் பிதாமகனாகப் போற்றப்படுபவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் . வடசேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரானதுடன் அங்கு மொழியியல் துறை உருவாகவும் காரணமாக இருந்தார். 1980களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பின் தமிழாய்வுகளைப் பல்வேறு நவீன முறைகளில் முன்னெடுத்துச் செல்ல வழிவகுத்தார். பிறகு பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தைக் கேரள அரசின் உதவியுடன் நிறுவி அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் முக்கியத்துவம் தந்து ஆய்வுகள் நிகழ வழிவகை செய்தார். அவ்வகையில் எல்லா திராவிட மொழிகளையும் திராவிட மக்களையும் ஒன்றிணைத்துச் செல்லும் ஒரே ஆய்வு நிறுவனம் இது மட்டுமே. அத்துடன் ஆந்திராவில் திராவிடப் பல்கலைக்கழகம் உருவெடுப்பதற்கும் காரணமாக இருந்தார்.
இன்றைய காலத்தில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு அறிஞர்கள் அவரது ஆய்வுப் பயிற்சியில் உருவானவர்களே. இத்தகைய பெருமை கொண்ட அவரைப் போற்றும் வகையில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆங்கிலத் துறையுடன் இணைந்து நாகர்கோவில் ஆகஸ்ட் 31 இல் நூற்றாண்டு விழாவை நடத்தியது.
விழாவில் சாகித்திய அகாதெமி பொறுப்பு அதிகாரி சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் டுரேஷ் வ.அய். சுப்பிரமணியமின் வாழ்க்கையைச் சுருக்கமாக எடுத்துரைத்ததோடு அவரது சிறப்புகளைப் பேசினார். “தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களுள் மூலக் காரண மானவர், பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழக நிறுவனர், திராவிடப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படக் காரணமாகத் திகழ்ந்தவர்” என்று குறிப்பிட்டார்.
சாகித்திய அகாதெமி தமிழ் ஒருங்கிணைப்பாளர் அறவேந்தன் கூறுகையில், “வ.அய்.சுப்பிரமணியம் காலம் தவறாமையைத் தீவிரமாக வாழ்க்கையில் கடைப்பிடித்தவர். அதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாதவர். தனக்கு அனுப்பப்படும் நூல்களை முழுவதும் படித்து ஒருபக்க அளவில் அதனைக் குறித்து எழுதுபவர். மிகச்சிறந்த சான்றோர், பண்பாளர் ஆவார். ச.வே.சு, ராமசுந்தரம், அகத்தியலிங்கம், நாச்சிமுத்து, குளோரியா சுந்தரமதி போன்ற பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. பல்வேறு ஆய்வுத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர்,” என்றார்.
சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் த. விஷ்ணுகுமாரன் பேசும்போது, “திராவிடச் சித்தாந்தத்தைக் கால்டுவெல் விளக்கிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் அடையாளத்தைக் கண்டுகொண்டனர். அதுவரையும் சமஸ்கிருதத்தின் மேன்மையைத் தமிழர்கள் போற்றியிருந்த நிலைதான் காணப்பட்டது. திராவிடச் சித்தாந்தம் மூலம் தமிழின் தனித்துவத்தை அறிந்த தமிழர்கள் சமஸ்கிருதத்தின் புனிதத்தை மறுத்ததோடு தமிழை முதன்மைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் திராவிடத்தைத் தமிழின் அடையாளமாக மாற்றி அதை அரசியல் அடையாளமாகவும் முன்னெடுத்துச் சென்றனர். இப்படிப்பட்ட சூழலில் திராவிட அடையாளத்தை எல்லா திராவிட மொழியினருக்கும் உரித்தாக்கி அவர்களை மொழி, பண்பாட்டாய்வில் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைத்தார். அதாவது திராவிடத்தை எல்லா திராவிட மொழியினருக்கும் உரித்தாக்கிய பெருமை வ.அய்.சுப்பிரமணியத்தைச் சாரும் என்றார்.
முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கருணாகரன், வ. அய். சுப்பிரமணியமின் மொழியியல் ஈடுபாடுகள் குறித்து உரை நிகழ்த்தினார்.
“திராவிட மொழிகள் என்றால் என்ன, அதன் பண்புகள் என்னென்ன என்பது பற்றிய ஆராய்ச்சிகளில் கால்டுவெல்லுக்கு பிறகு அதிகமான தீவிரம் காட்டியவர் அவர். அதன் தொடர்ச்சியாக மொழியியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் 26 திராவிட மொழிகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்தமான், லட்சத்தீவுகள் போன்ற பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று திராவிட ஆய்வுகள் நிகழ்கின்றன என்றால் அதற்கெல்லாம் தூண்டுகோலாக இருந்தவர் வ. அய். சுப்பிரமணியம்.
கி. நாச்சிமுத்து பேராசிரியரின் மீட்டுருவாக்க ஆராய்ச்சி முறை குறித்து விளக்கிப் பேசினார். “எப்படி உயிரியல் துறையில் பல ஒப்பீட்டாய்வு மூலம் மூதாதையரைக் கண்டடைகிறார்களோ அதுபோல மொழிகளை ஒப்பிட்டு மொழிக் குடும்பங்களை மொழியியலாளர்கள் உருவாக்கினர். வ.அய்.சு. அதை திராவிட மொழிகள் சார்ந்து முன்னெடுத்துச் சென்றார். இந்தியாவில் தற்போது 4 மொழிக் குடும்பங்கள் உள்ளன. ஆனால் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஐந்தாவதாக ஒரு மொழிக் குடும்பம் உள்ளதாகத் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. திராவிடம் அரசியல் சார்ந்து இருந்தாலும் மொழியளவில் பேராசிரியர் எல்லா திராவிட மொழியினரையும் இணைத்துக்காட்டினார். Tribal Encyclopedia, Handbook of Tamil Nadu, Handbook of Kerala, Handbook of Bengal என்பன போன்ற கலைக்களஞ்சிய நூல்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.”
கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் டேனியல் பேராசிரியரின் கட்டுப்பாடான வாழ்க்கையையும் அவரது குணாதிசயங்களையும் விவரித்ததோடு, இப்படிப்பட்ட குணாதிசயங்கள் உள்ள மனிதர் இருந்தாரா என்று வியக்கும் வண்ணம் பேராசிரியரது செயல்பாடுகள் இருந்தன என்று விளக்கினார்.
கேரளப் பல்கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் நசீம்தீன் பேசும்போது “நாட்டுப்புற ஆய்வைத் தமிழுலகில் மேனாட்டு ஆய்வுமுறையோடு இணைத்துச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, வரலாற்று மீட்டுருவாக்க முறையை இலக்கியத்தில் உட்படுத்தினார். மாற்றிலக்கணக் கோட்பாடுகள் முதலான இலக்கண ஆய்வு முறைகளை அறிமுகப்படுத்தினார். பிறமொழி இலக்கிய இலக்கணங்களைத் தமிழுக்குக் கொண்டுவர அறிஞர்களை வழிநடத்தினார்” என்றார்.
நாட்டாரியலாளரான அ.கா.பெருமாள் பேசுகையில், “பாரம்பரியம் மிக்க ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தவர் பேராசிரியர் வ.அய்.சு. அவரது நாட்டுப்புற ஆய்வு ஈடுபாடு கவனிக்கத்தக்கது. அவர் 1982இல் எழுதி சிம்லாவில் வாசிக்கப்பட்ட நாட்டுப்புறவியல் கட்டுரைகள் நாட்டுப்புறவியல் பேராசிரியர் லூர்துவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டுப்புறக் கதை எவ்வாறு பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன என்பதை அறிவதன் மூலம் பண்பாட்டை ஆராய முடியும் என்று காட்டியவர் பேராசிரியர்” என்று குறிப்பிட்டார்.
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெய் கிருஷ்ணன் பேசும்போது, “வ.அய்.சு மாணவர்களை அறிவாற்றல் வாய்ந்தோராக மாற்றினார். அவரது மாணவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மாநிலங்கள் கடந்து உள்ளனர். அவரிடம் பயின்றவர்கள் துணைவேந்தர்களாகக் கல்வித்துறையில் ஆய்வுத் துறையில் உச்சம் தொட்டவர்களாக உள்ளனர்”என்றார்.
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஹெப்சி ரோஸ்மேரி, மாணவர்கள் வ.அய்.சு.வின் பண்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக வ.அய். சுப்பிரமணியத்தின் நூல்களை முன்வைத்து ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜே.ஆர்.வி. எட்வர்ட் பேசினார்.
“வ.அய். சுப்பிரமணியத்தின் கட்டுரைகள் இலக்கியத்திறம் வாய்ந்தவையாக கருத்தாழம் கொண்டவையாக உள்ளன. அறம் பிறழாமல் அறிவியல்பூர்வமாகத் தனது கருத்துக்களை முன்வைத்தவர். அதேவேளை திராவிடம் சார்ந்த தன்னுடைய கருத்துக்களில் மிக உறுதியாக இருந்தார். பண்பாடு, அரசியல் சார்ந்த இவரது தேடல்கள் கடல் கடந்தும் திராவிடவியல் ஆய்வுகள் நிகழக் காரணமாயின. ஆய்வுக் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அவரது கட்டுரைகள் அமைந்துள்ளன” என்றார்.
சாகித்திய அகாதெமியும் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியும் இணைந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினர். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் சிட்னி ஷெர்லி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மின்னஞ்சல்: wishnuwishnu@gmail.com
