அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் மதிப்புரை காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்

காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

உஸ்தாத்
(சிறுகதைகள்)
சுகுமாரன்
வெளியீடு: 
நூல்வனம்
M22 ஆறாவது அவென்யூ, அழகாபுரி நகர்,
ராமாபுரம், சென்னை – 600 089
கைப்பேசி: 91765 49991 
பக். 200
ரூ.. 250

நல்ல மனநிலைக்கேற்ப வாசிக்கலாம் என்று தோன்றும் கதைகள் உள்ளன. எந்தச் சூழலில் வாசித்தாலும் நல்ல மனநிலையை உருவாக்கிக்கொள்ள இயலும் என்கிற நிலையிலும் கதைகள் உள்ளன.

முதல் கதை ‘அடியோட்டம்’ வாசித்ததும், அதற்கு மேல் அடுத்த கதையை வாசிக்க முடியாமல் புத்தகம் தானே மூடிக்கொண்டது. அந்தக் கதை மனத்துக்குள் உருவாக்கிய தாக்கம் எடைபோட இயலாதது. கதையின் சோகம் அதற்குள்ளேயே கரைந்துபோக வைத்தது பல நாட்களுக்கு. காதலில் தோற்றுப்போன ஒவ்வொருவருக்குமான கதை. அவர்கள் வெவ்வேறு விதமாகத் தோற்றுப் போயிருந்தாலும் அந்தத் தோல்வியை இப்படியாகத்தான் ருசிக்க வேண்டுமென்று பழைய காதல் மனம் விரும்புகிறது. யாருடைய மரணமும் விரும்பத்தகாததுதான். வேறொருவருடன் வாழப் போய்விட்ட காதலிக்கு இழப்பு உண்டானால், அது முன்னாள் காதலரைப் பாதிக்கப்போவதில்லை. இருப்பினும் பெரிய இழப்பாக முன்னாளைய காதலருக்கும் தோன்றுகிறது. கதையுடன் சம்பந்தமில்லாத எல்லா முன்னாளைய காதலர்களுக்கும் அந்த மாதிரியான மனநிலை உண்டாகிறது. இந்தக் கதை நமக்குள் உருவாக்கும் அழுத்தம் அப்படி.

‘தங்கப்பன் ஆசாரியின் கிளி’யும் அதே விதமான வேறொரு துயரம். இது சமூகத்தின் பல்வேறு இழைகளோடும் தொடர்புடைய கதை. ஓர் இலக்கியப் படைப்பின் அதியுன்னதமான தருணமென்றோ உச்சமென்றோ சொல்லிக் கதைக்குள் கரைய முடிந்தது. இங்குள்ள விடியல்கள் குஞ்ஞுலட்சுமிகளுக்கு உரியனவன்றி, கொச்சம்மிணிகளுக்கு உரித்தானதில்லை. தாய்க்கும் மகளுக்குமான இருவேறு தேடல்களும் நியாயமானவைதாம். ஆனால் இரண்டும் இருவேறு திசைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. ஏதோ ஒன்றைத்தான் நியாயப்படுத்த வேண்டுமென்று நம்மை யாராவது நிர்ப்பந்தித்துக் கேட்டால், கதை அத்தகைய வாய்ப்பினை நமக்குத் தரவில்லையே என்று கைபிசைந்து நிற்கிறோம். அப்படியானால் தங்கப்பன் ஆசாரியை எந்த மூலையில் சாத்திவைப்பது? காலம் ஓங்கி நிற்கும்போது யாரை நம் புறங்கைகள் ஒதுக்கித் தள்ளுகின்றனவோ, அவரைத்தான் நாம் நாடுகிறோம். அப்போது காலம் நம்மைப் புறக்கணித்திருந்தது. தங்கப்பனுக்கு அப்படியான சோக நிலை. கொச்சம்மிணியை விட்டுவிட்டு இன்னொருத்தியைக் கைப்பிடித்திருப்பான் லெட்சுமணன், அவனுக்கு யார் ஆறுதல் தர முடியும்? கொச்சம்மிணி கிளியாக மாறினாலும் அவளைப் பின் தொடரும் ஆணாதிக்கம் அவள் எதிரே கூண்டோடு நிற்கிறது. இப்படியாக கதையின் மாயச் சுழல்கள் பல. நாம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சோகத்தினுள்ளும் ஆழ்ந்துவிடுகிறோம். நம் சமூகத்தின் சிறைக் கம்பிகளைப் பிடுங்கியெறிய முடியவில்லையென்றால் நமக்கும் சாபங்கள் வந்துசேர்ந்துவிடுவதைப் போல இருக்கின்றது.

இத்தொகுப்பில் உலவுவது நாம்தான்; ஆனால் வாழ்க்கையை நம் உசிதப்படி வாழ நாம் முயன்றோமா? இத்தொகுப்பில் வரும் அவர்கள் கொஞ்சமும் தயங்கவில்லை. ஊர் உலகம் என்ன சொல்லும் என்கிற கவலைகள் இல்லை. ‘கசிவு’ கதையின் பார்கவியம்மாள் தன் ஆசைகளைப் பூர்த்திசெய்துகொண்டாள். கிருஷ்ணன்குட்டி வாரியரிடம் தோன்றிய காதல் கைகூடாத நிலையில் இருப்பவள் பார்கவி. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அவள் சந்தித்த நக்ஸலைட் தங்கப்பன் சாப்பிட்ட எச்சிலையில் மிச்சமுள்ளதை உண்கிறாள். அப்படி அவள் செய்துகொண்ட வகையில் அந்தக் காதல் நிறைவைப் பெற்றிருக்கும்போல் தெரிகிறது. பார்கவியம்மாளுக்கு ஏற்பட்ட மனநிறைவு என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவரும் கண்டுபிடித்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.

‘செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்’ கதையில் வரும் அவளும் இதே ரகம்தான். அவளுக்குச் சுத்தமாகப் பெயரே இல்லை; அவனுக்கும் பெயரில்லை. நம் சமூகத்தின் பொதுப் பிம்பங்கள் என்று மட்டும் புரிந்துகொள்கிறோம். கணவனின் பொறுப்பில்லாத குணம் அவளைக் கோபப்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவனும் கேள்விகள் கேட்டிருப்பான்போல; அந்த ஆணாதிக்கவாதியின் குரல் நமக்குக் கேட்கவில்லை. அவள் பதில் சொல்லும் வகையில்தான் அவளுக்கு எதிரே அவன் இருக்கிறான். இங்கும் கற்புக்கோ காதலுக்கோ இடமில்லை. தேவைப்பட்டபோது அலுவலக நண்பனுடன் என்றோ ஒருநாள் அவள் உறவுகொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் உண்டான கர்ப்பத்தைக் கலைப்பது நல்லது என்று முடிவெடுக்கிறாள். அவளுடைய கருவைக் கலைப்பதற்குக் கணவனின் சம்மதம் தேவைப்படுகிறது; அதுதான் சட்டம். எதற்கும் தேவைப்படாத கணவன் இந்த வகைக்காவது அவளுக்கு அன்று தேவைப்பட்டிருக்கிறான். சட்டங்களின் வழி சமூகத்தை அணுகிய இவளுக்கும் எந்தச் சட்டத்திற் குள்ளும் அடைபடாத பார்கவியம்மாளுக்கும் நம்முடைய ஆதரவுகள் போய்ச் சேருகின்றன. இவர்கள் வாழ்ந்த காலம் எதுவோ? அவர்கள் எங்கே வாழ்ந்தார்களோ? படைப்பாளியின் பேனா இவர்கள் எல்லோரையும் தேடிக் கண்டுபிடித்து நம்முன் உலவவிடுகிறது.

சர்ப்பம் எங்கு வரும், எப்படி வரும்? இன்றைய இந்தியச் சூழலில் இந்தச் சர்ப்பம் ஊர்கள்தோறும் ஊர்ந்துகொண்டிருக்கிறது. அதன் மீதான புராணப் படிமங்கள் சர்ப்பத்தை மதத்தின் பிடிக்குள் இருக்கும்படி பாதுகாக்கிறது. அந்தத் தொன்மம் கலைந்துபோகாதபடி மதவாதிகள் எங்கும் உள்ளனர். கடைசியில் ‘சர்ப்பம்’ கதைக்குள்ளும் அவர்கள் வந்துவிட்டார்கள். தொன்மத்தில் அடைபட்டிருக்கும் பாம்பு எங்கு அலைந்தாலும் அதைப் பிடிக்க அந்நிய மதத்துக்காரனுக்கு யாதொரு உரிமையும் இல்லை. புதுக்காடு பகுதியில் அப்படித்தான் கலவரம் உண்டானது; அது பெரிதாகிறது. கலவரத்திற்குக் காரணமான சர்ப்பம் எப்படியோ தப்பிவிடுவதால், கலவரங்கள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்குமென்று கதை சொல்லாமல் சொல்கிறது.

‘வடு’ பல அடுக்குகளைக் கொண்ட கதை. ஒன்றோடொன்று தொடர்பற்ற நிலையில் பங்காருவின் வாழ்க்கை நகர்கிறது. ஆனால் அவனின் நிழலுக்குள் பதுங்கிக் கிடக்கும் சாதீயம் அவன் போகிற வழியெல்லாம் விசத்தை, வன்மத்தை, இழிவை, அவமானத்தைக் கொடுத்தபடி இருக்கிறது. மனம் நோகவைக்கும் இவ் வாழ்க்கையிலிருந்து பங்காருவால் ஒருநாளும் மீள முடியாது. அவனுடைய தொழில் மாறியிருந்தாலும், நடையுடை பாவனைகள் மாறியிருந்தாலும், வாழ்விடம் மாறியிருந்தாலும் எல்லா வகையிலும் சாதீயம் தன் முறுக்குக் கயிற்றை அவன் கழுத்தைச் சுற்றி இறுக்கி நிற்கிறது. பங்காருவுக்கு வெளியேயுள்ள உலகம் நவீன வாழ்க்கை முறையையும் நவீன சாதனங்களையும் கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தால் என்ன, சாதீயம் மறையாது. அது பங்காருவை நிரந்தரமாகச் சிலுவையில் அறைந்து முடித்துவிட்டது. சிலுவையில் அறைந்ததுடன் கடமை முடிந்ததென்று அவர்கள் எங்கும் போகவுமில்லை; அங்கேயே நிற்கிறார்கள். இவற்றின் மீது நமக்குச் சாபம் இடத் தோன்றுகிறது. ஆனால் பங்காரு சந்திக்கும் அவலங்கள் அனைத்தையும் தீர்த்துக்கட்டும் அளவுக்கு நம் சாபம் அவ்வளவு வலிமையானதாக இல்லை.

‘உஸ்தாத்’, ‘அரண்’ இரண்டும் தமிழ் நிலத்திற்கு அப்பாற்பட்ட கதைகளாக உள்ளன. கவிஞருக்கு மிகவும் பிடித்தமான ஷெனாய் கலைஞரைத் தன் பாத்திரங்களில் ஒன்றாக வார்க்கும் விருப்பத்தால் உருவான கதையென்று சொல்லலாம். கருவறையில் இருக்கும் பாலாஜிக்கும் உஸ்தாதுக்குமான நெருக்கம் உலகறிந்தது; அதை எத்தனைபேர் இதுவரை தங்களின் படைப்புகளில் கொண்டுவந்திருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. மனிதனுக்கும் சிலைக்குமான அந்த உறவைக் கவிஞரும் தொட்டுப்பார்க்க விரும்பியிருக்கிறார். இதற்காக வாரணாசியின் தெருக்களில் அலைந்து திரிந்திருக்கிறார். கலையும் ஆன்மிகமும் துலங்காத மர்மங்களால் ஆனவை. வழக்கமாக வரும் ரிக்‌ஷா ஓட்டி அன்று வரவில்லை. பொறுப்பற்ற ரிக்‌ஷா ஓட்டி. தான் நாளை வர மாட்டேன் என்று உஸ்தாதிடம் சொல்லியிருக்க வேண்டுமில்லையா? சொல்லாமல் வேறெங்கோ போய்விடுகிறான். அவனது பொறுப்பின்மையைக் களைந்து உஸ்தாதுக்குக் கைகொடுத்தான் கன்னையா. பூப்போல ஏற்றி மந்திருக்கு அழைத்துச் சென்று அப்புறம் பூப்போல வீட்டிலும் இறக்கிவிட்டுவிட்டுக் கூலி வாங்காமல் போன கன்னையா, சும்மா போகவில்லை. உஸ்தாதுக்குள் தன் புல்லாங்குழல் வாசிப்பின் மூலம் புதிய உருப்படியைப் படியவிட்டுத்தான் போயிருக்கிறான். இதுபோன்ற லீலைகள் உஸ்தாதுகளின் வாழ்வில் புதிதல்ல. ஆனால் உஸ்தாத் அன்று வாசித்த ராகம் புதிது. அதை பாஸ்கல் குழுவினரின் படப்பிடிப்புக்காக வாசித்துக்காட்டினார். பின் திருவிழாவிலும் வாசிக்கப்பட்டது. கன்னையா விட்டுச்சென்ற ராகம் அன்று உஸ்தாதைக் கண்டுபிடித்துத் தன்னை அரங்கேற்றியிருக்கிறது.

‘அரண்’ முற்றிலும் புதிய நிலத்துக்கும் புதிய மறைபொருளுக்கும் அழைத்துச் செல்லும் கதையாக இருக்கிறது. அந்நிய நிலத்தின் நோய் விசித்திரமான கொலைகளை நிகழ்த்துகிறது. நோயின் தொடக்கத்தை அறிந்துகொண்டாலும் அதனை மருத்துவத்தின் மகத்துவத்தால் குணப்படுத்த முடியாமல் போகிறது. மனிதர்களுக்கும் தேவனுக்குமான உறவில் எழும் இந்தச் சிக்கல் முடிவில்லாமல் விரிகிறது. ‘உஸ்தாத்’ கதையில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான உறவைக் கண்டுபிடித்த மாதிரி இந்தக் கதையில் கண்டுபிடிக்க முடியவில்லை. கர்த்தர் வேறெதையோ உணர்த்த விரும்புகிறார். அது என்னவென்று அவருக்கும் தெரியவில்லை; அவரின் பக்தர்களுக்கும் தெரியவில்லை. தன் ஊழியக் காலத்திலா இயாம் கிராமத்தில் இந்தத் தீவினைகள் நிகழ வேண்டும் என்று ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸன் இரைந்திருக்கும் தருணத்தில் காற்றில் மிதக்கும் சுகந்தம் அவருடைய மனைவி காத்தரினின் நாசியில் ஏறுகிறது. நோய்க் காலம் முடியும் தருணத்தில் நம்முடைய எதிர்பார்ப்புகள் குலைகின்றன. மறுநாள் காலையில் காத்தரினின் மரணம். நாற்றமோ சுகந்தமோ முடிவில்லாமல் தொடரும் மரணங்கள் நம்மை உலுக்குகின்றன. எக்ரிங்க் கிராமத்தின் உபதேசியாராகப் புதிய இடத்திற்கு வந்தபிறகு அவருக்கு ஏற்படும் தனிமையும், ஏன் என்னைக் கைவிட்டீர் என்கிற மாம்பெஸனின் அவலக் குரலும் தீராத இம்சையாக இருக்கின்றன. இக்கதைக்குத் தொடக்கமோ முடிவோ இல்லை. அந்தரத்தில் நிற்கும் மர்மம் என்று விலகிவருவதைத் தவிர வாசகருக்கு வேறு வழியில்லை.

‘உஸ்தாத்’ கதைகள் எல்லாமும் வரையறுக்கப்பட்ட கோடுகளுக்குள் நிறுத்தப்படவில்லை. வரையறைகளைத் தாண்டுகின்றன. கட்டுப்பாடற்ற மனத் தேடல்கள் எல்லாக் கதைகளிலும் ஊடுருவி நிற்கின்றன.

     மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.