அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026) உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்

உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்

அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
இரா. பிரபாகர்

1987இல் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். துறைத்தலைவரான சாலமன் பாப்பையா தேர்வுக்குழுவில் இருந்தார். அன்று கல்லூரி முதல்வரைவிடத் துறைத்தலைவருக்கே முழு அதிகாரம் இருந்தது.

நேர்காணலின்போது, கரும்பலகையின் முன் தேர்வுக்குழுவை மாணவர்களாகப் பாவித்து பாடம் நடத்த வேண்டும். ஐயா இலக்கணத்தில் ஒரு தலைப்பை நடத்தச் சொன்னார். எது நடக்கக் கூடாது என நினைத்தேனோ அதுவே நடந்துவிட்டது. நான் இளங்கலையில் தமிழ் பயிலாமல், நவீன இலக்கிய வாசிப்பின் வழியாகவே முதுகலைத் தமிழுக்கு வந்தவன். அதனால் இலக்கண அறிவு மிகச் சொற்பம். தயங்காமல், “தற்கால இலக்கியமே என் விருப்பம்” என்றேன்.

“உங்களுக்குப் பிடித்த நாவல் எது?” என்றார் ஐயா. ‘கரித்துண்டு’, ‘அகல்விளக்கு’ அல்லது ஜெயகாந்தனின் நாவல்களைச் சொல்லியிருக்கலாம். ஆனால், ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ என்றேன். 80களில் ‘ஜே.ஜே.’ வாசிப்பது ஒரு மோஸ்தர். நவீன இலக்கியத்தில் நான் கைதேர்ந்தவன் என்பதைக் காட்டிக்கொள்ளவே அப்படிப் பதிலளித்தேன். அமெரிக்கன் கல்லூரியிலேயே பொருளியல் படித்தவன் என்பதால், ஐயாவிடம் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை.

“அந்த நாவல் வெளங்குதாய்யா” என்று ஐயா அடுத்த வினாவைத் தொடுத்தபோதுதான், ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பது புரிந்தது. இருப்பினும் 24 வயதிற்கான அசட்டுத் தைரியத்தில், “அவரவர் வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து விளங்கும்” என்றேன். அவர் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

சில மணிநேரங்களில் பணிநியமன ஆணை கிடைத்தது. என்னைக் கடந்து சென்ற ஐயா, “அந்த மேல் பட்டனைப் போடுங்க” என்றார். அப்போது போட்டுக்கொண்டாலும், அவர் சென்றதும் மீண்டும் தளர்த்திக்கொண்டேன். அதன்பின் அவர் அதைப் பொருட்படுத்தாவிட்டாலும், என்னுடைய நடை உடை பாவனைகள் அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

ஒரு வகையில் ஐயா மரபார்ந்த தமிழாசிரியர்தாம். அப்போது தமிழ்ப் பேராசிரியர்களின் நடை உடை பாவனைகளில் சில எழுதப்படாத விதிமுறைகள் இருந்தன. 70களில் வேட்டி, சட்டையில் கம்பீரமான கனவான்களாகக் காட்சியளித்தவர்கள், 80களில் ‘சபாரி’ எனும் விசித்திரமான உடைக்கு மாறினார்கள். உடை மாறினாலும், இலக்கணத்தையும் மரபிலக்கியங்களையுமே கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த மரபான தமிழாசிரியர்கள் பலர் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த பாண்டித்தியம் பெற்றிருந்தனர். சாலமன் பாப்பையாவும் அத்தகைய புலமை மிக்க பேராசிரியரே.

அக்காலகட்டத்தில் அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறையில் பேராசிரியர்கள் கு. பரமசிவம், சுதானந்தா ஆகியோர் நவீன இலக்கியங்களைப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவந்தனர். 80களிலேயே புதுமைப்பித்தன், க.நா.சு., மௌனி, தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஹெப்சிபா ஜேசுதாசன், அசோகமித்திரன், பூமணி ஆகியோர் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தனர். அன்றைய சூழலில் வேறு எந்தப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் நவீன இலக்கியத்தை இலக்கியமாக ஏற்கும் மனநிலையில் இல்லை. தன்னாட்சிக் கல்லூரியின் பாடத்திட்ட வடிவமைப்பில் துறைத்தலைவருக்குத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கணிசமான வாய்ப்பிருந்தது. இருப்பினும், ஐயா நவீன இலக்கியத்தின் மீதான தனது ஒவ்வாமையைச் சிறிதும் வெளிக்காட்டியதில்லை.

ஐயா பேராசிரியராகப் பணியேற்ற 60களில், அப்பணி பலரும் விரும்பும் ஒன்றாக இருக்கவில்லை. குறைந்த ஊதியமும், புகுமுக வகுப்பு (பி.யூ.சி) மாணவர்களைச் சமாளிக்கும் சவாலுமே முதன்மைக் காரணங்கள். புகுமுக மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களைக் கற்பிப்பது புதிய ஆசிரியர்களுக்கு அக்கினிப் பரீட்சை. அதில் வெல்பவர்களே கல்லூரிகளில் தொடர முடியும். பெரும்பாலான மொழி ஆசிரியர்களை ஓரிரு ஆண்டுகளிலேயே மாணவர்கள் வேறு தொழில்களுக்கு ‘அனுப்பி’விடுவர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறைந்த அவ்வகுப்பறைகள் பொதுக்கூட்ட அரங்கம் போலவே இருக்கும். பாப்பையாவின் பெருந்திரளுக்கான பேச்சுப் பயிற்சி அங்குதான் தொடங்கியிருக்க வேண்டும். தொடக்கத்திலிருந்தே அவர் மாணவர்கள் விரும்பும் ஆசிரியராகத் திகழ்ந்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களை உரையாசிரியர்களின் துணையோடு அணுகினாலும், கற்பிக்கும் முறையில் அவர் வேறுபட்டார். காப்பியமோ சங்க இலக்கியமோ, அதைச் சமகால அன்றாட நிகழ்வுகளோடு இணைப்பதும், பேச்சுத் தமிழில் இயல்பாக விவரிப்பதும் அவருடைய பாணி. அக்காலப் பேராசிரியர்களின் சோர்வூட்டும் மேடைத் தமிழைத் தவிர்த்ததால், மாணவர்களால் எளிதில் அவரோடு ஒன்ற முடிந்தது. விரைவில், பிற வகுப்பு மாணவர்களும் அவர் விரிவுரையைக் கேட்கத் திரளுமளவுக்குச் செல்வாக்குப் பெற்றார்.

60களில் பேருந்துகளிலும் ஆட்டோக்களிலும் கூட்டங்களுக்குச் சென்றார். பத்துப் பதினைந்து ரூபாயே ஊதியமாகக் கிடைத்தது; அதையும் தராமல் அமைப்பாளர்கள் கூட்ட முடிவில் காணாமல் போன அனுபவங்களும் உண்டு. அக்காலத்தில் காப்பியப் பட்டிமண்டபங்களே ஆதிக்கம் செலுத்தின. அப்போது பெரும் புலவர்களுடனும் பண்டிதர்களுடனும் அவர்களின் நடையிலேயே ஐயாவின் பேச்சும் அமைந்திருந்தது.

70, 80களில் இருவேறு பேச்சுப் பாணிகள் புழக்கத்திலிருந்தன. குன்றக்குடி அடிகளார், அறிவொளி, சத்யசீலன், இளம்பிறை மணிமாறன், தமிழருவி மணியன் போன்றோர் உருவாக்கிய மேடைத்தமிழ் ஒரு வகை. ஜீவா, ஜெயகாந்தன், தா. பாண்டியன், திருப்பூர் சுப்பராயன், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட இடதுசாரிகள் பின்பற்றியது இன்னொரு வகை. பாப்பையா முதல் மரபிலிருந்தே தன் பேச்சு வாழ்க்கையைத் தொடங்கினார்.

70களுக்குப் பின் வெகுஜன ஊடகங்கள் உருவாக்கிய பெருந்திரள் பண்பாடு, அரங்கக் கூட்டங்களைத் தெருமுனைக் கூட்டங்களாக மாற்றியது. இலக்கியம் கற்றோரும் ஆர்வலர்களும் குழுமிய அரங்கங்களுக்கு இணையாகத் தெருமுனை மேடைகள் பெருகின. திருவிழாக்களில் பட்டிமண்டபங்கள் இடம்பெற்றபோது ‘இராமன் x இராவணன்’, ‘வாலி x சுக்ரீவன்’ என்றிருந்த தலைப்புகள் ‘மாமியார் x மருமகள்’, ‘வாலிபம் x வயோதிகம்’ என மாறின.

இப்போக்கைத் தொடங்கி வளர்த்தவர், பட்டிமண்டபங்களை மலினமாக்கியவர் என ஐயாமீது எழும் விமர்சனங்களை முற்றிலும் மறுக்க முடியாது. இருப்பினும், வெகுஜனப் பொழுதுபோக்கு எனும் பரப்பில் வினையாற்றும் சூழல்களைக் கணக்கில் கொள்ளும்போது, அவருக்கு இரண்டு பாதைகளே இருந்தன. ஒன்று, தன் வயதொத்த இலக்கியப் பேச்சாளர்களைப் போலக் களத்தை விட்டு வெளியேறுவது; அல்லது வெகுமக்கள் ரசனைக்கேற்பத் தொடர்வது. ஐயா இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். பட்டிதொட்டியெங்கும் பயணித்து, வெகுஜன ரசனைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு, அனைவரும் செவிசாய்க்கும் புதிய பாணியை உருவாக்கினார்.

தமிழிலக்கியப் பரப்பிலும் பொதுவெளியிலும் அரிதான நகைச்சுவையையும் அங்கதத்தையும் தன் பேச்சில் இனிப்பாகத் தெளிக்கத் தொடங்கினார். அவருடைய நகைச்சுவையில் ஒரு தனித்தன்மை இருந்தது; பத்திரிகைத் துணுக்குகளை அவர் திரும்பச் சொல்வதில்லை. வீடு, திருமணக்கூடம், கோயில், பேருந்து நிறுத்தம் என எங்கும் அம்மாக்கள், பாட்டிகள், குழந்தைகள் போன்ற பலதரப்பட்ட மனிதர்களின் நடத்தையைக் கூர்ந்து அவதானித்தார்.

படிப்படியாக அவர் பேச்சாளராக மட்டுமன்றி, ஒரு தனிநபர் நாடகக் கலைஞராகவே மாறினார். தேர்ந்த நடிகர்களுக்கேயான ‘குரல் நடிப்பு’ (Voice acting) அவருக்கு இயல்பாகவே கைவந்தது. முகபாவங்களை மாற்றியும், குழந்தை, அம்மா, அப்பாவெனக் குரலைக் குழைத்தும் தணித்தும் எளிய பேச்சுத் தமிழில் பேசுவார். உரையின் இறுதிக்கட்டத்தை நாடகத்தின் உச்சக்காட்சியாக மாற்றி, மேடைத்தமிழுக்கு நகர்வார். அப்போது அறிஞராகவும் பேராசிரியராகவும் உருமாறும் தொனி அவருக்கு கைக்கூடும்.

அதுவரை சிரித்தும் ரசித்தும் நெகிழ்ந்திருந்த பார்வையாளர்களின் முகங்கள் தீவிரமடைவதையும், சலசலப்புகள் ஓய்ந்து அரங்கம் அமைதியாவதையும் கவனித்திருக்கிறேன். அங்கே பாப்பையா ஒரு நிகழ்த்துநராக மாறி, மொத்தச் சனத்திரளையும் தன்மீது குவியச் செய்திருப்பார். இந்த வடிவமைப்பை அவர் இயல்பாகவோ திட்டமிட்டோ வந்தடைந்திருந்தார்.

90களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் அறிமுகமாகி, சன் தொலைக்காட்சி தொடங்கியபோது ஐயாவின் வாழ்க்கை மாறியது. சன் தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியில் திருக்குறள் கூறத் தொடங்கியபோது, அதற்குரிய புதிய வடிவத்தை வகுத்துக்கொண்டார். எளிய பேச்சுத்தமிழிலும், சமகால நிகழ்வுகளின் பின்னணியிலும் அவர் பேசியது காட்சி ஊடகத்தின் வழியே மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேடையிலிருந்து பேசும் பேச்சாளராக இல்லாமல், தமிழர்களின் வீடுகளிலேயே ஒருவராக மாறினார். குறிப்பாக, பண்பாட்டு ஏக்கத்தில் இருந்த புலம்பெயர் தமிழர்கள் அவரைத் தங்கள் பள்ளி ஆசிரியராகவும் பாட்டையாவாகவும் வீட்டுப் பெரியவராகவும் கண்டனர். பொதுக்கூட்டப் பேச்சு முறையைத் தவிர்த்து, காட்சி ஊடகத்திற்கேற்ற அமைதியான தொனியில் பேசி, “நாளை சந்திப்போமா” என்று அவர் விடைபெறும்போது, வீட்டின் உறவினர் ஒருவர் தற்காலிகமாகப் விடைபெறுவது போன்ற உணர்வைத் தந்தது.

ஒருவரைப் பிரபலமாக்கி, அப்பிரபல்யத்தை வணிகமாக்குவதுதானே நவீன ஊடகங்களின் இயல்பு. சன் தொலைக்காட்சி அனைத்துப் பண்டிகைகளிலும் ஐயாவின் பட்டிமண்டபங்களை ஒளிபரப்பியது. தீபாவளி என்றால் எண்ணெய்க் குளியலும் வடையும் போல, ஐயாவின் பட்டிமண்டபமும் தவிர்க்க முடியாததானது. பண்டிகைகளுக்குப் புதுமை தேவையில்லை; ஏனெனில் அவை சடங்குகள். அச்சடங்குகளில் ஒன்றாகவே ஐயாவின் நிகழ்வுகளும் மாறின. 50 ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஸ்டார் கண்ணாடியைச் சுழற்றிப் போடுவதைச் சலிக்காமல் பார்க்கும் தமிழ்ச் சமூகம்தானே நாம்! வெகுவிரைவில் ஐயாவின் பட்டிமண்டபங்கள் உலகத் தமிழர்களின் பண்டிகைக் காலப் பதார்த்தமாகவே மாறிவிட்டன.

ஐயா ஓய்வுபெற்றுப் பத்தாண்டுகளுக்குப் பிறகே அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் பயின்ற, பணியாற்றிய அமெரிக்கன் கல்லூரியைத் திருச்சபை தனதாக்க முயன்றபோது, அதை எதிர்த்து நாங்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தோம். அதில் அவராகவே முன்வந்து பங்கெடுத்தார்; தன்மீதான அவதூறுகளையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை நின்றார். பலரும் விலகிய பின்னும், “இக்கல்லூரி வணிகமயமாகக் கூடாது” என்று அவர் தொடர்ந்து குரல் கொடுத்ததற்குப் பின்னால் அவருடைய கடந்தகால வாழ்க்கை இருந்தது.

அதிகாரப்பூர்வமாக 90 வயதிலும், உண்மையில் 93 வயதிலும் மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, மதுரைக்கு அருகிலுள்ள சாத்தங்குடியில் பிறந்தவர். 1930களில் வறுமை தாண்டவமாடிய காலகட்டம் அது. பெரிய குடும்பம்; கிராமத்தின் சூழலும் சரியாக இல்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரை கோட்ஸ் (ஹார்வி மில்) தொடங்கப்பட்ட காலத்தில், மதுரையின் இருபெரும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அப்போதே பிழைப்பிற்காக மதுரைக்கு இடம்பெயர்ந்த குடும்பங்களில் பாப்பையாவின் குடும்பமும் ஒன்று.

கடும் வறுமையிலும் நகராட்சிப் பள்ளியில் படித்து, அமெரிக்கன் கல்லூரியில் இடம் பிடிக்கும் அளவுக்குச் சூட்டிகையான மாணவராகத் திகழ்ந்தார். 1950களில் உயர்கல்வி ஓர் ஆடம்பரம்; 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே அக்கூடுதல் வாய்ப்பு கிடைத்தது. வசதியானவர்களும், வழிவழியாகக் கல்வி கற்ற குடும்பத்தினருமே கல்லூரியைக் கற்பனைசெய்ய முடிந்த சூழல் அது.

காலில் செருப்பின்றி, நான்கு முழ வேட்டியுடன் கறுத்த மெலிந்த இளைஞனாகக் கல்லூரிக்குள் நுழைந்த நாட்கள் ஐயாவின் நினைவில் அப்படியே உறைந்திருந்தன. பசியில்லா வாழ்க்கைக்காகக் கல்லூரிச் சிற்றாலயத்தில் முழங்காலிட்டுப் பிரார்த்தித்ததையும், பல நேரங்களில் ஆசிரியர்களே தன் கல்விக் கட்டணத்தைச் செலுத்தியதையும் அவர் மறைத்ததில்லை. அமெரிக்கன் கல்லூரியையும், அதை உருவாக்கிய கிறித்தவ மிஷனரிகளையும் பெரிதும் மதித்த பாப்பையா, “அடுத்த பிறவியொன்று இருந்தால் இக்கல்லூரியின் படிக்கற்களில் ஒன்றாக இருப்பேன்” எனக் கல்லூரி மலரில் எழுதுமளவுக்கு அதை நேசித்தார்.

பிழைப்பிற்காகப் புலம்பெயர்ந்த ஏழைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்; முறையாகத் தமிழ் கற்ற பேராசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கி, எளிய மேடைப் பேச்சாளராக அறிமுகமாகி, இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்றார். இறுதியில் தமிழ்நாட்டின் பேச்சு மரபில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விடைபெற்றிருக்கிறார்.

வெகுஜனப் பண்பாட்டையும் அதன் சனரஞ்சகத் தன்மையையும் எள்ளி நகையாடிய காலங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் வெகுஜனப் பண்பாடும் வெகுஜனக் கலைஞர்களும் சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றனர். அந்த வகையில், அரைநூற்றாண்டுக் காலமாகத் தமிழ் வெகுஜனப் பண்பாட்டுப் பரப்பில் இயங்கிய சாலமன் பாப்பையாவின் பங்களிப்பைக் காலம் நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

(பின்குறிப்பு: இறுதிவரை தன்னைக் கிறித்துவராகவே அடையாளப்படுத்திக்கொண்ட பாப்பையா, அப்பண்பாட்டு நம்பிக்கைக்கு மாறாகத் தன்னை எரியூட்டுமாறு விரும்பியிருந்தார். அவர் விருப்பப்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.)

              மின்னஞ்சல்: profprabahar@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.