அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026) தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்

தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்

நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

இலக்கியத்துக்கான உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு, புக்கர் பரிசு, பிரான்சின் கோன்கூர் பரிசு என உலகில் எந்தப் பகுதியில் இலக்கியப் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானாலும் பரிசுக்குரிய அந்த நூல் குறித்தும் அப்படைப்பின் ஆசிரியர் பற்றியும் உடனுக்குடன் எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் கருத்துரையும் மதிப்புரையும் அளித்துவந்த பிரஞ்சுப் பேராசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் (02.08.26) மறைந்தார்.

இவ்வாறு அத்தனைப் படைப்புகளைப் பற்றியும் பேராசிரியரால் எழுத முடிந்ததற்குக் காரணம், வாசிப்பைத் தன் வாழ்வின் அங்கமாகவே வைத்திருந்தது தான். அவருடைய வாசிப்பு ஆழமானது, விசாலமானது. இலக்கிய விருதுகள் நெருங்கும்போதெல்லாம், சாத்தியமான வெற்றியாளர்களின் பட்டியலைத் தயாரித்து, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் எழுதிய படைப்புகளை வாசிக்கத் தொடங்கிவிடுவார். மேலும், குறிப்பிட்ட நூல்தான் தேர்வாகும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார். ஏற்கெனவே அந்த நூலை வாசித்துவிட்டபடியால், விருது அறிவிக்கப்பட்டவுடன் அதுகுறித்த தனது மதிப்புரையை இலக்கிய இதழ்களுக்கு அவரால் விரைவாக அனுப்ப முடிந்தது.

 நூல்கள்மீது அவருக்கிருந்த ஈடுபாட்டிற்கு ஈடேதுமில்லை. அவருக்குப் பிடித்தமான நூலின் திருத்திய மறுபதிப்பு வரும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய செய்திகளை அறியும் ஆவலில் அதையும் வாங்கிவிடுவார். இத்தனை நூல்கள் வாசித்திருந்தாலும், வைத்திருந்தாலும், புது நூல்களைப் பரிசாகப் பெறும்போது அவர் அடையும் ஆனந்தம் அதிகம். பேராசிரியரின் வாசிப்புத் தாகத்தை அறிந்த அவருடைய மாணவர்களும் விடுமுறையில் பிரான்ஸிலிருந்து புதுச்சேரிக்கு வரும்போது, பெரும்பாலும் நூல்களையே பரிசாக அளிப்பார்கள்.

இத்தனை நூல்களையும் வாசிக்க அவருக்குப் போதிய நேரம் இருக்குமா என்ற ஐயம் பலருக்கும் உண்டு. அவருடன் நெருங்கிப் பழகியபோதுதான் பேராசிரியரின் நேர மேலாண்மை புரிந்தது. அதிகாலையில் எழும் வழக்கத்தை வைத்திருந்ததன் மூலம் ஒரு நாளின் நீளத்தைக் கூட்டும் கலையைக் கற்றிருந்தார்; காலத்தின் மதிப்பை அறிந்து உரிய முறையில் பணியாற்றினார். ஒரு நிமிடத்தைக்கூட அவர் வீணடித்துப் பார்த்ததில்லை. மூன்று மொழிகளிலும் வாசிப்பு, மொழிபெயர்ப்பு, படைப்பு, ஆய்வு, மதிப்பீடு எனத் தம் காலத்தை நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டார்.

1942ஆம் ஆண்டு, காரைக்காலில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், புதுச்சேரிப் பிரஞ்சுப் பள்ளியில் அப்போது நடைமுறையில் இருந்த பிரஞ்சுக் கல்வி முறையில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு எளிதில் இடம் கிடைத்தும், அத்துறையை விட்டு, இலக்கியத்தின்மீது இருந்த ஈர்ப்பால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பிரஞ்சு மொழியில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1965ஆம் ஆண்டு, புதுவை அரசின் கல்வித்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பிறகு புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

புதுச்சேரி, காரைக்கால் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய பின், 1987ஆம் ஆண்டு, புதுவைப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது, பிரஞ்சுத் துறையின் முதல் பேராசிரியராகத் தலைமையேற்றார். என் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக இருந்தார். 2004ஆம் ஆண்டில் இவர் ஓய்வுபெற்ற அதே நாளில்தான், பிரஞ்சு எழுத்தாளர் ‘பிளெய்ஸ் சாந்தரார் (Blaise Cendrars) புதினங்களில் விலகித் தப்புதல்’ என்ற பொருண்மையில் முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சமர்ப்பித்தேன்.

தம் அயராத உழைப்பால் பிரஞ்சு இலக்கியத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி. அவரது பெருமையைப் பறைசாற்றும் விதமாக இன்றும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அவருடைய மாணவர்கள் இயங்கிவருகின்றனர். இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் திறன்படைத்தவர்களாகத் திகழ்கின்றனர்.

இவ்வாறு உலகெங்கும் அறிவின் விதைகளை விதைத்துள்ள அவரது மேதமையைப் பாராட்டி பிரான்ஸ் அரசு, மிக உயரிய ‘செவாலியே’(Chevalier), ‘ஓபிசியே’(Officier), ‘கொம்மாந்தர்’ (Commandeur) ஆகிய விருதுகளை வழங்கிச் சிறப்பு செய்தது. மொழியாக்கத்துக்கான ‘ரொமேன் ரொலன்’ (Romain Rolland) விருது (2 முறை), விகடன் விருது ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார். விருதுக்குரிய நூல்களான ‘முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை’, ‘ஒரு பெண்மணியின் கதை’ ஆகிய இரண்டும் ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்தவையே.

கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த அரவிந்தன், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுவைக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் பேராசிரியரின் நேர்காணலுக்காக அவரது இல்லத்துக்குச் சென்றோம். குறிப்பெடுக்க நவீன் ராஜன் உடனிருந்தார். மூன்று மணிநேரத்துக்கு மேலாக நேர்காணல் நடந்தது. மொழியாக்க உத்திகள், நேரடி மொழியாக்க நூல்களுக்குப் பிரான்சில் உள்ள வரவேற்பு, மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எனப் பல விஷயங்கள் குறித்துப் பேராசிரியர் அளித்த விரிவான கருத்துகளுடன் அந்த நேர்காணல் காலச்சுவடில் வெளிவந்தது. பொதுவாக மொழிபெயர்ப்பின் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்று அரவிந்தன் கேட்டார். அதற்கு விடை அளித்த பேராசிரியர்,

“மொழிபெயர்ப்புகளின் எதிர்காலம் மொழி பெயர்ப்பாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. எந்த எதிர்பார்ப்புமின்றிக் கலைநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். மேலும் மொழிபெயர்ப்பாளராக வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் தங்களது தாய்மொழியை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பு என்றால் என்ன? இன்னொருவரின் கருத்தை நான் என் மொழியில் சொல்வது. இதில் எனக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரமே கிடைக்கும். அதற்குள் என் திறமையைக் காட்ட வேண்டும். மூலத்தை நெருங்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பு வரும்வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கருத்துரைத்தார்.

தாய்மொழி பற்றியும் தம் சுதந்திர எல்லைகள் குறித்தும் அதிக அக்கறை கொள்ளாத மொழி பெயர்ப்பாளர்களுக்கு இந்த அறிவுரை பயனுடையதாக இருக்கும்.

நான் கல்லூரியில் பயின்றபோது, இளங்கலை, முதுகலை வகுப்புகளில் இலக்கிய ஆர்வத்தை எனக்கு ஊட்டிய அவரை மற்ற மாணவர்கள்போல் தூரத்திலிருந்தே வியந்து பார்த்துவந்தேன். முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக அவர் கிடைத்ததன் பயனாகத் தினமும் சந்திக்கவும் உரையாடவும் கிடைத்த வாய்ப்பு எனக்குப் பெரும் பேறாகும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த இருபதாண்டுக்கும் மேலான கால இடைவெளி, ஆழமான நட்பும் அறிவுப் பகிர்வும் வளர ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆசிரியர், மாணவர் என்ற அறிவுத்தளத்தில் உருவான தொடர்பு, அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் நெருங்கிப் பழகும் அளவு வளர்ந்தது. குறிப்பாக, அவருடைய மனைவி ரேணுகாதேவியின் விருந்தோம்பலை என்றும் மறக்க இயலாது. கணவரின் இலக்கியச் சேவைக்கும் கல்விப் பணிக்கும் தொடர்ந்து பக்கத்துணையாக, குறிப்பறிந்து வினைபுரிந்த அவருக்குப் பேராசிரியர் பெற்ற அனைத்துச் சிறப்புகளிலும் பெரும் பங்கு உண்டு.

 2015ஆம் ஆண்டு, வாகன விபத்து ஒன்றில் காலில் அடிபட்டு ஏறக்குறைய ஒரு மாதம் நான் படுக்கையில் இருக்கும்படி ஆனது. நாள்தோறும் எங்கள் வீட்டிற்கு மாலையில் ஸ்கூட்டரில் வந்து நலம் விசாரித்துச் சென்ற பாசத்தை மறக்க முடியாது. பத்து ஆண்டுகள் கழித்து, சென்ற ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் விபத்து ஒன்றில் அடிபட்டு அறுவைச் சிகிச்சை முடிந்து, மூன்று மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய நிலை எனக்கு. பேராசிரியரும் சிகிச்சையில் இருக்க, முன்போல் சந்திக்க இயலாமல் தவித்தோம். அப்படியும் டாக்ஸியில் வந்து ஓரிரு முறை நலம் விசாரித்துச் சென்றார். ஒரு கட்டத்தில், தொலைபேசியில், “என்னையா நீ இப்படி படுத்துக் கெடக்கற, சீக்கிரம் எழுந்து வாயா, போரடிக்குது” என்று பாசத்துடன் அழைத்த அக்குரல் என்றும் மறக்காது. மொழியாக்கத் துறையில் பேராசிரியருக்கு இருந்த ஈடுபாடு அளப்பரியது. ஒருநாள் ஒரே பிரதிக்கு பல மொழிபெயர்ப்புகளின் அவசியம் குறித்த பேச்சு வந்தபோது, ‘மதாம் பொவாரி’ (Madame Bovary)க்கு குய்ஸ்தாவ் ஃப்ளோபெர் (Gustav Flaubert) எழுதிய பிரஞ்சுப் புதினம் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கு தெரியுமா,” என்று சொல்லிவிட்டு, தம்மிடம் உள்ள நான்கு மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவந்து காட்டினார். மூலநூலில் உள்ள குறிப்பிட்ட பிரஞ்சு வாக்கியம் எவ்வாறு அந்த நான்கு மொழிபெயர்ப்புகளிலும் விதவிதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை வியந்தபடி விளக்கி, அவற்றுள் எது மேன்மையானது என்றும் மதிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன், அந்த நான்கு மொழிபெயர்ப்புகளையும் எனக்குப் பரிசளித்தார். அவை மட்டுமல்ல, அவ்வப்போது அவர் வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களும் அகராதிகளும் அவரை நினைவூட்டியபடி என்னுடன் உரையாடுகின்றன.

பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் இணைக்கும் பாலமாக அவர் திகழ்ந்தார். மும்மொழியில் அவரது ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், மொழியாக்கங்கள் அவர் விட்டுச்சென்றுள்ள அறிவின் நினைவுச் சின்னங்கள் ஆகும். குறிப்பாக, விரைவில் வெளிவரவிருக்கும் ‘பிரஞ்சுச் சிந்தனையாளர்கள்’ என்னும் அவரது நூல், மெய்யியல் துறையில் மகத்தான பங்கு வகிக்கும்.

“இது நம் தாய்மொழி இல்லப்பா; சந்தேகம் வந்தா அகராதியைப் பார்க்கத் தயங்கக் கூடாது” என்று பிரஞ்சு மொழியில் எழுதும் ஒவ்வொரு வரியையும் மறுவாசிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார். தம்மைப்போல் தம் மாணவரும் மேன்மையான இடத்தை அடைய வேண்டும் என்ற விருப்பம் அவருடைய அறிவுரையில் எப்போதும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

என் மொழியாக்கப் பணி சிறக்க எல்லாவகையிலும் உற்ற துணையாக இருந்து வழிகாட்டி வந்தார் என் பேராசிரியர். எந்த ஐயமாக இருந்தாலும், அன்று மாலையே அதைத் தீர்த்து வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். குறிப்பாக, அல்பெர் கமுய் எழுதிய ‘வீழ்ச்சி’ நூலை மொழியாக்கம் செய்தபோது, பல கடினமான பகுதிகளைக் கடக்க அவர் அளித்த விளக்கங்கள்தான் உதவின. அந்த மொழியாக்க நூலுக்கு அவரே அருமையான அணிந்துரையை வழங்கிப் பாராட்டியதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

பிரஞ்சு எழுத்தாளர்கள் மொப்பஸான், ஹான்ரி த்ரோயா (Henri Troyat), அல்பெர் கமுய், லெ கிளெஸியொ மட்டுமல்ல ஆங்கில எழுத்தாளர்கள் ரோல்ட் டால் (Roald Dahl), ரிச்சர்ட் மாத்தீஸன் (Richard Matheson) போன்றவர்களின் கதைகளையும் அவர்தான் அறிமுகம் செய்துவைத்தார். அனைத்து நூல் வெளியீட்டு விழாக்களிலும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அவருக்கேயுரிய மெல்லிய நகைச்சுவையுடன் வாழ்த்தி மகிழ்வார்.

பேராசிரியரின் மறைவு பல இடங்களில் வெற்றிடத்தை ஏற்படுத்திப் பலரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கிய பேராசிரியரை என்னைப் போல் பல மாணவர்களும் இழந்து நிற்க, வெளிவர உள்ள புதிய நூல்களோ தேர்ந்த வாசகர் ஒருவர் குறைவதை எண்ணி ஏமாற்றம் அடையும்.

காலத்தின் மதிப்பை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் நினைவுபடுத்தத் தவறியதில்லை. அவர் அளித்த அறிவுரைகள் எப்போதும் எனக்கு வழிகாட்டும். தனிப்பட்ட முறையில் அவருடைய இழப்பை அவ்வளவு எளிதாக என்னால் கடந்துசெல்ல இயலாது. மொழியாக்கத்தின்போதும், எனக்குத் தெரிந்த எந்த மொழியில் கட்டுரை எழுதினாலும் மொழிபெயர்த்தாலும், அவர் கூறியபடி அகராதியில் சொல்லின் பொருளை ஒருமுறைக்கு இருமுறை தேடிக் கண்டுபிடித்து, தெரிவுசெய்துள்ள சொல் சரியானதுதான் என உறுதிசெய்துகொள்வேன். என் இலக்கியப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் பேராசிரியரின் அறிவுரையும் நினைவும் என்றும் தொடரும்.

    மின்னஞ்சல்: vengadasouprayanayagar@gmail.com

***

பதிப்பாளருக்கு இனியர்

-கண்ணன்

பேரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை மொழி பெயர்ப்பாளராக, எழுத்தாளராக பெயரளவில் நீண்ட காலமாக அறிவேன். எனினும் நேர்ப்பழக்கமும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் அறிமுகத்தால் ஏற்பட்டது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியரைப் புதுச்சேரி இல்லத்தில் சந்தித்தேன். காலச்சுவடு இதழுக்கு அவர் எழுதுவது பற்றியும் நூல்களை மொழிபெயர்ப்பது பற்றியும் பேசினோம். பரிசு பெற்ற உலக எழுத்தாளர்கள் பலரையும் தெளிவாக காலச்சுவடு வாசகருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவை பிற நூல்களிலிருந்தோ இணையத்திலிருந்தோ திரட்டிய செய்திகளின் தொகுப்பாக அல்லாமல் அவருடைய வாசிப்பிலிருந்தே உருவான மதிப்பீட்டை மென்மையான தொனியில் முன்வைப்பவையாகவும் வாசகரை வாசிக்கத் தூண்டுபவையாகவும் இருந்தன.

அறிமுகமான காலத்திலேயே அவர் ஒரு முதிய மொழிபெயர்ப்பாளர். ஆக சுறுசுறுப்பான மொழிபெயர்ப்பாளரும் அவர்தான். வயது ஏற அவர் சுறுசுறுப்பும் அதிகமாகிக்கொண்டே வந்தது. ஓரிரண்டாண்டுகளுக்கு ஒரு நூல் என்று 2016 தொடங்கிக் கடந்த  10 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டுமூன்று நூல்கள் மொழிபெயர்த்தார். ஆண்டுவாரியாக அவர் மொழிபெயர்த்த நூல்களின் பட்டியல் இது:

1. முதலாளித்துவம் பற்றிய பத்துப் பாடங்கள் / மிஷேல் உய்ஸோன் / (2016)

2. முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை/ ஆந்திரேயி மக்கீன் / (2017)

3. சிரியாவில் தலைமறைவு நூலகம்/ தெல்ஃபின் மினூய் / (2019)

4. விடியலைத் தேடிய விமானம் / ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி / (2021)

5. தந்தைக்கோர் இடம் / அன்னி எர்னோ /(2022)

6. சின்னஞ்சிறு இளவரசன் / ஆந்த்துவான் த  சேந்தெக்ஸுபெரி / (2022)

7. ஆத்ம சகோதரன் / டேவிட் டியோப் / (2022)

8. ஒரு பெண்மணியின் கதை / அன்னி எர்னோ / (2023)

9. ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு / அலே(ன்) மபாங்க்கு (2025)

10. இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வு / தொமா பிக்கெத்தி / (2025)

அனைத்தையும் சொன்ன தேதியில் மின்னஞ்சலில் அவரே தட்டச்சுசெய்து அனுப்பிவிடுவார். சில நாள்கள் பிந்தினாலும் முதலிலேயே தகவல் தெரிவிப்பார். தட்டச்சில் ஓரிரு பிழைகள் விழுந்திருக்குமே அன்றி எடிட்டிங் தேவைப்பட்டதே இல்லை. காலச்சுவடின் உன்னதமான, உதாரணமான மொழிபெயர்ப்பாளர் அவர்தான்.

காலச்சுவடுக்கு இரண்டுமுறை பிரெஞ்சு இன்ஸ்ட்டிடியூட் வழங்கும் சிறந்த மொழி பெயர்ப்புக்கான ரோமைன் ரோலண்ட் விருது கிடைத்துள்ளது. இரண்டுமே அவருடைய மொழிபெயர்ப்புக்குத்தான் கிடைத்தது.

முதல் சந்திப்புக்குப் பின்னர் புதுவை வரும்போதெல்லாம் அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறேன். தன்னை முன்னிறுத்தாத இயல்பில் கரைந்த ஆளுமை அவருடையது.

நிறைவாழ்வு வாழ்ந்தார் என்றாலும் தொடர்ந்து வேகத்துடன் பங்களித்துவந்தார் என்பதால் அவரது மரணம் நமக்கெல்லாம் பேரிழப்புதான். அவரது அன்பின், ஆளுமையின் நிழலில் தோய்ந்தவர்களுக்கு தாளமுடியாத இழப்பாகவே இருக்கும்.

மனம் உவந்து பேராசிரியர் என்று விளிக்கத்தக்க ஆளுமையான எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி.

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.