வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளமை தெளிவு. இப்பேச்சு சுமார் 500 அல்லது 1000 மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. பேசிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அதன் ஒளிப்பதிவு ‘செக்குலர்’ ஆங்கில ஊடகங்களின் கையில் சிக்கி ‘தேசிய’ச் செய்தியாக மாறியது. பல நாட்களுக்கு மீண்டும் மீண்டும் அந்தப் பேச்சு மறு உற்பத்திசெய்யப்பட்டது. பல லட்சம் மக்களின் பார்வைக்குச் சென்றது.
வருண் காந்தியின் பேச்சை பா.ஜ.க. முதலில் கண்டித்தது. தனது தரப்பைப் பதிவுசெய்யப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் பா.ஜ.க. தில்லி அலுவலக வசதியை வருண் காந்தி கோரியபோது கட்சி மறுத்துவிட்டது. ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்பதே அதன் முதல் எதிர்வினையாக இருந்தது. வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மை தனக்குக் கிடைக்கும் வாய்ப்பில்லை என்பது அதற்குத் தெரியும். தேர்தலுக்குப் பிறகு அத்வானி தலைமையில் கூட்டணி அமைய வேண்டுமெனில் இன்று கொஞ்சம் அடக்கி வாசிப்பது அவசியம். கூட்டணியில் இருக்கும் எல்லாக் கட்சிகளும் இந்துத்துவச் செயல்திட்டத்தை ஆதரிப்பவை அல்ல. கூட்டணி மாறினால் கம்யூனிஸ்டுகளால் செக்குலர் கட்சிகளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டுவிடக்கூடிய கட்சிகளே பலவும். இந்தத் தேர்தலில் வளர்ச்சித் திட்டங்களைப் பிரச்சாரத் தளமாகவும் இந்துத்துவத்தை இலைமறை காயாகவும் முன்னெடுப்பது அதன் தந்திரோபாயமாகத் தெரிகிறது. வருண் காந்தியின் பேச்சு இதற்குப் பொருந்திவரவில்லை.
ஆனால் நமது செக்குலர் ஊடகங்கள் விடவில்லை. மீண்டும் மீண்டும் வருண் காந்தியின் பேச்சை ஒரு பிரச்சாரமாகவே முன்னெடுத்து உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் இந்துத்துவ இளைஞர்களுக்கு ஏற்பட்டிருந்த எழுச்சிக்கு நிகரான எழுச்சியை ஏற்படுத்தின. கட்டம் கட்டி வருண் காந்திப் பிரச்சனையைக் கையிலெடுக்க பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுத்தன. அது வெறும் நெருக்கடியாக மட்டுமல்ல, தேர்தல்கால அரிய வாய்ப்பாகவும் பா.ஜ.கவுக்கு அமைந்தது. வருண் காந்தி பிரச்சினைக்குக் காட்சி ஊடகங்கள் 300 மணி ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்கியதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. ஊடகங்கள் ஒரு புதிய இளைய தளபதியைப் பா.ஜ.க.வுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ராகுல் காந்தி பல ஆண்டுகளாக உழைத்து ஏற்படுத்திய பிம்பத்திற்கு நிகரான இந்துத்துவ ஆளுமையை செக்குலர் ஊடகங்கள் ஒரே வாரத்தில் வருண் காந்திக்கு ஏற்படுத்திக்கொடுத்தன.
வருண் காந்தியின் பேச்சு ஒரு ஊடகத்தின் கையில் ஒளிப்பதிவாகக் கிடைக்கப்பெற்றால் அது செய்தியாக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு செய்தியாவதைத் தொடர்ந்து அவர்மீது மாநில அரசும் தேர்தல் கமிஷனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மிக அவசியம். ஆனால் நடைபெற்றது வேறு.
வருண் காந்தியின் பேச்சு ஒரு திட்டமிட்ட பிரச்சாரமாக ‘செக்குலர்’ ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு செய்தி என்ற நிலையைத் தாண்டிய பிரச்சாரம் நடக்கும்போது, அவர்களின் அறிவிக்கப்பட்ட நோக்கம் மதவாதத்திற்கு எதிரான பிரச்சாரமாக இருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்குச் சென்று சேரும் செய்தி என்னவென்பதை அவர்கள் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. அது நடுநிலையாளர்களின் கசப்பாக, இந்துத்துவவாதிகளின் களிப்பாக, இஸ்லாமியர்களின் வெறுப்பாகவும் அச்சமாகவும் பல பரிணாமங்களைப் பெறக்கூடியது. ஓராயிரம் மக்கள் முன்னால் வருண் காந்தி இத்தகைய பேச்சை நிகழ்த்துவது வன்முறையைத் தூண்டும் என அச்சப்படுவது நியாயமானது. அவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தப் பேச்சைப் பலமுறை மறு உற்பத்திசெய்து அதை இந்திய மக்கள் முன்னர் பரப்பிய ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டாமா? பிலிபிட்டிற்குச் சென்று வருண் காந்தி உணர்ச்சிமயமான, கொந்தளிப்பான சூழலில் பெரும் வன்முறை ததும்பிய அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முடிந்ததென்றால் அந்த நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இந்துத்துவ சக்திகள் மட்டுமல்ல ஊடகங்களும்தாம் என்பதை உணர்வது முக்கியம். தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்குப் பல கட்டுப்பாடுகள். ஆனால் ஊடகங்களுக்கு இல்லையா? மும்பை 26/11 தாக்குதல் ஏற்படுத்தாத ஒரு மதப்பிளவு இன்று வருண் காந்தி பிரச்சனையில் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊடகங்களும் கணிசமான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இத்தகைய வன்முறைப் பேச்சை நிகழ்த்திய வருண் காந்திமீது அரசும் தேர்தல் கமிஷனும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் குற்றவாளியாகப் பார்க்கப்பட்டிருப்பார். ஆனால், அதையும் மீறிய தேர்தல் கால அரசியலில் அவை ஈடுபட்டதால் இந்துத்துவ வாதிகள் ஒரு தியாகியாக இன்று அவரை மக்கள் முன்வைப்பது சாத்தியப்பட்டுள்ளது.
வருண் காந்திமீது மாயாவதி அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டப்பட்டிருக்கும். ஆனால் கொலைக் குற்றச்சாட்டையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது பிரயோகித்திருப்பது தேர்தல் கால அரசியலாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, வருண் காந்தியின் பேச்சு வக்கிரமானது, ஆனால் அவர்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகிப்பது தேவையற்றது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் சமாஜ்வாதிக் கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும் இஸ்லாமியர்களின் ஓட்டை ஈர்ப்பது மாயாவதியின் நோக்கம். சில்லறை வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தால் பாயும் தேர்தல் கமிஷனுக்கு இந்த ‘மதச்சார்பற்ற’ அரசியலைத் தடுக்க அதிகாரம் இல்லை.
வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் எனத் தேர்தல் கமிஷன் பா.ஜ.கவுக்குப் போட்ட ‘உத்தரவு’ பொருத்தமற்றது. முதலில் அதற்கு இத்தகைய அறிவுறுத்தல்களை இலவசமாக வழங்கும் அதிகாரம் இல்லை. இரண்டாவது, சுதந்திர இந்தியாவின் எந்தக் கட்டத்திலும் எந்தக் கட்சியையும் அது இவ்வாறு அறிவுறுத்தியது இல்லை. வருண் காந்தி ‘கையை வெட்டிவிடுவேன்’ என வெறுப்பைக் கக்கியது உண்மை. ஆனால் கையை மட்டுமல்ல பல தலைகளை வெட்டியவர்களும் மதக்கலவரங்களையும் படுகொலைகளையும் நேரடியான செயல்பாடுகள் மூலம் தூண்டிவிட்டவர்களும் இன்று இந்தியாவெங்கும் அதிகாரத்தில் உள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள்.
அத்வானி உட்பட பல பா.ஜ.க. தலைவர்கள் ராம ஜென்ம பூமி இயக்கத்தின் வன்முறைக்கு நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். குஜராத்தில் பெரும் மதக் கலவரத்தைத் தலைமை ஏற்று ஜரூராக நிறைவேற்றிய மோடி இப்போதைக்கு அசைக்க முடியாத அதிகாரத்தில் உள்ளார். தில்லியில் 1984இல் சீக்கிய மதக்கலவரத்தில் முன்னின்று படுகொலையில் ஈடுபட்ட ஜெகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் தில்லி காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பின்னர், அமைச்சர் ப. சிதம்பரம்மீது சீக்கியப் பத்திரிகையாளர் ஜர்னயில் சிங் ஷூ வீசியது, சீக்கியர்களின் போராட்டம் ஆகியவற்றை அடுத்து - தேர்தல் கமிஷனுக்குப் பயந்து அல்ல - வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். 2004 தேர்தலிலும் இவர்கள் இருவருமே வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். ஆனால் இப்போது பிரச்சனை வெடித்ததற்குக் காரணம், 2004க்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட, 1984 சீக்கியப் படுகொலை பற்றிய நானாவதி கமிஷன் அறிக்கை இவர்களைக் குற்றஞ்சாட்டியதோடு மேலும் விசாரிக்கும்படியும் அறிவுறுத்தியிருந்தது. இப்போது டைட்லரை வேட்பாளராக அறிவித்த பிறகு, பெரிதும் அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகப் பார்க்கப்படும் சி.பி.ஐ., டைட்லருக்கு நிரபராதிச் சான்றிதழ் வழங்கியது. இதுவே சீக்கிய மக்களை ஆத்திரப்படுத்தியது.
தமிழகத்தில் பல படுகொலைகளில் குற்றவாளியாகக் கருதப்படும் மு.க. அழகிரி மதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவை ‘நோஞ்சாம் பய’ என்று வசைபாடியுள்ள அஞ்சாநெஞ்சர் இவர். கட்சி பேதமின்றி எல்லாக் கட்சிகளிலும் கிரிமினல்கள் வேட்பாளராகி அதிகாரத்திலும் பொறுப்பேற்று வருகிறார்கள். மத்திய அமைச்சரும் நாடறிந்த மதச்சார்பற்ற (ஆனால் சாதிச்சார்புள்ள) தலைவருமான லல்லு பிரசாத் யாதவ், தான் உள்துறை அமைச்சராக இருந்தால் வருண் காந்தியை ‘ரோட் ரோலரால் சட்னியாக்கியிருப்பேன்’ என முழங்கியிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் தனது வரையறைகளுக்கு உட்பட்டுப் பெரிதும் மேலோட்டமான நடவடிக்கைகளை எடுத்துவரும் தேர்தல் கமிஷன் மீடியா பிரச்சாரத்திற்கு இரையாகி நிலைதடுமாறி வருண் காந்தி பிரச்சனையில் பா.ஜ.கவுக்கு அறிவுறுத்தல் வழங்கியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
வருண் காந்தி இதற்கு முன்னர் இந்துத்துவ நிலைப்பாட்டை எடுத்ததில்லை. இதுகூட ஒரு தேர்தல்காலத் தந்திரப் பேச்சாக இருந்திருக்கக்கூடும். ஆனால், மீடியா அவருக்குக் ‘காவி காந்தி’ என்று சூட்டியிருக்கும் நாமத்திலிருந்து அவர் ஒருபோதும் மீள முடியாது. இனி அந்த நாமத்தில் அமிழ்ந்து தீவிரவாதியாகச் செயல்படுவதிலேயே அவருடைய அரசியல் நலன் தங்கியிருக்கிறது. அடுத்த அரை நூற்றாண்டுகாலம் தனது அரசியல் வாழ்க்கையில் தீவிர இந்துத் தலைவராக அவர் ஏற்படுத்த இருக்கும் தாக்கத்தின் சாத்தியப்பாட்டை நினைக்கும் போது வருத்தமே மேலோங்குகிறது. ஊடகங்களின் ஒரு வாரக் கூத்தின் தாக்கம் நம் வரலாற்றோடு பின்னிப்பிணைகிறது.
இனி நமது முற்போக்கு அறிவுஜீவிகளின் அணுகு முறை. இவர்கள் பார்வையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகப் பிரயோகிப்பது பிழை. ஆனால், கைதுசெய்யப்படுபவர் இந்துத்துவவாதி என்றால் மௌனம்.
இந்திய அரச அமைப்பில் குறிப்பாகப் பாதுகாப்புத் துறைகளில் ஒரு இந்துச் சார்பும் இஸ்லாமிய வெறுப்பும் இருப்பது உண்மை. எனவே இஸ்லாமியர்களைப் பயங்கர வாதிகளாகக் கைதுசெய்யும்போது பின்னணியை ஆராய்ந்து பார்ப்பது முறை. குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்வரை குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாகக் கருதப்படக் கூடாது; அவரது மனித உரிமைகள் பேணப்பட வேண்டும்; அவரை ‘உண்மை’ பேச வைக்கும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தக் கூடாது என்பன போன்ற போற்றுதலுக்குரிய நிலைப்பாடுகள் நமது முற்போக்கு அறிவுஜீவிகளிடம் உண்டு. ஆனால் இந்துத் தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டவுடன் அவர்களைக் குற்றவாளிகளாக முடிவுசெய்வது, அவர்கள் கண்டிக்கத் தகுந்த விசாரணை முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது மௌனம் காப்பது, இந்துத்துவவாதிகள்மீது அரசியல் காரணங்களுக்காகத் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்போது சற்றே சன்னமான ஆதரவை வழங்குவது - இதுவும் நமது முற்போக்குவாதிகளின் நடைமுறை. இன்னும் சொல்லப்போனால் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கும் ‘போலி மதச் சார்பின்மை’, ‘பக்கச் சார்பான மதவாத எதிர்ப்பு’ ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்கி, அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளுக்குக் குண்டு தயாரிப்பவர்களாகச் செயல்படுவது ‘செக்குலர்’ ஊடகங்களும் முற்போக்கு அறிவுஜீவிகளுமே.
வருண் காந்தி, நரேந்திர மோடி போன்றவர்களைப் பா.ஜ.க. போல உடனடியாக ஆதரிப்பவர்கள் மதவாதிகள்; சில பல ஆண்டுகளுக்குப் பின்னால் காங்கிரஸைப் போல ஜெகதீஷ் டைட்லரையும் சஜ்ஜன் குமாரையும் ஆதரிப்பவர்களை மதச்சார்பற்றவர்களாகப் பார்க்க முடியாது. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தால் மதவெறிக் கட்சி, பிரிந்துவிட்டால் செக்குலர் கட்சி என்பதும் அரசியல் அபத்தம். மதச்சார்பின்மை ஒரு கோட்பாடு; மதவாதம் அதற்கு முரணான மற்றொரு கோட்பாடு. இரண்டுக்கும் மாறிவருபவர்கள் சந்தர்ப்பவாதிகள். இதில் கங்கா ஸ்நானம், அக்னிப் பரிட்சை எதற்கும் இடமில்லை.
பிரச்சனை முற்போக்கு அறிவுஜீவிகளின் நல்லெண்ணம், ஆத்மார்த்தமான நோக்கம் பற்றியதல்ல. கடந்த இருபது ஆண்டுகளாகச் சமூகத்தளத்தில் நிகழும் மதவாத அரசியலை மறுக்க முதலில் அதை நேர்மையாக விளங்கிக்கொள்வதும் புராதன நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்துகொள்வதும் இன்றியமையாத தேவை என்பதை உணர வேண்டும். தடம் பதித்த பாதைகளில் பயணிப்பதையும் தேங்கிக்கிடக்கும் முற்போக்குக் கோட்பாட்டுக் குட்டைகளில் முகம் பார்த்து ஒப்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இன்றைய இந்தியச் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ள இன்று புதிதாகச் சிந்திப்பது அவசியம்.
கோசாம்பியை அடியொற்றிச் சொல்வதென்றால், ‘மதச்சார்பின்மை சிந்திப்பதற்கு மாற்று அல்ல!’