அமெரிக்கக்காரி
ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத்
தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி
இழுத்துத் தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ
ஒன்று அவளிடம் இல்லை அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது
தெரிந்தது.
பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்களோ முக ஒப்பனைகளோ அவள் செய்துகொள்வதில்லை. அதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப் போலப் பேசுகிறாள் என்று சொல்ல முடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழக உதவிப் பணம் பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெ