சுதந்திரச் சந்தையின் சுவரொட்டிப்பாவை
என்னுடைய இங்கிலாந்து வாழ்க்கை தாட்சர் ஆட்சிக் காலத்தில்தான் ஆரம்பித்தது. அவை எழுச்சியூட்டும் நாட்கள் அல்ல. இந்த வரியிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தக் கட்டுரை தாட்சரைப் பற்றி வணக்கத்துடனும் மரியாதையுடனும் இருக்கப்போவதில்லை என்று.
நான் வருவதற்கு முந்திய ஆண்டில் அவரின் அரசு ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்று பங்காக உயர்த்தியிருந்தது. நல்லவேளை, அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி ஆண்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே என் ஆராய்ச்சியைத் தொடங்கியபடியால் நான் தப்பித்துவிட்டேன். அவரின் இன்னுமொரு செயலும் என்னை அவரது அரசியல் செயல்பாடுகளில் நெருங்க முடியாமல் செய்தது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ‘வந்தேறிகள் இங்கிலாந்தை மொய்க்கிறார்கள், முக்கியமாகப் பெருந்திரளாகப் பொதுநல ந