“மனித உரிமைப் போராட்டங்களின் பயனை அரசியல் கட்சிகள் அறுவடை செய்கின்றன” - நீதிபதி சந்துரு
தனது சமரசமற்ற பார்வையாலும் சமுதாய அக்கறையாலும் மனிதாபிமான உணர்வாலும் நீதித் துறை மீது மதிப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சந்துரு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார். பதவி ஏற்கும்போதும் பதவியில் இருக்கும்போதும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோதும் செய்தியாகவே இருந்தார். வழக்கறிஞராக அவரது அறச் செயல்பாடுகளும் நீதிபதியாக அவர் அளித்த முக்கியமானத் தீர்ப்புகளுமே அந்த செய்தி முக்கியத்துவத்துக்குக் காரணமாக அமைந்தவை. காட்சிக்கு எளியவர். கடும் நீதியுணர்வு கொண்டவர் என்பதை அவரது பணிக்காலத்திலும் பணி ஓய்வு பெறும் தருணத்திலும் நிரூபித்தவர். பணி ஓய்வு பெற்ற பின்னரும் பரபரப்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்த சந்துருவுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இல்லத்தில் மார்ச் 17 அன்று நடத்திய நேர்காணலின் பகுதிகள் இவை.
நீண்ட காலமாக வழக்கறிஞராகவும் சில காலம் நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளீர்கள். உங்கள் பணியில் நீதித்துறையிலும் நீதி குறித்த கருத்துருவாக்கத்திலும் பலவிதத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. சாதாரண மனிதர்களுக்காகப் பல வழக