கார்ப்பரேட் இந்தியா
கார்ப்பரேட்டுகளில் ஒரு பகுதியினர் நமோவையும் மற்றொரு பகுதியினர் ராகாவையும் முன்னிறுத்தி வருகின்றனர். இதில் பேச்சாற்றலும் நடிப்புத்திறனும் மிகுந்த, பழம் தின்று கொட்டைபோட்ட மஸ்தான் முன்னர் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் அமுல் பேபியின் செயலூக்கம் இதுவரை எடுபடவில்லை. கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்கள் அதிகமும் மோடியை முன்னிறுத்திப் பேசிவருகின்றன. பெரும் ஊழல்களாலும் குற்றங்களாலும் பற்றாக்குறைகளாலும் கதிகலங்கிப் போயிருக்கும் நாட்டிற்கு இன்று வலுவான தலைமை தேவை என்ற எண்ணம் பெருகிவருகிறது. மோடியின் எழுச்சி இந்துத்துவர்களுக்கு உற்சாகத்தையும் இடது சாரிகளுக்கு, தாராளவாதிகளுக்கு, மதச்சிறுபான்மையினருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கார்ப்பரேட் இந்தியாவால் மோடியைப் பிரதமராக்க முடியுமா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.
தன்னால் இதைச் சாதிக்க முடியும் என கார்ப்பரேட் இந்தியா நம்புகிறது. அதனால் முடியும் என அதன் விமர்சகர்களும் அஞ்சுகின்றனர். கார்ப்பரேட் இந்தியாவின் விமர்சகர்கள் இந்திய ஊடகங்களை அது கிடுக்குப் பிடியில் வைத்திருக்கிறது என்றும் வருங்கால இந்தியாவை அதுவே வழிநடத்தும் என்றும் கருதுகிறார்கள். தமது நாடுகளை அபிவிருத்தி செய்ய விரும்புவோர்க்கு உலகெங்கும் கார்ப்பரேட்டுகளின் மிதமிஞ்சிய அதிகாரம் பிரச்சனைக்கு உரியதாகவே உள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கும் பொதுமக்களுக்குமான முரண்பாடே வருங்கால உலக அரசியலைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.
இந்நிலையில் கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடுவது அபத்தமானதாகவும் ஆபத்தானதாகவுமே இருக்கும்.
இருப்பினும் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை முழுவதுமாக நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தியக் கார்ப்பரேட்டுகளிடம் இருப்பதாக நம்ப வலுவான காரணிகள் இல்லை. அவர்களிடம் பணம் இருக்கிறது. ஊடக அதிகாரம் இருக்கிறது. இவை இரண்டுமே அரசியலுக்கு மிக முக்கியமானவை. இருப்பினும் இவை இரண்டும் இருந்தால் ஓட்டுகளைச் சரிக்கட்டிவிடலாம் என்ற பொதுவான கருத்து எனக்கு இல்லை. இந்திய மக்கள் மேன்மையானவர்கள், அறிவாளிகள் என்றெல்லாம் மூட நம்பிக்கைகொண்டு இதை எழுதவில்லை. பணத்திற்கும் சாதிக்கும் மதத்திற்கும் இணங்கியதாகவே அவர்கள் ஓட்டு பல சமயங்களில் தென்படுகிறது. இருப்பினும் இவற்றை எப்போது மீற வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அத்தோடு எந்த ஒரு திட்டத்திலும் கணிப்பிலும் அவர்களுடைய செயல்பாடுகள் அடங்குவதில்லை.
இந்தியத் தேர்தல் முடிவுகளில் ஊடகங்கள் செலுத்தும் தாக்கம் மிக முக்கியமானது. ஆனால் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டதாக இதுவரை அவை அமையவில்லை. இந்தியா போன்ற பல மொழிகளும் இனங்களும் மதங்களும் சாதிகளும் கொண்ட நாட்டின் தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மற்றும் பணத்தால் கட்டுப்படுத்துவது அமெரிக்காவில் நடப்பது போன்ற எளிமையான காரியம் அல்ல. அமெரிக்கர்களைப் போல அல்லாமல் இந்தியர்கள் தமது தலைவர்களையோ ஊடகங்களையோ நம்புவதில்லை. அவர்கள்மீது குவிக்கப்படும் பொய்களிலிருந்து ஏகதேசமான உண்மையைக் கிரகிக்கும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது.
2011 தேர்தலில் திமுக செய்துகாட்டியதையும் தாண்டித் தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்துவதில் யாரும் முனைப்புக் காட்ட முடியாது. அதிகார பலம், ஊடக பலம் எதுவும் இறுதியில் எடுபடவில்லை. தமிழின் ஆகப் பெரும் ஊடகமான சன் குழுமம் விஜயகாந்தைக் குறிவைத்து நடத்திய பிரச்சாரம் தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
நரேந்திர மோடிக்கு பாஜகவின் கொள்கைகளைத் தாண்டிய ஒரு ஆதரவு ஏற்பட்டு வருகிறது. ஆனால் பாராளுமன்ற அரசியலில் இந்த ஆதரவை அப்படியே எம்.பி.களின் எண்ணமாக மாற்றிவிட முடியாது. உதாரணத்திற்கு ‘வளர்ச்சி’ என்ற கருத்தியலுக்கு மனதைப் பறிகொடுத்த சில மதச் சிறுபான்மையினர் மோடியை ஆதரித்துப் பேசுகின்றனர். ஆனால் தில்லியில் மோடி அதிகாரம் பெற ஆதரிப்பவர்கள் உள்ளூரில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று கொள்ள முடியாது. அத்தோடு நாடெங்கும் சிதறிக்கிடக்கும் மோடி ஆதரவாளர்களின் வாக்குகளைப் பாராளுமன்ற ஸீட்டுகளாக மாற்றும் தேசிய வலைப்பின்னல் இன்று பாஜகவிடம் இல்லை. எனவே மோடி பிரதமராவது 2014இல் சாத்தியமானதாக எனக்குத் தோன்றவில்லை.
உண்மையான ஆபத்தாக நான் பார்ப்பது வேறு. 2014இல் தமது நோக்கத்தில் கார்ப்பரேட்டுகள் தோல்வி அடைந்தால் இந்திய அரசமைப்பை அமெரிக்காவைப் போல ஜனாதிபதி முறைக்கு மாற்ற முயற்சிக்கக்கூடும். ஜனாதிபதி முறையில் ஊடகங்கள் வழி தலைவரை நிர்ணயிப்பது பெருமளவுக்குச் சாத்தியப்படும். இது பற்றிய விழிப்புணர்வை இப்போதே நாம் ஏற்படுத்திக்கொள்வது நல்லது.