உண்ணாமுலை
காராவை நினைக்கும்போதெல்லாம் இப்போதுகூட மெல்லிசான வெண்கல நிறத்தட்டுகளில் கழுத்துத் திருகி அணைக்கப்பட்டிருக்கும் சிகரெட்டு முனைகளும் கொட்டாவிகளைப்போல் வெக்கையாய்க் காய்ந்துகொண்டிருக்கும் மிக நீளமான வாரநாள் மத்தியானங்களும்தான் நினைவுக்கு வருகின்றன.
ஆர்ச்சர்ட் டவர்ஸ்ஸுக்கு எதிர்த்தாற்போல் இருக்கும் கட்டடத்தில் சாலைத் தளத்துக்குச் சற்றே தாழ்வாகச் சறுக்குப் பாதைபோன்று இருக்கும் நுழைவாயிலுக்கு இடதுபுறமாக அயர்லாந்து மதுபானக் கூடம் இருந்தது. அதன் வெளியே போடப்பட்டிருந்த மர மேசை ஒன்றில் காராவும் நானும் அமர்ந்திருக்கும்போது அவளிடத்தில் என் திருமணப் பத்திரிகையைக் கொடுத்தேன்.
நான்கரை மணி வெய்யில் அழுக்கேறிய சிவப்புக் கற்கள் பதிக்கப் பட்டிருக்கும் தரை, முன்னால் இருந்த கனமான கண்ணாடி பீர் கோப்பைகள், எங்கள் இருவரின் விரல் நகங்கள், உதடுகள், கன்னக் கதுப்புகள், தலைமயிர்கள் அனைத்திலும் பாதரசக் குழம்பாய்த் தகதகத்துக் கிடந்தது. அருகிலிருந்த மேசைகளில் அலுவலக ஊழியர்கள் சிலர் ஆண்களும் பெண்களுமாக உரக்கச் சிரித்துப் பேசியபடியே மதுபானங்களை அருந்திக்கொண்டிருந்தார்கள்.
காரா நெற்றிக்கு மேல்ப