ஆளுநர்களின் முடிவெடுக்கும் அதிகாரம்
தேர்தலுக்குப் பின்னர் கர்நாடகாவில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் அரசமைப்பு ஜனநாயகத்தின் நிலைமையைப் பற்றிக் கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றில் கர்நாடகா வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை அளிக்கவில்லை. மே 12ஆம் தேதி நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 222 சட்டமன்றத் தொகுதிகளில் 104 இடங்களை வென்றதன் மூலம் தான் ஆட்சிக்கு வர மக்கள் வாக்களித்திருப்பதாக பாரதீய ஜனதா கட்சி கூறுகிறது. அதிகபட்ச சதவீத வாக்குகளைத் தாம் பெற்றிருப்பதாலும், ஆட்சியில் இருந்த நிலையிலும் தனது வாக்கு சதவீதம் சற்று அதிகரித்திருப்பதாலும் மக்கள் தனக்கெதிராக வாக்களிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரசும் ஜனதா தளமும் (மதச்சார்பின்மை) சேர்ந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளையும் இடங்களையும் வென்றிருப்பதால் ஆட்சியமைக்கும் உரிமை தமக்கிருப்பதாக அவை கூறுகின்றன.
இத்தகைய சூழலில் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்பதைப் பற்றி இந்த வழியில்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆளுநருக்கு வழிகாட்டக்கூடிய வகையில் தெளிவான சட்டம் ஏதுமில்லை; ஆதலால் அவர் பாஜகவையோ அல்லது காங்கிரஸ், ஜேடி (யு) கூட்டணியையோ ஆட்சியமைக்க அழைப்பதில் கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலாவிற்கு சட்டப்படியாக எந்தத் தவறும் இருந்திருக்காது. ஆட்சியமைக்க அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைப்பதா அல்லது அதிக இடங்களைப் பெற்றுள்ள, ஆனால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை ஆட்சியமைக்க அழைப்பதா என்பதில் யாருக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆளுநர்களுக்குத் தெளிவாக வழிகாட்டவில்லை. நிலையான அரசாங்கம் அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் உள்ளன என்பதை ஆளுநர்கள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எப்படியிருந்தபோதிலும் எந்தக் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தாலும் அது உறுதியான அழைப்பு அல்ல. ஆட்சியமைக்க யார் அழைக்கப்பட்டாலும் அவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.
தேர்தல் முடிவுகள் பல்வேறு வகைப்பட்டவையாக இருப்பதால் ஆளுநர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லா சந்தர்ப்பங்களுக்குமாக வரையறுப்பது என்பது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கக் கூடும். சட்டப்படியாகவோ சட்டத்திற்கு புறம்பாகவோ சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறமுடியும் என்ற நிலையில் ஏற்கத்தகாத வழிகளில் ஆட்சியமைக்க வாய்ப்பளிக்காதவாறு நடந்துகொள்வது ஆளுநரின் கடமை. பி.எஸ். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்ததன் மூலம் ஆளுநர் வாலா, இப்போதெல்லாம் அரசமைப்பு அலுவலகங்களிடம் நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்பதைக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவயப்படாது நடுநிலையுடன் ஆளுநர் அலுவலகம் செயல்பட வேண்டுமென்று அரசமைப்பு அவை எதிர்பார்த்தது என்றாலும் அதன் எதிர்பார்ப்பு தொடர்ந்து பொய்த்துப்போனது. 1950களிலேயே கூட அப்போது சென்னை மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஸ்ரீபிரகாசம், தேர்தலுக்குப் பிறகு உருவான பெரும்பான்மைக் கூட்டணியை அங்கீகரிக்க மறுத்து காங்கிரசின் சி. ராஜகோபாலாச்சாரியை (சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லாதவர்) ஆட்சியமைக்க அழைத்தது அரசமைப்பு அவையின் நம்பிக்கை எவ்வளவு விரைவில் பொய்த்துப்போனது என்பதைக் காட்டியது.
ஆளுநர் வாலாவின் செயல்களில் கட்சி சார்பும் ஏமாற்றும் நோக்கமும் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. எடியூரப்பாவிற்கு ரகசியமாக அழைப்பு விடுக்கப்பட்டு உடனடியாக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட விதம் உட்பட ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் பாஜகவிற்கு உதவியாக நடந்துகொண்டது தெரிகிறது. இப்போதைய சூழலின் உண்மை நிலவரங்கள் தெளிவானவை. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றத்தில் காங்கிரசும் ஜேடி (யு)வும் சேர்ந்து 112 க்கும் அதிகமான (அதாவது பாதிக்கும் அதிகமான) இடங்களைப் பெற்றிருந்த நிலையில், குறைவான இடங்களைப் பெற்றிருந்தபோதிலும் ஆட்சியமைக்க பாஜக அழைக்கப்பட்டதுடன் காங்கிரஸ், ஜேடி (யு)விடமிருந்து அவற்றின் சட்டமன்ற உறுப்பினர்களை நேர்மையற்ற வகையில் விலகிவரச் செய்வதற்கான வேலைகளைச் செய்ய பாஜகவிற்கு வாய்ப்பும் தரப்பட்டது. அனில் குமார் ஜாவிற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில் (2005) உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பிற்கு நேரெதிரிடையாக, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் முன்னரே ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைச் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்க முயன்றது வாலாவின் நடுநிலைமை பற்றி இருந்த
கொஞ்சநஞ்ச சந்தேகத்தையும் போக்கிவிட்டது.
உச்ச நீதிமன்றம் தலையிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த நாள், அதாவது மே 19ஆம் தேதியே நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டதாலும், சந்தேகத்திற்குரிய வழிகளில் பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சிகளைத் தடுத்ததன் விளைவாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடப்பது ஓரளவு சாத்தியமானது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்னரே ஆங்கிலோ இந்தியர் ஒருவரை எம்.எல்.ஏ.வாக நியமிக்க ஆளுநர் முயன்றது, அமைச்சரவையே இல்லாமல் அரசாங்கத்தை நடத்துவதில் எடியூரப்பா காட்டிய வெட்கமற்ற அவசரம் ஆகியவை இதில் ஏமாற்றுவேலை இருக்கிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. என்றுமில்லாத அளவிற்குத் தனது நம்பகத்தன்மை குறைந்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் முக்கியமான அரசியல் செயல்பாட்டைப் போதுமான அளவிற்கு நடுநிலைமையுடன் நடத்தியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எது எப்படியிருந்தபோதிலும் ஆளுநர் அலுவலகம் நேர்மையற்று நடந்துகொள்வற்கான பழியை ஒரு கட்சியின் மீதோ அல்லது ஒரு தலைவரின் மீதோ சுமத்திவிட முடியாது. விதிவிலக்கே இல்லாமல் எல்லா மத்திய அரசுகளும் ஆளுநர் அலுவலகத்தை மாநில அரசியலில் தனக்குச் சாதகமாக தலையிட பயன்படுத்தியிருக்கின்றன அல்லது பயன்படுத்த முயற்சிசெய்திருக்கின்றன. குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது அல்லது ஆளும் கட்சியின் பெரும்பான்மையைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் ‘எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு’ உதவுவது என எல்லா வகையான நேர்மையற்ற செயல்களிலும் மத்தியிலுள்ள ஆளும் கட்சிக்குச் சாதகமாக ஆளுநர்கள் நடந்துகொண்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஆளுநர் வாலாவின் செயல்கள் விதிவிலக்கானவை, முன்னுதாரணமற்றவை என்று யாராவது சொல்லுவது நேர்மையற்றதாகவே இருக்கும்.
தேர்தல்கள் எந்த அளவிற்குச் சீரான கால வரிசையில், நேர்மையாக, சுதந்திரமாக நடக்கின்றன என்பதை வைத்து இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை மதிப்பிட்டால் அது நல்ல நிலையிலிருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை வைத்துப்பார்த்தால் மதிப்பீடு முற்றிலுமாக மாறுகிறது. கடந்த ஆண்டு கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்ததன் அடிப்படையில் பார்க்கிறபோது யார் ஆட்சியமைப்பது என்பதைத் தேர்தல் முடிவுகள் நிர்ணயிப்பதில்லை என்பது தெரிகிறது. இப்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் இந்தியாவின் அரசமைப்பு ஜனநாயகத்தின் உண்மையான நிலையை நமக்குக் காட்டியிருக்கிறது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, மே 19 , 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com