பிரேதங்களினால் கட்டுடைக்கப்படும் அரசுகள்
பிரேதத்தை மையப்படுத்தி வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு சூழலில் வெளியாகிய படங்கள் மிக முக்கியமான சமூக, அரசியல் வன்முறையை, அநீதியைப் பதிவு செய்துள்ளன.
2011இல் வெளியானது Human Resources Manager என்ற ஹீப்ருருமேனிய-ஆங்கிலப் படம். பேக்கரியில் வேலை பார்த்த பெண் இறந்துவிட்டார். ஜெரூசலேத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலிலேயே அப்பெண் இறக்கின்றார். இறந்த பெண்ணின் உடலை மனிதாபிமானமற்ற முறையில் தவிர்ப்பதாக அதாவது கவனமெடுக்கத் தவறியதாக பேக்கரிமீது உள்ளூர் பத்திரிகை ஒன்று குற்றஞ்சாட்டியது. பேக்கரி முதலாளியின் வேண்டுகோளுக்கிணங்க அப்பெண்ணின் உடலை ருமேனியாவிலுள்ள கிராமத்திற்குத் தரைவழியே, பேக்கரியின் மனிதவள முகவர் கொண்டு செல்கின்றார். உடலுடன் பயணிப்பவரும் ஒரு ஊழியர், இப் பயணத்தில் அவரது உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. போரின் அவலங்களையும் முன்னாள் சோவியத் யூனியனின் ஆட்சியிலிருந்த கிராமங்களையும் இயக்குநர் பதிவாக்கியுள்ளார். இப் படம் போர், உலகமயமாதல், நவதாராளவாதம் ஆகியவற்றின் விளைவை ஒரு பயணத்தினூடாகவும் இறந்த மனிதனின் உடலூடாகவும் வெளிப்படுத்தியுள்ளது. பேக்கரியின் அக்கறை அப் பெண்ணல்ல, அவரது இறந்த உடலுமல்ல. தனது வியாபாரம் இதனால் பாதிக்கப்படக் கூடாது. அதே சமயம் இறந்த உடலை, இறந்தவரின் குடும்பத்திடம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நல்ல பெயரின் வழியாக பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தங்களது வருமானத்தை அதிகரிக்க, சமூக அக்கறை கொண்டுள்ளதாக வெளிப்படுத்துகின்றன. வணிக நல விடயங்களில் அக்கறையுள்ளதாக காட்டிக்கொள்கின்றன. போர் நடைபெறும் இடத்துக்கு வேலை தேடிச் செல்ல வேண்டிய அவலம், ருமேனியாவில் சமூகப் பொருளாதார உடைவினாலேயே ஏற்படுகின்றது. இந்த சமூகச் சிதைவின் காரணிகளை பிரசன்னா விதானகே தனது படமான ‘முழு நிலவில் மரணம்’ படத்தில் விசாரணைக்குட்படுத்துகின்றார்.
பிரசன்னா விதானகேயின் புரசந்த கலுவர Purahanda Kaluwara (Death on a Full Moon Day)வில் உடலானது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வியல் முதலீடாக வெளிப்படுகின்றது.
தந்தை தனது மகன் இறந்துவிட்டான் என்பதனை நம்ப மறுத்து, இராணுவ மரியாதைகளுடன் புதைக்கப்பட்ட இராணுவ வீரனின் சவக்குழியைத் தோண்டுகின்றார். தங்களது குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டுவதற்கும் தனது சகோதரியின் திருமணத்தை நடத்துவதற்குமே மகன் இராணுவத்தில் இணைகின்றான். அவனது உடல் அக்குடும்பத்தின் பல பிரச்சினைகளைத் தீர்க்கின்றது. புலிகளுடன் போரிட்டபோது நிலையான வருமானம் அக்குடும்பத்திற்குக் கிடைத்தது. பின்னர் உடலுக்கான ஓய்வு ஊதியத் தொகை கிடைக்கும். தந்தைக்கோ மகனின் இறப்பு முதலாவது, போரில் தோற்றுவிட்டது இரண்டாவது; தனது குடும்பம் முதலீடு இல்லாமல் அழிந்துவிட்டது ஆகிய இரண்டு காரணிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் தமது அக உணர்வுகளுடன் முரண்பட்டே செயல்படுகின்றனர். இதனைக் காட்சிகள் இயல்பாக வெளிப்படுத்துகின்றன. போரின் மீதான அல்லது பெரும்பான்மை சமூகத்தின் பிரதிநிதியாக, குற்ற உணர்வின் வெளிப்பாடாக, தனது சமூகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் விசாரணையாக இப்படத்தை பிரசன்னா காட்சிப்படுத்தியுள்ளார். இன்று போருக்குச் செல்லும் மேற்கு நாடுகளின் இராணுவ வீரர்களை, இராணுவத்தில் இணைப்பதற்கான விளம்பரங்களில், அவர்களது வறுமையிலிருந்து அவர்கள் மீட்கப்படுவார்கள் போன்று காட்டப்படுகின்றன.
பப்லோ லறைனின் போஸ்ட் மோர்ட்டம் திரைப்படத்தில், சிலியின் சோசலிச ஜனாதிபதி சல்வடோர் அலெண்டேயின் உடலைப் பரிசோதிக்கும் காட்சிகள் வருகின்றன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரேதப் பரிசோதனைக் கூடத்திலேயே நடைபெறுகின்றன. அங்கு பிரேதப் பரிசோதனை அறைக்கு வரும் உடல்கள் மத்திய வர்க்க, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் உடல்களே. உயிருடன் கொண்டுவரப்படுவோரும் அங்கு சாகடிக்கப்படுகின்றனர். இந்த இரு வர்க்கத்தினரே புரட்சியில் பெரும்பாலும் பங்கு பற்றுபவர்கள். நடுத்தர வர்க்கத்தின் சிதைவை இந்தப் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் காணலாம்.
2017இல் வெளிவந்த முக்கியமான படம் ‘மனுசங்கடா’. இப்படத்தின் இயக்குநர், ஒரு திரைப்பட விமர்சகர், நூலாசிரியர், விரிவுரையாளரான அம்ஷன் குமார். இப் படத்தில் உடலின்மீது உயர் சமூகத்தின் ஒடுக்குமுறை வெளிப்படுகின்றது. எப்பொழுதும் ஆக்கிரமிக்கும் சமூகத்துக்கு, அரசு இயந்திரங்கள் உதவியாக இருக்கும். அதே போல் அரசுக்கும் ஆக்கிரமிக்கும் சமூகம் ஆதரவு கொடுக்கும். இங்கும் அதுதான் நடைபெறுகின்றது.
‘மனுசங்கடா’ திரைக்கதை தமிழ்த் திரையுலகிற்குப் புதியதல்ல. ஆனால் வித்தியாசமானது. கோலப்பன் தந்தை இறந்துவிட்டார். சென்னையிலிருந்து கிராமத்துக்குச் செல்கின்றார் கோலப்பன். அவரது தந்தையின் உடலை எரிப்பதற்கு எடுத்துச் செல்லும் பாதை, உயர் சாதியினருக்குரியது. எனவே மாற்றுப் பாதையான புதர் நிறைந்த பாதையினூடாகவே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம். இதனை கோலப்பன் எதிர்க்கிறார். கோலப்பனுக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. ஆனால் உயர் சமூகம் ஏற்க மறுக்கின்றது. இறுதியாக போலீஸ், உடலைப் புதைத்துவிடுகின்றது. எங்கு புதைக்கப்பட்டது என்பதனையும் தெரிவிக்கவில்லை. இங்கு உடல், பாதை, அரசு , உயர் சமூகம் போன்றவையே பிரதான பாத்திரங்கள். பின்னணி இசை பல இடங்களில் மவுனித்து, கிராமத்து இயல்பான ஒலியைப் பதிவு செய்கின்றது. அரசை விட உயர் சமூகமே ஆதிக்கச் சக்தியாகவுள்ளது. அவர்களை நீதிமன்றத் தீர்ப்புகள் எதுவுமே செய்யமுடியாது. ஏனெனில் நீதியின் காவலர்கள், உயர் சமூகத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டுச் செயல்படுகிறார்கள். ஓர் இறப்பின் பின்னரே படம் ஆரம்பமாகின்றது. உணர்ச்சியூட்டக்கூடிய சம்பவம் இருந்தும் அதன் பின்னாலுள்ள அரசியலுக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும் முக்கியத்துவமளித்துள்ளார் இயக்குநர். பாத்திரங்கள் உணர்ச்சிவசப்பட்டிருந்த போதும், அவர்கள் சார்ந்த சமூகம் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதற்காகவே குளோசப் காட்சிகளைப் பெரும்பாலும் தவிர்த்துள்ளார். காமிராவைக் கையாண்ட முறையும் வித்தியாசமானது. கைகளில் காமிராவை வைத்து முன் பகுதியில் படமாக்கியுள்ளார். ஆனால் நிலையற்ற நீதிமன்றத்துக்கு, நிலையாக ஒளிப்பதிவுக் கருவியை நிறுத்தியுள்ளார். மறுபுறம் அக வாழ்வின் சமூக அத்திவாரங்களைக் கட்டுடைத்துள்ளார். சமூகம், தனி நபர், அரசு மூன்றும் இணையும்பொழுது தோன்றும் ஆக்கிரமிப்பு நிலையானது, வலிமையானது. இதுவே தொடர்ந்து வரும் நிலையற்ற, நீதியற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றன. இதனை ஆழமான விசாரணைக்குட்படுத்துகிறார் அம்ஷன் குமார். தமிழில் வெளிவந்த படங்களில் முக்கியமான படம் ‘மனுசங்கடா’. இவ்வாறான படங்கள் தமிழின் புதிய சினிமாவுக்கான பாதையை உருவாக்குகின்றன.
மேற்கூறிய படங்கள் அனைத்தும் நீதியின் சார்பு நிலை, நிலமானியச் சமூக ஒழுங்கின் நிலை, நடுத்தர வர்க்கத்தின் சிதைவு, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் அழிவு, சமூக சக்திகளின் அதிகார நிலை போன்றவற்றை ஆழமாக மீளாய்வுக்குட்படுத்துகின்றன. அவ்வகையில் இன்றைய காலக்கட்டத்தில் இப்படங்களின் உடல்கள் ஒரு கட்டுடைப்பைச் செய்கின்றன.
மின்னஞ்சல்: rathan100@gmail.com