காதலாகிக் கனிந்து...
எழுத்தாளர் பாலகுமாரன் சமீபத்தில் மறைந்தார். நீண்ட காலமாகவே அவரது உடல்நிலை சீர்கெட்டிருந்தது. அதைப்பற்றித் தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தெரிவித்துக்கொண்டுதான் இருந்தார். இளமையில் ஓயாது பிடித்த சிகரெட்கள்தான் அவரது உடல்நலம் கெடக் காரணம் என்ற தகவல் அவரது எண்ணற்ற கட்டுரைகள் மூலம் உலகுக்குத் தெரியும். பாலகுமாரனின் பிரபலத்துக்கு அவரது இந்த ‘தனது வாழ்வை, வெற்றியை, தோல்வியை, காதலை, கள்ளக்காதலை, புகைபிடிக்கும் பழக்கத்தை, வத்தக்குழம்பு பிடிக்காததை’ நேரடியாகவோ புனைவுகளின் மூலமாகவோ வாசகர்கள் முன் வைத்துக்கொண்டே இருந்தது காரணமாக இருக்கலாம். நாம் ஒரு வாழ்க்கையுடன் உரையாடலில் இருக்கிறோம் என்ற தோற்றத்தை அவர்களுக்கு அது அளித்தது.
தமிழ்ப்பரப்பில் வெகுசிலரே இப்படி ஒரு தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். பாலகுமாரன் மறைந்ததும் அவரது வாசகர்கள் பலர் கண்ணீர் விட்டழுதார்கள். தங்கள் வாழ்க்கையை மாற்றிச் சீரமைத்த ஆசானை அவர்கள் இழந்துவிட்டதாக உணர்ந்தார்கள். இதனால் சிலரது கேலிக்கும் உள்ளானார்கள். பாலகுமாரனின் இலக்கிய இடம் என்ன என்பது மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குள்ளானது. அவர் முற்றிலும் ஒரு வணிக எழுத்தாளர் என்று சிலர் புறம் தள்ளினார்கள். மாத நாவல்களிலும் பெரிய பத்திரிகைகளிலும் தொடர்கதை எழுதிய இரண்டாம்தர கேளிக்கை எழுத்தாளர் என்றும் சொன்னார்கள். அவர்களே, அவர் பார்ப்பனிய சிந்தனை
களைத் தந்திரமாகத் தனது பிரதிகளில் நுழைத்த எழுத்தாளர் என்றும்
சொன்னார்கள்.
சுஜாதா, பாலகுமாரன் இருவரது பெயர்களும் தீவிர இலக்கிய வட்டாரங்களில் அதிகம் வெறுக்கப்
பட்டவையாக ஒரு காலத்தில் இருந்தன. சுஜாதா இதை அவருக்கே உரிய புத்திசாலித்தனத்தோடு சமாளித்தார். பிரதிக்கு வெளியே அவர் எழுதியவை, பேசியவை எல்லாமே இன்று அவருக்குச் சற்றே தயக்கத்துடன் வழங்கப்படும் இலக்கிய இடத்தை நோக்கியே அமைந் திருந்தன. பாலகுமாரன் இதற்கு முயலவே இல்லை. இவ்வளவுக்கும் அவர்கள் இருவருமே சிற்றிதழ்கள் வட்டத்திலிருந்து மேல்க்கிளம்பிச் சென்றவர்களே. பாலகுமாரன் தனது முன்னோடியாக ஞானக்கூத்தனையும் ஜானகி ராமனையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர். இது அவருக்குச் சில சங்கடங்களைக் கொண்டுவரவும் செய்தது. ஜானகிராமனின் மெலிந்தபிரதிதான் பாலகுமாரன் என்ற குற்றச்சாட்டு இன்னமும் கூறப்படுகிறது. ஆனால் இவரும் ஆண் பெண் உறவுகளின் சிடுக்குகளைப் பற்றி எழுதினார் என்பதுவும் சில வார்த்தைப் பிரயோகங்களும் தவிர இருவரது பயணங்களிலும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஜானகிராமனின் உலகம் பெரும்பாலும் வீழ்ந்து வந்த ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தின் உலகம். அவரது கலை எவ்வளவு உச்சத்திலும் ஒரு கருணைமிக்க மிராசுதாரின் கலையே. பாலகுமாரனின் வாழ்வுலகமோ நடுத்தர வர்க்கத்தின் அபிலாசைகளுடன் மிக நெருக்கமாய்ப் பின்னிப் பிணைந்தது. முதல் தலைமுறையாக டெலிபோன் துடைக்கிற பெண்ணாகவோ வங்கியில் குமாஸ்தாவாகவோ மருத்துவமனையில் செவிலியாகவோ வேலை செய்ய இறங்குகிற பெண்ணின் காதலையும் காமத்தையும் ஏக்கங்களையும் பேசுவது. பாலகுமாரன் இந்த அகவாழ்க்கையை விரிவாக விதம்விதமான புறப்பின்னணிகளில் எழுதினார். வணிகர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். வெவ்வேறு விதமான வணிகங்கள் குறித்த அவற்றின் நுட்பமான தகவல்களுடன் அவர் எழுதிய நாவல்கள் நிறைய இருக்கின்றன. அவரது வாசகர்களில் பலர் வணிகர்கள்.
பாலகுமாரனின் முதல் நாவல் அவரது தொழிற்சங்க வாழ்க்கையையும் அதன் மீதிருந்த அவரது தொடக்ககாலப் பற்று விலகுவதையும் விவரிக்கிற ‘இரும்பு குதிரைகள்’. இன்றளவும் அவரது சிறந்த நாவல் அதுவே என்று வாதிடுவோர் உண்டு. டாபே தொழிற்சாலையில் பதினேழு வருடங்கள் பணிபுரிந்தவர். அதன் மிகப்பெரிய வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுக் கடும் வன்முறைக்கு உள்ளானவர். அவர் அங்கிருந்து விலகி மெதுவாக அயன் ராண்டின் கேபிடலிசத்தை நோக்கி நகர்வதை அவர் எழுத்துக்களில் தெளிவாகக் காணலாம். அயன் ராண்டின் மீதான வியப்பை அவர் நேரிடையாகவே தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். மறுபுறம் எல்லா சிந்தனைகளையும் உள்வாங்கி விவாதிக்கிற, விவாதித்த சிற்றிதழ் உலகம், உலகின் ஒரு பாதியை வென்று ஆண்டுகொண்டிருந்த ஒரு சிந்தனையைப் பற்றிக் கனத்த மவுனம் சாதித்தது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த வாழ்க்கைநோக்கு நகர்வு அவரிடத்தில் மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. அது பொதுச் சமூகத்திலும் பிரதிபலித்த ஒன்றே . அதைத் துல்லியமாக அவதானித்துத் தனது சிந்தனைகளில் பொருத்திக்கொண்ட ஒரு எழுத்தாளர் என்று அவரைச் சொல்லலாம். இடதுசாரி லட்சியவாதம் கடும் பின்னடைவைச் சந்தித்த காலகட்டம் இது என்பதையும் சேர்த்து நாம் அவதானித்தால் அவரது பிரபலத்துக்குக் காரணம் என்னவென்பதும் விளங்கும். இடதுசாரி மனப்பான்மை கொண்ட பெரும்பாலான சிற்றிதழ்கள் அவரை நிராகரித்ததும் இந்த வழியில் இயல்பானதே; ஆம் அதற்கு இலக்கியம் தவிர வேறு காரணங்கள் இருந்தன. பாலகுமாரனின் இந்த நகர்வின் தொடர்ச்சியாகவே பின்னால் அவரது ஆன்மீக அலைக்கழிப்புகளும் நிகழ்ந்தன. கூட்டு மானுட விடுதலை பேசும் இசங்களிலிருந்து விலகித் தனி மனித விடுதலையை முன்வைத்த நவயுகக் குருமார்களின் காலகட்டமும் இதுவே என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் சிந்தனைகள் ஆன்மீகத்தில் மட்டுமில்லாது இலக்கியம் அரசியல் போன்ற தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய கால கட்டம் இது. அவர்கள் புரட்சி போன்ற இடதுசாரி சொற்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.பாலகுமாரன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரை இந்தப் பாதைகளில் வந்துதான் கண்டுகொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஒருவகையில் அவர் தானும் ஒரு புதுயுகக் குரு என்ற இடத்தை அடையவே விரும்பினார் என்று படுகிறது. அவரது இறுதிக் காலச் செயல்பாடுகளும் படைப்புகளும் போதிக்கிற தன்மையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் எழுத்துச்சித்தர் என்றுகூட அழைக்கப்பட்டார்.
பாலகுமாரன் ஒருபோதும் அசோகமித்திரன் போன்றோ சுந்தரராமசாமி போன்றோ ஆகிருதியான எழுத்தாளர் அல்ல. ஆனால் அவர் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் அவ்வாறு மயங்கிய கூட்டம் இருந்தது. ஆகவே அவர்களுக்குக் கடுமையாக சில விசயங்களைச் சொல்லவேண்டி இருந்தது. ஆனால் இப்போது அந்த மயக்கம் இல்லை. இனிமேல் அவரது எழுத்துகள் பற்றிய சரியான நிதானமான மதிப்பீடு உருவாகலாம்.
கட்டுரை தலைப்பு பாலகுமாரனின் நாவல் ஒன்றிலிருந்து
மின்னஞ்சல்: bohanth@gmail.com