புதிய மலேசியா
அடர்ந்த இருட்டில் பலநாள் முடங்கி கிடந்த ஓர் ஆன்மாவின் கண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சங்கள் காட்டப்படுகின்றன. இருட்டிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கான எல்லா கதவுகளும் அதிவிரைவாக அதற்காகத் திறந்துவிடப்படுகின்றன. ‘இருட்டைக் கடப்பது இத்தனை எளிதா?’ என மகிழ்ச்சி எழுந்தாலும் வியப்பை அது இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
2018 மார்ச் மாதம் தொடங்கியது முதல், மலேசியாவின் நாடாளுமன்றம் எப்பொழுது கலைக்கப்படுமென முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, முகநூல் முதல் காப்பி கடை வரை பேசாத நாளில்லை. கூடுதலாக, யார் இந்த 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவார், ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்புகளுடனான கேள்விகள் பின் தொடர்ந்துகொண்டே வந்தன. ஊடகங்களிலும் பல கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டன. இந்த 14வது பொதுத் தேர்தல் இதற்கு முன்பு நடந்த 13 தேர்தல்கள் போல் அல்ல. ஏன் இது அப்படியல்ல எனக் கேள்விகள் கேட்கலாம்.
முதலாவதாக, மீண்டும் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் பிரவேசம். 93 வயது நிரம்பிய இவர் மலேசிய நாட்டின் நான்காவது பிரதமரும் ஆவார். இத்தனை வயதிற்கும் பின், இருதய நோயாளியான இவர் ஏன் ஓய்வெடுக்க வேண்டிய சமயத்தில் மீண்டும் முழுமையாக அரசியலில் குதிக்க வேண்டும்? 2013இல் நடைபெற்ற 13வது பொதுத்தேர்தலின்போது பாரிசான் கட்சி ஆட்சியின் மீதான தனது அதிருப்திகளை வெளிப்படையாகக் காட்டாமல் பெர்சே 2.0* கூட்டத்தில் கலந்துகொண்டு தனது மன உணர்வை வெளிப்படுத்தினார். பெர்சே செயல்பாடுகளை ஏற்கெனவே எதிர்த்து வந்த அவரே பெர்சே கூட்டத்தில் கலந்துகொண்டதை மலாய்க்காரர்கள் முக்கியமாக அம்னோ உறுப்பினர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை அவர் மீது எய்தினாலும், சீனர்கள், இந்தியர்கள் மத்தியில் அது மிகப்பெரிய அலைகளையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், மலாய் இனத்திற்கு மகாதீர் துரோகம் செய்துவிட்டதாக அம்னோ கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து உறுமிக்கொண்டே இருந்தனர். காரணம், ஏறக்குறைய 30 ஆண்டு களுக்கு மேல் மகாதீர் அம்னோ கட்சியின் உறுப்பினராக இருந்து 22 வருடமாக அதன் தலைவராகவும் இருந்து வந்திருக்கின்றார். எந்த விமர்சனத்திற்கும் செவி சாய்க்காமல், பட்டும்படாமல் தன்னுடைய எதிர்ப்பை நடப்பு அரசாங்கத்தின் மீது காட்டியும் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் குறித்த விமர்சனங்களை முன்வைத்தும் 13வது பொதுத் தேர்தல் முடியும்வரை அமைதி காத்தே வந்தார் மகாதீர். 13வது பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாரிசான் 133 நாற்காலிகளும் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி கட்சி (Pakatan Rakyat) 89 நாற்காலிகளையும் வென்றன. 50.87% மக்களின் ஓட்டு, மக்கள் கூட்டணி கட்சிக்குத் தான் கிடைத்தன. மக்கள் விரும்பும் கட்சியாக கூட்டணிக் கட்சி இருந்தாலும் ஓர் அரசாங்கம் அமைக்க நாடாளுமன்ற நாற்காலிகளின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் எதிர்பார்த்தபடி கூட்டணி கட்சியால் அரசு அமைக்கப்படாமல் போனது மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்த ஏமாற்றத்தைப் போக்க அம்னோவுக்கு ஈடாக, 2016இல் Malaysian United Indigenous Party என்ற கட்சியை மகாதீர் தொடங்கினார். இதில் முன்னாள் துணைப் பிரதமர் தான் ஸ்ரீ முகிடினும் மகாதீரின் மகனான டத்தோ முக்ரீஸும் முக்கிய உறுப்பினர் பதவியில் இருக்கின்றனர்.
இரண்டாவதாக, ‘ஆசியாவின் புலி’ என அழைக்கப்பட்ட 93 வயது நிரம்பிய மலேசியாவின் முன்னாள் பிரதமர் நாட்டின் பொருளாதார நிலையைக் கண்டு வருந்தி ‘மலேசியாவை மீட்டெடுப்பேன்’ எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இத்தேர்தலில் களம் இறங்கினார். பிள்ளையை வளர்த்துக் குரங்கு கையில் கொடுத்த மனநிலையில் அவர் இருந்தார் என்பதே உண்மை. 22 வருடங்களாக, இந்த மலேசியா நாட்டை அவர் கனவின்படி உருவாக்கினார். மலேசியாவை, உலகிற்கு அடையாளப்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்குண்டு என்றால் அது மிகையில்லை. இன்று மலேசியா, IMDB, GST (பொருள்சேவை வரி), உலகச் சந்தையில் ரிங்கிட்டின் மதிப்பு சரிவு, பொருளாதார மந்தம், ஊழல் என பெருக்கெடுத்து, மலேசியாவை தலைகுனிய வைத்துவிட்டார் பிரதமர் நஜீப். 2017 Transparency International அமைப்பின் கணக்கெடுப்பு, 2014(52), 2015 (50), 2016(49), 2017(47) என நாட்டின் ஊழலுக்கான புள்ளி விவரங்களைக் காட்டுகிறது. வருடம்தோறும் புள்ளிகள் குறைந்து கொண்டே வருவதால், நாட்டில் ஊழல் பெருக்கெடுத்து மக்கள் பணம் சுரண்டப்படுகிறது. அதோடு, நாட்டின் கடன். இன்று 1திரில்லியன் அதாவது மலேசிய மக்கள் தொகைக் கணக்கின்படி தலைக்கு ரி.ம.32,000** வெள்ளி கடன் கட்ட வேண்டிய சூழலில் மலேசியா ஆளாகியுள்ளது. மகாதீரின் அரசியல் பிரவேச காலங்களில் மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தியர், சீனர்களின் பொருளாதாரத்தில் இவர் அதிக அக்கறை காட்டவில்லை என்பதை யாரும் மறக்கவில்லை. இருந்தபோதும், தன்னுடைய கடந்த காலத் தவறுகளுக்கெல்லாம் ‘மன்னிப்பு’ கேட்ட நிலையில் மீண்டும் இதைப் பற்றிப் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றது. இருந்தபோதும் இனி வரும் காலங்களில் அவர், இனத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ‘மலேசியர்கள்’ என்ற அடிப்படையில் அவர் செயல்பாடுகளும் நல்லாட்சிகளும் தொடர்ந்து இருக்கும் என நம்பிக்கை உண்டு.
அடுத்து, 13வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு மக்கள் கூட்டணிக் கட்சியிலிருந்து இஸ்லாம் கட்சியான பாஸ் (PAS) வெளிநடப்பு செய்த விடயம். அதிகமான மலாய்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களின் உரிமையை அம்னோ மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வெளிப்படையான இன அரசியலை அம்னோ தொடர்ந்து நடத்தி வந்ததால் அதன்மேல் நாட்டம் கொண்டு பாஸ் கட்சி, மக்கள் கூட்டணி கட்சியிலிருந்து வெளியேறியது. இதனால் திரங்கானு, கிளந்தான் மாநில மக்களைத் தவிர்த்து அதிகமான எதிர்க்கட்சி ஆதரவாளர்களான மலாய்கார இளைஞர்கள் பாஸ் கட்சியின் மீதான நம்பிக்கையை இழந்தனர். அதோடு, 2017இல் நடைபெற்ற அம்னோவின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், பிரதமர் நஜீப் தன் உரையில், “ஒருவேளை பாரிசான் இந்த 14வது பொதுத் தேர்தலில் தோல்வியுற்றால், சீனர்களின், Democratic Action Party (DAP)
மலேசியாவை ஆட்சி செய்யும். அதனால் அதற்கு வழிவிட செய்யாமல் தொடர்ந்து உங்கள் ஆதரவை அம்னோவிற்கு அளியுங்கள்” என மலாய்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதனால், இந்தப் பொதுத்தேர்தலின்போது பாஸ் கட்சி தனியாகவே போட்டிப் போட்டு 18 இடங்களை வென்றது. இந்த முறை பாஸ் கட்சிக்கு வாக்களித்த பெரும்பாலனோர், பாரிசானா, பாக்கதானா என்று வரும்போது, பாஸ் வந்தால் இன்னும் மேல் என்ற இரண்டும் கெட்ட மனநிலையோடு வாக்களித்தவர்கள்தான் அதிகம்.
அடுத்த நிலையில், மக்கள் கூட்டணி கட்சி, ‘நம்பிக்கைக் கூட்டணி’யாக மாறிய நிலை. 13வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு உறுப்பினர்கள் கட்சி தாவுவது தொடர்ந்து நடைபெற்றது. புதிய கட்சிகளின் வரவு, பின் மகாதீரும் அன்வாரும் மீண்டும் இணைந்த வரலாறு போன்ற காரணங்களை முன் வைத்து, மக்கள் கூட்டணி ‘நம்பிக்கை கூட்டணி’யாக உருவெடுத்தது. இதுவரை மக்கள் கூட்டணிக்குத் தலைவராக இருந்து வந்தவர் அன்வாருக்குப் பதிலாக நம்பிக்கை கூட்டணியின் தலைவராக மகாதீர் பொறுப்பேற்றார். மகாதீரின் வருகை எதிர்க்கட்சிகளுக்குப் புதிய தெம்பையும் நம்பிக்கையையும் அளித்தது மட்டுமில்லாமல் இதுவரை பாரிசான் வெற்றிக்குப் பெரும் பங்காற்றி வந்த சபா, சரவாக் மாநில மக்களின் ஆதரவையும் மகாதீர் மீண்டும்பெற்றார்.
மேலும், “ini kali lah” (இந்த முறை மட்டும்), “Harapan” ((நம்பிக்கை), reformasi (சீர்த்திருத்தம்), “selamatkan malaysia” (மலேசியாவை மீட்டெடுப்போம்) போன்ற நம்பிக்கை கூட்டணியின் சுலோகங்கள் மக்களுக்கு 14வது பொதுத் தேர்தல் மீது நாட்டத்தை ஏற்படுத்தின எனலாம். அதோடு, மகாதீரே நடித்து வெளியான சில காணொளிகள் மக்களின் மனதை நெருங்கின. “எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இயன்றவரை செய்துவிட்டேன். இனி எல்லாம் இளைஞர்களிடம் உள்ளது” என்ற வசனம் பெரும் அளவில் இளைஞர்களின் எழுச்சிக்கு ஆளானது. இந்த தேர்தலில் ஏறக்குறைய 1.8 மில்லியன் ஓட்டுகள் இளையவர்களின் ஓட்டுகளாக இருந்தன. அதுமட்டுமல்லாமல், இந்த முறை அரசாங்க ஊழியர்களும் தைரியமாகத் தங்களுக்குப் பிடித்த கட்சிகளுக்கு வாக்களித்தனர். இதுவரையிலான பாரிசானின் மறைமுகமான மிரட்டலைத் தாண்டி இவர்கள் ஓட்டு போட்டிருப்பதற்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வுதான். இதற்குப் பெரும் பங்காற்றிய பெர்சே1.0, பெர்சே 2.0 தலைவர்கள் அம்பிகா சீனிவாசன், மரிய சின் என்றென்றும் மதிக்கப்படுவர். அதோடு, முகநூலின் பங்களிப்பு மறக்க இயலாதது. தேர்தல் பிரச்சாரங்களின்போது நேரடியலை செய்யும் வசதிகள் மக்களையும் தலைவர்களையும் மிக நெருக்கத்தில் தொடர்புபடுத்தின எனலாம்.
அடுத்து, இந்த தேர்தலில் இன்னொரு அம்சம் அப்பாக்களும் பிள்ளகளும் ஒன்றாய் இணைந்து இந்த தேர்தல் களத்தில் இறங்கியது. போர்க்களத்தில் மிகவும் பிரபலமான ‘The enemy of my enemy is my friend’ இந்த வரிகள் போல் இவர்களின் கூட்டணியும் இணைந்த கதை. 50 ஆண்டுகளாக மகாதீருக்கு அரசியல் எதிரிகளாகவே இருந்த மறைந்த கர்பால் சிங், லிம் கிட்சி யாங், அன்வார் இப்ராஹீம் ஆகியோர் பாரிசானின் கட்சியின் ஆட்சியின் மீது அவநம்பிக்கையைக் காட்டுவதற்காக ஒன்றாக இணைந்தனர். இந்தச் சேர்க்கை மலேசிய மக்களை மட்டுமல்லாமல், அமெரிக்க, பிரிட்டிஷ் நாடுகளையும் மலேசியாவை திரும்பிப் பார்க்க வைத்தது. தாங்கள் வழிகாட்டிகளாகவும் பிள்ளைகள் களத்தில் போராளிகளாகவும் ஈடுபட்டது அரசியல் உலக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகிப் போனது. தங்களுடைய அரசியல் சக்தியைக் குன்றாமல் சலிக்காமல் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் அவரவரும் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட. அப்பா-பிள்ளைகள் கூட்டணி மக்களுக்கு நம்பிக்கையையும் நல்ல குடும்ப உணர்வையும் ஏற்படுத்தியது. அந்தக் குடும்பத்தில் மக்களும் ஒன்று சேர விரும்பியதன் எதிரொலி இப்பொதுதேர்தலில் வெளிப்பட்டிருக்கின்றது.
எண் அப்பா பிள்ளைகள் இனம்
1. துன் டாக்டர் மகாதீர் (93) முக்ரீஸ் மகாதீர் மலாய்
2. மறைந்த கர்பால் சிங்(78) கோபிட் சிங் இந்தியர்
3. லிம் கிட்சி யாங் (77) லிம் குவான் எங் சீனர்
4. அன்வார் இப்ராஹீம் (70) நூருல் இஸ்சா மலாய்
இதற்கடுத்துப் பல வழிகளில் மீண்டும்மீண்டும் மக்களை இன அரசியல், ஜாதி அரசியல், மத அரசியலுக்குள் இழுத்துச் செல்லவே முயன்றனர். அதன் தொடர்பாகவே பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நல்ல வேளை மக்கள் தெளிவாகச் சிந்திக்கும் வல்லமை கொண்டிருந்தனர். இந்த 14வது தேர்தலில் மக்களின் நிலைபாடும் நோக்கமும் ஒன்றுதான். ‘மலேசியாவை மீட்டெக்க வேண்டும்’ என்பதே. 60 ஆண்டுகளாக, அதாவது 1957இல் சுதந்திரம் பெற்ற நாள் முதல் 2018 ஏப்ரல் வரை ஆட்சி செய்துவந்த பாரிசான் நேசனல் கட்சியின் ஆட்சியை பாகாத்தான் ஹரப்பான் Pakatan Harapan வென்றிருப்பது மலேசிய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் இடம்பெற்றிருப்பதை பெருமைக்குரிய விடயமாக மலேசியர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். “நாட்டை மீட்டெடுத்தோம்” என்ற பெருமை மிதப்பில் தங்கள் களிப்பை இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் மலேசியர்கள். 222 மொத்த நாடாளுமன்ற நாற்காலியில், நம்பிக்கை கூட்டணி 121 நாடாளுமன்ற நாற்காலிகளையும் பாரிசான் 79 நாடாளுமன்ற நாற்காலிகளையும் வென்றது. 55% வித்தியாசத்தில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதோடு, நல்ல முறையில் தகுதிக்கேற்றவர்களைக் கொண்டு அமைச்சரவை அமைத்துள்ளதைப் பாராட்டலாம். கடந்தவற்றைவிட இனி கடக்கப் போகிறவைதான் முக்கியம்.
இறுதியாக, பிரதமர் நஜீபிடம், தங்களின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என ஊடகத்தில் கேட்டபோது, “ நான் மக்களின் முடிவை மதிக்கின்றேன். இந்த தேர்தல் முடிவு ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகின்றது. எங்களின் இந்த வீழ்ச்சிக்கு, நம்பிக்கை கூட்டணி வெளியிட்ட அவதூறுகள்தான் காரணம்,” என்றார். தற்பொழுது நிலவரப்படி முன்னால் பிரதமர் நஜீபின் வெளிநாட்டுப் பயணங்கள் முடக்கப்பட்டு ஊழல் விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
குறிப்பு:
* வெளிப்படையான தேர்தலுக்கான கூட்டணி
** ரிங்கிட் மலேசியா
மின்னஞசல்: moli143@.gmail.com