‘கல்வித் தரகர்கள்’ தலையங்கம் வாசித்தபோது மனம் வலித்தது. தக்க தருணத்தில் முறையாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை. உயர் கல்வித் துறையில் காணப்படும் மோசடிகளை அன்றாடம் நடக்கும் அற்ப சொற்ப ஊழல் எனக் கருதி மௌனமாகக் கடந்துபோக இயலவில்லை. கட்டணமில்லாக் கல்வியே அரசின் அறைகூவலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவரும் வேளையில், “காசின்றிக் கல்வி இல்லை” என்ற எதார்த்தம் சுடுகிறது; பிடரியில் ஓங்கி அறைகிறது.
அறிவிற்கும் அறத்திற்கும் வழிகாட்ட வேண்டிய கல்விக் கூடங்கள், கலவிக் கூடங்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் முள்ளாய்க் குத்துகிறது. அடியிலிருந்து உச்சிவரை பணம் பண்ணும் தொழிற் கூடங்களாகவும் அவை மாறிப்போன நிஜம், நிஜமாகவே நோகடிக்கிறது. இதையெல்லாம் நோக்குகையில், கல்வித் திட்டத்தில் எங்கோ கோளாறு இருப்பது உறுதியாகிறது.
“Teacher is Second Mother” என நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்; ஆசிரியர்கள் அன்னையராகவே விளங்கவும் செய்தார்கள்; மாணவர்களின் கல்வி அறிவில் மட்டுமன்றி, அவர்களின் ஆரோக்கியம், குடும்ப நலன், அறநெறி ஆகியவற்றிலும் தாயைப் போன்றே அக்கறை செலுத்தினார்கள். பணம் அவர்களுக்குப் பொருட்டாக இருந்ததில்லை; பண்பே பிரதானமாக இருந்தது.
சுயநலமற்ற நல்லாசிரியர்கள் மட்டும் கிடைத்திருக்கா விட்டால், செய்தித்தாள் விநியோகித்து, அதில் கிடைத்த சில்லறைகளை வைத்துக்கொண்டு, படித்துப் பல பட்டங்கள் பெற்று, பிற்காலத்தில் விஞ்ஞானியாகிப் பெருமை சேர்த்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றோரை இந்நாடு கண்டிருக்குமா? அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் ‘நல்லாசிரியர்’ விருது கிடைத்திருக்காது. ஆனால், இயல்பிலேயே நல்லவர்களாகத் திகழ்ந்தார்கள்.
இயந்திரங்களை இயக்கக் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்கள், இதயங்களை இயக்குவது எப்படி என்பதைக் கண்டுகொள்ளாமல் போனது நமது துர்பாக்கியம்.
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை அடிப்படையிலேயே போதிக்க வேண்டும். பணத்திற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சமூக பிரக்ஞை, தேச நலன், மனித நேயம் என எத்தனையோ நன்னெறிகள்தான் மனிதனைப் பண்படுத்திப் புனிதனாக்கும் என்பதையெல்லாம் பாடமாகவும் பயிற்சியாகவும் மாணவர் உள்ளத்தில் ஊட்ட வேண்டும்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை-&14
‘கல்வித்தரகர்கள்’ தலையங்கம், உயர்கல்வியில் நடக்கும் பல்வேறு அவலங்களையும் ஊழல்களையும் அம்பலமாக்கிய விதம் அருமை. முக்கியமான நபர்களைக் காப்பாற்றுவதற்காகச் செய்யும் தகிடுத்தனங்களைக் கூறியதும் சிறப்பு. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றையநிலை, அரசு நிதியுதவிப்பணிகளில் பின்பற்றுகின்ற சூழல்கள் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பணபேரம், குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தை நாசூக்காகச் சொல்லி எடுத்துரைத்த முறையுடன் அரசின் இயலாத்தனத்தையும் அதனால் பாதிக்கப்படும் வேலைநாடுநர்களின் வருத்தத்தையும் பார்க்க முடிகின்றது.
‘காலம் கடந்தும் உரையாடுவேன்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பெருமாள் முருகனின் நேர்காணல் நச்சென்று உள்ளது. நேர்கண்ட நிகிதா தேவையான கேள்விகளை நறுக்கென்று கேட்டுள்ளார். பொருத்தமான பதிலைப் பெருமாள் முருகனும் கூறியுள்ளார். மாதொருபாகன் நாவல் குறித்துக் கூறும்போது இத்தனை வன்மையான எதிர்வினைகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்த்திருந்தால் வன்மையைக் குறைத்து உரையாடலை மேம்படுத்தி இருப்பேன் என்று சொல்வதின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
அர்ஷியா குறித்த அஞ்சலியில் மதுரையில் சந்தித்த உரையாடல், எழுத்தாளர்கள் உடனான கலந்துரையாடல், அர்ஷியாவை நண்பர்களிடத்து அறிமுகப்படுத்தி நெருக்கம் ஏற்படுத்தியவிதம், நேர்ந்த சங்கடங்கள் என அதிகமான தகவல்களைத் தந்துள்ளது. அர்ஷியாவின் பண்பு, பொறுப்பு, உதவியுடன் அர்ஷியாவிற்கும் தனக்கும் இருந்த நெருக்கத்தை, எதிர்நிலையை, உறவில் நீடித்த பண்பை ஈரக்கண்களோடு களந்தைபீர்முகம்மது எழுதியதாகவே தோன்றுகிறது.
கவிதைச் சிறப்பிதழ் பகுதியில் பல்வேறு கவிதைகள் ஈர்க்கின்றன. தி.பரமேசுவரி அவர்களின் கட்டுரைத் தலைப்பே கருத்தை முன்மொழிவதாக இருந்து, ஆர்வத்தை ஏற்படுத்தியது.
‘புதிதெனச் சுடர்விடும் உயிர்’ என்ற தலைப்பில் போகன் சங்கர் கவிதை, கவிஞர்கள், கவி அரங்கேற்றம், வாசகர்கள், விவாதம், ஒப்பீடு என வேதசகாயகுமார் எடுத்துரைத்த கருத்துகளைத் தெளிவுபட எழுத்தின்வழி சொல்லியது அருமை.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு
‘கல்வித் தரகர்கள்’ தலையங்கம் முதல் பாராவிலேயே விஷயத்தின் தெளிவை விளக்கிவிடுகிறது. இது ஒரு பெண்மணியின் தனிப்பட்ட விஷயமல்ல. அவர் வெறும் அம்பு மட்டுமே?
அருப்புக்கோட்டை நிகழ்வில் கல்லூரிச் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததும் விசாரணை தொடங்குகிறது. பிரச்சினையின் தீவிரம் கருதி அரசு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றுகிறது. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்ததும் துணைவேந்தர் தாம் அமைத்த குழுவைச் செயலிழக்கச் செய்துவிடுகிறார். “பேராசிரியர் முதல் வேந்தர் முடிய” என்ற புதுமொழி விரைவாகப் பரவும் சூழலில் வேந்தர் செய்திருக்க வேண்டிய முக்கியப் பணி காவல் துறை விசாரணை பாரபட்சமின்றி நடைபெற ஏற்பாடு செய்ய அரசுக்கு அறிவுறுத்துவதே. வேந்தருக்கும் துணைவேந்தருக்கும் இடையே இணைவேந்தர் என்ற பதவியை அணி செய்யும் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். ஒப்புக்குக்கூட அவரை அழைக்காமல், அவருடன் ஆலோசனை கலக்காமல் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார் வேந்தராகிய ஆளுநர். தம் தலையீட்டுக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் இருப்பதாகப் பல்கலைக்கழக விதிமுறைப் புத்தகத்தைப் படித்துக் காட்டினார். சட்டத்தைத் தாண்டிய அறநெறி என ஒன்றிருப்பதை அவர் மறந்துவிட்டார்.
தலையங்கத்தில் “உயர் அலுவலர்கள், ஆளுநர் ஆகியோரின் பெயர்கள் இப்பிரச்சினையில் தொடர்புபடுத்தப்பட்டாலும்” என வருவது அனைத்து ஊடகங்களிலும் வந்த செய்தியன்றோ? உடனே அவர் பதவி விலகியிருந்தால் அவருடைய மாண்பு காக்கப்பட்டிருக்கும். பழி நாணாத மனிதர் அமைத்துள்ள விசாரணைக்குழு அவருடைய நிழலைக்கூட நெருங்காது.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626132
‘கல்வித் தரகர்கள்’ தலையங்கம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையின் நிலையைத் தெளிவாக வெளிப்படுத்தும் முறையில் அமைந்திருந்தது. தமிழக உயர்கல்வித் துறையின் அனைத்துவிதமான பணிகளும் பணத்தினை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி என்பது சேவை என்ற நிலையிலிருந்து தாழ்ந்து பொருள் செல்வத்தினைப் பெருக்கும் கேந்திரமாக மாற்றப்பட்டு விட்டதைத் தலையங்கம் புலப்படுத்துகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு வகுத்த திட்டங்களையும் விதிமுறைகளையும் தமிழக உயர்கல்வித் துறை முழுவதுமாக செயல்படுத்துகிறதா என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பேராசிரியர்கள் நியமனத்திற்கு நெட், செட் தேர்வுகளை இந்தியாவின் பிற மாநிலங்கள் குறைந்தபட்ச தகுதியாகக் கொண்டுள்ளன. ஆனால் தமிழகம் முனைவர் பட்டம் முடித்தவர்களையும் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என்கிறது. இதன்மூலம் பேராசிரியர்களுக்கான பணி இடங்களை நிரப்பியும் உள்ளன. நெட், செட் தேர்வு என்பது இங்கே கேள்விக்குரியதாகிறது. மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்களின் நிலையும் மோசமானதாக அமைகின்றது. தமிழக சுயநிதிக் கல்லூரிகளில் இன்றும்கூட ரூ.3000 ஊதியத்தில் இவர்கள் பணிபுரியும் அவலம் நிகழ்கின்றது. யு.ஜி.சி. நிறுவனம் ஊதியம் குறித்து வகுத்திருக்கும் விதிகளை சுயநிதிக் கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. குறைந்த ஊதியத்தை வழங்கிப் பேராசிரியர்களின் அறிவைச் சுரண்டிக் கொள்கின்றன.
சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முழுக்க முழுக்க கடைநிலை ஊழியர்களைப் போன்று நடத்தப்படுகின்றனர். அலுவலகம் சார்ந்த பணிகளையே நாள் முழுவதும் செய்துகொண்டிருக்கின்றனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கல்லூரிகள் ஐ.எஸ்.ஓ. தரமதிப்பீடு, NAAC தர மதிப்பீடு என்று ஏதேனும் மதிப்பீடு என்று ஒரு மதிப்பீட்டுக்காக ஆசிரியர்களைப் பகடைக் காய்களாக மாற்றி அதிக வேலைகளை வாங்குகின்றன. தர மதிப்பீட்டிற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதும், அதனைப் பாதுகாப்பதுமே ஆசிரியர்களின் தலையாயப் பணியாக நிர்ணயிக்கப்படுகிறது. இதை எல்லாம் முடித்த பின்பு நேரம் கிடைக்கும்போது மாணவர்களுக்குக் கற்பித்தல் பணியைத் தொடர வேண்டும். கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு நேரம் குறைக்கப்படுகிறது. பாடங்களைத் தயாரிக்க நேரம் மறுக்கப்படுகிறது. இங்கே அறிவார்ந்த பேராசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது.
கல்வி சார்ந்தும் கற்பித்தல் சார்ந்தும் ஆய்வு சார்ந்தும் ஆசிரியர்களால் இயங்க முடியவில்லை. அனுதினமும் தரமதிப்பீட்டுக் கோப்புகளைக் கட்டிக்கொண்டு வாழ வேண்டியுள்ளது. கல்லூரிகள் தம்முடைய முழுத் திறமையையும் பயன்படுத்தித் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் தேர்ச்சி விகித அதிகரிப்பு கல்வியாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பட்டம் பெற்று வெளியேறும் மாணவனால் ஒரு கடிதம்கூட பிழையின்றி எழுத முடியவில்லை. ஆனால் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய தரம் குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. அவை பேசும் தரம் எது என்பதனைக் கடவுள்தான் அறிவார்.
அறம் சார்ந்த மதிப்பீடுகள் அனைத்தும் உயர்கல்வித் துறையினரால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இனியாவது கல்வியின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் இதுகுறித்துத் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். காலச்சுவடு அதற்கான முயற்சியைத் தலையங்கக் கட்டுரை வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.
ப. சுடலைமணி
உடுமலைப்பேட்டை.
‘தேடு கல்வியில்லா ஊரைத் தீயினுக்கிரையாக்குவோம்’ எனும் கவி பாரதியின் கனவு சிதைந்து வருகிறது. எல்லோருக்கும் கல்வி, வேலை சாத்தியம் என்கிற அறிவியல் பூர்வமான கருத்தை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில் நிர்மலா தேவியின் நடவடிக்கைகள் அசிங்கத்திலும் அசிங்கம். தலை சிறந்த கல்வியாளர்கள் பலர் தோன்றிய தமிழ்நாட்டில் இவை போன்ற நிகழ்வுகள் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. கல்வியறிவின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதன் மூலம்தான் நம் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற கருத்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடமும் அம்பேத்கர், காமராஜ், பெரியார் போன்ற பெரும் தலைவர்களிடமும் வலுவாக இருந்தது. இன்று அது ஆட்டம் கண்டிருப்பது கவலையளிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நெ.து. சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா போன்ற அறிஞர்களின் அறிவுரையுடன், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:30 என மாற்றம் பெற வேண்டும் என்றும் அறிவுத்திறன், வளர்ச்சி பற்றிய ஆய்வுக் கணக்கைக் கொண்டு பாடத்திட்டம் தயாரிக்கப் பெற வேண்டும் என்றும் கூறிவரும் கல்வியாளர்களின் கருத்துகள் புறந்தள்ளப்பட்டே வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் போதிய வழியின்மை, தரமின்மை போன்ற காரணங்களால் நடுத்தர மக்கள் கூட தனியார் பள்ளிகளைத் தேடி ஓடும் நிலை தொடர்கிறது.
உயர்கல்விக்கு இருக்கும் இன்னொரு வாய்ப்பு ‘திறந்தவெளி பல்கலைக்கழகம்’, ‘கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்’ முறைகள். கல்லூரியில் சேர முடியாத ஏழை மாணவர்களுக்குப் பயன்படும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்ட இம்முறையில் பெருத்த ஊழல் புகுந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன், புகழ்பெற்ற பல்கலைக்கழக இலச்சினையோடு தெருவெங்கும் போலிச் சான்றுகள் சிதறிக்கிடந்ததை நாம் மறந்திருக்க முடியாது.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
‘கல்வித்தரகர்கள்’ சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. உயர்கல்வித்துறை தொடர்பாக ஒட்டு மொத்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விவாதத்தைத் தவிர்க்கின்ற நுண்ணரசியல் இது என்று தாங்கள் குறிப்பிடுவது மிகவும் சரியானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உயர்கல்வித்துறையில், அங்கிங்கெனாதபடி எங்கும் இப்பாலியல் சுரண்டல் நடந்து வருவது அனைவரும் அறிந்த ரகசியமே.
ஊழலில் மிதந்துகொண்டிருந்த அந்தச் சிதம்பர ரகசியப் பெயர் கொண்ட பல்கலைக் கழகம் கிட்டத்தட்ட திவாலான நிலையில் அதனைத் தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டு, ஆசிரியத் தரகர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்குகின்ற முறையில் அவர்களை அரசுக் கல்லூரிகளில் பணியமர்த்தம் செய்துகொண்டது மாநில அரசு என்றால், இது எதைக் காட்டுகிறது? ஊழற் களியாட்டத்தில் அரசுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதைத்தானே? இந்த நிலையில் கல்வித்துறையைச் சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
ஒரு பேரியக்கம், “அறத்தால் வருவதே இன்பம்” என்பது போன்ற பெயரை வைத்துக்கொண்டு, நாடு முழுவதும், கிராமங்கள் - நகரங்கள் என்று எங்கெங்கும், செறிவான முறையில் இயங்கிவர வேண்டும். நேர்மைத் திறம்மிக்க இளைஞர்கள், பெண்கள் லட்சக்கணக்கானவர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்த இயக்கத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த இயக்கத்துக்குரிய தலைமை இயல்பான முறையில் உருவாகும் என்று நம்பலாம். திருக்குறளுக்கு ‘அறம்’ என்ற பெயரும் உண்டு. அதிலுள்ள அறக்கருத்துகளை இவ்வியக்கம் மக்களிடத்தில் கொண்டு செல்வது மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வல்லது.
இன்று நிலையில், ஊழல் மயம் அறமயமாக மாறுவதற்கு ஓரிரு தலைமுறைகள் தேவைப்படலாம். முயற்சி திருவினை ஆக்கும்.
க.சி. அகமுடை நம்பி
மதுரை -& 625 020
மே மாத இதழில் இரு கதைகளும் சிறப்பானவை. ‘சக்தியோகம்’ தீவிர வாசிப்பைக் கோரும் கதையாக இருந்தது. ‘முகமூடி மனிதர்கள்’ எளிமையான நடையில் யதார்த்தத்தைச் சொல்வதாக அமைந்தது சிறப்பு. சில உன்னதக் கலைஞர்கள் மரணத்திற்குப் பிறகுதான் அறிமுகமாகிறார்கள்.’ ஏழரைப் பங்காளி வகையறா’ வாசிக்க வேண்டுமென்ற உந்துதலை களந்தையாரின் அஞ்சலி கட்டுரை ஏற்படுத்தியது. சமகால அவலங்கள் குறித்த இரு தலையங்கங்களும் நல்ல பதிவு. கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மனித உணர்வுகளுக்குள் இருக்கும் ஒற்றுமை எல்லா மனங்களையும் இணைக்கும் வல்லமை கொண்டது என்ற பெருமாள் முருகனின் கூற்று நேர்காணலின் முத்தாய்ப்பாக அமைந்தது.
சுப்பிரமணிய சரவணன்
மின்னஞ்சல் வழி
காலச்சுவடு மே இதழில், சச்சிதானந்தம் சுகிர்தராஜா “நீங்கள் புலியா?” என்ற கட்டுரை கண்டோம்.. பெரிதும் மகிழ்ந்தோம்.. தமிழக எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் இலங்கை எழுத்தாளர்களை ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் போலவே பார்க்கின்றனர். அவர்களது படைப்புகளை எடுத்து இங்கு விரிவாக வாசிப்பதோ, விவாதிப்பதோ, மிகவும் சீரிய முறையில் நடைபெறவில்லை. கல்லூரி ஆய்வரங்குகளில் இன்னமும் கம்பன், சங்கத்தமிழ், நவீன புதினம் தாண்டி எமது மாணவர் எதையும் தெரிந்து கொள்வதில்லை. பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வுக்குத் தலைப்பு தரும்போது, சங்கத்தமிழ், செவ்விலக்கியத்தைத் தாண்டி வருவதில்லை... “சங்க இலக்கியத்தில் கூந்தலில் பேன் பார்க்கும் சம்பவங்கள்”, “புறநானூற்றில் சோறு தின்னும் நிகழ்வுகள்”, “கலித்தொகையில் முகச்சவரம் செய்து கொள்ளும் மன்னர்கள் யாவர்?” இப்படித்தான் தலைப்புகள் தருகின்றனர்.
மதுரைக்கு வந்த போது, புகைவண்டி நிலையத்திலிருந்து, காலேஜ் ஹவுஸ் செல்ல, தேவர் சிலை வரை கொண்டு போய், மீண்டும் கொண்டு வந்துவிட்ட அந்தச் சம்பவம் மிகவும் நகைச்சுவையாகச்சொல்லப்பட்டிருந்தது. (அந்த வண்டி ஓர் மூவுருளி ஆட்டோவா அல்லது சீருந்து வண்டியா என சொல்லவில்லையே!) எம் தமிழர்களைப்பற்றி எமக்குத்தெரியும். மதுரையில், வெளிநாட்டினர் தமிழ் வழிகாட்டிகளிடம் படும் பாட்டைப்பற்றி ஒரு நெடும் புதினமே எழுதலாம்.
நல்ல வேளைஅய்யா, நீங்கள் பழனிக்குச்செல்லவில்லை. நீங்கள் வெளி நாட்டுக்காரர் என்பது தெரிந்தால், எம் தமிழர் உங்களை மொட்டை அடித்து, மலை மேல் இருக்கும் அந்த முருகனைப்போலவே நிறுத்தியிருப்பார்கள். “தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அதற்கொரு குணம் உண்டு.” அதாவது எல்லோரையும் மொட்டையடிக்கும் குணம்..
கட்டுரையில், இலங்கைத்தமிழின் சொல்லாட்சி மிக அருமை...! நல்ல ருசியான வார்த்தைகள்..! “Birmingham” என்பதற்கு “பார்மீங்கம்” என்ற தமிழாக்கம்... எம் தமிழர், இன்னமும், இங்கிலாந்து என்று தான் அழைக்கின்றனர்... “ ஐக்கிய ராட்சியங்கள்” என்பது நல்ல சொல்லாட்சி.. ‘கடவுச்சீட்டு’ என்ற வார்த்தையை எமக்குக் கற்றுத்தந்தது ஓர் இலங்கைத் தமிழ் சகோதரியே !... எம் தமிழர் அதை ‘பாஸ்போர்ட்’ என்றுதான் இன்னமும் அழைக்கின்றனர். அவ்வண்ணமே, ‘சித்தியடைய’ (வெற்றி), குடிநுழைவு (immigration), போர்த்தளத்தகைகளை (war strategy) போன்றவை நல்ல சொல்லாக்கங்கள் (அல்லது சொற்பிரயோகங்கள்)... மொழி என்பது, வார்த்தைகளைச் சொல்லகராதியில் சேர்த்துவிடுவதால் வளராது. மாறாக, அவை பேச்சில், எழுத்தில் பயன்பாட்டில் இருந்தால்தான் வளரும் என நாம் நம்புகிறோம். என்ன, நாம் சொல்வது சரிதானே!
இயல்பான , சகஜமான நடை எம்மை அந்த கட்டுரையினுள் ஈர்த்துவிட்டது.. தங்கள் நூல்கள் இங்கு எமது ஊர் நூலகத்தில் இருக்குமா என்று தேட ஆரம்பித்து விட்டோம்.
எஸ். ரமேஷ்
ஸ்ரீவில்லிபுத்தூர்
கதுவாவை நினைவில் கொள்ளுங்கள் எனும் எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி தலையங்கம் படித்து இதயம் கனத்தது. அடுத்த பக்கத்தைப் புரட்டி ‘பாபாவுக்கு ஒரு கடிதம்’ படித்தேன். அதற்கடுத்த பக்கத்தைப் புரட்ட முடியாமல் தலை கவிழ்ந்தேன். கண்களில் கண்ணீர் வழிந்தது.
இத்தகைய இந்தியாவைக் காண்பதற்காகவா நம் முன்னோர்கள் சாதி, மதம், இனம், மொழி என பேதமின்றி கரங்கள் கோத்துப் போராடி, செங்குருதி சிந்தி, இன்னுயிர் நீத்துச் சுதந்திரம் பெற்றனர். இந்தியப் பெண்ணொருத்தி உடல் முழுவதும் நகையணிந்து ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு நள்ளிரவில் தன்னந்தனியாகச் சென்று பத்திரமாகத் திரும்பி வரும் நிலை உருவானால் அதுவே உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியது நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தியச் சுதந்திரம் 71 வயதடைந்தும் பிறந்த குழந்தையாகவே இருப்பது வெட்கக் கேடானது. மேலும் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்தும் பணியே வேகம் பிடித்துள்ளது என்பதே கசக்கும் நிஜம்.
இனியும் ஒரு ஆசிபாவைக்கூட நாம் இழக்கக் கூடாது. கண்ணின் இமைபோல் இந்நாட்டின் கண்மணிகளான குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டியதும் காலத்தின் அவசியம். தூரிகைகள், அச்சு எந்திரங்கள் அதற்கான அச்சமற்ற நடவடிக்கையில் நடைபயிலட்டும்.
பெரணமல்லூர் சேகரன்
மின்னஞ்சல் வழி