தூத்துக்குடி போராட்டங்களின் பின்னணி

ஸ்டெர்லைட் என்ற நிறுவனம் தூத்துக்குடியில் தொழில் தொடங்க வருகிறது என்ற தகவல் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியிலுள்ள வங்கி ஊழியர்கள் மூலமாக தூத்துக்குடியில் இருந்த வங்கி ஊழியர்களுக்கு 1994 ஜூன் மாதம் தெரியவந்தது. அன்று தூத்துக்குடியில் பணியாற்றிய வங்கித் தோழர்கள் ரமேஷ், பெருமாள், கனகராஜ், இளங்கோ போன்றவர்கள் எனக்கு இந்தத் தகவலைச் சொன்னார்கள். அதன்பின் இத்தொழிற்
சாலை பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஒரு குழுவாக முனைந்தோம். இத்தொழிற் சாலையின் உற்பத்தி குறித்தும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஆதாரங்களைத் திரட்டினோம்.
இந்தச் சூழ்நிலையில்தான் 1994 அக்டோபர் 31இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்ட வருகிறார் என்ற செய்தி வந்தது. அப்பொழுது நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தேன். எங்கள் மாவட்ட கட்சியின் கூட்டத்தைக் கூட்டி அடிக்கல் நாட்ட வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது, அதில் 500 தோழர்கள் பங்கேற்பது என்று முடிவுசெய்தோம். அன்று கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு எங்களிடத்தில் “இப்பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம்; ஏனென்றால் பொதுமக்களுக்கு இத்தொழிற்சாலை பற்றிய முழு விபரமும் தெரியாது. எனவே அவர்கள் தொழிற்சாலை வந்தால் நமக்கு வேலை கிடைக்கும், அதை இவர்கள் தடுக்கிறார்கள் என்ற உணர்வு வரும்” என்று கூறியதின் அடிப்படையில் அப்போராட்டம் நடத்தப்படவில்லை.
முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிப் பேசிய கூட்டத்தில் இந்த நிறுவனம் தூத்துக்குடி மக்களுக்கு 5 கோடி செலவில் மருத்துவமனை கட்டிக் கொடுக்கும் என்று அறிவித்தார். தொழிற்சாலைக்கும் மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தபோது தான் இது நாசகார ஸ்டெர்லைட் என்பது தெரிந்தது.
இந்தப் பின்னணியில்தான் இதை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராட வேண்டும் என்ற அடிப்படையில் தூத்துக்குடி நகரிலுள்ள அனைத்துப் பிரிவினரையும் இணைத்து ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்ற நிலையில் நகரிலுள்ள அனைத்துக் கட்சி டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுவான சமூக ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் 125 பேருக்கு அழைப்பு கொடுத்தேன். அக்கூட்டம் 1994 நவம்பர் மாதம் பால் சொர்ணம் ஹோட்டலில் (பழைய பஸ் ஸ்டாண்டு எதிர்ப்புறம்) நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்று ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விபரங்களை எடுத்துச் சொல்லிச் சுற்றுப்புறச் சூழலால் சட்டதிட்டங்களை மீறி இத்தொழிற்சாலை நிறுவப்படுவதையும் இதன்மூலம் தூத்துக்குடி சுற்று வட்டார மக்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளைக் குறித்தும் விளக்கமாகப் பேசினேன்.
இக்கூட்டத்தில் 165 பேர் கையெழுத்து இட்டு கலந்துகொண்டனர். மொத்தம் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத இரண்டு அரசியல் கட்சிகள் அ.இ.அ.தி.மு.க.வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்.
இக்கூட்டத்தில் போராட்டக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. அனைவரும் என்னைத்தான் அமைப்பாளராக இருக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். நான் வேறு ஒரு நண்பரை முன்மொழிந்தேன். இந்தச் சூழ்நிலையில் மக்களைத் திரட்டியும் போராட வேண்டும். அதேவேளையில் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்மொழிந்தேன். அப்பொழுதே இரண்டு முக்கிய கட்சிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள், நாங்கள் இந்தப் போராட்டக் குழுவில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று அறிவித்துவிட்டார்கள். எனவே “ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்” என்ற அடிப்படையில் என்னைப் போராட்டக்குழு அமைப்பாளராக ஒருமனதாக தேர்வு செய்தது.
முதலில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துவரும் கழிவுநீரைத் தூத்துக்குடி நகர பிரதான சாலை வழியாக எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் கடலுக்குள் செல்லவைத்துக் கலக்க விடுவது என்பதுதான் அவர்களின் திட்டம். இதன்மூலம் கடல்வளம் அழியும், மீன்வளம் பாதிக்கும், அதனால் நம் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற உணர்வு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் அம்மக்கள் போராட்டத்தில் முன் கை எடுத்தனர். பல கட்ட போராட்டங்களுக்குப் பின் இத்திட்டத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் திரும்பப் பெற்று எங்கள் தொழிற்சாலைக்குள் நாங்கள் நீரைத் தேக்கி வைத்து மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்தப் போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில் மாணவர்கள் சுமார் 150 பேர் என் வீட்டை முற்றுகையிட்டார்கள்; எங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று கூறி என் வீட்டைத் தாக்கினார்கள். பின் தெருவிலுள்ள பொதுமக்கள் கூடி அவர்களை வெளியேற்றினார்கள். அதுபோன்று சில நாட்கள் கழித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் என் வீட்டிற்கு வந்து, நீங்கள் எங்கள் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவர், ஊர்க்காரர் எங்கள் நிலங்களுக்கெல்லாம் நல்ல விலை கிடைக்கும், அதை நீங்கள் தடுக்கிறீர்கள் என வாதம் செய்தனர்.
அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு இருந்தது என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். மீனவர்கள் போராட்டத்தின் மையத்தில் வலுவாக இருந்தபோது 1996ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்குரிய மூலப்பொருள்களான செம்புத்தகடு, தாதுமணல் ஆகியவற்றைக் கொண்டுவந்த கப்பலை நடுக்கடலில் 250க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளைக் கொண்டு நாங்கள் முற்றுகையிட்டுத் தடுத்து நிறுத்தினோம். இதனால் 3 கப்பல்கள் கொச்சி துறைமுகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. (அதன்பின் சாலை வழியாகவே அவை இங்கு கொண்டுவரப்பட்டன.)
1996ஆம் ஆண்டு இந்த ஆலை நிறுவுவதை நிறுத்த வேண்டுமென்று பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அது ப்ரீமெச்சூர் என்று சொல்லி வழக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்பின் 1997இல் அதே பசுமைத் தீர்ப்பாயத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தேன். அது இன்றுவரை நிலுவையில் உள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்கள் இப்போராட்டத்தை எடுத்துச் செல்வதில் இடையூறுகளை உண்டு பண்ணின. போராட்டக்குழு மூன்று முறை மாற்றியமைக்கப்பட்டது. மூன்று முறையும் நான்தான் அதன் அமைப்பாளராக இருந்து செயல்பட்டேன்.
இதேவேளையில் ழிணிணிஸிமி, பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுப்புறச் சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன நேரில் வந்து ஆய்வு செய்தன. அந்தக் குழுவிடம் இந்த ஆலை அமையும் விதத்திலுள்ள முறைகேடுகள், சட்டத்திற்குப் புறம்பான காரியங்களை எடுத்துக்கூறி அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தேன்.
இந்த ஆலையின் நச்சுத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டன. 1997ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ரமேஷ் உலர்பூக்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்த 160 பெண்கள் மயக்கமுற்றனர். மின்சார வாரியத்தில் ஏற்பட்ட விபத்தில் சகஊழியர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவங்களை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தோழர் ஆர். நல்லகண்ணு எடுத்து கூறினார்கள். இவற்றை எல்லாம் நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது.
மனித சங்கிலிப் போராட்டம் போன்ற பல்வேறு வகையான தொடர் போராட்டங்களை நடத்தினோம். இந்தப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வண்ணம் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேதா பட்கர், ரேஷ்மி மயூர், மீனவர் திவாகர், தாமஸ் கொச்சேரி, வைகோ போன்றவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பூவுலகின் நண்பர்கள், பீப்பிள்ஸ் வாட்ச், தமிழ்நாடு சுற்றுச்சூழல் சங்கம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஆதரவை அளித்தன.
இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் கி. குமரெட்டியார்புரம், தெற்கு வீரபாண்டியபுரம் போன்ற கிராமங்கள் 1980ஆம் ஆண்டு நான் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது என் தொகுதிக்குள் இருந்தன. 2004ஆம் ஆண்டு நான் தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் என் அரசியல் பணி அங்கே சென்று விட்டதால் தொடர்பு குறைந்துவிட்டது. மீண்டும் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றது. கி. குமரெட்டியார்புரம், அதனை ஒட்டிய பக்கத்து கிராமங்கள், தூத்துக்குடி நகர மக்கள் ஆகியோரின் எழுச்சிப் போராட்டங்கள் உத்வேகத்தைக் கொடுத்தன.
1997இல் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. தூத்துக்குடி நகரின் முக்கிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து, ஸ்டெலைர்ட் சார்பாக பேசி னார். ரூ.25 லட்சம் ரொக்கமாகவும் சொகுசு வாகனம் ஒன்றும் எனக்குத் தருவதாகக் கூறினார். நான் அதனை வன்மையாக நிராகரித்தேன். அது என் மனசாட்சியை நானே விலை பேசுவதாகும் என்று கூறினேன்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு கூடிய இடம் பெரும்பாலும் தூத்துக்குடி கத்தோலிக்கப் பேராய அலுவலகம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
போராட்டக் குழுவினர் 2018 மார்ச் மாதம் என்னைச் சந்தித்தனர். நான் அவர்களோடு என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன். “கட்சி ரீதியாகச் செல்ல வேண்டாம். பொதுவான அமைப்பாகச் செயல்படுங்கள். கூடிப் பேசி முடிவு செய்யுங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களிடம் “நானும் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவன். எனவே வேண்டாம்” என்று கூறிவிட்டேன். மே 12ஆம் தேதி கண்ணில் ஆபரேஷன் செய்துகொண்டேன். எனவே இப்போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க இயலவில்லை. ஆனாலும் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தேன். தூத்துக்குடி நகரத்தில் இதுபோன்ற மக்கள் எழுச்சி நடந்தது இல்லை. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு மக்கள்மீது காட்டுமிராண்டித்
தனமான தாக்குதலை நடத்தி உள்ளன. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மற்ற செய்திகள் மக்கள் முன் உள்ளன.
‘உண்மை ஒருநாள் வெளியாகும். அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்’ என்றான் பட்டுக்கோட்டை.
கட்டுரையாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செயலாளர். சட்டமன்ற நாடாளுமன்றங்களின் முன்னாள் உறுப்பினர்.