சத்தியசீலன் காட்டிய வழி

இங்கே இடம் பெற்றுள்ள படத்தைப் புத்தகத்திலும் (அயோத்திதாசர் வாழும் பௌத்தம்) ஓரிருமுறை முகநூலிலும் பயன்படுத்தியிருக்கிறேன். புத்தர் சிலை பற்றி எழுதிய ஒவ்வொரு தருணத்திலும் இதைப் பயன்படுத்தி இருக்கிறேன். சிலைக்கு அருகிலிருப்பவர் பற்றி எழுதியதில்லை. அத்துணை முறையும் தவிர்த்து வந்தது இவ்வாறு தனியே எழுதத்தான் என்றாகிவிட்டது. தி.சி. சத்தியசீலன் என்பது இப்பெரியவரின் பெயர். எண்பது வயது நெருங்கிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் மரணமடைந்தார்; இதைத் தாமதமாகவே அறிந்தேன். அஞ்சலி எழுதுவதற்கான எழுத்துலகச் செயற்பாட்டு ‘லட்சணங்கள்’ அவருக்குப் பொருந்தாது. அவரின் முழு வரலாறும் எனக்குத் தெரியாது. அது இந்நினைவுகூரலின் நோக்கமும் இல்லை. அவர் அன்றாட மனிதர்களில் ஒருவராக இருந்தவர். ஆனால் அவருடன் ஏற்பட்ட தொடர்பு நூலகம் போன்று எனக்குப் பயன்பட்டது. அந்நினைவுகளைப் பற்றி இங்கே எழுத முடியும் என்பதால் நினைவுக்குறிப்பு என்று தலைப்பிட்டுக்கொள்கிறேன்.
2005ஆம் ஆண்டு பணிநிமித்தமாகத் திருப்பத்தூருக்குச் சென்ற சில நாட்களிலேயே சத்தியசீலனைச் சந்தித்துவிட்டேன். நான் எழுதத் தொடங்கி அப்போது ஓரிரு ஆண்டுகள் ஆகியிருந்தன. இன்றைக்குப் பரிசீலிக்க முடியாத இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்ட பெரியார், அயோத்திதாசர் எதிர்மறை உருவாகிக் கோலோச்சிய சமயம்.அதன் தாக்கத்திற்கு நானும் ஆளாகியிருந்தேன். இந்நிலையில்தான் திருப்பத்தூர் கல்லூரியில் வேலை கிடைத்ததும் என் மனம் குதூகலிக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் தலித் அரசியல் கோலோச்சியிருந்த வட ஆற்காடு மாவட்டத்தின் முக்கிய நகரம் திருப்பத்தூர். மேலும் அயோத்திதாசர், திருப்பத்தூர் பெரியசாமி புலவர் என்ற பெயர்களெல்லாம் தெரியத் தொடங்கியிருந்த நேரமாகவும் அது இருந்தது.
அயோத்திதாசரின் பௌத்த முன்னெடுப்புகளுக்கான தலைநகரம் போல மாறிவிட்டிருந்த கோலார் தங்க வயலுக்குத் தொழிலாளர்களாகச் சென்றிருந்தவர்கள் பெரும்பாலும் இம்மாவட்டத்தின் கிராமங்களைச் சேர்ந்தவர்களே ஆவர். அங்கு உருவான மூலதனமும் அரசியல் சீர்திருத்த கருத்துகளும் இங்கிருந்து சென்றி ருந்தவர்களால் இந்த வட்டாரங்களுக்குத் திருப்பி விடப்பட்டிருந்தன. அந்தப் பின்னணியில் தான் திருப்பத்தூர் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் முயற்சிகள் பிரதிபலித்த ஊராக மாறியது. 1907 ஆம் ஆண்டிலிருந்தே அயோத்திதாசர் தொடர்பிலான பௌத்தக் கூட்டங்கள் பொதுவெளிகளில் நடத்தப்பட்ட ஊர் இது.
கோலாருக்கும் திருப்பத்தூருக்குமான இத்தொடர்பின் முக்கிய கண்ணியாக இருந்தவர் பெரியசாமிபுலவர். அயோத்திதாசரின் சமகாலத்திலேயே இயங்கி அவருடைய அறிவுக்குழாமில் ஒருவராக இருந்தார். ‘தமிழன்’ இதழில் தொடர்களையும் சிறிதும் பெரிது மான கட்டுரைகளையும் எழுதியவர். அதனாலேயே அயோத்திதாசரின் பௌத்த யோசனைகளை நடை முறைக்குக் கொணர முயன்ற ஊராக இது மாறியது. திருப்பத்தூரின் பெரிய பறைச்சேரி கௌதமாபேட்டை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு அங்கு பௌத்த சங்கம், விகார், நூலகம், பள்ளி, பௌத்த நடைமுறைகள் என்று காரியங்கள் கைகூடின. இந்நிலையில் பர்மா பௌத்த சங்கத்திலிருந்து அயோத்திதாசரின் சாக்கைய பௌத்த சங்கத்திற்கு மூன்று புத்தர் சிலைகள் நன்கொடையாகத் தரப்பட்டன. அச்சிலைகளுள் ஒன்று சென்னை பெரம்பூர் பௌத்த சங்கத்திலும் இரண்டாவது கோலார் தங்க வயலிலும் வைக்கப்பட்டன. மூன்றாவது சிலை அயோத்திதாசரால் திருப்பத்தூர் சங்கத்திற்குத் தரப்பட்டது. அந்த அளவிற்குத் திருப்பத்தூர் சங்கம் முக்கியமானதாக அமைந்து இருந்தது. திருப்பத்தூர் சங்கத்தில் வைக்கப்பட்டுப் பிற்காலத்தில் பல்வேறு அலைக்கழிப்புகளுக்குள்ளான அச்சிலைதான் இந்தப் படத்தில் இருக்கிறது.
பேராசிரியர் பொன். செல்வக்குமார் மூலம் வேலூர் சென்று பௌர்ணமி குப்புசாமியைச் சந்தித்தபோது, உங்களுக்குத் திருப்பதூரிலேயே ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி சத்தியசீலனைச் சொன்னார். நான் பணியாற்றிய கல்லூரிக்குப் பின்புறத்திலேயே இருந்த சத்தியசீலன் வீட்டுக்கு மாலை வேளைகளில் சென்று விடுவேன். மனைவியை இழந்திருந்த அவர் திருமணமான தன் மகனோடு தங்கியிருந்தார். நான் சென்றதும் சைக்கிளில் என்னை அழைத்துச் சென்றுவிடுவார். திருப்பத்தூரில் நடந்த கடந்தகால வரலாற்றைச் சொல்பவராகவும் அது தொடர்பாக தகவல் சொல்பவர்களை இனங்காட்டிச் சந்திக்கச் செய்பவராகவும் அவர் மாறினார். அந்த வட்டாரத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு இயங்கித் தேக்கம் கண்டிருந்த பி.வி.கரியமாலின் பாரதீய குடியரசுக் கட்சியின் பொறுப்பாளராகவும் இருந்தார். அவருக்கு விரிவான தொடர்புகள் இருந்தன. இந்த வாய்ப்பு அவருக்குக் குடும்பத் தொடர்ச்சியினால் ஏற்பட்டதாகும்.
தி.பி.சின்னச்சாமி ஆசிரியர் (1904) என்பது சத்தியசீலனின் தந்தையார் பெயர். 1981 ஆம் ஆண்டு மரணம் அடையும் வரையிலும் இந்த வட்டாரத்தில் தலித் மக்களுக்கான அரசியல், சமூகரீதியிலான பணிகளையும் பௌத்த மார்க்கப் பணிகளையும் ஆசிரியர் மேற்கொண்டு வந்தார். அயோத்திதாசர் காலப் பௌத்தத்தின் பின்னணியில் பௌத்தத்திற்கு வந்தவர். பெரியசாமி புலவருக்குப் பிறகு திருப்பத்தூரில் பௌத்த செயல்பாடுகளை அனுமந்த உபாசகர் (1886 - 1950) நடத்தி வந்தார். உபாசகரின் சமகாலத்தில் தொடங்கி அவருக்குப் பின்னரும் பௌத்தப் பணிகளை ஆசிரியரே தக்கவைத்து வந்தார். திருப்பத்தூர் பௌத்தச் செயல்பாடுகளின் கடைசிக் கண்ணி ஆசிரியர்தான். வட ஆற்காடு மாவட்டத் தென்னிந்திய பௌத்த சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர் இறப்பிற்குப் பிறகு அதுவும் செயல்படவில்லை. இத்தகைய குடும்பத்தொடர்ச்சி இருந்ததால்தான் சத்தியசீலனால் எனக்கு உதவ முடிந்தது.
திருப்பத்தூர் கௌதமா பேட்டையில் நூறு ஆண்டுகளைத் தாண்டித் தடயங்களாக எஞ்சியிருந்த பௌத்த விகார், ஊர்ப் பெரியவர்களின் நினைவுகள் ஆகியவற்றைச் சேகரிக்க சத்தியசீலன் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தார். சிறிய தொடர்பு கிடைத்தாலும் உடனே போன் செய்துவிடுவார். அயோத்திதாசரின் பௌத்த விளக்கங்கள் நடைமுறையாக்கப்பட்டிருந்ததை முதன்முதலாக அங்குதான் கண்டேன். அயோத்திதாசர் அணுகுமுறை கருத்தளவிலானதாக மட்டும் இருக்கவில்லை என்று புரிந்துகொள்வதற்கு இந்தத் தேடல் வழிவகுத்தது. இதை அடிப்படையாக வைத்து “அயோத்திதாசர் வழியில் வாழும் தமிழ் பௌத்தம்“ (ஜூலை 2006 காலச்சுவடு) என்ற கட்டுரையை எழுதினேன். அதன் சுருக்கத் தலைப்பிலேயே என் நூலும் இப்போது வெளியாகியிருக்கிறது. அயோத்திதாசரின் பௌத்த நடைமுறைகள் கோலார் தங்கவயலில் இருந்தன என்று அறியப்பட்டிருந்த நிலையில் அவை வேறோர் இடத்திலும் நடைமுறையாக்கப்பட்டிருந்ததை அறிய இக்கட்டுரை உதவியது. பின்னர் அனுமந்த உபாசகர், சின்னசாமி ஆசிரியர் ஆகியோரைப் பற்றி அறிமுகக் கட்டுரைகளையும் எழுதி வரலாற்றை மொழிதலில் இணைத்தேன். இவற்றில் எதிலும் சத்தியசீலன் இல்லை. ஆனால் இவற்றைப் புரிந்துகொள்வதற்கும் தரவுகளுக்கும் சத்தியசீலனே வழியாக அமைந்தார்.
மேலும் சத்தியசீலன் மூலம் உள்ளூரில் சந்திக்க முடிந்த பெரியவர்கள் தங்கள் கடந்தகால அரசியல் செயல்பாடுகளையும் முன்னோடிகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லினர். திராவிட இயக்கத்தினருக்கான முன்னோடிகள் தங்கள் பெரியவர்களே என்றும் அது தங்களுக்குக் கடமைப்பட்டது என்றும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். இது எனக்கு ஒருவகையில் ஆச்சரியத்தைத் தந்தது. அப்போது ரவிக்குமார், டி.தருமராஜன் ஆகியோரின் வாசிப்புத் தொடர்பிலிருந்த எனக்குத் திராவிட இயக்கத்தினருக்கும் அயோத்திதாசரின் பௌத்த இயக்கத்தினருக்குமான உறவு பற்றிய செய்திகளை வேறு மொழியில் வேறு இடத்தில் கேட்டேன் என்றே சொல்ல வேண்டும். இந்தத் தொடர்புகளினால் கிடைத்த தகவல்களை ஒப்பிட்டுப்பார்த்தபோது கூடுதலாகப் புரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக திருப்பத்தூரில் மரப்பட்டறை வைத்திருந்த தேவராஜன் என்ற பெரியவரை நோக்கி என்னை அடிக்கடி வழிநடத்தினார் சத்தியசீலன். தேவராஜன், சின்னசாமி ஆசிரியரோடு சேர்ந்து போலிச் சாதிச் சான்றிதழ்களை ஒழிப்பதற்கென அப்பகுதியில் செயல்பட்டுவந்த அம்பேத்கர் சேவா சங்கத்தில் இருந்தவர். பெரியசாமி புலவரையும் அனுமந்த உபாசகரையும் தன்னுடைய சிறிய வயதில் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே பார்த்தவர். அப்பெரியவர்களின் செயல்பாடுகளை அறிந்தவர். அவர் கூறியதாவன : அப்போதெல்லாம் இம்மக்கள் ரொம்ப விழிப்பாக இருந்தார்கள். அத்தகைய அரசியலை இச்சமூகப் பெரியவர்கள் உருவாக்கியிருந்தார்கள். இவ்வட்டார திராவிடர் இயக்க மேடைகளில் இம்மக்களின் பிராமணர் எதிர்ப்புப் பாடல்களும் நாடகங்களும் பேச்சுகளும்தான் இடம்பெறும். எங்க பெரியவங்க எங்களிடம் சொல்லிவந்ததையெல்லாம் அவர்கள் மேடைகளில் பேசப்போனதும் அதை நோக்கிக் கூட்டமாகத் திரளத்தொடங்கினர். அவர்களும் திராவிட நாடு என்பது உங்களுக்குத்தான் என்று சொல்லியே கூட்டினர். ஒரு குழாயில் ஒருவர் திராவிடர் நாடு என்று கத்தும்போது கூட்டமாக நிற்கும் இம்மக்கள் திராவிடர்க்கே என்று திருப்பிச் சொல்வார்கள். வேறு சமுதாயத்தினர் யாரும் வராத அக்காலத்தில் இம்மக்கள்தான் அங்கு கூட்டம் காட்டினர். வெள்ளை ஆடை அணிந்துவந்தால், அவர்கள் போடும் முழக்கத்தைக் கேட்ட ஆவேசத்தில் உடனே அதே இடத்தில் கருப்புச்சாயம் வாங்கி ஆடைகளைக் கருப்பாக்குவோம்.
இது மட்டுமல்லாமல் வெவ்வேறு தகவல்களும் தேவராஜன் பேச்சில் ஊடாடும். அந்தக் காலத்தில் திருப்பத்தூரில் நடக்கும் காமன் பண்டிகையையும் ஒரு தரப்பாக இருந்து உயர் வகுப்புப் புலவர்களுக்கு இணையாகப் பாட்டுக் கட்டிப் பாடும் பெரியசாமிபுலவரின் திறத்தையும் குறிப்பிடுவார். திருப்பத்தூர் வட்டாரத்தில் மாநாடுகள் பலவற்றை நடத்திப் பேச்சாளராக விளங்கியவர் புலவர் என்றார். இவ்வாறு சத்தியசீலன் பெயர் நினைவுக்கு வரும்போதெல்லாம் தேவராஜனும் நினைவுக்கு வந்துவிடுவார்.
கௌதமாப் பேட்டையில் 1910 தொடங்கிப் பார்க்க வாய்த்த பழைய ஆவணங்கள், அனுமந்த உபாசகரின் உறவினர்கள்-வரலாற்றாளர் தி.பெ.கமலநாதனின் சகோதரர் உள்ளிட்டோரின் சந்திப்பு போன்றவற்றால் கிடைத்த தகவல்கள், உபாசகர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் (1938) ஈடுபட்டபோது கல்லடியால் ஒரு செவியின் கேட்கும் திறனை இழந்தது, பெரியசாமி புலவர் மாவட்ட அளவிலான திராவிடர் கழக நிர்வாகியாகத் தேங்கி இறந்துபோனது போன்ற பலவற்றையும் இணைத்துப் பார்த்தபோது கிடைத்த சித்திரம் தேவராஜனின் நினைவு கூரல்களில் சென்று இணைந்தது. திராவிட இயக்க அரசியல் வரலாறுமீது என்னுடைய விமர்சன நிலைப்பாடு உறுதியாக இந்த தாக்கம் முக்கிய காரணமானது. இந்நிலைப்பாட்டை முற்றிலும் வாசிப்பு சார்ந்தது என்று சொல்வதை விடவும் கள ஆய்வு, நினைவுகூரல்கள் சார்ந்தது என்றும் கூறலாம். இந்த நிலைப்பாட்டைப் பற்றிய என் அனுபவங்களை யோசிக்கும்போது திருப்பத்தூரும் சத்தியசீலனும் இடம் பெறுவார்கள். அவரைப் பற்றிய என் நினைவுகள் பௌத்த வரலாற்றின் ஓர் அங்கத்தை அறிந்துகொண்டதாகவே அமைகிறது. அதனால்தான் அவர் பற்றிய நினைவுகளை எழுதுவது திருப்பத்தூர் தலித் வரலாறாக என்னிடம் மாறிவிடுகிறது.
1950களுக்குப் பின் கௌதமாப்பேட்டை பௌத்த சங்க விகார் மெல்ல மெல்ல செல்வாக்கு இழக்க ஆரம்பித்தது.
பிறகு அதிலிருந்த ஐம்பொன் புத்தர் சிலை பல்வேறு கைமாறுதல்கள், களவு என்று அல்லாடியது. திருப்பத்தூரில் தலித்துகளால் கிளைத்தப் பண்பாட்டு பௌத்த இயக்கத்
தின் வீழ்ச்சிக்கான குறியீடுபோல விகாரும் சிலையின் நிலையும் அமைந்துவிட்டன. பெரியவர்கள் சத்தியசீலன், தேவராஜன் போன்ற பெரியவர்களின் பேச்சில் சிலை பற்றிய அங்கலாய்ப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.
அவர்களைப் பொறுத்தவரையில் அது தங்கள் பெரியவர் களின் கடந்த காலச் செயல்பாட்டின் குறியீடு. இத்தருணத் தில் தங்கள் தரப்பையும் விமர்சித்து தேவராஜ் பேசுவார்.
சத்தியசீலன் உள்ளவரையில் அவர் வீட்டு நடைமுறைகள் பௌத்த முறைப்படியே நடந்தன. அயோத்திதாசரின் விளக்கத்திலான பௌத்த திருமணத்தில் அரச இலை வடிவில் தாலி அணிவார்கள் என்பதை அவர் மருமகளின் கழுத்தில்தான் கண்டேன். பாலியில் அமைந்த வழிகாட்டு வாசகங்களை அவர் வீட்டு வாசலில்தான் கேட்டேன். நான் திருப்பத்தூரை விட்டு வந்த பிறகும் அவர் உதவியால் கிடைத்த விளக்கங்கள் பெருமளவில் உதவின. அவரைப் பற்றிக் கடைசியாகக் கேட்டபோது பூனாவிலுள்ள அவர் மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று கூறினார்கள். திருப்பத்தூரில் மரணமடைந்துவிட்ட அவரது உடல் பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக அறிந்தேன். என் அரசியல் தெளிவில் குறிப்பிட்ட தருணம் அவர் மூலம் சாத்தியமானதை இங்கு சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்தப்பதிவு என்னுடைய தனிப்பட்ட அனுபவம் சார்ந்தது.
மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com