சிறுமைப்படுத்துதல் கரிசனமா?

இந்து தமிழ் திசை நாளிதழ் ‘சிறுபத்திரிகைகள் களம்
மாற வேண்டும்!’ என்ற தலையங்கத்தைப் பிரசுரித்துள்ளது.
சமகாலச் சிறு பத்திரிகைகளையும் சிறிய பத்திரிகைகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறது தலையங்கம். எல்லாச் சாதனைகளையும் கடந்த காலத்தில் வைத்து எல்லாச் சரிவுகளையும் நிகழ்காலத்தில் வைக்கிறது. இந்த அணுகுமுறையே அபத்தமானது என்பதை ஆதாரமின்றியே கூறிவிடலாம். எல்லா உயர்வுகளையும் கடந்த காலத்தில் வைத்துச் சமகாலத்தைச் சீரழிவாகக் காண்பதற்குப் பெயர் பிற்போக்கு மனோபாவம். தலையங்கம் சிறுபத்திரிகைகளுக்கும் சிறிய பத்திரிகைகளுக்கும் வேறுபாடு காணாமல் எழுதப்பட்டுள்ளது. ஒருவர் தமக்கென்று கோராத வரையறைகளை அவர்மீது திணித்து அளப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
சிறு பத்திரிக்கை என்பது இலக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்க 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதிவரை, மேற்கில் செயல்பட்ட இதழியல் வகைமை. அது மேற்கில் பல மொழிகளில், நாடுகளில் வேறுவேறு காலங்களில் உருவாகி இலக்கியத்தின், கலைகளின் புதிய முயற்சிகளுக்கு வழிகோலியுள்ளது. எல்லாப் பண்பாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் இயக்கமாகத் தாக்கம் செலுத்திச் சில பத்தாண்டுகளில் அந்த இயக்கம் தேய்ந்துள்ளது, தனி இதழ்கள் தொடர்ந்து வருகின்றன என்றபோதும். நான் அறிந்தவரை உலகின் எந்த மொழியிலும் ஓரிரு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓர் இயக்கமாக அது தழைத்ததாக இல்லை.
தமிழில் மணிக்கொடி சிறிய இதழ் எனில் எழுத்து சிறுபத்திரிகை. தமிழ்போல பெரும்பாலான இந்திய மொழிகளில் 1950 - 60களில் சிற்றிதழ் ஓர் இயக்கமாக இருந்து பின்னர் தேய்ந்துவிட்டதைக் காணலாம். தமிழ் போலவே 1990களில் பொருளாதாரத் தாராளவாதம், ஊடகங்களின் பெரும் விரிவாக்கம் நிகழ்ந்த காலகட்டத்தில் பல மொழிகளில் மீண்டும் மாற்று இதழ்கள் உருவாயின. உள் வட்டத்தில் தாக்கம் செலுத்தி அதன் வழி தாக்கம் வெளிவட்டங்களுக்குப் பரவும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் சிறுபத்திரிகைகள். மாணவர்கள், வாசகர்கள், ஊடகர்கள் எனப் பல தரப்பட்டோரிடம் வெளிவட்டத்தில் தாக்கம் செலுத்தியும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எண்ணுபவை மாற்று இதழ்கள். இரண்டுமே அவசியம்தான்.
இருப்பினும் அறிவுலகு சிறிய வட்டமாக இருக்கையில் அதில் கோலோச்சி ருசித்தவர்களால் இன்றைய பரந்த ஜனநாயகப்பட்ட சூழலை அவற்றின் உயர்வு தாழ்வுகளோடு ஏற்க முடியாது. வெகுஜன ஊடகங்களும் இலக்கியத்தைக் கையில் எடுத்துள்ளன என்ற கருத்து பொதுமைப் படுத்தப்பட்டதும் மிகையானதுமாகும். மொத்த வெகுஜன ஊடகப் பரப்பில் இலக்கியத்திற்கு இடமற்றிருந்த நிலையில் ஒரு சிறு உடைவு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
தொண்ணூறுகளில் சுபமங்களா, காலச்சுவடு போன்ற இதழ்கள் வெளிவருகையில் இன்று இல்லாத எந்தச் சிற்றிதழும் அன்றும் இருக்கவில்லை. எண்பதுகளிலேயே அந்த இயக்கம் பலவீனப்பட்டுவிட்டது. வெகுஜன இதழ்களில் இன்று எழுத்தாளர்களின் கருத்துக்களுக்கும் படைப்புகளுக்கும் இடம் ஏற்பட்டுள்ளதில் சுபமங்களா, காலச்சுவடு, நிறப்பிரிகை போன்ற இதழ்களின் தாக்கமும் காரணம் என்ற எளிய உண்மையைப் பேச இந்தத் தலையங்கத்திற்கு மனம் வரவில்லை. தமிழின் 200 ஆண்டு கால இதழியல் வரலாற்றில் முதல்முதலாக இப்போதுதான் ஒரு தீவிர இதழ் 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாதம் தவறாமல் வருகிறது என்பதைக் குறிப்பிட முடியவில்லை. விவாதம் போன்றவற்றைப் பேசுகையில் சமூக வலைதங்களின் தாக்கம் போன்ற அப்பட்டமான விஷயங்களைக் கணக்கெடுக்க முடியவில்லை. இவற்றின் தாக்கத்தில் சிறுபத்திரிகைகளைவிட வெகுஜன இதழ்கள் கூடுதலாகத் திணறுவதைச் சுட்டிக்காட்ட முடியவில்லை. முன்வைக்கும் பார்வைக்கு ஆதாரமாகக் கடந்த காலத்தின் முக்கியமான விவாதங்களை, விமர்சனங்களை, கோடிகாட்டக்கூட முடியவில்லை. கடந்த காலத்தின் விவாதம் வக்கிரமாக, வன்மமாக, பிறழ்வாக வெளிப்பட்டுப் பல இதழ்களையும் ஆளுமைகளையும் எரித்ததை மதிப்பிட முடியவில்லை.
சிறுபத்திரிகை பண்பாட்டில் ஆழக்கால் பதித்த அன்பர்களின் பின்னணியிலிருந்து இரண்டு இடைநிலை இதழ்கள் 1986இல் வெளிவந்தன. இனி மற்றும் தீம்தரிகிட. பின்னர் 1990களில் உருவான இதழ்களுக்கு இவையும் ஒரு முன்மாதிரியாக இருந்தன. ஏன் இவை உருவாயின என பரிசோதிக்கும் பார்வை இத்தலையங்கத்தில் இல்லை.
காலச்சுவடையும் அதற்கு ஒரு தலைமுறைக்குப் பிறகு வெளிவந்த உயிர்மையையும் இணைப்பது கால அபத்தம். உண்மையில் 90களில் பேசப்படவேண்டிய இதழ்கள் சுபமங்களா, நிறப்பிரிகை போன்றன. சிறு பத்திரிகை இயக்கத்தின் பிதாமகர் சி.சு. செல்லப்பா எழுத்துக்குப் பின்னர் வெளிவந்த எந்த இதழின் இருப்பையும் கண்டுகொண்டதில்லை. அதுபோல எழுபதுகளில் சிறுபத்திரிகைகளில் பொற்காலத்தில் செயல்பட்ட பலர் அத்தோடு தங்கி நின்றிருப்பதையும் காணலாம். தாம் ஊக்கத்துடன் செயல்பட்ட காலம் பொற்காலம் பின்னர் எல்லாமே நாசமாகிவிட்டது என கருதுவது சூழலின் பிரச்சினையல்ல, காண்பவரின் பார்வைக் குறைபாடு. தமிழகத்தில் புத்தகப் பண்பாடு வளர்வதில் அக்கறைகொண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி தமிழகமெங்கும் இப்போது நூல்கள் எழுத்தாளர்கள் சார்ந்து சந்திப்புகள் நடப்பது. ஒரு அசலான புத்தகப் பண்பாடு துளிர்ப்பதற்கான மணியோசை இது. இந்த இயக்கத்தை முற்றுலும் எதிர்மறையாக மட்டும் கண்டு நிராகரிக்கிறது இந்தத் தலையங்கம். இந்த மனோபாவம் எப்போதும் கடந்த காலத்தின் சிறப்புகளில் தங்கி நின்று நிகழ்காலத்தின் சாதனைகளைக் காண மறுத்து அவற்றைச் சிறுமைப்படுத்தும். கரிசனம், விமர்சனமாகவும் வெளிப்படும், ஆனால் ஒருபோதும் சிறுமைப்படுத்தாது.
தமிழ் இந்துவின் நடுப்பக்கக் குழு, இளைஞர்களின் குழு. அவர்களின் சுதந்திர மதிப்பீட்டைத் திறந்த மனத்தோடு பரிசீலிக்க வேண்டியது என் போன்றோரின் கடமை. ஆனால், சுதந்திரமான மதிப்பீட்டுக்குப் பதிலாக, கடந்த காலத்தின் ஆதிக்கம் இழந்த குரல்கள் ஆவி அமுதாக்கள் வழி எழுதியது போன்ற இந்தத் தலையங்கம் எழுதப்படும்போதே காலாவதியானது.
----------
சிறு பத்திரிகைகள் களம் மாற வேண்டும்
காத்திரமான இலக்கியப் படைப்புகள், ஆரோக்கியமான விவாதங்கள் என்று இலக்கிய முன்னகர்வுகளுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்தின் சிந்தனை பரிணாம வளர்ச்சிக்கும் முக்கியக் கண்ணியாக இருக்கும் சிறுபத்திரிகைகள் தமிழில் தற்போது தனது வாசகப் பரப்பை இழந்துவருகின்றன. கடந்த காலம்போல அல்லாது வெகுஜன பத்திரிகைகளும் இலக்கியத்தைக் கையில் எடுத்திருக்கும் நிலையில் நீளும் தீவிரமான வெளி நோக்கி நகர வேண்டிய சிறுபத்திரிகைகள் அவற்றின் உள்ளடக்கம் விஷயத்தில் ஒரு காலத்தேக்கத்தை அடைந்துவிட்டிருப்பதை இந்நாட்களில் உணர முடிகிறது.
சிறுபத்திரிகைகளுக்கே உரிய பரிசோதனை முயற்சிகள், கருத்து மோதல்கள் ஆகியவை குறைந்து வெகுஜன பத்திரிகைகளைப் போல ஒரு சமரசக் கலாச்சாரத்துக்கு அவை இடம்பெயர்ந்துவிட்டதைப் பலரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த கால வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் தன்னுடைய பின்னடைவு எங்கே நடந்திருக்கிறது என்பதை சிறுபத்திரிகைகள் உணர்ந்துவிட முடியும்.
தீவிர எழுத்தை இன்றும் தக்கவைத்துக்கொள்வதற்கு சிறுபத்திரிகைகள்தான் உறுதுணையாக இருக்கின்றன. ‘அகம் புறம்’, ‘அடவி’, ‘அந்திமழை’, ‘அம்ருதா’, ‘இடைவெளி’, ‘உயிர் எழுத்து’, ‘உயிர்மை’, ‘உன்னதம்’, ‘ஓலைச்சுவடி’, ‘கணையாழி’, ‘கல்குதிரை’, ‘காக்கைச் சிறகினிலே’, ‘காலச்சுவடு’, ‘குதிரைவீரன் பயணம்’, ‘சிலேட்’, ‘சிறுபத்திரிகை’, ‘செம்மலர்’, ‘சொற்கள்’, ‘தடம்’, ‘தளம்’, ‘திணை’, ‘தீராநதி’, ‘நம் நற்றிணை’, ‘நான்காவது கோணம்’, ‘புதிய சொல்’, ‘புது விசை’, ‘பேசும் புதிய சக்தி’, ‘வலசை’, ‘மணல் வீடு’ எனப் பல்வேறு சிறுபத்திரிகைகள் இன்றும் தொடர்ந்தோ விட்டுவிட்டோ வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுபத்திரிகை வாசகர்கள் எப்போதுமே ஆகச் சிறுபான்மையினர்தான். அந்தச் சிறிய வட்டத்திலிருக்கும் கூட்டமே தீவிர சிந்தனைச் சூழலுக்கு வளம் சேர்ப்பதாக இருந்திருக்கிறது.
தற்போதைய இந்தத் தேக்கநிலைக்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாசிப்புக் கலாச்சாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன. தீவிரமான வாசகர்களும்கூட சிறுபத்திரிகைகளைத் தங்களது புத்தக அலமாரிகளில் அடுக்கி மட்டுமே வைத்திருப்பதாக சிறுபத்திரிகை ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. விமர்சனப்போக்கில் ஏற்பட்டிருக்கும் சரிவை இதற்கான பிரதான காரணமாகச் சொல்லலாமா? ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை ஒருவழிப் பிரச்சாரங்களாக, புகழ்பாடும் கூட்டங்களாக, நுட்பமான பார்வையற்ற மேலோட்டமான சொற்பொழிவுகளாகச் சுருங்கிவிட்டன. ஒரு வாசகர் தனது வாசிப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு இத்தகைய கூட்டங்கள் பெருமளவில் உதவுவதில்லை. இதைப் பிரதிபலிப்பதாகவே பெரும்பாலான சிறுபத்திரிகைகள் வெளிவருகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
பதிப்புச் சூழலில் ஏற்பட்டிருக்கும் வசதிகள் நம்முடைய கற்பனைகளை எவ்வளவு சூறையாடியிருக்கிறது என்பதை சிறுபத்திரிகைகளின் அட்டைகளை வைத்தே யூகிக்க முடியும். எப்பேற்பட்ட முயற்சிகளெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ உள்ளிட்டவை தொடக்கிவைத்த இடைநிலை பத்திரிகைகளுக்கு நெருக்கமான கலாச்சாரமும் இன்றைய சிறுபத்திரிகைகளின் பண்பு மாற்றத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் மாறுவதையும் உணர்ந்தால்தான் அடுத்த நிலை நோக்கி நகர முடியும்!
தலையங்கம், இந்து தமிழ் திசை, 14 ஜூலை 2018