வன்கொடுமைகளின் களியாட்டம்

தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைச் செய்பவர்களிடம் அதைப் பார்த்து மகிழும் ‘அழகியல்’ இருப்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
மகாராஷ்டிராவிலுள்ள, அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமான ஜல்கானில் உள்ள கிராமம் ஒன்றில் பதின்வயது தலித் சிறுவர் இருவர் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட காணொளி ஜூன் 10ஆம் தேதி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய்ப் பரவியது. இந்தச் சிறுவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டதற்குக் காரணம் இவர்கள் சீர்மரபினர் (குற்றமரபினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடியினர்) சாதியைச் சேர்ந்த ஒருவரின் கிணற்றில் நீந்தியதே காரணம். இந்த நிகழ்வு குஜராத்தில் 2016இல் உனாவில் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் தலித் ஆண்களைச் சாட்டையால் அடித்ததைப் போன்றதே. ஒரே வித்தியாசம் அப்படி அடித்தவர்களின் சமூகப் பின்னணி மட்டுமே. இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே தாக்குதலைப் படம்பிடித்து அதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் தலித் உடலானது அவமானப்படுத்துவதற்குரிய காட்சிப்பொருளாக ஆக்கப்படுகிறது. இவ்வாறு பதிவேற்றம் செய்வதன் மூலம் தங்களது காட்டுமிராண்டித்தனமான செயல்களின் சட்டப் பின்விளைவுகள் குறித்து அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்பதையும் அவர்கள் காட்டுகிறார்கள். ஆனால் ஜல்கான் விவகாரத்தில் வன்கொடுமையை இழைத்தவர்கள் கறாரான சமூகவியல் பொருளில்
இந்து சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதில் அது குஜராத் விவகாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது.
இந்த வன்கொடுமையைச் செய்தவர்கள்மீது காவல்துறை அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989இன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தபோதிலும் எதிர்பார்த்ததைப் போலவே மகாராஷ்டிரா அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் ஜல்கான் விவகாரத்தில் சாதியக் கூறு இருப்பதைப் பார்க்கத் தயங்குகின்றனர். விவகாரம் கைமீறிப் போய்விடாதிருக்கச் செய்யும் முயற்சியில் இந்த விவகாரத்தில் இருக்கும் சாதியக் கூறை குறைத்துக் காட்ட மாநில அரசாங்கம் இரட்டை உத்தியைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது. ஒன்று, அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் சில உள்ளூர் பத்திரிகையாளர்களும் இந்த வன்கொடுமை நிகழ்விலுள்ள சாதிய உணர்வை மறைத்துவிட்டு அதற்குப் பதிலாக சில தனிமனிதர்களின் வக்கிர மனத்தின் காரணமாகச் செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயல் இது என காட்ட முயற்சி செய்கிறார்கள். இதன் விளைவு இத்தகைய சமூகக் குற்றத்திற்குப் பின்னால் ஒரு காரணம் அல்லது நோக்கம் இருக்கிறது என்பதை மறுப்பதுதான். இந்த வன்கொடுமையைச் செய்தவர் அதிகாரப்பூர்வமாகச் சாதிப் படிநிலை அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்பது உண்மை. ஆனாலும் சாதி உணர்வை அவர் வெளியிலிருந்து பெற்றுக்கொள்கிறார். அதற்குக் காரணம் தலித்துகளுக்கு எதிரான வெறியைத் தீவிரப்படுத்துவதற்கான அடிப்படையான உணர்வை அது அளிக்கிறது. அந்தப் பதின்வயது சிறுவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதிலிருந்தே அது வெளிப்படையாகத் தெரிகிறது.
மேலும் மேலும் தான் விமர்சிக்கப்படுவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மாநில அரசாங்கம் வகுத்துக்கொண்ட இரண்டாவது உத்தி மிகவும் வெளிப்படையானது. உனா அல்லது ஜல்கான் போன்ற சோகம் நிகழ்கிறபோது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ‘சடங்காக்கப்பட்ட நடத்தை நெறி’ என்றழைக்கப்படும் முறையைக் கைக்கொள்கின்றன. அதாவது தலித்துகள் உட்பட விளிம்புநிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்குச் சமூக நீதியை அளிப்பதில் உண்மையான முயற்சிகளை எடுப்பதாக ஆட்சியிலுள்ளவர்கள் செய்யும் பிரச்சாரம் அது. இந்த வகையான நடத்தை நெறியை மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா கட்சி-சிவசேனா ஆட்சியில் பார்த்தோம். அதன் சமூக நீதி அமைச்சகம் தலித்துகளுக்குத் தாம் செய்துவரும் ‘அற்புதமான’ பணிகள் பற்றி ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சானலில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது. சூழல் மேலும் மோசமாகாமல் இருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.
ஆனால் அரசும் அதன் நிர்வாகிகளும் புரிந்துகொள்ளத் தவறுவது என்னவென்றால் உயர் சாதியினரிடையே தலித் மீதான கோபம் வளர்ந்துவருவதையும் தலித் வெறுப்பு சேகரமாகியிருப்பதையும்தான். இந்தக் கோபம், வெறுப்பு தலித்துகளுக்கான ‘அரசின் நேசம்’ பற்றிப் பீற்றிக்கொள்வதால் மட்டும் மறைந்துவிடாது. மாறாக, அரசு நலத்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க, தலித்துகளுக்கு எதிரான கோபம் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியே, சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்டு, அரசுக்கு இணையாகத் தங்களது அதிகாரத்தைச் செலுத்தும் உயர்சாதியினரைக் கட்டுப்படுத்த இது தவறிவிட்டது.
இத்தகைய சட்டமின்மை நிலவும் சூழலில் பாலியல் வன்புணர்ச்சிக்கு அல்லது சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களின் சமூக மரியாதையானது, சட்டத்தின் ஆட்சியானது நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதை மட்டுமல்ல அச்சட்டத்தை அமல்படுத்தும் அரசையும், சமூகரீதியாக விழிப்புணர்வுகொண்ட, தார்மீகரீதியாக உந்தப்படும் உள்ளூர் சமூகங்களையும் சார்ந்திருக்கிறது. இத்தகைய உள்ளூர் சமூகங்கள் இருந்தால்தான் தாக்குதலுக்குள்ளான இந்தப் பதின்வயது சிறுவர்களும் அவர்களது பெற்றோர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்ய நீதித்துறையை அணுக முடியும்.
சமூகக் கண்காணிப்பு இல்லாதது ஒருபுறம், உயர்சாதியினரின் சமூக அராஜகம் மற்றொருபுறம் என்ற நிலை இந்தச் சிறுவர்களின் பெற்றோரை இந்த தாக்குதலைச் சாதி வன்கொடுமையாக அல்லாமல் சாதாரண வன்முறையாக ஏற்கக் கட்டாயப்படுத்தியிருக்கின்றன. உயர்சாதியினர் உருவாக்கியுள்ள சட்டமின்மை சூழலுக்கு எதிராகத் தங்களது பாதுகாப்பிற்காகச் சட்ட வழிமுறைகளைத் தலித்துகள் பயன்படுத்துவதை இந்தக் கிராமத்திலும் வேறு பல கிராமங்களிலும் அவர்களுக்கு எதிராக நிலவும் மௌனமான பகைமை கடினமாக்குகிறது. அரசமைப்புச் சட்ட உரிமைகள் தானாகவே விளங்கிவிடுவதில்லை. பாதிக்கப்பட்ட நபருக்கு அது தானாவே சட்ட நிவாரணத்தைக் கொண்டுவந்துவிடுவதில்லை. இத்தகைய உரிமைகள் தானாகவே சாத்தியமாகிவிடுவதில்லை; தார்மீக முயற்சி எடுக்கப்படுகிறபோதே இவை சாத்தியமாகின்றன. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் சாட்டையால் அடிக்கப்படுவது படம்பிடிக்கப்பட்டதானது தாக்குதலை நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்படும் எதிர்பாராத விளைவிற்கு இட்டுச்சென்றது. உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டுள்ள சட்டமின்மை சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தும் முன்னர் சட்டத்தின் ஆட்சியை நாம் காப்பாற்றியாக வேண்டும். இத்தகைய சட்டமின்மையை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளராக அரசு மாறுவதைத் தடுப்பது என்பது இன்றியமையாதது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஜூன் 23 , 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com