கடல்

கடற்கரைக்கு இன்று கூட்டிப்போவதாக ஜானின் அப்பா கூறியிருந்தார். கல்லூரி விடுதியில் இருக்கும் பெரியம்மா மகன் யாக்கோப் அண்ணாவையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்பது திட்டம். போனதடவை கடற்கரைக்குச் சென்றிருந்தபோதும் யாக்கோப் அண்ணா கூட வந்திருந்தார். ஜானுடைய அப்பாவும் அம்மாவும் கரையில் சற்று மேடான பகுதியிலேயே அமர்ந்துகொள்ள ஜானும் யாக்கோப் அண்ணாவும்தான் அலைகளில் கால் நனைக்கக் கீழே இறங்கினார்கள். யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால் அச்சிறுவலியைப் பொறுத்துக் கொண்டான்.
நீரலைகள் கரையேறிப் பின் வளைந்து இரைச்சலுடன் உள்வாங்கின. பாதங்களில் ஈர மணல் அழுந்தி ஒட்ட முழங்கால்களுக்குக் கீழே சில்லிட்டு விலகும் நுரைத் தீண்டல். இன்னும் சில அடிகள் முன்னோக்கி நடக்க முயற்சி செய்ய யாக்கோப் அண்ணா அவன் கைகளை அழுத்தித் தடுத்தார். “கொஞ்ச தூரம் முன்னால போலாம்