
சீடன் கேட்டான்:
உடலை விட்டு ஆன்மா
எப்படி பிரிகிறது குருவே?
ஆயகலைகள் அனைத்தும் தேர்ந்த குரு
அலுப்புடன் முனகினார்
அநாதி காலத்துக் கேள்வியை
அவ்வப்போது யாரோ
சுமந்து வந்துவிடுகிறார்கள்.
நான்கு யுகங்களையும்
நொடியில் கடந்து வந்த
பதிலைச் சொன்னார்:
புட்டங்களுக்கு நடுவிலிருந்து
அபான வாயு
எப்படி பிரிகிறதோ அப்படி.
அடிவயிற்றில் வடவைத்தீ மூண்ட யாசகன்போல்
கை நழுவிய கனவை மீட்க இறைஞ்சும் காதலன்போல்
அறம்பிறழ் முற்றத்தில் அலறிப் புலம்பும் நிரபராதிபோல்
தாளாது மருத்துவரே கொன்று தாருமென மன்றாடும் பிணியாளன்போல்
இருந்தென்ன செய்ய, அழையாயோ காலமே எனச் சுயமிரங்கும் முதியவன்போல்
ஆன மட்டும்
தொண்டைகிழியக் கதறுகிறேனே,
‘மண்ணரசில் அன்பு தழைக்கட்டும்‘ என்று முனகக் கூட
என்னதான் தடை உங்களுக்கு?
கைமறதியாக
மரணவீட்டில் விட்டு வந்த கடிகாரம்
திரும்பக் கிடைத்தது.
எடுத்து அணிந்ததும்
அனிச்சையாகக் காதருகே வைத்துக் கேட்டேன்
விட்டுவிட்டு ஒலிக்கிறது
மரணப் புரவிகளின் குளம்படி ஓசை.